மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 17
     
                                                            -
       படிப்பை முடித்த விமல் தம்பி தங்கைகளை பராமரிக்க பம்பாய் ஜார்ஜ் மன்னர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருதம், ஆங்கிலம், மராத்தி மற்றும் வரலாறு போதித்தார். பின்பு கிர்காவில் உள்ள சாரதா ஆசிரமத்தில் கல்வி கற்பித்தார். பின்பு தனது தோழியுடன் வேலைத்தேடி நாக்பூர் வந்தார். அங்கே பிரபல மராத்தி மொழி எழுத்தாளர் வரேர்கர் மூலமாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. திரைப்படக் கலைஞராவதில் அவருக்க தயக்கம் இருந்தது. ஆனால் அவரது சகோதரர் சீனுவாசும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினர். சமூகசேவகி வேடம் என்பதால் விமலும் அதை ஏற்றுக்கொண்டர். திறமைமிக்க நாடக நடிகராக அறியப் பட்டிருந்த விமலுக்கு நடிப்புக்கலை ஒன்றும் புதிதல்ல. நடிப்புத் திறனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத்துவங்கியது.

       கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து திறமைமிக்க நடிகை என பெயர்பெற்றார். ஆனால் அவரது மனது நடிப்பைவிட சமூகம் சார்ந்த பிரச்சினைகளிலேயே நாட்டம் கொண்டது. எலோர்க்கும் வாய்க்காத மகத்தான மனநிலை இது. தன்னுடைய சொந்தவாழ்வின் வெற்றியை விட தேச மக்கள் அனைவரின் விடுதலை குறித்துதான் அவரது மனம் ஏங்கியது. அவர் படிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக இருந்தாலும் மனதில் சமூகம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சியால் பதில் அளிக்க முடியவில்லை. தனது சகோதரரான சீனுவாசுடன் கடுமையான விவாதங்களில் ஈடுபட்டு அதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அறிந்திருந்தார். பல பொதுவுடைமை குறித்த நூல்களை படிக்கத்துவங்கி இருந்தார். பம்பாயில் அப்போது தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து போராடி வந்த கிர்னி காம்கார் சங்கமும் பி.டி.ரணதிவே உள்ளிட்ட பிரபல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பழக்காமானார்கள்.
    
   விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதில் சிறைக்குச் சென்ற விமல் மனதில் பல்வெறு எண்ணங்கள் அலையாடின விடுதலை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? காலனி ஆதிக்கம் தவிர வறுமை, பசி, கல்லாமை, நிலபிரப்புத்துவம், சாதியம், மதவாதம், தொழிலாளர்களின் கொடூரமான வாழ்வியல் சூழல் இவைகளை என்ன செய்வது? இந்தியா விடுதலை அடைந்துவிடால் இவைகள் தானாக ஒழியும் என்தற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத சூழலில் விமல் சர்தேசாயின் மனம் மாற்று பாதை குறித்து யோசிக்க துவங்கியது. விடுதலை போரிலும் ஈடுபட்டுக்கொண்டு உழைப்பாளி மக்கள் வாழ்க்கை மேம்படவும் போராடிவந்த கம்யூனிஸ்டு கட்சியின் பக்கம் அவர் இயல்பாக வந்தடைந்தார்.

புகழ்பெற்ற நடிகையாக இருந்த காலகட்டத்தில் 1939 ஆம் ஆண்டு அவர் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். அப்போது இரண்டாம் உகலப்போர் துவங்கியிருந்த சமயம். உலகினை அழிக்கும் யுத்தம் வேண்டாம் என சொன்ன கம்யூனிஸ்டுகள்மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்திருந்தது. அவரது திருமணம் அப்போதுதான் நடந்தது. பிரபல தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பி.டி.ரணதிவேவையும் அவரது போராட்ட குணநலன்களையும் நன்கு அறிந்த விமலும், விமலின் கலைத்திறன், ஏழைகள் மீதான அன்பு, கட்சியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவைகளை ரணதிவேவும் அறிந்து மணம் ஒன்றி திருமணம் செய்துக்கொண்டனர். அவர்கள் திருமணம் நடந்த போது ரணதிவே மீது கைது வாரண்ட் இருந்தது. அவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். திருமணமான நான்கைந்து தினங்களில் ரணதிவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

       தொழிற் சங்க பணிகளை கூடுதலாக செய்வதற்காக தனது நடிப்புத் தொழிலை விமல் விட்டுவிடார். பல்லாயிரம் பணம் கிடைக்கும் தொழிலை விடுத்து, தெரு தெருவாக தொழிலாளிகளிடம் உண்டியல் ஏந்தும் வாழ்க்கையை எத்தனைப்பேரால் யோசித்துப்பார்க்க முடியும். அங்குதான் அந்த மகத்தான ஆளுமையின் வெளிப்பாடு இருந்தது. 1940ல் கிர்னி காம்கார் சங்கம் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டது. வேலைநிறுத்தம் குறித்த நாட்குறிப்பு எழுதும்பணி விமலிடம் வந்துசேர்ந்தது. பல்வேறு ஆலைகளின் தொழிலாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் போராட்ட குணமும் அவரை ஈர்த்தது. கூட்டங்களுக்கு தொழிலாலர்களை திரட்டிட தனது சக தோழர்களுடன் கலைக்குழுவாய் இயங்கவும் செய்தார். 1943ஆம் ஆண்டு இவருடன் அகல்யா ரங்கனேகர், பிரேமா ஓக், அகல்யா பிரபா சாவந்த், பார்வதிபாய் போரே போன்ற பெண் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து பரேல் மகிளா சங்கத்தை உருவாக்கினர். இச்சங்கத்தின் மூலமாக பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் பல பெண்களை இணைக்க முடிந்தது.

       ஆனால் இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்டுகளை போல விடுதலைக்கு முன்பும் பின்பும் வேட்டையாடப்பட்டவர்கள் யாரும் கிடையாது. பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டுகளை கைது செய்ததையும் கட்சியை தடை செய்ததையும் புரிந்துக் கொள்ளமுடியும். ஏனெனில் ஏகாதிபத்தையத்தை வேரடிமண்ணோடு சாய்ப்பதையே தனது கொள்கையாக கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால். ஆனால் விடுதலைக்கு பின்பு ஆட்சிக்கு வந்த காங்கிரசும் அதையே செய்ததுதான் விசித்திரம். 

    தனது இரண்டு வயது குழந்தையை பிரிந்து சிறைக்கு செல்லும் சூழ்நிலையிலும், 1948-51 கட்சி தடைசெய்யபட்ட காலத்தில் சிறையில் இருந்தபோதும், இந்திய - சீன எல்லைதகராறு வந்தபோதும் சிறையில் வாடினார். தனது பள்ளி பருவத்தில் அந்நிய துணிகளை விற்கும் கடைகளை எதிர்த்து மறியல் செய்து சிறைவாழ்க்கையை துவக்கியவர் அதன் பிறகு பலமுறை சிறைச்சாலையை  சந்தித்தார். விடுதலைக்கு பிறகு இந்திய தொழிலாளர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

       1960களில் இந்திய தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றியதன் விளைவாக அகில இந்திய தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 ஆண்டு மதுரையில் நடந்த சி.ஐ.டி.யூ மாநாட்டில் அனைத்திந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக் குழுவின் கன்வீனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ல் சி.ஐ.டி.யூ அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக் உயர்ந்தார். மற்றொரு பக்கம் மாதர் அமைப்பினர் உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பையும் செய்தார். அனைத்திந்திய ஜனநாயக் மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒரருவராக திகழ்ந்தார். 83 வயதில் அவர் மரணமடையும் தருவாய் வரை உழைப்பாளி மக்கள் குறித்தே சிந்தித்துவந்தார்.

       தேச விடுதலைப்போரில் தனது வாழ்வை துவங்கி உழைக்கும் மக்கள் கைகளில் அதிகாரம் கிடைப்பதே உன்மையான விடுதலை என்பதை உணர்ந்து அதற்காக தன் வழ்நாள் முழுவதும் உழைத்த அந்த விடுதலைப்போராளியை தேசம் என்றும் மறக்காது. 
                                                                   (தொடரும்)

            

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark