நடுங்கித்தான் போனேன்.. எட்டு மாத பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடலை “அய்யோ தோழரே குழந்தைய பாருங்க” என என் கைகளில் வைத்த போது. பரங்கிப்பேட்டை அகரம் தலித் குடியிருப்பு தோழர்கள் சூழ்ந்து நிற்க, அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து நின்ற தருணம் அது. பிஞ்சுக் குழந்தை தூங்குவது போல என் கைகளில். அந்த களங்கமற்ற முகம் இப்போதும் கண்களில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் பிணங்களை சுமந்த அனுபவம் உண்டு எனினும் இது வேறு கொடூரம். குடியிருப்புகளைச் சுற்றித் தேங்கி நின்ற தண்ணீரில் தவழ்ந்து விழுந்து மூழ்கி இறந்த இரண்டாவது குழந்தையின் உடல் இது. அக்குழந்தையின் வீட்டை பார்வையிட்டபோது அங்கு தண்ணீரோடு வறுமையும் சூழ்ந்திருந்தது தெரிந்தது. அதற்கு முதல் நாள்தான் கரிகுப்பம் இருளர் குடியிருப்பில் தேங்கி நின்ற தண்ணீரில் 3 வயது குழந்தை மூழ்கி இறந்து கிடந்தது. மதிமுக பொது செயலாளர் வைகோவும், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும் அக்குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.
வெள்ளத்தால் மரணமடைந்த கணக்கை முடிந்த அளவு வெட்டிச் சுருக்க நினைக்கும் அதிகாரிகள், குழந்தைகளை உயிரினக் கணக்கில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். ஆடுகளைக்கூட கணக்கெடுக்கும் அதிகாரிகள் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள மறுத்து சொன்ன காரணம் விசித்திரமானது. 18 வயதுக்கு மேல் இறந்தால்தான் கணக்கில் வருவார்கள். அப்போதுதான் நஷ்டஈடு கிடைக்கும் என்று புதிய கதையை சொன்னார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் அக்குழந்தைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
முதலில் பலியாவது...
2004 சுனாமி, 2005 மழை, வெள்ளம், 2008 நிஷா புயல், 2009 நீலம் புயல், 2011 தானே புயல், இப்போதைய புயல், மழை வெள்ளத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் பாதிப்பு என்றாலும் விளிம்பு நிலை மக்களுக்குதான் அதிகம் பாதிப்பு. இந்திய சமூக அமைப்பின் வடிவமைப்பு இதற்கு ஒரு காரணம். எல்லா தலித் குடியிருப்புகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாய், வயல்களின் ஓரம், வாய்க்கால்கள், வடிகால்கள் ஓரம் அமைந்திருப்பது கூடுதலான பிரச்சனை அவர்களுக்கு. நீர்நிலைகளை கொஞ்சம்கூட பராமரிக்காத நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு முதலில் பலியாவது ஊரின் ஒதுக்குப் புறமாய் தள்ளிவைக்கப்பட்டுள்ள இம்மக்களின் குடியிருப்புகள்தான்.
நவம்பர் 8ஆம் தேதி துவங்கிய மழை பல நாட்கள் பொழிந்து முடிந்தது. மழை நின்ற ஏழு தினங்கள் கடந்து, கடந்த 24ஆம் தேதி வரை வில்லியநல்லூர், அத்தியாநல்லூர், பெரியபட்டு, சிலம்பிமங்களம் உள்ளிட்ட பல தலித் குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரால் அங்கு துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கச்சொல்லும் பணியை மேற்க்கொண்டுள்ளோம். உண்மையில் தலித் மக்களின் எளிய வாழ்வாதாரம் சமீப புயல், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கூலிவேலைக்கு செல்லும் வாய்ப்பு முற்றிலும் அடைக்கப்பட்டதால் அவர்களின் உணவுத் தேவை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலித் கண்காணிப்பகம் - தலித் மனித உரிமைக்கான தேசிய பிரச்சாரம் - புதுதில்லி மற்றும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பில் மூன்று நாட்கள் சிதம்பரம் வட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு “மழை வெள்ள நிவாரணப் பணிகளில் நிகழும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் புறக்கணிப்பு ஆய்வு அறிக்கையை” கடந்த 25ஆம் தேதி வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த அறிக்கை 20 கிராமங்களில் 8392 குடியிருப்புகளில் ஆய்வு செய்துள்ளது. இதில் தலித் குடியிருப்புகள் 3424 ஆகும்.
“மண் மற்றும் கீற்றுச் சுவர்களால் அமைக்கப்படிருந்த குடிசைகள் அனைத்தும் சேதமடைந்திருந்தன. எந்த தலித் கிராமங்களிலும் அரசு நிவாரண முகாம்களை அமைக்கவில்லை, ஏற்கனவே அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களும் தூரத்தில் இருந்தன. அரசு கொடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட தார்பாலின் ஷீட்கள் எந்தக் குடியிருப்புக்கும் கிடைக்கவில்லை.”
“குடிநீர் பெரிய பிரச்சனையாக உள்ளது. இருக்கும் ஓரிரண்டு குழாய்களிலும் சாக்கடை நீர் கலந்துவிட்டதால் குடி நீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கழிப்பிடம் மற்றும் மாதவிடாய் போன்ற சுகாதாரம் தொடர்புடைய அனைத்தும் மொத்தமாய் புறம் தள்ளப்பட்டுள்ளது.”
“கணக்கெடுத்த கிராமங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் இதில் இருவர் தலித்துகள், பாதிப்படைந்த கான்கிரீட் மற்றும் கூரை வீடுகளில் 1276 தலித்துகளுடையது, 61 வீடுகள் தலித் அல்லாதோருடையது. இறந்த கால்நடைகளில் 274 தலித்துகளுடையது, 18 தலித் அல்லாதோருடையது.” போன்ற பலவற்றை இவ்வறிக்கை சுட்டிகாட்டுகிறது.
உண்மையில் கடந்த 14ஆம் தேதி இரவு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய இரவு போராட்டம்தான் தா.சோ. பேட்டை இருளர் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீரையும், நஞ்சைமகத்துவாழ்க்கை, மடுவங்கரை, அகரம் போன்ற தலித் குடியிருப்புகளுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் குடிநீரையும், பாரதி நகர் இருளர் பகுதிக்கு உணவு பொட்டலங்களையும் கொண்டு சென்றது.
கணக்கெடுப்பில் பாரபட்சம்
பாதிப்புகளுக்கு உள்ளான குடிசைகளை கணக்கெடுப்பது மிகவும் பாரபட்சமான முறையில்தான் இருக்கிறது. ஊருக்கு இரண்டு அல்லது மூன்று குடிசைகள்தான் பாதிக்கப்பட்டதாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 17,150 வீடுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறியது இத்தகைய கணக்கெடுப்பில்தான். குடிசையின் நான்கு சுவர்களும் முழுமையாக விழுந்திருந்தால்தான் அது முழுப் பாதிப்பு கணக்கில் வரும், மூன்று சுவர்கள் விழுந்திருந்தாலோ, கூரை மொத்தமாக நாசமடைந்திருந்தாலோ அது முழுப் பாதிப்பு கணக்கில் வராது. முழுமையாகப் பாதிப்படைந்திருந்தால் ஐந்தாயிரம், மூன்று பக்கம் விழுந்தாலோ, கூரை முழுவதுமாக பாதித்திருந்தாலோ, தண்ணீர் தேங்கி மண் தரை முழுமையாக பள்ளமாகி இருந்தாலோ பகுதி பாதிப்பு என நான்காயிரம்தான். இதை வைத்துக்கொண்டு ஒரு குடிசைக்கு தேவையான கீற்றுகளைக்கூட வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.
இதற்கே போராட வேண்டியிருக்கிறது. கடந்த 16ஆம்தேதி மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் மதியம் மூன்று மணிக்கு துவங்கி மறுநாள் விடியற்காலை 3 மணிவரை நடத்திய காத்திருப்புப் போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் கணக்கெடுக்க ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு பிரச்சனையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் போராட வேண்டிய சூழல்தான் இப்போதும் கடலூரில் நிகழ்கிறது. நூற்றிற்கும் அதிகமான சாலை மறியல் மாவட்டம் முழுவதும் நடந்துள்ளது. இப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் வரவில்லை என, வந்தாலும் முழுமையாகக் கணக்கெடுப்பதில்லை என, கணக்கெடுத்து நிவாரணம் கொடுப்பதில் பாரபட்சம் என, கொடுக்கும் நிவாரணத் தொகையில் பாதித் தொகை பிடிக்கப்படுகிறது என குடிநீர் வேண்டுமென, கால்நடைகளை கணக்கெடுக்கவில்லையென, பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதாரத்தை கணக்கிடவில்லையென போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் கடலூரில் இயல்பு நிலை திரும்பியதை நிரூபிக்க படாதபாடுபடுகின்றனர்.ஒரு பெரும் பாதிப்பின் வலிகளைப் பேசும்போது அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு உழைக்கும் மக்கள் இயக்கத்தின் கடமை. எனினும், கடையனுக்கும் கடையோனாய் இந்த சாதிய சமூகம் ஒதுக்கி வைத்துள்ள சமூக மக்களின் வாழ்க்கைப் பாதிப்புகளை உரத்துச் சொல்ல வேண்டியது மிக முக்கிய அரசியல் பணியாகிறது. ஆட்சியாளர்கள் எப்போதும் புறம் தள்ளிவைத்துள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அனைத்து சமூக மக்களின் அவசியக் கடமையாவதை இந்த வெள்ளம் மீண்டும் நினைவூட்டுகிறது.
--- 28.11.2015 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக