மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலைப்போரில் பெண்கள் - 231930களின் துவக்கம் இந்திய தேசத்தை அதிரவைத்த பல சம்பவங்களை கொண்டதாய் இருந்தது. பல்வேறு போராட்டங்களை சந்திக்கும் வருடங்களாகவும் இருந்தது, காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை தொடர்ந்து கைவிடபட்ட சட்ட மறுப்பு இயக்கமும், உப்பு சத்யாகிரகமும் வீதியில் நின்ற போராளிகளை அவநம்பிக்கை கொள்ளச்செய்தது. வேறு பல வடிவங்களையும் வேகங்கொள்ளச்செய்தது. லாகூர் சதிவழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் இருந்த ஜதின் தாஸ் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும், சிட்டகாங்கில் சூர்யா சென் தலைமையில் ஆயுத புரட்சியும், பஞ்சாப்பில் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும், வங்கத்தில் 9 கொலைகள் உள்ளிட்ட 92 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்ததும் 30களின் துவக்கம்தான். அச்சமயம் கொலையுண்டவர்களில் மிட்னாபூரின் மாவட்ட ஆட்சியர் ஜேம்ஸ் பெட்டியும், திப்பெராவின் மாவட்ட ஆட்சியர் ஸ்டீவன்சும் அடங்குவர். இதில் சாந்தி, சுனிதி சவுத்திரி என்ற இரு மாணவிகலால் ஸ்டீவன்ஸ் கொள்ளப்பட்டது அப்போதைய உத்வேகத்தில் பெண்களின் உணர்வை தெரிந்துக்கொள்ள ஒரு உதாரணமாகும். 
இந்த 1930களின் துவக்கத்தில் தமிழக பெண்களும் தங்கள் பங்களிப்பை மிகவும் சிறப்பாக செய்தனர். அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில்  சென்னை எஸ். அம்புஜம்மாள் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் எதிப்பையும் பொருட்படுத்தாமல் காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இப்போது கற்பனை செய்தாலும் பிரமிப்பாக இருக்கும். 10 நாள் தொடர் இயக்கம்.  இவருடன் ஞானம்மாள உள்ளிட்ட பல பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் கடுமையான மறியல் போராட்டங்களை நடத்தினர்.
இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது மிகவும் கீழ்த்தரமான அனுகுமுறையை மேற்கொண்டது காவல்துறை. கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், கேவலமான முறையில்  ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. இருந்தாலும் கொஞ்சமும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது இப்பெண்களை பிரித்தாள சூழ்ச்சி செய்த அரசு அம்புஜம்மாளை மட்டும் கைது செய்யாமல் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பெண்களை மட்டும் கைது செய்தனர்.

அதே நேரம் தமிழகத்தின் கடைகோடி பகுதியில் அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தில் பி.லீலாவதி மற்றும் லலிதா பிரபு ஆகியோர் விடாப்பிடியாக ஈடுபட்டனர். இதனால்  அவர்கள் கைது செய்யப்பட்ட தலைச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றனர். செல்லும் வழியில் அன்றைய சூழலில் நவீன ஆனால் கொடூரமான தண்டனையை அவர்களுக்கு காவல்துறையினர் வழங்கினர். செல்லும் வழியிலேயே அவர்களது தாலி அறுக்கப்பட்டது. இன்றும்கூட தாலியறுத்தல் அல்லது அகற்றுதல் கடுமையாக சர்ச்சையை உருவாக்கும் சூழலில் அந்று இது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என சொல்லத்தேவையில்லை. அந்த சம்பவம் நடந்த இடமே """தாலியறுத்தான் தலைச்சேரி""" என்று பெயர் சூடும் அளவு பரபராப்பான செய்தியாக மாறியது,

1930-ஆம் ஆண்டு செப்படம்பர் 3-ஆம் தேதி கல்லூரிகளுக்கு முன்பு  மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தொடங்கினார். அவரோடு சேர்ந்த போராளிகள் கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். இந்த போராட்ட வடிவம் ஏராளமான மாணவர்களை படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட தூண்டியது. இதனால் டாக்டர் பிச்சமுத்து அவர்கள் போராட்டம் தொடங்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வித பச்சாதாப உணர்வும் இல்லாமல் தேசத்திற்காக அந்த தண்டனையை அனுபவித்தார். இவரது கைதை கண்டித்து சென்னை இராணிமேரிக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரியைப் புறக்கணித்தனர்.

மற்றொரு பக்கம் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வா.வே.சு. ஐயர் அவர்களின் மனைவி பத்மாவதியம்மள் வேறு சில பெண்களும் தடை உத்தரவை மீறித் காங்கிரஸ் அறிவித்த தேசிய கொடிக்கு வணக்கம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். அந்த சமயம் தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள் நடைபெற்ற்ன, பல் நூற்றுக்கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் என தகிதகித்து கிடந்தது தமிழக மண்..

வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் ராட்டையும்; கையுமாகவே அலைந்தனர். தினசரி ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களில் காந்தியடிகள் அறைகூவி அழைத்த சத்தியாக்கிரகத்திற்காக பணமும், காசும், நகையும், பொருட்களாகவும் பலர் கொடுத்தனர். பலர் சிறை செல்வது வாடிக்கையாகிபோனது. இச்சமயத்தில்தான் பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனை பெற்றார். ஆங்கில அரசாங்கத்தின் அடக்கிமுறை சொல்லொன்னா உச்சத்தை நோக்கிச்சென்றது. அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை தூக்கியெறிந்தனர். சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள். காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை உதறித்தள்ளினார்..

கைது செய்யப்பட்டவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் காரண்மாக விடுதலை செய்யபட்டனர். இருப்பினும் மதுரையில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் செய்த மறியம் மிகவும் பேசப்பட்ட போராட்டமாகும். இதனை தீவிரப்படுத்த மதுரை பத்மாசனி அம்மாளும்,  சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோர் செய்த பிரச்சாரங்கள் குறிப்பிடத்தக்கவை. சென்னை நகரில் இப்போராட்டத்தை பெரும்பாலும் பெண்களே நடத்தினர். இப்போராடங்களுக்கு பெரும்பாலும் துர்காபாய் அம்மாளும், திருமதி கஸினுமே தலைமை தாங்கி வழிநடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாவும், திருவல்லிக்கேணியை சேர்ந்த கமலாபாயும் இத்தகைய மறியல் போராட்டங்களை தீவிரமாக கொண்டு சென்ற வீராங்களைகள் ஆவார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் ஆங்கில அரசாங்கம் ஆறுமாதம் சிறை தண்டனை கொடுத்தது. சென்னை எஸ். அம்புஜம்மாள்  போலவே கிருஷ்ணாபாய் என்ற பெண்மணி எண்பது தொண்டர்களை திரட்டி சென்னை ராட்டன் கடை வீதி துணிக்கடைகளை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கபடபட்டார்கள், இவர்களின் தொடர் முயற்சியால், கடுமையான போராட்டத்தால் ஏராளமான அந்நியத் துணிகடைகள் மூடப்பட்டது.

1932-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் சூழலில் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை முழங்கினர். நாடு முழுவதும் கடுமையான அடக்குமுறை  தொடங்கியது. முக்கிய தலைவர்கள் மட்டுமல்ல ஆங்காங்கு போராடிய அனைவரும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் அமைப்புகள் சட்ட விரோதமானவைகள் என அறிவித்து அவைகலை காவல்துறையினர் தடை செய்தனர்.

தமிழகத்திலும் பத்மாசனி அம்மாள், தாயம்மாள் மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகியோர் உள்ளிட்ட முப்பது பெண்கள் மதுரையில் போராடி, கைதாகி சிறை சென்றனர். முன்பு கைது செய்யப்படாமல் போராட்டத்தை தொடர்ந்த அம்புஜம்மாள் இரண்டாவது தடவையாக 1932 ஆம் ஆண்டில்  துணிக்கடை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்த்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப்பட்டார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள். போர்க்களம் தொடர்ந்து தகித்துக்கொண்டிருந்தது.
(கனல் இன்னும் அனையவில்லை)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark