மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலைப் போரில் பெண்கள் - 7அயோத்தியின் விடுதலை கீதம் பேகம் ஹசரத் மஹல் 
அயோத்தியின் ராணி பேகம் ஹசரத் மஹல் போராளியாக 1857 கலகத்தில் தலைமை தாங்கிய பின்னணி மிகவும் முக்கியமானது. கிழக்கிந்திய கம்பெனியினர் அயோத்தியின் மன்னர்கள் ஆட்சியை மெல்ல மெல்ல அபகரித்தனர். மொகலாய மன்னன் ஷா ஆலம் பீகாரின் மீது படையெடுத்தபோது அயோத்தியின் நவாப்பான ஹ§ஜவுத்தவுலவும் அவருடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் இருவரின் படைகளும் பக்ஸார் எனும் இடத்தில் 1764ஆம் ஆண்டு சர் ஹெக்டர் மன்றோவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வெற்றிக்கு பின் ஆங்கிலேயர் அரசியல் வெற்றியும் அடைந்தனர். அயோத்தி நவாப் ஆங்கிலேயரைத் தவிர வேறு வெளிநாட்டினருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாதென கட்டுப்படுத்தபட்டார்.. 

அதன் பின் நவாபுகள் பரம்பரையாக அப்படியே நடந்தனர். ஆனாலும் கிழக்கிந்திய கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நயவஞ்சகத்தால் நாட்டை தங்கள் வயப்படுத்தினர். ஷ§ஜாவுத்தவுலவுக்குப் பிறகு அவரது மகன் ஆஸாப்வுத்தவுலா பட்டத்திற்கு வந்தார். அவருக்கு பின் அவரது பதவிக்கு வர அவரது மகன்கள் மிஸ்ரா அலிக்கும் காசியில் ஆங்கிலேயரின் கையாளாக இருந்த சதாத் அலிக்குமிடையே கடுமையான போட்டி இருந்தது. ஆங்கிலேயர் சதாத் அலி பக்கம் நின்றனர். 1814 ஆம் ஆண்டு சதாத் அலி இறந்தார் அதன் பிறகு அவரது மகன் காஸியுத்தீன் ஆங்கிலேயருக்கு உதவிகளை செய்து மன்னன் பட்டம் பெற்றார். பின் நஸீருதின் ஹைதர், முஹ்ம்மத் அலிஷா, அம்ஜத் அலிஷ் ஆகியோர் தொடர்ந்து ஆட்சி செய்தனர். 

1847ம் ஆண்டு வாஜீத் அலிஷா பட்டத்திற்கு வந்தார். இவர் இவரது முன்னோடிகளைப் போல ஆங்கிலேயர்களுக்கு அடங்கி நடக்கவில்லை. பல ஆங்கிலேய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தினார். பாடல்களில், நல்ல கவிதைகளில் நாட்டம் கொண்டவர். அதனால் இவர் மக்களை மறந்து சிற்றின்பங்களில் ஈடுபட்டு ஆட்சியை நாசப்படுத்துவதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இவரது அன்பு மனைவி பேகம் ஹசரத் இவருக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த காரணத்தினால் அவரது ஆட்சி  1856 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பறிக்கப்பட்டது. மன்னர் கொலை செய்யப்பட்டார். 

அயோத்தி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்ததும் அங்கிருந்த அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். உயர் பதவிகள் எல்லாம் ஆங்கிலேயருக்கே கொடுக்கப்பட்டது. அரசரின் படையில் இருந்த அறுபதாயிரம் வீரர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றத்தால் பலதரப்பட்ட மக்கள் அல்லலுற்றனர். மன்னனை நம்பி வாழ்ந்த கம்மியர்களும், கைவினைத் தொழிலாளிகளும் வேலையின்றி, வாழ வழியின்றி தவித்தனர். முஸ்லீம்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்பட்ட, நபிகள் நாயகத்தின் பாத அடையாளமுள்ள ஒரு கல் இருந்த "கதம் ரஸ¨ல்" என்ற கட்டிடம் ஆங்கிலேயர்களால் ஆயுத தளவாடக் கிடங்காக மாற்றப்பட்டது. கடுமையான வரிகள் விதிக்கபட்டன. இக்கொடுமைகளைக் கண்டு சினம் கொண்ட ராணி பேகம் ஹசரத் மஹல் தக்க சமயத்திற்காக காத்திருந்தாள்.

