திங்கள், 27 அக்டோபர், 2025

ஒரு பாலஸ்தீன அகதியின் அறிவியல் பயணம்


ஓமர் யாஹி

சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப் படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடனான இந்திய அரசின் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில்  அக்டோபர் 8 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை கொடைக்கானலிலிருந்து நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்கு தலைக் கண்டித்தும், அங்கு உடனடி யாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும்  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது என அலைபேசிக்கு ஒரு செய்தி வரும் ஓசை கேட்டது.

நானோமெக்கானிக்ஸ், நானோமெனுபாக்சரிங், ஒப்டோ எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி சேமிப்பு, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய இளம் ஆராய்ச்சியாளர், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மண்டி (IIT Mandi) இயற்பியல் பேராசிரியர், முனைவர் விஸ்வநாதன் பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து ஒரு செய்தி குறிப்பு வந்திருந்தது.

இருட்டில் பிறந்த ஒளி

அந்த குறிப்பில் 2025-ஆம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற ஓமர் யாஹி குறித்து அவரது மகிழ்ச்சி இருந்தது. அதில் முக்கியமாக கீழ்க்காணும் வரிகள் இருந்தது.

"ஓமர் யாஹி என்ற பெயர் இன்று உலகம் முழுவதும் அறிவியல் உலகில் ஒலிக்கிறது. ஆனால், இந்த வெற்றி ஒரு தங்கக் கோப்பையில் வந்தது அல்ல. அது தண்ணீர் இல்லாத சிறிய அறையில் பிறந்த ஒரு சிறுவனின் கனவில் இருந்து தொடங்கியது.”

“1965-ஆம் ஆண்டு, ஜோர்டானின் அம்மானில் ஓமரின் பெற்றோர் பாலஸ்தீன அகதிகள். பத்து பேர் கொண்ட குடும்பம் ஒரு சிறிய அறையில் வாழ்ந்தது. தண்ணீர் அரிது, மின்சாரம் அடிக்கடி போய்விடும். ஆனால் அந்த இருட்டில் கூட ஒரு ஒளி இருந்தது - கல்விக்கான ஆசை. அவரின் தாய் எழுத்தறிவு இல்லாதவராக இருந்தாலும், "புத்தகங்கள் உன்னை ஒருபோதும் வஞ்சிக்காது" என்று சொல்லி அவரை ஊக்குவித்தார்.”

பாலஸ்தீனத்தின் மீது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தக்குதல் அங்கி கொத்து கொத்தாக இறந்து மடியும் குழந்தைகளில் எத்தனை அறிஞர்களை உலகம் இழக்கிறதோ. ஓமர் யாஹி கண்டுபிடிப்பு குறித்து படிக்க, படிக்க வியப்பின் எல்லைக்குச் செல்வீர்கள் நீங்கள்?

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடந்துகொண்டிருந்த போதுதான் ஓமர் யாஹி அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. என்ன ஒரு ஆச்சரியமான ஒற்றுமை!

2025 ஆம் ஆண்டிற்கான ‘வேதியியல் நோபல் பரிசு’ ஜப்பானைச் சேர்ந்த கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்பேர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஓமர் எம்.யாகி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. "உலோக - கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான" பரிசு இது.

பாலைவன காற்றிலும் தண்ணீர்?

சுட்டெரிக்கும் சூரியன் வாட்டியெடுக்கும் வறண்டப் பாலைவன காற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? சிரித்துவிட்டு கடந்து செல்வீர்கள். ஆனால் அறிவியல் அதை மெய்ப்பித்துள்ளது. ஆம் ஓமர் யாஹியின் கண்டு பிடிப்பு அதுதான். கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியராக பணியாற்றி வரும் ஓமர் யாகியின் மிகச் சிறந்த மற்றும் நோபல் பரிசை பெற்ற கண்டுபிடிப்பு Metal-Organic Frameworks (MOFs) ஆகும். அதாவது உலோக – கரிம கட்டமைப்புகள் ஆகும். உலகின் எதிர்கால தேவைகளைத் தீர்க்கும் வகையில் உருவான இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 

.MOFs என்னவென்றால்? 

உலோக அணுக்கள் (metal ions) மற்றும் கரிம மூலக்கூறுகள் (organic linkers) இணைந்து உருவாகும் முப்பரிமாண (3D) கட்டமைப்புகள். இதில் இடைவெளிகள் (pores) மிக அதிகமாக உள்ளன, அதாவது “துளைகள் நிறைந்த கட்டமைப்புகள்”. ஒரு கிராம் MOF என்பது, ஒரு கால்பந்து மைதானத்தைவிட அதிக பரப்பளவைக் கொண்டிருக்கும் அளவுக்குத் துளைகள் கொண்டிருக்க முடியும்! உதாரணமாக ஒரு தேன்கூட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒரு தேன் கூட்டை நூலாக மாற்றினால் அது ஒரு கால் பந்து மைதானத்தின் எல்லை கோடாக மாறும் அவ்வுளவு அடர்த்தி அது. 

MOFs எப்படி பயனளிக்கின்றன? 

புவியின் வெப்பமயமாதல் காரணமான CO₂ வாயுவை கைப்பற்றி, பாதுகாப்பான முறையில் சேமிக்க உதவுகிறது. பனிக்கட்டிகளோ, மின் சக்தியோ இல்லாமல், வளையில்லா பகுதிகளில் காற்றிலிருந்து குடிநீரை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு வாய்ப்பு. சுத்தமான எரிசக்தியாக ஹைட்ரஜனை சேமிக்க மிகச் சிறந்த வழி. நோய்வாய்ப்பட்ட உறுப்புகளில் மருந்துகளை நேரடியாகச் செலுத்த உதவுகிறது. கழிவுகளை சுத்தப்படுத்துதல், பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.இது வெறும் ஒரு அறிவியல் வெற்றியாக அல்ல, உலகத்தின் எதிர்கால சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு புதிய வழியைத் திறந்த சாதனையாகும். 

ஹைர்டஜன் புகும் போது :

 ஹைட்ரஜன் மிக மெதுவாகச் சூழலில் பறக்கும் மிகச் சிறிய அணுக்கள் கொண்ட வாயு. இதை சுருக்கி பாதுகாப்பாகச் சேமிப்பது மிகக் கடினம். உயர் அழுத்தத் தொட்டிகளில் (high-pressure tanks) வைத்தால், அதிர்ச்சி, வெடிப்பு அபாயம் ஏற்படும். ஆகவே, அதனை பாதுகாப்பாக, திறனாக சேமிக்க புதிய வழிகள் தேவைப்படுகின்றன. அந்த புதிய வழியைத் திறந்தவர் ஓமர் யாஹி.

 ஹைட்ரஜன் அணுக்கள் MOF கட்டமைப்பின் உள்ளே புகும். அந்த இடைவெளிகள் (pores) ஹைட்ரஜனை ஊக்கமுடன் தக்க வைத்துக்கொள்கின்றன. தேவைப்படும் நேரத்தில், அந்த ஹைட்ரஜன் வெளியேற்றப்படும். உதாரணமாக, ஒரு ஹைட்ரஜன் இஞ்சின் அல்லது fuel cell க்கு செல்லும். இதனால் குறைந்த வெப்பநிலையில் கூட அதிக அளவு ஹைட்ரஜனை சேமிக்க முடிகிறது. அழுத்தம் இல்லாமலே சேமிக்க முடிகிறது. இது மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த அற்புத கண்டுபிடிப்பைத்தான் ஓமர் யாஹி செய்துள்ளார் 

ஓமர் யாஹியின் சொற்கள்: 

"நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்க வேண்டும்." இதுதான் இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் அவர் சொன்ன சொற்கள். ஓமர் யாகி போன்றவர்கள் தான் அறிவியல் உலகின் உண்மையான கதாநாயகர்கள். இவர் உருவாக்கிய MOFs போன்ற தொழில்நுட்பங்கள், உலகின் சக்தி சிக்கல்கள், நீர் தட்டுப்பாடு, வாயுக் களைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. இளைய தலைமுறையின் அறிவியலாளர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அறிவியலை ஆர்வத்துடன் கற்கவும், உலக நன்மைக்காக பயன்படுத்தவும் அவரின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

 ஒன்றை மறந்த்விடாதீர்கள்! இந்த பாலஸ்தீனியனின் கண்டுபிடிப்பை இனவெறி இஸ்ரேல் கண்டிப்பாக பயன்படுத்தும். தங்களால் அகதியாக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவன் கண்டுபிடிப்பு இதுவென அலட்சியம் செய்யாது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

----------------------------------------------------

எஸ் .ஜி .ரமேஷ்பாபு 

____________________________________

பின் குறிப்பு : நான் அறிவியல் முற்றிலும் புரிந்த விற்பன்னன் இல்லை.  எனக்கு புரிந்ததை எழுதி உள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் . நன்றி! 

3 கருத்துகள்: