புதன், 19 அக்டோபர், 2016

விடுதலை போரில் பெண் கலைஞர்கள்..


விடுதலைப்போரில் பெண்கள் -24
      
கே.பி.ஜானகியம்மாள்

கே.பி.சுந்தராம்பாள்

டி.கே.பட்டம்மாள்

வை.மு.கோதைநாயகியம்மாள்
                                                                                                                 
        தேசம் என்ற கட்டமைப்பும், அது சார்ந்து உருவக்கப்படுள்ள சித்திரமும் தேசபக்தி பாடல்கள் மீது ஒருவித பொதுவான ஈர்ப்பு உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். அதுவும் அடிமைப்பட்ட தேசத்தில் ஆர்த்தெழும் மக்களுக்கு கலைவடிவம் கொடுக்கும் உற்சாகம் அளவில்லாதது. உலக வரலாறு நெடுகிலும் கலைவடிவங்கள் விடுதலைப் போராட்டங்களில், புரட்சிகர மாற்றங்களில் ஆற்றிய பங்களிபுகள் அத்தகையது. பரிஸ் கம்யூன் துவங்கி சோவியத் புரட்சியின் வழியாக சீன புரட்சி வரை தொடர்ந்த வரலாறு இது.

      மேடையில் சுதந்திர முழக்கத்தை எழுப்பும் போதே உயிர் நீத்த விஸ்வநாததாஸ், பெண்களே நாடகங்களில் நடிக்க துனியாதபோது மேடையேறிய கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரின் பாரம்பரியம் தமிழக விடுதலை போரின் பாரம்பரியம்.

      சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் ஆர்வம்காட்டி வந்த பெண்களில் கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாளும் மிகவும் சிறப்புடையவர்கள. இவர்கள் கணீரெனப் பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட இருதரப்பு தொண்டர்கள் ஏராளம். அதிலும் பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்றவர் கோதை நாயகியாவார். காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவர் பெயர் இடம் பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும்.

      அதேபோல பின்னாளில் திரை உலகத்தால் எல்லோரும் அரியபட்ட கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய பாடல்களான
''காந்தியோ பரமஏழை சந்நியாசி''
''தாயிடம் அன்பில்லாத சன்மம் வீணே''
''நம்பிக்கை கொண்டெல்லோரும் ராட்டை சுற்றுவோம்''
''காந்தி லண்டன் சேர்ந்தார்'' ஆகிய நான்கு பாடல்களையும் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார். உப்பு சத்யாக்கிரகத்தையட்டி காந்தி சிறை சென்ற போது ""காந்தியோ பரம ஏழை சந்நியாசி"" என்ற பாடல் எங்கும் பரப்பப்பட்டது.

      காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார். 1931 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தினார். தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்பூரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில் விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார்.

      1932 ஆம் ஆண்டு மாவீரர்களான பகத்சிங், இராசகுரு, சுகதேவ்  ஆகிய தேசபக்தர்கள் தூக்கிலிடபட்டபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான ""சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா.. பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள்... நம் அன்னை பாரத மாதா"" என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது. இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்குவர்.

      அதேபோல மிகச்சிறந்த தேசபக்தரான எஸ்.ஆர்.ரமாமணிபாய் பாடிய ""ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டே... சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே"" என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. மதுரை எம்.கண்ணம்மாள் பாடிய ""சத்யமெங்குமே தளரா நாடு - இந்து தேசமதைப் புகழ்ந்துபாடு"" என்ற பாடலும் பிரபலமானவை. புகழ்பெற்ற ஆர்மோனிய கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசிய பாடல்களை பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தடைசெய்யப்பட்டது. குறிப்பாக ""அண்டம் கிடுகிடுங்க... லண்டன் நடுநடுங்க"" என்ற பாடலையும் ""அகிம்சைப்போர் தொடுத்தார் காந்திமகான்"" என்ற பாடலும் மிகவும் புகழ் பெற்றவை. இவர் மேடையில் ஆர்மோனியம் வாசித்து பாடிகொண்டிருந்தபோது காவல்துறையினர் இவரை கைது செய்தனர். தனது ஆறு வயது குழந்தையுடன் ஆறுமாதம் சிறையில் இருந்தார்.

      காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தாமல் கிராமத்தை சேர்ந்த அலமேலு என்ற இயற்பெயர் கொண்ட டி.கே.பட்டம்மாள் ""தேசிய குயில்"" என போற்றப்பட்டவர் ஆவார். காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்த போது அவரது முன்னிலையில் ""வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்ற பாடலையும், ""கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ"" என்ற பாடலையும் பாடி உத்வேகமூட்டினார். தொடர்ந்து சுதந்திட வேட்கைமிக்க காங்கிரஸ் மேடைகளில் பாடினார். நாடு விடுதலை அடைந்த அன்று இரவு ""ஆடுவோமே பள்ளு பாடுவோமே"" ""விடுதலை விடுதலை விடுதலை"" போன்ற பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார் அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார்.

அதேபோல அக்காலத்தின் பாடகியும் நடிகையுமான எம்.ஆர்.கமலவேனி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்த பாடலும் பாடுவதில்லை என உறுதிமொழி எடுத்திருந்தார். தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 115 நாவல்கள் எழுதிய பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோதைநாயகியின் இன்னொரு முகம் விடுதலை போராட்ட வீரர்.  அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு  அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றம் மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்டவர் அன்று முதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

1931 இல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது இவர் அதை ஏற்று திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை  விதிக்கபட்டது.

1932 இல்லோதியன் கமிஷனுக்குஎதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டும், அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்தபோது "சோதனையின் கொடுமை", "உத்தமசீலன்" ஆகிய புதினங்களை எழுதினார்.
(இன்னும் வருவார்கள்)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக