Saturday, October 12, 2024

Work From Home என்பதை 33 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சுஜாதா!


 

          எனது புத்தக அறையில் வேறொரு புத்தகம் தேட துவங்கிய போது இடையில் 1991 ஆம் ஆண்டு  விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக வந்த  சுஜாதாவின் கற்பனைக்கு அப்பால் என்ற சுவராசியமான புத்தகம் கண்ணில்பட்டது. கால் நூற்றாண்டுகளுக்கு முன் படித்த புத்தகம். மீண்டும் ஒரு வாசிப்பு போடலாம் என்று அந்த புத்தகத்தை ஆயுத பூஜை அன்று படித்து முடித்தேன். இரண்டு மணி நேரம் செலவழித்தால் படிக்கும் அளவுதான் அந்த புத்தகம்.

          என்ன இயற்பியல், பயாலஜி, வேதியல், சங்க இலக்கியம், அண்டம் என தலைவர் வழக்கம் போல மகிழ்ச்சியாக தலைசுற்ற வைப்பார்!

          அதில் ஒரு கட்டுரை மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கட்டுரையின் தலைப்பு வீட்டில் அலுவலகம். இந்த கட்டுரை எழுதும் போது பிறந்திருக்காத அல்லது மூக்கொழுக தவழ்ந்திருக்கும் இன்றைய ஆண்ராய்ட் தலைமுறைக்கு இதில் வருவதெல்லாம் சிரிப்பாக இருக்கலாம். ஏனெனில் இன்று இருக்கும் கணினி யுகம் அப்படி. அதன் வேகம் அப்படி!

          ஆனால் செல்போன் இந்தியாவில் புழக்கத்திற்கு வராத, ஏதோ ஒரு அலுவலகத்தில் கணினிகளை  ஆச்சரியமாக பார்த்த சமயத்தில், 1991ல் எர்நெட்டைப் பயன்படுத்தி இந்தியாவில் இமெயில் அனுப்புவர்களின் எண்ணிக்கை 1000 பேர்தான் என்ற தகவலுடன் இந்த கட்டுரையில் நுழைந்தால்தான் உங்களுக்கு இதன் சுவராசியம் கைகூடும்.  

          கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே முடங்கியது, நமது நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்து. அந்த சமயம்  பெரும்பாலான நிறுவனங்களில் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறிவிட்டனர். பலருக்கு வீடு, குடும்பம், அலுவலகம் அனைத்தும் ஒன்றானது. அப்போது  சென்னை போன்ற பெரு நகரங்களில்  Work From Home கொடுத்து விட்டதால், காற்று மாசுபாடும் குறைந்தது.

           குறிப்பாக ஐடி கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வீட்டில் இருந்து வேலைபார்த்துக் கொள்ளுங்கள், உடல் நலம் தான் முக்கியம் என்று அனுப்பியது. குறிப்பாக கூகுள், விப்ரோ, அமேசான், ஐபிஎம், அசென்ஞர், காக்னிசென்ட், ஸ்னாப்டீல், ஓலா, உபர், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வேலை செய்ய ஊக்குவித்தன. குறிப்பாக, காகிசென்ட் நிறுவனம், அசோசியட் லெவலில் இருக்கும் பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் அறிவித்தது.

          அலுவலக வாடகை, மிண் கட்டனம் போன்ற செலவு மிச்சம் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.  சரி அதை விடுங்கள். சுஜாதாவின் Work From Home படித்து பாருங்கள். என்ன வழக்கம் போல கதையின் இறுதி வரி நக்கல் அடிப்பதாய் நினைத்து பெண்களை கிண்டல் செய்யும் அம்மாஞ்சி புத்தி தெரியும்.  சுஜாதா என்ற பெண் பெயர் இருந்தாலும் அவரும் ஆண்தானே?  

 

வீட்டில் அலுவலகம்

          எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்குப் போக வேண்டாம் ஒரு டெலிபோன் ஒரு கணிப்பொறி போதும் வீட்டில் அலுவலகம் (Home Office) என்கிற சித்தாந்தம் இன்று அமெரிக்காவில் பரவிக் கொண்டு வருகிறது. இன்றைய தினம் மொத்தம் மூன்றரைக்கோடி பேர் வீட்டைவிட்டு நகராமல் ஆபீஸ் நடத்துகிறார்கள். 1994-இல் ஐந்து கோடிப்பேர் வீட்டில் இருக்கப் போகிறார்கள். அடுத்த நூற்றாண்டு தொடங்கு முன் அமெரிக்காவில் பாதிப்போர் வீட்டை விட்டு நகராமலே ஆபீஸ் பரிபாலனம் செய்யப் போகிறார்கள் என்று ஹேஷ்யம் சொல்கிறார்கள்.

          இது எதனால்? டெக்னாலஜி, பர்ஸனல் கம்ப்யூட்டர் என்னும் சொந்த கணிப்பொறி கணிப் சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன் - கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு வந்து விட்டது. (Fax) என்று சொல்கிறார்களே, தொலைக்கடித இயந்திரம். இதுவும் சின்னதாகப்போய் தபால் ஆபீசின் உதவியில்லாமலே டெலிபோன் கம்பிகள், மூலம் கடிதங்கள் அனுப்ப முடியும். போன்தான் இருக்கவே இருக்கிறது. விரல் நுனியில் உலகத்தின் எந்த மூலைக்கும் பேசமுடியும். ஆபீசுக்குப் போனால் நாம் எல்லாகும் என்ன வேலை பார்க்கிறோம்?

          அன்று காலை தபால் பார்க்கிறோம். மேலதிகாரி டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம் நேரே வரச் சொல்வார், பிறகு ஆபீசில் ஃபைல் கோப்புகளைப் பார்க்கவேண்டும். கடிதம் எழுத வேண்டும். ஊழியர்களுடன் பேசவேண்டும் வெளியுலகத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்குக் கடிதங்கள் எழுத வேண்டும். நடுநடுவே டீ சாப்பிடவேண்டும் காப்பி சாப்பிடவேண்டும், காண்டீனில் போய் சாப்பாடு கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் தூக்கம்.

          இது எல்லாமே இன்றைய டெக்னாலஜியில் வீட்டை விட்டு ஓர் 'இன்ச் நகராமல் சாத்தியம்’, முதலிலிருந்து பார்க்கலாம். அன்றைய தபால். உங்கள் அலுவலகம் தபால் கடிதங்கள் எல்லாவற்றையும் தபகள் உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும் ஃபாக்ஸ் மூலம் உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட முடியும். அதற்கு உங்கள் டெலிபோன் இணைப்பையே பயன்படுத்தலாம்.  ஃபாக்ஸ்  இயந்திரம்  ஒரு நவீன விந்தை. காகிதத்தில் எழுதியிருப்பதை ஒளிக்கற்றையால் வருடி அந்தக் கறுப்பு வெளுப்பு வித்தியாசங்களை மின்சாரத் துணுக்குகளாக்கி டெலிபோன் இணைப்பில் அனுப்பி தூரத்தில் உள்ள இயந்திரம் இந்தக் துணுக்குகளை மின்சார உணர்ச்சி தடவப்பட்ட காகிதத்தில் எழுதிக்கொடுக்கிறது. இன்றைய ஃபாக்ஸ் இயந்திரத்தில் தனிப்பட்டது. இந்த மின் காகிதத்திலும் அச்சடிக்கக்கூடிய ஃபாக்ஸ் இயந்திரங்கள் இப்போது வரத் தொடங்கிவிட்டன. அதேபோல கலர் ஃபாக்ஸும்

          அடுத்து மேலதிகாரியுடன் பேச போன் இருக்கவே இருக்கிறது. நேரில் பேசவேண்டுமெனில் அவர் ஆபீசுக்குப் போகாமல் வீட்டிலிருந்தே பேச டெலி கான் ஃபரன்ஸிங் (Tele Conferencing) என்கிற சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ காமிரா உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும் அவர் முகம் உங்கள் திரையிலும்.  முன்பெல்லாம் வீடியோ பிம்பங்களை அனுப்ப பிரத்தியேகமான கேபிள் இணைப்புகள் தேவைப்பட்டன. இப்போது சாமர்த்தியமாகயமாக டேட்டா கம்ப்ரெஷன் என்று சொல்லப்படும் முறைகளைக் கொண்டு டெலிபோன் கம்பிகளிலேயே உங்கள் முக பிம்பங்களையும் அனுப்பும் திறமை வந்து கொண்டிருக்கிறது. என்ன, வேகமாக மாறும் கால் பந்தாட்டக் காட்சிகளை அனுப்ப முடியாது. ஆனால் பின்னணியில் அதிகம் மாறாத. உதடு மட்டும் அசையும் பேச்சாளரின் பொம்மையை அனுப்ப இயலும்.

          ஆபீசில் நீங்கள் எழுதும் கடிதங்களை நீங்களே 'டிக்டேட்' செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு கொண்டு வார்த்தைகளாகப் பிரித்து அதை டைப் அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை இன்று கம்ப்யூட்டருக்கு வந்துகொண்டிருக்கிறது. அல்லது உங்கள் கடிதத்தை நீங்களே கணிப்பொறியின் திரையைப் பார்த்து அதன் விசைப் பலகையில் அடித்து அமைக்கவும் முடியும். இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப் பொறிகளில் உண்டு. அடித்துத் திருத்தப்பட்ட கடிதத்தை Fax -மூலம் அனுப்பவும் முடியும்.

          ஆபீசில் உள்ள கோப்புகளை அலமாரி அலமாரியாக ரூம் ரூமாகச் சேர்ந்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. (Compact Disc) என்று சொல்கிறார்களே. லேசர் ஒளித் தகடு லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாச்சாரங்களை எழுதிக் கொள்ளும் வசதியும்கூட வந்து விட்டது. இதை (WORM) என்கிறார்கள் (Write Once Read Many Times). ஒரு முறை எழுதி பல முறை படிக்கும் சாதனம் இந்த மாதிரி தகடுகளைப் பயன்படுத்தினால் கன்னிமரா போன்ற நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் எட்டு அல்லது பத்து தகடுகளில் எழுதிவிட முடியும்.

          ஆபீஸ் பழைய ஃபைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்துப் பார்க்க (Document Imaging) என்கிற புதிய இயல் வந்திருக்கிறது. இன்றைக்கு சுமார் 2500 டாலர் கொடுத்தால் காளன் (Cannon) கம்பெனியின் நேவிகேட்டர் என்னும் பெட்டியை நீங்கள் வாங்கலாம்.

          ’நேவிகேட்டர்' என்பது ஒரு சிறிய மேசைக் கணிப்பொறி ஒரு தொலைபேசி, ஒரு 'பதில் சொல்லி' ஒரு ஃபாக்ஸ் இயந்திரம், ஓர் அச்சியந்திரம், ஒரு 10 இன்ச்டெலிவிஷன் திரை. இது போதும் அலுவலகத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட

          இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவிலாதவை. ஆபீசுக்கு போகும். பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். (Pollution) சூழ்நிலை நாசம் குறையும்.

          எதிர்காலத்தில் அலுவலுக்கு நீங்கள் செல்ல வேண்டாம் அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

          ஒரே ஒரு சிக்கல்.

          நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்கவேண்டும்.

5 comments:

  1. அறிவியல் வளர்ச்சிப் போக்குகள் பற்றித் தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டுவந்தவர் சுஜாதா. புதிய வாசிப்பு அனுபவத்திற்கு வாசகர்களைத் தயார் செய்தவர். புலனாய்வுப் புனைவுகளில் தடம் பதித்தார். ஆனால் சமூகப் பிரச்சினைகளில் அறிவியல் கண்ணோட்டம் இல்லாதவராகவே இருந்தார். நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை நுகர்பொருளாகக் காட்டினார். நல்ல அறிவியல் கதைகளை மொழிபெயர்த்துத் தந்தார். ஆனால், தனது சொந்த அறிவியல் புனைவுக் கதைகளில் எதிர்மறைச் சிந்தனைகளையும், சோசலிசக் கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகளையும் சொன்னார். சொந்த வாழ்க்கையில் சாதிச் சங்க மாநாட்டில் அரிவாள் தூக்கி நிற்கிற அளவுக்குப் போனார். இருந்தபோதிலும், தவிர்க்க இயலாதபடிக்கு நான் சுஜாதா ரசிகன்தான்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தில் முழுக்க ஒத்துப்போகிறேன் அ.குமரேசன் தோழர்

      Delete
  2. நல்ல தொலைநோக்குப் பார்வை. இன்று நாம் காணும் வாழ்க்கை முறையை அவர் அன்றே கணித்திருக்கிறார்!!!

    நான் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே (2014 முதல் இன்று வரை) வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறேன். சொல்லப்போனால், இன்றைய WFH dudesக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவன் நான். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வீட்டிலிருந்து பணிபுரிவதில் சில பிரச்சினைகள் உள்ளன. நான் மனிதர்களை நேரில் சந்திக்காத நாட்களும் உண்டு. சின்ன சிரிப்பு கூட இல்லாமல் பல நாட்கள் கழித்திருக்கிறேன். இன்று வீட்டிலில் அலுவலக அறை இருந்தாலும், நண்பரின் போட்டோ ஸ்டூடியோ, வீடு மற்றும் கூட்டு அலுவலகங்கள் (Shared Office) என்று மாறி மாறி வேலை செய்கிறேன். வீட்டில் தனியே அலுவலகம் இருந்தாலும் வெளியில் இருந்து வேலை பார்க்கவே மனம் விரும்புகிறது.
    இது போக, இன்றைய தலைமுறை மகளுக்கு வீட்டிலிருந்து பணிபுரிவதால் நேரில் இருப்பவர்களிடம் எப்படி உரையாடுவது, கண் பார்த்து பேசுவது என்று பல விஷயங்கள் தெரிவதில்லை. மேலும் உடல் மற்றும் மன ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    வீட்டிலிருந்து பணிபுரிவது ஒரு வரப்பிரசாதம் ஆனால் இன்று மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் தங்களது வாழ்க்கை முறையில், உடல் மற்றும் மன ரீதியில் கவனம் தேவை.

    பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  3. உங்கள் கருத்து முக்கியமானது. சக மனிதர்களோடு பழகுவதும், அவர்களின் ஆற்றாமையில் தோல் நிற்பதும் மனித குலத்தின் இயல்பு.

    ReplyDelete
  4. Ramesh Murugesan உங்கள் கருத்து முக்கியமானது. சக மனிதர்களோடு பழகுவதும், அவர்களின் ஆற்றாமையில் தோல் நிற்பதும் மனித குலத்தின் இயல்பு.

    ReplyDelete