ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஆயிஷா நடராஜன் என்ற சிறந்த மனிதருக்கு சாகித்ய அகாதமி விருது



ஆயிஷா புத்த்கத்தை படித்து முடிக்கும் எந்த ஒரு மனிதனாலும் கண்ணீர் சிந்தாமல் அப்புத்தகத்தை கீழே வைக்க முடியாது. ஆயிஷாவை வாழ்க்கை நெடுகிலும் மறக்க முடியாமல் நமது வாழ்வினூடே பயணிப்பவளாக மாறிவிடுவாள். கல்வியை அதன் நடைமுறையை, கற்பிக்கும் முறையை அது குழந்தைகளுடன் ஊடாடும் நிகழ்முறையை மிகச்சிறிய புத்தகத்தில் இத்துனை அழுத்தமாய் சொல்லிச்சென்ற புத்தகம் வேறொன்றை நான் இதுவரை வாசித்தது கிடையாது. 
அப்புத்தகத்தை படித்து முடித்ததும் அந்த நூலில் ஆசிரியர் இரா. நடராஜனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அதுவும் எனது மாவட்டத்தை சேர்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி. மாநிலம் முழுவதும் வாலிபர் சங்க பணிகள் காரணமாக நான் சுற்றிக்கொண்டிருந்த  காரணத்தால் நீண்ட அவரை சந்திக்க முடியவில்லை.
பாரதி புத்தகாலயத்தின் புத்தகம் பேசுது ஆசிரியர் குழு கூட்டத்தில் அவரை முதன்முதலாக சந்தித்தேன். இருவரும் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மிக எளிமையாக இத்துனை புத்தகங்கள் எழுதிய மனிதர் என்ற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல் யார் ஆலோசனை சொன்னாலும் அதை மிக கவனமுடன் கேட்கும் பாங்கில் மிக மிக எளிமையாக நமக்குள் அருகாமைக் கொள்வார்.
பலமுறை சந்தித்து விவாதித்திருக்கிறோம். அவருடன் பேசும்போது நாம் அறியாத  நிறைய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். அவருடனான சந்திப்பிற்கு பிறகு அவரை எழுத்தாளர் என்பதைவிட சிறந்த மனிதரை சந்தித்த நினைவுகளே நம்மிடம் மிஞ்சி நிற்கும் அவருக்கு விருதுக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
சமீபத்தில் சந்தித்தபோது கடலூர்  நகரம் மறந்த விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலையம்மாளை பற்றிப் பேசினார். கடலூரில் புதிதாக கட்டப்படும் சுரங்க பாதைக்கு அந்த தியாகியின் பெயரை வைக்க வேண்டுமென தனது ஆவலை தெரிவித்தார். நான் உடனடியாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணனிடம் இதை தெரிவித்தேன். அவரும் உடனடியாக அந்த தியாகியின் வாழ்க்கை குறிப்புகளை தேடியெடுத்துக்கொண்டிருக்கிறார். இரா, நடராஜனின் இந்த வேண்டுகோள் விரைவில் நிறைவேறும்.
விருது கிடைத்த தகவல் கிடைத்தவுடன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ”சார்.. வாழ்த்துக்கள், உங்களால் கடலூர் மாவட்டத்திற்கு பெருமை” என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் இது. ‘’ இது எனக்கான விருது அல்ல ரமேஷ், நமக்கானது.”
அதுதான் ஆயிஷா நடராஜன்,   
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று (24.08.2014 )  அவரை அவரது இல்லத்தில் சிதமபரம் சட்டமன்ற உறுபினர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளார் தோழர் டி.ஆறுமுகம்  தோழர்கள் மருதவாணன், பால்கி மற்றும் நான் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதி புத்தகாலய குறிப்பு......
ஆயிஷா நடராஜன் என பிரபலமாக அறியப்படும், எழுத்தாளர் இரா.நடாராஜன் சிறுவர் இலக்கியங்கள், கல்வி குறித்த புத்தகங்கள் ஏராளம் எழுதியுள்ளார். அடுத்த தலைமுறைக்கு விஞ்ஞான அறிவூட்டுவதற்காக தன்னை அற்பணித்துக் கொண்ட அவருக்கு 2014 ஆம் ஆண்டுகான ‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. 
2014ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கர் விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
இரா. நடராசன் பற்றி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள விபரங்கள்:
ஆயிஷா இரா, நடராசன் (பிறப்பு 1964)
தமிழில் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் என அனைத்து தளங்களிலும் இயங்கிவரும் முன்னணி எழுத்தாளர் என்றாலும் குறிப்பாக சிறுவர் இலக்கிய படைப்பாளியாக கடந்த இருபதாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார், இவரது ஆயிஷா எனும் குறுநாவல் (பள்ளிக்கூட சிறுமியின் துயரக்கதை) தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களை அது முன்மொழிந்தது,
• நாகா, மலர் அல்ஜிப்ரா,ரோஸ், ஒரு தோழனும் மூன்று நண்பர்களும், ஒரு தோழியின் கதை,ரஃப் நோட்டு போன்றவை சிறுவர்களுக்கான இவரது நாவல் படைப்புகள்,
• சர்க்கஸ் டாட்காம், பூஜ்ஜியமாம் ஆண்டு, விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்,பூமா, விண்வெளிக்கு ஒருபுறவழிசாலை. ஆகியவை இவரது அறிவியல் புனை கதைகள்,
• பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் தமிழின் முதல் முயற்சியாக இவரது ‘பூஜ்ஜியமாம் ஆண்டு’ நாவல் பிரைல் மொழியிலும் வெளிவந்துள்ளது,
• நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா உட்பட சிறுவர்களுக்கான முப்பத்தாறு அறிவியல் நூல்களை இதுவரை படைத்திருக்கிறார்,
• நவீன பஞ்சதந்திர கதைகள். நத்தைக்கு எத்தனைக் கால் போன்றவை குழந்தைகளுக்கான நவீன கதையாடல்,
• உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன். நீ எறும்புகளை நேசிக்கிறாயா. ஃபீனிக்ஸ் (அறிவியல் நாடகங்கள்) .நம்பர் பூதம். குண்டுராஜா 1.2.3.இரவு பகலான கதை போன்றவை அவரது சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்புகள்
• டார்வின். பாரடே. மேரிகியூரி.கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்கள் மேடையேற்றும் ஓரங்க நாடகங்களாக இவர் படைத்துள்ளார்.
• ஆயிஷா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் எனும் நாவல் உலகப்பெண் விஞ்ஞானிகள், வரலாறு மறந்த விஞ்ஞானிகள் ஆகிய அறிவியல் நூல்கள் உட்பட இவரது பல சிறுவர் இலக்கிய படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
சிறந்த கல்வியாளராக அறியப்பட்டுள்ள இவர் சமீபத்தில் எழுதிய ‘இதுயாருடைய வகுப்பறை’ எனும் புத்தகம் சென்னை புத்தக கண்காட்சி உட்பட தமிழகத்தின் புத்தக கண்காட்சிகளில் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.
ஏற்கனவே தனது கணிதத்தின் கதை நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றவர்,கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் ‘புத்தகம் பேசுது‘ மாத இதழின் ஆசிரியர்.

1 கருத்து:

  1. சிறுவர் இலக்கியப் படைப்பாளியான திரு ஆயிஷா நடராஜனுக்கு,2014-க்கான ’பால சாகித்ய புரஸ்கார்’ வழங்கப்பட்டிருப்பது குறித்த பதிவுக்கு நன்றி. நடராஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் நல்ல படைப்புகளை சிறுவர் உலகிற்கு அவர் வழங்குவாராக.

    -ஏகாந்தன்
    http://aekaanthan.wordpress.com

    பதிலளிநீக்கு