வியாழன், 12 டிசம்பர், 2024

செங்கொடி இயக்கத்தின் பாரம்பரிய தளம் கடலூர் மாவட்டம்

 

தியாகிகள் ஸ்துபி பின்னணி

கடலூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு என்பது தங்கள் வாழ்வை இவ்வியக்கத்திற்காகத் தியாகம் செய்த தியாக சீலர்களான   பல்லாயிரம் தோழர்களின் வரலாற்றின் தொகுப்பே. தலைமுறை  தலைமுறையாய் செங்கொடியைக் காத்து வரும் இந்த தோழர்களின் உழைப்பில்தான், மக்களுக்காக எதையுமே எதிர்பார்க்காமல் உழைக்கும் அந்த மகத்தானவர்களின் வியர்வையில்தான் இன்று கடலூர் மாவட்டத்தில் கம்பீரமாய் பறக்கிறது செங்கொடி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இம்மாவட்டத்தில் இருதரப்பு மக்கள் மக்களையும் மோதவிட்டு, அதனால் ஆதாயம் அடையும் சக்திகள் தொடர்ந்து கலவரங்களை உருவாக்குவது கடந்த நூற்றாண்டு வரலாறு. ஆனால் செங்கொடி இயக்கம் தன் தோற்றத்திலிருந்தே இம்மாவட்டத்தில் இருதரப்பு மக்களின் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து களமாடி வருகிறது. ஒற்றுமையை வலியுறுத்தும் அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பக்கம் சமரசம் இல்லாமல் உறுதியோடு நின்றதுதான் அதன் வீரம் மிக்க வரலாறு.

 

71 ஆண்டுகளுக்கு விதைக்கப்பட்ட விதை  

 

தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம்  என்று இருந்தது.பிறகு கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுச்சேரி மாநிலம் எனப் பிரிந்து நிற்கும் ஒன்றுபட்ட தென்னார்காடு மாவட்டத்தின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சிதம்பரம் நகரில் 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது அப்போது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 120 ஆகும். கட்சி பிளவுக்குப் பின்னர் 1975 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் 100 கிளைகளும் சற்றொப்ப 1000 கட்சி உறுப்பினர்களும், ஆயிரங்களில் வர்க்க வெகுஜன அமைப்பின் உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால் இன்று சுமார் 1000 கிளைகளும், 10,000 கட்சி உறுப்பினர்களும், லட்சக்கணக்கில் வர்க்க, வெகுஜன உறுப்பினர்களும் உயர்ந்திருக்கிறார்கள்.

 பி சி ஜோஷி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, மும்பை நகரில் 1943 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் தமிழகத்திலிருந்து இராமமூர்த்தி சி. எஸ். சுப்ரமணியம், மோகன் குமாரமங்கலம், சி.கோவிந்தராஜன், கே.ரமணி உட்பட 8 பேர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். இதில் சி.கோவிந்தராஜன் கடலூர் மாவட்ட ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். 1949 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் அகில இந்தியச் சமாதான கவுன்சில் மாநாடு நடைபெற்றது.  தென்னார்காடு மாவட மாதர் சங்கத் தலைவராக இருந்த ஷாஜாதி அதில் பிரதிநிதியாக கலந்துகொண்டார். 

மார்க்சிஸ்ட் கட்சி உதயமாகிறது...

1964 ஆம் ஆண்டு துவக்கத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் மாகாண கவுன்சில் கூட்டத்தில் பெரும் தத்துவார்த்த மோதல் நடைபெற்றது. கட்சியின் வர்க்கக்கூட்டு என்ற போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன். என்.சங்கரையா. ஏ.பாலசுப்ரமணியம், வி.பி.சிந்தன், கே.ரமணி, சி.கோவிந்தராஜன் மற்றும் எஸ்.நடராஜன் உள்ளிட்ட 29 கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதில் சி.கோவிந்தராஜன் மற்றும் எஸ்.நடராஜன்  ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொருட்டு மதுரையில் அதே ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் இணைப்பு கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.  இது 54 தோழர்களை கொண்ட ஒரு மாநில இணைப்பு குழுவை உருவாக்கியது. இந்தக் குழுவில் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து சி.கோவிந்தராஜன், எஸ்.நடராஜன், கே.வேணுகோபால்,  டி.பி.கோவிந்தன் மற்றும் டி.ஆர்.விஸ்வநாதன் ஆகிய ஐந்து தோழர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட மாநாடு 1964 செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலூரில் சிறப்பாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  எஸ்.நடராஜன் கட்சியின் மாவட்ட செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவசர நிலை காலத்தில்

1975 ஜூன் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. நெய்வேலி, சிதம்பரம், புதுவை, நெல்லிக்குப்பம், கடலூர் விழுப்புரம், விருத்தாசலம், பெண்ணாடம், தேவபாண்டலம், பண்ருட்டி போன்ற இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி, தென்னார்காடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் தீரத்தோடு அடக்குமுறையை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தது.

1976 ஜனவரி 30 ஆம் தேதி அன்று தமிழக திமுக அரசாங்கத்தை மத்திய காங்கிரஸ் அரசு கலைத்து. கடுமையான அடக்குமுறையை ஏவியது  தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலைகள் எங்கும் மரண ஓலம் கேட்டது. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்ட பிறகு, தென்னார்காடு மாவட்டத்தில் தோழர்கள் எஸ்.நடராஜன், சி.கோவிந்தராஜன் இருவர் மீதும் மிசா சட்டத்தின் கீழ் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தோழர் எஸ்.நடராஜன் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டார்.

தோழர் கே திருவேங்கடம் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டார். நெய்வேலியில் தோழர் கே.சிவதாஸ் கைது செய்யப்பட்டு 15 தினங்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தோழர் சி.கோவிந்தராஜன் தலைமறைவாக இருந்து செயல்பட்டார். நெல்லிக்குப்பத்தில் தோழர்கள் அமீர், லாசர், தயாளன் மூவரும் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். நடுவீரப்பட்டு நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

கட்சி பணிகளைத் தொடர்ந்து எடுத்துச்செல்ல, இக்கொடுமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்ட கட்சியின் மாவட்ட குழுவின் முடிவின்படி தோழர்கள் எஸ்.வீரபத்திரன், கே.பாலகிருஷ்ணன் (இன்றைய மாநிலச் செயலாளர்) இருவரும் தலைமறைவாக இருந்து செயல்பட்டனர். செப்டம்பர் மாதம் விருத்தாசலத்தில் வைத்து தோழர் என்.ஆர்.ராமசாமி, துரைசாமி, கோதண்டம் மூவரும் கைது செய்யப்பட்டு மூன்று தினங்கள் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

  நெய்வேலியில் சிஐடியு சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வீரபத்திரன் வேலை நீக்கம் செய்யப்பட்டதும், சென்னை சிறையில் வைக்கப்பட்டிருந்த தோழர் கே.திருவேங்கடம் அவர்களுக்குக் கண்பார்வை பாதிப்புக்குள்ளானதும் வரலாறாய் நிற்கின்றது..

காவிரி படுகையில் துவங்கி...

காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் வட்டங்களில் விவசாயிகளை விவசாய தொழிலாளர்களைத் திரட்டுகின்ற போது மிராசுதார்களுடைய, அரசினுடைய கடுமையான அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல நூறு தோழர்கள் பொய் வழக்கிடு கைது செய்யப்பட்டனர். தடியப்பட்டனர். தலைமறைவாக வாழ்க்கை நடத்தினர். எனினும் செங்கொடி இயக்கம் உழைக்கும் மக்கள் விடுதலைக்கு, கூலி உயர்வுக்கு, குத்தகை உரிமைக்குத் தொடர்ந்து களமாடியது. இந்த போராட்டங்களுக்கு 60 ஆண்டுகள் பாரம்பரியம் உண்டு. பின்பு மெல்ல மெல்ல மாவட்டம் முழுவதும் படர்ந்து சென்றது செங்கொடி.

விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், ஆலை தொழிலாளிகள், பலகலைக்கழக மாணவர்கள், தீரமிக்க இளைஞர்கள், வீரமுடைய பெண்கள் எனப் பல பகுதி மக்கள் அணி திரண்டனர். தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிலையமான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் தொழிற் சங்கம் துவக்கியதும், அதை அரசுடைமையாக்க 70களில் கோரிக்கை வைத்ததும், 2014ல் அதை அரசுடைமையாக்கியதும் செங்கொடி இயக்கமே!

போராட்டம் தொடர்கிறது...

 காவல் நிலைய கொடுமைகளுக்கு எதிராகத் தமிழக வரலாற்றில் தடம் பதித்த கடலூர் மாவட்ட தோழர்கள், தற்போது உச்ச நீதி மன்றத்திலும் தங்களது சட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாசிச அபாயத்தை எதிர்த்து, கூட்டு களவாணி கார்ப்ரேட் முதலாளித்துவத்தை எதிர்த்து, செங்கொடி இயக்க புதல்வர்கள் தேசம் முழுவதும் களமாடிக்கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்திலும் அந்த போராட்டம் தொடர்கிறது.

உலகமயம் உருவாக்கி உள்ள சமூக கொடுமைகளுக்கு எதிராக நெருக்கடிகள் மிகுந்த சூழலில் சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், உருவ வழிப்பாட்டுக்குப் பின்னால் மக்களைப் பிரித்தாலும் நிலையில், உழைக்கும் வர்க்கமாய் மக்களை ஒன்று திரட்ட செங்கொடி இயக்கம் போராடி வருகிறது.

சமூக மாற்றத்திற்கான கோபம் பொதித்த செங்கொடியை முன் தலைமுறையை எங்களிடம் கொடுத்தனர். அதை நாங்கள் பற்றிச் செல்கிறோம். எங்கள் தலைமுறை களமாடும் செங்கொடியை அடுத்த தலைமுறை பற்றி எழும். தமிழக  செங்கொடி இயக்க வரலாற்றில் எப்போதும் கடலூர் மாவட்டம் முன்னணி படையாய் நிற்கும் என்பதைப் பறைசாற்றும் வகையில் 24வது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.   

 12.12.2024 அன்று தீக்கதிரில் வெளிவந்த எனது கட்டுரை


 

 


3 கருத்துகள்:

  1. கடலூர் மாவட்ட 24 வது மாநாடு வெல்லட்டும் தோழர்

    பதிலளிநீக்கு
  2. வெல்லும் வெல்லும் மக்கள் இயக்கமே வெல்லும் மார்க்ஸிஸமே வெல்லும்.
    அன்னை பாலு அல்லம்பட்டி

    பதிலளிநீக்கு