சனி, 28 நவம்பர், 2015

போராட்டப் புயல் வீசிய இரவு...


மெல்லிய தூறல்கள் விழுந்துக் கொண்டிருந்த வெள்ளியன்று இரவு (13.11.2015) 8 மணிக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தப் போராட்டம் துவங்கியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் துவங்கிய போராட்டம் அது. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் மொத்த கோபத்தின் வெளிப்பாடு அந்த போராட்டம். இயற்கை பேரிடரின் துயரத்தை அரசாங்கம் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்ற புரிதலுடன்தான் போராட்டத்தில் அமர்ந்தோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியமும், அரசாங்கத்தின் மெத்தனமும்தான் நாங்கள் இரவு நேரத்தில் போராட்டம் துவங்க காரணமாகியது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற இதுவே காரணமாகும். சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தீபாவளிக்கு முதல் நாளே நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மழையும் புயலும்முடிந்த பிறகுதான் மாவட்டத்தின் மொத்த பாதிப்பும் தெரியவந்தது. உயிர் சேதம், பயிர்கள் சேதம், வாழை, கரும்பு, முல்லை உள்ளிட்ட விளை பொருட்களின் சேதம், மின்சாரம் அடியோடு துண்டிப்பு, குடிநீர் இல்லாமல் தவிப்பு என மக்கள் நரக வேதனையை அனுபவிக்க துவங்கினர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உணவு மிகப்பெரிய பிரச்சனையானது. ஆனால் நிவாரண பணிகளோ ஆமை வேகத்தில்தான் நடந்தது. ஆனால் உடனடியாக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு இயல்பு நிலையை உருவாக்கியது போல நாடகமாடத் துவங்கியது. கடலூர் மாவட்டத்திற்கு ஐந்து மந்திரிகள் வந்தனர். பிரச்சனையே அதுதான். எல்லா அதிகாரிகளும் அவர்கள் பின்னால் அணிவகுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகள் புறம்தள்ளப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 13ம் தேதி இரவு வரை யாருக்கும் ஒரு உணவு பொட்டலம் கூட வழங்கப்படவில்லை. 11ம் தேதி இரவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கரிகுப்பம் கிராமத்தில் இருளர் வாழும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, உடனடியாக அங்குஉணவு பொட்டலங்களை அனுப்புங்கள் என கூறியதும் அவர் உடனடியாக அனுப்புவதாக சொன்னார் ஆனால் 13ம் தேதி இரவு வரை அங்கு எந்த உதவியும் போகவில்லை.

13ம் தேதிவரை த.சோ.பேட்டை இருளர்கள் குடியிருப்பு, சோத்து கொல்லை, செஞ்சேரி, மடுவங்கரை, பெரியமதகு, நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சொட்டு குடிநீர்கூட கிடைக்கவில்லை அதாவது 5 தினங்களாக. மேலும் நாங்கள் சென்ற 16 கிராமங்கள் இன்னும் இருளில்தான் மூழ்கி உள்ளது. மண்டபம் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் போராடிய போது சிதம்பரம் காவல்துறை அவர்களை கடுமையாக தாக்கியது. ஒரு மாற்று திறனாளி ஓட வழியில்லாமல் கடுமையாக தாக்கப்பட்டார். இவைகள் உருவாக்கிய கோபம்தான் 13ம் தேதி இரவு போராட்டமாக மாறியது.போராட்டம் துவங்கியதும் வழக்கம் போல காவல்துறையினர் பாய்ந்து வந்து நின்று கொண்டனர்.

அதிகாரிகள் வந்தனர். எந்தவித உதவியும் இல்லாத குறிப்பிட்ட கிராமங் களுக்கு உதவிகள் கிடைக்கும் வரை இங்கிருந்து எழுந்து செல்லமாட்டோம் என கூறிவிட்டோம். நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. அதிகாரிகள் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினரிடம் பேசினர். காலையில் நிவாரண பணிகளை செய்து விடுகிறோம் அவர் ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார். முடியாது!

உடன் அசுர வேகத்தில் பணிகள்துவங்கியது. இரவு 11 மணிக்கு உணவு பொட்டலங்கள் தயாராகி கிராமங்களுக்கு சென்றது. டேங்கர் வண்டிகளில் இரு கிராமங்களுக்கு குடிநீர் சென்றது. அரிசி மூட்டைகள் அரசு வண்டியில் வந்து இறங்கி கிராமங்களுக்கு சென்றது. அலட்சியமாக மக்களை கவனித்த வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரி பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டார். இனி முழு நிவாரணபணிகளையும் அவரே கவனிப்பார் என உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் 11.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். 

அதே நாளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத் தோழர்கள் பண்ருட்டி பெரியகாட்டுபாளையம், சின்ன காட்டுபாளைம், மேட்டுக்குப்பம் பகுதியில் நிவாரண பணிகளில் ஏற்பட்ட பாரபட்சத்தை கண் டித்து மக்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 957 குடும்பத்தார்களுக்கு ரூபாய் 47.08,500 (சுமார் ஐந்து லட்சம்) நிதியை பெற்றுக்கொடுத்தனர். ஆளும் கட்சியினரின் நிவாரண உதவி பாரபட்சம் மேலும் போராட்டங்களை கடலூர் மாவட்டத்தில் அதிகப்படுத்தவே செய்யும். இதோ இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரிகுப்பம் கிராமத்தின் இருளர் குடியிருப்பிலிருந்து தொலைபேசி அழைப்பு.. “தோழர் நாங்க இருளர் காலனியிலிருந்து பேசுறோம்.. வீடுகளை சுத்தி நின்ன தண்ணியில விழுந்து மூணு வயசு கொழந்த செத்து போச்சு, உடனே வாங்க தோழர்... காலையில செத்து போச்சுயாருமே வரல..” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

----- 15.11.2015 அன்றைய தீக்கதிரில் வந்த பதிவு-----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக