“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர். அதன் விளைவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” - பிரதமர் மோடி
“இதுவொரு அற்புதமான வெற்றி. எங்கள் வீரர்களின் சக்தி வாய்ந்த ஆற்றல் எதிரிகளை மீண்டும் தகர்த்தெறிந்துள்ளது. எந்த துறையாக இருந்தாலும் பாரதம் வெல்வதற்கே விதிக்கப்பட்டுள்ளது.” - அமித்ஷா
இந்துக்களை இராணுவமயமாக்கு, இராணுவத்தை இந்துமயமாக்கு என்று முழக்கமிட்டவர்கள் இப்போது விளையாட்டை போர்க்களமாக்கு - போர்க்களத்தை விளையாட்டாக்கு என உருமாறி நிற்கின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு ஏமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங், இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்ற 19 போட்டிகளுடன் முடிவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிகொள்ளும் முதல் ஆசியக் கோப்பை ஆட்டம் இது. பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி தனது 9 ஆவது ஆசியக் கோப்பையை வென்றது.
கிரிகெட்டை கைப்பற்றுதல்
இந்த வெற்றியைத்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பேசியுள்ளார். விளையாட்டையும் தனது மதவெறி நிகழ்ச்சி நிரலில் இணைத்து ஆனந்தக் கூத்தாடி உள்ளனர். இதற்கு அச்சாரம் இப்போது போடப்பட்டதல்ல மோடி ஆட்சிக்கு வந்த மறு ஆண்டு அதாவது 2015 இல் அனுராக் தாக்கூர் என்ற பாஜக தலைவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதில் துவங்கியது.
அதன் பின் 2019 இல் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றதும் பல முறை கிரிக்கெட் வீரர்களின் சட்டை வண்ணம் காவியை நினைவூட்டத் துவங்கியது.காவிக்கூட்டத்தின் திட்டங்களை அமலாக்க ஒரு நல்ல பயிற்சியாளர் தேவைப்பட்டார். அப்போது தான் கட்சியின் இணைந்து உடன் 2019 தேர்தலில் கிழக்கு தில்லி தொகுதியில் மக்களைவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீர் 2024 இல் களத்தில் இறக்கப்பட்டார். ஆம் அவர் இந்திய அணியின் தலைமை கோச்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விராட் கோலி எனும் மனிதன்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில், ஹரிஸ் ரவூப் பந்தில் அடித்த ஒரு ஹிமாலய சிக்சர் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத தருணத்தை உருவாக்கினார். 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில், ஹரிஸ் ரவூப் பந்துவீசும்போது, கோலி ஒரு நேரடி சிக்சரை அடித்தார், அது ரவூப்பின் தலை மேல் சென்று மைதானத்தின் எல்லையைக் கடந்தது.
இந்த சிக்சர், “Fan Craze Greatest Moment” என்ற விருதைப் பெற்றது, இது உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தருணமாகக் கருதப்படுகிறது. அந்த நாள் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டது. அதைத் தொடர்ந்து, இயல்பிலேயே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் குணம் படைத்த விராட் கோலி களத்தின் எல்லையில் செய்த சிறந்த சம்பவம் என்ன தெரியுமா? பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாமை கட்டி அணைத்து அன்பை விதைத்தார். தனக்கு எதிராக கோபம் கொண்டு பந்துகளை வீசிய ஹரிஸ் ரவூப் கைகளை இறுக்க அணைத்து தனது நேசத்தை வெளிப்படுத்தினார். விளையாட்டு மைதானம் என்பது இரு அணிகள் மோதிக்கொள்ளும் இடம். மைதானத்தின் எல்லையைக் கடந்தால் நாம் நண்பர்கள். விளையாட்டு என்பது அன்பை விதைக்க எனப் பாடம் நடத்தினார்.
ஜாகிர்கானும் வாசீம் அக்பரும்
அது அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலம். கார்கில் போரும், பாராளுமன்ற தாக்குதலும் முடிந்த சூழல். ”எப்போது எல்லை கோட்டை விட்டோம் என சொல்லாமல்” கார்கிலை மீட்டோம் என முழக்கம் எழுந்த சூழல். இந்தியா, பாகிஸ்தான் பரம எதிரிகளாக முட்டிக்கொண்டு இருந்த சமயம்.
2003 உலக கோப்பையின் முக்கியமான ஆட்டம் அது. அந்த சமயத்தில் இந்திய அணியின் தலைவர் சவுரவ் கங்குலி பாகிஸ்தான் அணியின் தலைவர் வக்கார் யூனுஸ். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 273/7 ரன்களை எடுத்தது. பின்பு டெண்டுல்கர் அடித்த 98 ரன் உதவியுடன் இந்தியா 276/4 என்ற கணக்கில் வென்றது. அந்தப் போட்டியில் ஜாகிர்கான் 8 ஓவர்கள் பந்து வீசி 46 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். துவக்க பவுலராக பாகிஸ்தானின் ரன்களை கட்டுப்படுத்த உதவினார்.
ஆனால், இந்தப் போட்டிக்கு முதல் நாள் நடந்த சம்பவம் மிகவும் பிரச்சனைக்குரியதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. அதாவது போட்டிக்கு முதல் நாள் வலைப் பயிற்சியின் போது இந்திய பந்து வீச்சாளர் ஜாகிர்கான் பாகிஸ்தானின் சிறந்த பந்து வீச்சாளரான வாசீம் அக்பரிடம் பந்து வீச்சு சந்தேகங்களைக் கேட்டு தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். இது பாகிஸ்தான் ஊடகங்களால் பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டு பாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம் போல சித்தரிக்கப்பட்டது.
கேள்விகளுக்கு வாசீம் அக்பர் மிக நிதானமாக பதில் சொன்னார் ‘விளையாட்டு வீரர்கள் நுணுக்கங்களை பரிமாறிக்கொள்வதும் - தெரியாததை தெரிந்தவர்கள் சொல்லி கொடுப்பதும் விளையாட்டின் ஒரு பகுதி. இதில் நாடுகள் என்ற எல்லைகள் ஏதும் கிடையாது”
காவிகளின் கோட்பாடு
இன்னும் இப்படி நிறையச் சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். விளையாட்டு மனிதர்களை ஒருங்கிணைக்க. பேதங்களை கடந்து ஒன்றிணைய. ஆனால் காவிகள் விளையாட்டுத் துறையை கைப்பற்றியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது.
தற்போது நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் மூன்று முறை பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது. ஆனால் ஒரு முறைகூட இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதை பெருமையாக சங்கிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். ஆசிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி அவர்களிடம் இருந்து வெற்றிக் கோப்பையை ஏற்க மறுத்தனர். துபாய் மைதானத்திலிருந்து ஆசியக் கோப்பையுடன் வாரியத் தலைவர் வெளியேறினார்!
ஆனால் ஆசியகோப்பை துவக்க விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மொஹ்சின் நக்வி, இந்தியா உட்பட அனைத்து அணித் தலை வர்களுடனும் நின்றார். அன்று இந்திய அணித்தலைவர் கைகுலுக்காமலோ, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காமலோ இருக்கவில்லை. பின்னர் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தது எது?
அங்கு தான் கவுதம் கம்பீர் உள்ளிட்ட சங்கிக் கூட்டம் தனது வேலை களை காட்டியது. இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து முதலாவது வெற்றி பெற்ற போது, அந்த வெற்றியை இந்திய ஆயுத படைக்கும், மற்றும் பஹல்காம் தாக்குதலில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி தலைவர் சூர்யகுமர் யாதவ் கூறினார். எல்லையில் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை கொண்டாடிய வீடியோக்கள் பரப்பப்பட்டது.
போர்களத்தில் சோட்டாபீம்
இந்தியா - பாகிஸ்தான் போர்க்களத்தை சோட்டாபீம் உட்பட பல வீடியோ கேம்களாக மாற்றி நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம் நெஞ்சுகளில் பாகிஸ்தான் வீரர்களை கொன்றழிக்க பயிற்சி கொடுக்கின்றனர். அதே பணிகளை பாகிஸ்தானும் செய்கிறது. உதாரணமாக இந்தியாவிலும் பாகிஸ்தானில் மத அடிப்படைவாத அறிவு ஜீவிகள் வீடியோ கேம் மூலம் இளம் தலைமுறையினரை தங்கள் பக்கம் ஈர்க்கின்றனர்.
இரு நாட்டிலும் உள்ள வீடியோ கேம்களை பார்த்தால் தெரியும். 1971: Indian Naval Front 1971 இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் கடல் மேடையை மைய மாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கேம். Yoddha: இந்தியாவின் கார்கில் யுத்தத்தை சார்ந்த வீடியோ கேம். War Ahead 1947 “Pakistan Vs India War” என்ற தலைப்பில் மொபைல் சூட்டிங் கேம். Army Commando Mission: India vs Pakistan War - இந்தியா vs பாகிஸ்தான் போர் பின்னணியில் உள்ள ஒரு 3D ஷூட்டர் கேம். FAU-G (Fearless and United Guards) இந்த கேம் குல்வான் மோதலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.
Pak vs India Surgical Strike – Air Force Encounter: இந்த கேம் பாகிஸ்தான் பார்வையில் தேவைப்படும் “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” மற்றும் வான் போர் காட்சிகளை கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது. PK‑India Real Tank War 2016: இந்த கேமில் நீங்கள் பாகிஸ்தானில் டேங்க் இயக்கி இந்திய அணியின் டேங்க்களை அழிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. Pakistan Army Retribution: இது பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட ஒரு First‑Person Shooter கேம், 2014 பீசவர்ந் பள்ளி தாக்குதலை அடிப்படையாக கொண்டு உள்ளது.
மற்றொரு பக்கம் கிரிகெட் விளையாட்டை போர்க்களத்துடன் இணைத்து விளையாட்டைக் காவிமயமாக மாற்றுகின்றனர். இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானில் கிரிக்கெட் பச்சைமயமாகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. பஹல்காம் தாக்குதலை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தேசபக்தி வேறு, தேசவெறி வேறு என்ற எல்லைக் கோட்டை அழித்து விளையாட்டை காவிமயமாக்கும் நிலையை எதிர்த்து நிற்பது இந்தியர்களின் கடமையாக முன்னெழுகிறது.
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
(12.10.2025 - தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைபில் வெளி வந்த கட்டுரை)
![]() | |||
மேற்கண்ட கட்டுரைக்காக எனது மகன் சத்யகுமார் ஜெமினியில் உருவாக்கிய ஓவியம் |
![]() |
சாட் ஜிபிடியில் நான் உருவாக்கிய ஓவியம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக