2004-ம் ஆண்டு ஜூன் 15 ந்தேதி அகமதாபாத் - காந்திநகர் நெடுஞ்சாலையில் இஷ்ரத் ஜகான் என்ற 19 வயது இளம் பெண்னும் அவருடன் பிரனேஷ் பிள்ளை என்ற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகியோரும் எண்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அன்றைய குஜராத் முதலவர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறி லஷ்கர் - இ- தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் எண்கவுன்ட்டர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குத் தலைமை தாங்கியவர் அம்மாநில போலிஸ் டி.ஐ.ஜி வன்சரா. மிகக் கச்சிதமானத் திட்டமிட்ட இந்த எண்கவுன்ட்டர் படுகொலைகள் தேசம் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியது.
2005ம் ஆண்டு நவம்பர்23 ஹைதராபாத்திலிருந்து மஹாராஷ்டிரவுக்குச் சென்று கொண்டிருந்தப் பேருந்திலிருந்து ஷொராபுதினும் அவரது மனைவியும் குஜராத் மாநில போலிஸ் அதிரடிப்படையால் மடக்கப்படனர். மூன்று நாட்கள் கழித்து ஷொராபுதின் எண்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார். அதற்கு இரு நாள் கழித்து அவரது மனைவி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட இடம் வன்சராவின் சொந்த கிராமம்.
இதற்கான காரணமும் மோடி உயிரைப் பாதுகாப்பதுதான். இதற்கும் தலைமை தாங்கியவர் டி.ஐ.ஜி வன்சராதான். கடுமையான கண்டனங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் தலையிட்ட பிறகு, அது போலி எண்கவுன்டர் என நிருபிக்கப்பட்டு டி.ஐ.ஜி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த அவரிடம் இதற்கு முன் நடந்த இஷ்ரத் ஜகான் எண்கவுன்ட்டர் படுகொலைக் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
அப்போது அவர் தனது வாக்கு மூலத்தில் "அந்த நான்கு பேரின் படுகொலைகளும் சாம்பல் தாடிக்கும், கருப்புத் தாடிக்கும் தெரியும்! அவர்கள் ஒப்புதலுடன்தான் அந்தப் படுகொலைகள் நடந்தது" எனச் சொன்னார். அவர் குறிப்பிட்ட சாம்பல் நிறத் தாடிதான் இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு நிறத் தாடி அமித் ஷா. அவர் அன்றைய மாநில அரசின் உள்துறை அமைச்சர். அந்தப் படுகொலைகளுக்கு முன் 12 மணி நேரத்தில் 9 முறை அமித்ஷாவுடன் வன்சரா தொலைப்பேசியில் பேசிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. அப்பாவி இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதிலும், அவர்களது உயிர்களை மிக எளிதாகக் கொய்வதும் அமித்ஷாவுக்கு ஒன்றும் புதிதல்ல.
அதற்கு முன்னமே 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அகமதாபாத்துக்கு எரிந்த சேவகர்கள் உடல்கள் கொண்டுச் செல்லப்பட்டதும். அதை ஊடகங்களில் வேகமாகப் பரவச்செய்ததும், அந்த இடைப்பட்டக் காலத்தில் எல்லாம் தயாரானதும் இவரது திட்டமிடல்தான். எரிந்தப் பிணங்களை உலகிலேயே முதன் முதலாகக் காட்சிப் பொருளாக வைத்த சாதனையாளர் இவராகத்தான் இருப்பார். இஸ்லாமிய மக்களின் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் பட்டியலிடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது அரசு எந்திரத்தின் உதவி இல்லாமல் நடந்திருக்க முடியாது. இந்து மதவெறியர்கள் கோரத்தாண்டவத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கருவறுக்கப்பட்டனர்.
இந்து இந்துக்களின் இயல்பான எதிர்வினையாக அம்மாநில அன்றைய முதல்வர் மோடி அறிவித்துக்கொண்டார். இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குப் பின்னால் நின்றதும், காவல் துறையின் கைகளைக் கட்டிப்போட்டதும் இதே அமித்ஷாதான்.
இந்த அமித்ஷாதான் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் மீதான மேற்கண்ட போலி எண்கவுன்ட்டர் வழக்குகள் இருந்ததால் 2010ல் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சபர்மதி சிறைச்சாலையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். நிபந்தனையின் பேரில் வெளிவந்த இவர் இரண்டு ஆண்டுகள் குஜராத்துக்குள் நுழையத் தடைவிதிக்கப் பட்டிருந்தார். இதற்கு பாஜக அவருக்கு வழங்கிய பரிசுதான் உத்திரப்பிரதேச பாஜக பொறுப்பாளர் பதவி.
2012ல் உத்திரப்பிரதேசம் சென்ற அவர் ஜாட் சாதிவெறி, இஸ்லாமிய துவேஷப் பேச்சுகளுக்காக கடந்த தேர்தலில் பொதுக்கூட்டங்களில் பேசத் தடைவித்திக்கப் பட்டார். அதற்கு பின்னும் அடங்காத அமித்ஷா காப் பஞ்சாயத்துக்களில் சாதி ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் பக்கம் நின்றார். அதைவிட அவரது சாதனையாகப் பாஜகாவினர் பார்ப்பது நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு அவர்களே நினைத்தும் பார்க்காத வெற்றியை தேடித்தந்த முசாபர் நகர் கலவரங்கள்தான்.
இதைத் திட்டமிட்டு வடிவமைத்தது அமித்ஷாதான். உ.பி தேர்தலின் போது ஷாம்லி நகர் பொதுக்கூட்டதில் " முசாபர் நகர் கலவரத்திற்கு பழிவாங்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக பா.ஜ.க வுக்கு வாக்களிக்க வேண்டும்" என பேசியது அமித்ஷாவின் வெறிப்பேச்சுக்கு ஒரு உதாரணம். மோடிக்காக மான்சி சோனி என்ற இளம்பெண்னை வேவு பார்த்ததும், தேர்தலின் போது போலி எம்.எம்.எஸ்களை அனுப்பிக் கலவரங்களைத் தூண்டியதும் இதே அமித்ஷாதான்.
இதைத்தான் மெல்லியப் புன்னகையுடன் பாஜகவின் முன்னால் தேசியத் தலைவரும், இந்திய நாட்டின் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்கிறார் " கற்பனை வளம்மிக்க சிந்தனைகளும், கட்சியை அமைப்பு ரீதியாக வழிநடத்தும் உத்திகளும் நிறம்பப் பெற்றவர் அமித்ஷா" ஆக இவரின் கற்பனை வளத்தால் நாடு முழுவதும் முசாபர் நகர் அபாயங்கள் காத்திருக்கிறது.
1964ல் மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சமணக் குடும்பத்தில் அணில் சந்திர ஷாவின் மகனாகப் பிறந்த அமித்ஷாவின் வளர்ச்சி அபாரமானது. பங்குச் சந்தைத் தரகராக, அகமதாபாத் மாவட்டக் கூட்டுறவு வங்கித் தலைவராக, குஜராத் மாநில நிதிக்குழுத் தலைவராக உயர அவரது அரசியல் தொடர்புகளே காரணம். 1982ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றிய நரேந்திர மோடியைச் சந்தித்து அவரது தொடர்பால் ஏ.பி.வி.பி என்ற மாணவர் அமைப்பின் தலைவராகிறார். பின் மோடி 1986ல் பாஜகவில் பணியாற்றத் துவங்கியபோது அமித்ஷாவும் அவருடன் கட்சிப் பணிகளில் இணைந்தார்.
1997 முதல் நான்குமுறை ஒரே தொகுதியிலிருந்து குஜராத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா 2002 முதல் மோடியின் அமைச்சரவையில் முக்கிய பங்குதாரர். 2012ல் ஐந்தாவது முறையாக நாரண்புராவிலிருந்து வெற்றி பெற்று குஜராத்தின் முக்கிய 12 இலாக்காக்களை உள்ளடக்கி உள்துறை அமைச்சராகிறார்.
தன்னுடைய எதிர்ப்பாளர்களை தனது வழித்தடத்திலிருந்து அழித்தொழிக்க, இந்துமத வெறியை ஊட்டி வளர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்ல சித்தமாய் இருக்கும் அமித்ஷா நரேன் பாண்டியா என்ற சக அமைச்சரின் திடீர் படுகொலை, குறித்து மௌனமாய் இருப்பது நாளை வேறொரு கோணத்தில் வெளிவரலாம். குஜராத் கலவரங்களுக்கு அரசும் ஒரு காரணம் என்று சொன்ன காரணத்தால் பாஜளக வின் பிரபலமான தலைவரும், அம்மநில அமைச்சருமான நரேன் பாண்டியா படுகொலையானதற்கான காரணம் இன்னும் திரைவிலகாமல் மௌனம் காத்து நிற்கிறது.
அமித்ஷாவின் அதிகார வரம்பின் எல்லையைப் புரிந்துக்கொள்ள சமீபத்திய உதாரணம் போதும். சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பரிந்துரையில் உதய்வலித் என்றவரின் பெயர் இடம்பெற்றிருந்தது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. காரணம் அவர் சொராபுதின் ஷேக் மற்றும் துல்சிராம் பிரஜாபதி ஆகியோரின் எண்கவுன்டர் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட அமித்ஷாவின் வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் ஆவார்.
ஆக அமித்ஷாவின் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற நீதிபதியானால் இந்துத்துவா அமைப்பின் தலைவர்கள் மீதான வழக்குகள் என்னாகும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இக்கதை இத்தோடு முடியவில்லை. அதேவழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக அமித்ஷாவுக்கு எதிராக வாதாடிய கோபால் சுப்ரமணியம் என்பவரை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துறை செய்து அனுப்பிய ஆலோசனையை மோடி அரசாங்கம் நிராகரித்தது தான் இதன் உச்சம்.
கட்சிக்குள் இருந்த தடைகளை உடைத்திட, கார்ப்பரேட் ஆதரவுகளைத் திரட்டிட, ஊடகங்களில் மோடியை ஊதிப்பெருக்கிட ஆதாரப்புள்ளியாய் அமித்ஷா என்ற ஆலகால விஷம் பயன்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆக அமித்ஷா என்ற வஞ்சகத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்க நரேந்திர மோடி ஆசைப்பட்டது ஒரு கைமாறு மட்டுமல்ல தேசம் முழுவதும் இந்துத்துவா நஞ்சை விதைக்கும் முயற்சியின் ஒரு துவக்கம் மட்டுமே... இனிதான் கதை துவங்க இருக்கிறது.
--------------- ஆகஸ்ட் 2014 இளைஞர் முழக்கம் இதழில் வெளியான கட்டுரை----------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக