செவ்வாய், 3 நவம்பர், 2026

சிதம்பரம் நடராசர் கோவில்: முழுமையில்லை, ஆனால் முக்கியத் தீர்ப்பு

 

 
தீர்ப்பு வந்த அன்று ஆலையத்தின் கீழவீதியில் வரவேற்று முழக்கம்  

 

சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் (நட ராசர்) கோவில் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் கொண்ட அமர்வு 30.10.2026 அன்று வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. மூன்று கேள்விகளை நீதிமன்றம் விசாரித்தது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் தமிழகஅரசாணை (G.O.Ms.No.115, 17.05.2022) தீட்சிதர்களின் அரசியலமைப்பு உரிமையை மீறுகிறதா? தீட்சிதர்களின் நிர்வாகத்தில் கோவிலின் தொன்மையான கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளனவா? கோவிலின் அசையும், அசையாச் சொத்துக்கள் முறையாகக் கணக்கி டப்பட்டுத் தணிக்கை செய்யப்பட்டுள்ளனவா? இந்த மூன்று கேள்விகளுக்கும் நீதிமன்றம் அளித்த பதில்கள் கவனிக்கத்தக்கவை.

கனகசபை: வழிபாட்டு உரிமை உறுதி

கொரோனா காலத்துக்குப் பின் கனகசபை தரிசனத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்து நீதிமன்றம் விசாரித்தது. கனகசபையில் தரிசனம் செய்வது நீண்டகால வழக்கம் என்பதைக் கவனத்தில் கொண்டது. சடங்குகளை நடத்தும்உரிமை பொதுத் தீட்சிதர்களுக்கு இருந்தாலும், பொதுக் கோவிலில் பக்தர்கள் வழிபடும்உரிமையை மறுக்க முடியாது; தரிசன அனுமதியில் பாகுபாடோ, வெளிப்படைத் தன்மையற்ற நடைமுறையோ கூடாது என்றது. பணம் செலுத்திடோக்கன் பெற்றவர்களுக்குக் காலபூஜை நேரத்திலும் கனகசபை தரிசனம் வழங்கப்பட்டதற்கு அரசுத் தரப்புபுகைப்பட ஆதாரங்களை முன்வைத்தது. தீட்சிதர்களின் நிர்வாக உரிமை, பொதுமக்களின் வழிபாட்டுஉரிமையைப் பறிக்கும் உரிமை அல்ல என்று நீதிமன்றம் வரையறுத்தது.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 25, 26 தங்கள் மத உரிமையைப் பாதுகாப்பதாகவும், அரசாணை அதில் தலையிடுவதாகவும் தீட்சிதர்கள் வாதிட்டனர். சடங்குகளை நடத்தும் உரிமைக்கும் பொதுமக்களின் வழிபாட்டுஉரிமைக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அரசாணை எண் 115 தீட்சிதர்களின்அரசியலமைப்பு உரிமையை மீறவில்லை; அது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதாவது, அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்ற தீட்சிதர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. கனகசபையில் பொதுமக்கள்ஏறி தரிசிக்கும் உரிமை இதன் மூலம் சட்டப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

சிதைக்கப்பட்ட பாரம்பரியம்

தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம் (Tamil Nadu Heritage Commission) 11.08.2026 அன்று கோவிலை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அது கண்டறிந்தவை:

• பழமையான கற்தூண்களுக்கு இடையே புதிய அறைகள் கட்டப்பட்டுள்ளன; மண்டபங்களில் சிமெண்ட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

• ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நவீனக் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன.

• பழமையான ஓவியங்களும் சிற்பங்களும் மறைக்கப்பட்டுள்ளன; கல்வெட்டுகள் மீது வண்ணம் பூசப்பட்டுள்ளது.

• சில மண்டபங்களின் தரைத்தளம் உயர்த்தப் பட்டுள்ளது; நாயக்கர் கால ஓவியங்கள் பராமரிப்பின்றிச் சிதைந்து வருகின்றன.

• கோவிலுக்குள் சுமார் 50 கட்டளை அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றால் கோவிலின் தொன்மையான கட்டிடக் கலைக்கும் பாரம்பரியத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், புனரமைப்பு, பராமரிப்பு என்ற பெயரில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் கோவிலின் பாரம்பரியக் கட்டிடங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்று தீர்மானித்தது.

கணக்கில்லாத சொத்துக்கள்

கோவிலுக்குச் சுமார் 1,000 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருப்பதாக வழக்கு ஆவணங்கள் கூறுகின்றன. சொத்துப் பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; நில வாடகைவசூலில் முறைகேடுகளும் நிலுவைகளும் உள்ளன; கட்டளைச் சொத்துக்களின் வரவு–செலவுக் கணக்குகள்தாக்கல் செய்யப்படவில்லை. தீட்சிதர்கள் தாக்கல் செய்தவை தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அல்ல,சாதாரண வரவு–செலவுக் குறிப்பேடுகள் மட்டுமே என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அறநிலையத் துறையும் தீட்சிதர்களும்ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு கோவில் சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர் என்றும்கூறியது.

கோவில் வளாகத்துக்குள் அன்னதானம் என்ற பெயரில் நன்கொடை கோரும் விளம்ப ரங்கள், உணவுப்பட்டியல்கள், உணவு வழங்கும் இடங்கள் எனக் கோவிலின் புனிதத்தன்மைக்கு முரணான வணிக நடவடிக்கைகள்நடை பெறுவது குறித்தும் நீதிமன்றம் கவலை தெரி வித்தது. கோவில் வளாகம் ஒரு வணிக உணவக வளாகமாகமாற்றப்படுவது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்தது.

நிர்வாகக் குழு: ஏழு பணிகள்

குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை நிர்வாகத்தைக் கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி வி. பாரதிதாசன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிர்வாகக் குழுவை (Board of Management) நீதிமன்றம் அமைத்துள்ளது. நிர்வாகத்தைக் கண்காணிப்பதோடு, அதைச் சீரமைப்பதும் இக்குழுவின் பொறுப்பு. அதன் பணிகள்:

1. கனகசபை தரிசனம்: பொதுமக்கள் அனை வரும் பாகுபாடின்றி கனகசபையில் ஏறி நடராச ரையும் சிவகாமி அம்மனையும் தரிசிக்கச் சம வாய்ப்பை உறுதிசெய்தல்.

2.பாரம்பரியப் பாதுகாப்பு: பாரம்பரிய ஆணையத்துடன் ஆலோசித்து, பழமையான கட்டிடங்களைப் பாதிக்கும் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுதல்.

3.நில மீட்பு: ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக் களை மாவட்ட நிர்வாக உதவியுடன் மீட்டு, வாடகை, குத்தகை நிலுவைகளை வசூலித்தல்.

4.வருமானம்: சொத்துக்களிலிருந்து வருமானத்தை அதிகரித்து, முறையான கணக்கு களைப் பராமரித்தல்.

5.புனரமைப்பு: பழமை மாறாமல் நிபுணர் ஆலோசனையுடன் புனரமைத்தல்.

6.நகைகள்: நகைகளையும் விலைமதிப்புள்ள பொருட்களையும் பட்டியலிட்டு, காணாமல் போனவை இருந்தால் நடவடிக்கை எடுத்தல்.

7.இதர நடவடிக்கைகள்: கோவிலின் நலனுக்குத் தேவையான பிற நடவடிக்கைகள்.

எனினும், அன்றாட பூஜைகள், காலபூஜைகள், திருவிழாக்கள், மரபுவழிச் சடங்குகளை நடத்தும் பிரத்யேக உரிமை பொதுத் தீட்சிதர் களுக்கே தொடரும் என்று தீர்ப்பின் 64வது பத்தி கூறுகிறது. அதேபோல், தீட்சிதர்கள் இதுவரை நிர்வகித்து வந்த வைப்புத்தொகைகளும் பிற முதலீடுகளும் அவர்களிடமே தொடரும்; ஆனால் அவற்றின் வரவு–செலவுக் கணக்கு நகல்களை ஒவ்வொரு மாதமும் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிப்படையான நிதி நிர்வாகம்

நன்கொடைகள் அனைத்தும் நிர்வாகக் குழு குறிப்பிடும் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிவர்த்தனையாகமட்டுமே செலுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட புனரமைப்புக்கான நன்கொடை தனிக் கணக்கில் வைக்கப்பட வேண்டும். சொத்துக்கள், கட்டளைகள் மூலம் வரும் வருமானம் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு, வரவு–செலவுக் கணக்குகள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கோவிலின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதே இந்த உத்தரவு களின் நோக்கம்.

மக்களின் கோரிக்கை

கோவிலை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று சிதம்பரம் பகுதி மக்கள் தொடர்ந்துபோராடிவருகின்றனர். பக்தர்கள் மீதான தாக்குதல், தமிழுக்கு அவமதிப்பு, கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்துக்குக் கணக்குக் காட்டாமை, பணம்படைத்தவர்களுக்குக் கோவிலை வாட கைக்கு விடுவது போன்ற அடாவடிகளுக்கு அதுவே நிரந்தரத் தீர்வு என்பது அவர்களின் நிலை. கோவிலின் நிர்வாகம் இன்னும் முழுமையாக அரசின் கைக்கு வரவில்லை; சடங்கு உரிமைகளும் முதலீடுகளும் தீட்சிதர்களிடமே உள்ளன. அந்த வகையில், மக்கள் விரும்பிய முழுமையான தீர்ப்பு இது இல்லை. ஆனால் வழிபாட்டு உரிமை, பாரம்பரியப் பாதுகாப்பு, நிதி வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை உறுதிசெய்வதில் இது ஒரு முக்கியமான நகர்வு.

-எஸ்.ஜி. ரமேஷ்பாபு

(02.11.2026 தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக