தோழர் சி.கோவிந்தராஜன் இறந்த 7ஆம் நாள் ஷாஜாதி இறந்தார். கணவன் இறந்தது மனைவிக்கு தெரியாது. காரணம் அவர் உடல் நிலை சரியில்லாமல் கோமாவில் இருந்தார். தேசம் விடுதலை வேள்வியில் இருந்தபோது உழைப்பாளி மக்களுக்காக போராட்டக் களங்களில் நேசம் கொண்டு, மத வேலிகளை தாண்டி, போராட்டமே வாழ்க்கை என தெரிந்தும், எப்போது சிறைச்சாலை போகலாம் என புரிந்தும் திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதி 56 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்தனர். மரணம் மட்டுமே அவர்களை பிரித்தது. தன் கணவன் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடியபோது முதலாளிகள் வர்க்கம் அவரை கொலை செய்யும் நோக்கோடு கத்தியால் குத்தியது. அவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நீங்கள் நெல்லிகுப்பத்தில் இருக்க வேண்டாம் என்று கட்சி சொன்ன போது "எதையும் நான் சமாளிப்பேன் தோழர்களே! கவலை வேண்டாம்" என கம்பீரமாக முழங்கிய அந்த வீரத்தாய் தோழர் ஷாஜாதி. அவரது கணவன் தோழர் சி.கோவிந்தராஜன் என சொல்லவும் வேண்டுமோ?
மலரும் நினைவுகள்
நடந்ததை அவரே நினைவு கூர்கிறார், "இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் என்ற தீ உணர்ச்சிப் பிழம்பாக நாடெங்கிலும் எரிந்து கொண்டிருந்த காலகட்டம். பெண்களும் அந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றனர். இந்திய மாதர் சம்மேளனம் நாடு முழுவதும் ஏராளமான கிளைகளை உருவாக்கி மாதர்களை பங்கேற்கச் செய்தது. இதில் நானும் ஒரு உறுப்பி னராகி செயல்பட ஆரம்பித்தேன்."
"1944-ம் ஆண்டு இந்த மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடை பெற்றது. அப்போது எங்கள் குடும்பம் விருத்தாசலத்தில் இருந்தது விருத்தாசலம் ஜங்ஷனிலுள்ள சில பெண்களுடன் நானும் அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு அந்த சங்கத்தின் தலைவர்களான ஹஜ்ராபேகம், விமலாரணதிவே, சரளா சர்மா போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இதனால் என் அரசியல் ஆர்வம் பெருமளவிற்கு அதிகரித்தது."
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்
"கடலூரைச் சேர்ந்த தோழர் தையநாயகி அம்மாள் மாதர் சங்கப் பணிக்காக பொன்மலை சென்றார். விருத்தாசலம் மாதர் சங்கக் கிளைக்கு நான் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றினேன்" "பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு கொண்டு 1946-ல் கட்சியின் உறுப்பினரானேன். அக்காலத்தில் நான் செய்த கட்சி பணிகளும் மாதர் சங்க பணிகளும் என் மனதில் இன்றும் பதிந்து கிடக்கின்றன.
1948-க்கு பிறகு கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டது. இச்சமயத்தில் தான் 1949-ல் விருத்தாசலத்திலிருந்து என்னை கல்கத்தாவில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தனர்." தலைமறைவு வாழ்க்கை "அந்த மாநாட்டில் தோழர் ஜோதிபாசு மற்றும் முன்னணி தலைவர்களின் வீரமிக்க சொற்பொழிவுகளைக் கேட்டு மேலும் பரவசமடைந்தேன். அவைகளை எல்லாம் இன்றும் என்னால் மறக்க இயலாது.
கல்கத்தாவிலிருந்து திரும்பியதும் நானும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. "என ஷாஜாதி அம்மாள் தனது மலரும் நினைவுகளை 2001 ஆண்டு மகளிர் சிந்தனை மாத இதழில் மேற்கண்டவாறு பகிர்ந்து கொண்டார்.
நூற்றாண்டு விழா
ஒன்றுபட்ட தென்னார்காடு மாவட்ட செங்கொடி இயக்க வரலாற்றில் எப்போதும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் பெயர்கள்தான் ஷாஜாதியும் சி.கோவுந்தராஜனும். தோழர் சி.கோவிந்தராஜனுக்கு நூற்றாண்டு விழாவை செங்கொடி இயக்கம் நடத்தியது. இப்போது ஷாஜாதி அம்மாளுக்கு நூற்றாண்டுவிழா!
76 ஆண்டுகளுக்கு முன்பு
பொதுவாக சிறைச்சாலை என்றால் எல்லோரும் அஞ்சுவார்கள். 76 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் நிலைமை மோசம் அதிலும் பெண்கள் சிறைச்சாலை போவது கற்பனைக்கும் எட்டாத தீரச்செயல். ஆனால் சிறைச் சாலையை நடுங்க வைத்த வீர மங்கையாக ஷாஜாதி திகழ்ந்தார். கட்சியில் இணைந்து பலமாத கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் 1949ஆம் ஆண்டில் மீண்டும் வளவனூரில் ஷாஜாதி மற்றும் 4 தோழர்களுடன் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த தோழர் வி.சுப்பையா தப்பிச்சென்று விட்டார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜனும் ஷாஜாதியும் மற்றவர்களும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர்.
கட்சி மீதான பற்று
ஒருவார கால விசாரணைக்குப் பிறகும் அவர்களிடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியாததால் காவல்துறையினர் அவர்களை கடலூர் கிளைச் சிறைச்சாலைக்கு மாற்றினர். இதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமினில் விட்டனர். முஸ்லிம் பெண்கள் சிறைச்சாலைக்கு செல்லக்கூடாது என்ற வாதத்தை தகர்த்து என் கட்சியின் தத்துவமே என்னை வழிநடத்தும் என்றார்.
சிறைச்சாலையில் போராட்டம்
கடலூர் கிளை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு குளிக்க தனி இடம் கிடையாது. சிறைக் கைதிகள், போலீஸ் காவலர்கள், சிறை வார்டர்கள் எதிரில்தான் குளிக்க வேண்டும். தடுப்புச்சுவர் எதுவும் கிடையாது. பற்பொடி உபயோகிக்கக் கூடாது. இந்தக் கொடுமைகளை எதிர்த்தும். பெண் கைதிகளை முறையாக நடத்தக் கோரியும் கோவிந்தராஜனும், ஷாஜாதியும் கிளைச் சிறைக் சாலையில் உண்ணாவிரதம் தொடங்கினர். உண்ணாநிலையின் 16வது நாளில் ஷாஜாதியின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கிளைச் சிறைச்சாலையில் பெண் கைதிகள் குளிக்க தனி குளியல் அறை கட்டித் தருமாறு நீதிபதி உத்தரவிட்டார் அதன்பின் ஷாஜாதியின் போராட்டம் நிறுத்தப்பட்டது.
நேசம் துளிர்த்த கணங்கள்..
ஷாஜாதியை அறிந்த காலம் முதலே அவரைக் குறித்தும், கம்யூனிச லட்சியத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு, எந்தச் சோதனையையும் துணிவாக சந்திக்கும் ஆற்றல், உறுதி போன்றவை கோவிந்தராஜனின் உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தன. தலைமறைவு வாழ்வின்போது அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளவும் முடிந்தது. திருமணம் செய்வதாக இருந்தால் ஷாஜாதியை மணந்து கொள்வது என்ற முடிவில் கோவிந்தராஜன் இருந்தார். 'ஷாஜாதியும் கோவிந்தராஜனைக் குறித்து அத்தகையதொரு எண்ணத்தைக் கொண்டிருந்தார். போராட்டக் களத்தில் துளிர்த்த நேசம் திருமணத்தை நோக்கி சென்றது.
எதிர்ப்புகளை மீறி நடந்த திருமணம்
1952 ஆம் ஆண்டின் இறுதியில் கோவிந்தராஜன் - ஷாஜாதி திரு மணம் நடைபெற்றது ஆனால் அதற்கு முன்னர் அவர்கள் பலத்த எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி யிருந்தது. முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை கோவிந்தராஜன் திருமணம் செய்வது பற்றி அவரது தாயார் வருத்தப்படவில்லை அவருடைய மற்ற குடும்பத்தினர்களும் ஆட்சேபிக்கவில்லை ஏனென்றால் திருமணம் செய்து கொள்ளாமலே காலம் முழுவதும் கட்சிக்காக பணியாற்ற பிரம்மசாரியாக இருந்து விடுவாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தாயாருக்கு அவரது திருமண முடிவு நிம்மதி அளித்தது. ஆனால் ஷாஜாதியின் குடும்பத்தில் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதையெல்லாம் கடந்து அவர்களது திருமணம் நடந்தது. ஷாஜாதியின் பெற்றோர் கோவிந்தராஜன் ஷாஜாதியை திருமணம் செய்ய வேண்டுமென்றால் மதம் மாறவேண்டும் என்றனர் இரு வரும் அதை ஏற்கவில்லை. 56 ஆண்டுகாலம் அப்படியே வாழ்ந்தனர்.
தென்னார்காடு மாவட்டம், கடலூர் மாவட்டம் என பிரிந்த பின்பு தங்களது இறுதி காலம் வரை அவர்கள் உயர்திய செங்கொடியை நேசித்த மக்களை விட்டுகொடுக்கவே இல்லை. சாதிய பகைமையால் இம்மாவட்டம் தகித்த போது செங்கொடி நின்ற களங்களில் அவர்கள் நின்றார்கள். தமிழக மாதர் அமைப்பின் ஸ்தாபக தலைவராக, தென்னார்காடு மாவட்ட செங்கொடி இயங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக, வாழ்ந்து நிறைந்த தோழர் ஷாஜாதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் கடலூர் மாவட்ட செங்கொடி இயக்கம் உற்சாகம் கொள்கிறது.
(தகவல்கள் : தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய சி.கோவிந்தராஜன்: சுதந்திர போராட்டத்திலிருந்து சமுதாய புரட்சிக்கு என்ற நூலிலிருந்து)
- எஸ்.ஜிரமேஷ்பாபு
மாநிலக்குழு உறுப்பினர்
26.07.2025 தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை
அருமையான தகவல்கள்,
பதிலளிநீக்கு