ராணி பேகம் ஹசரத் மஹல் காத்திருந்த காலம் 1857ல் வந்தது. இந்திய நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்லி, கான்பூர், பீஹார், ஜான்சி, பஞ்சாப், ராஜபுதனம் மற்றும் மத்திய இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் அவர்களது படைகளில் இருந்த சிப்பாய்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். அந்த கொதிநிலை அயோத்தியையும் எட்டியது. ஆங்கிலேயர்களை எதிர்த்த அயோத்தியின் படை வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்படனர். கொடூரமான தண்டைனைகளாக அவைகள் இருந்தன.  அதுவரை பொறுத்திருந்த பேகம் ஹசரத் மஹல் பொங்கி எழுந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து படைவீரர்களை தூண்டிவிட்டார். தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். 

1857 ஜூன் மாதம் ஆங்கிலேயர்களை எதிர்த்த கலகம் கெய்ராபாத் தலைநகரான சீத்தாபூரில் துவங்கியது.  அந்த தாக்குதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்தது. பல ஆங்கிலேய அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்கள் உயிரிழந்தனர். குதிரைப்படையினர், ஆயுதப்படையினர், காலாட்படையினர் என அனைவரும் ஒருங்கிணைந்தனர். முற்றுகை யுத்தம் எனில் அப்படி ஒரு யுத்தம் நடந்தது. அப்போது இருந்த நிலை கீழிருந்தவாறு கொடூரமாய் இருந்தது.   

"முற்றுகையிட்டு ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டபோது சுற்றித் திரிந்த கால்நடைகளால் பெரும் தொல்லை ஏற்பட்டது. அவைகளை கவனிக்க யாரும் இல்லை. உணவு தேடி அவைகள் அலைந்தன. சில கிணறுகளில் காலிடறி விழுந்து மாண்டன. அவைகளின் சடலங்கள் தண்ணீரை அசுத்தப்படுத்தின. சில குண்டடிப்பட்டு இறந்தன. அவைகளின் சடலங்கள் அழுகி நாற்றமடித்தன. அவைகளை அப்புறப்படுத்த சில குழுக்கள் அமைக்கப்பட்டன. தீனி இல்லாததால் குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டு துரத்தி விடப்பட்டன. பீரங்கிகளை இழுக்கும் எருதுகளைக் கொன்று இறைச்சி பெற்றனர்."" 
  
பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் அவர் அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து தொடர்ந்து மக்களைத் திரட்டி  புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். பேகம் ஹசரத் மஹலின் சாதுர்யமும் சமயோசித தாக்குதலும் ஆங்கிலேயர்களுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பல இடங்களில் முற்றுகையிடப்பட்ட ஆங்கிலேயர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அயோத்தியிலிருந்து முற்றிலுமாக கிழக்கிந்திய கம்பெனி துடைத்தெரியும் நேரம் நெருங்கியதாகவே அனைவரும் நினைக்கும் தருணம் நெருங்கியது. ஆனால் டெல்லி உள்ளிட பல இடங்களில் போராட்டம் முடியும் தருவாயில் இருந்ததால் மேலும் அதிக ஆங்கிலேய படைகள் அயோத்தியை நோக்கி திருபப்பட்டன.   

இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. எதிர்புரட்சியாளர்களை ஆங்கிலப்படை கடுமையாகப் பழி வாங்கியது. வீதிகள் எங்கும் இரத்தம் தோய்ந்த வாட்களும், கோடாரிகளும் சிதறிக் கிடந்தன. வழக்கம் போல பல இந்திய பேஷ்வா மன்னர்களும், ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமான சிப்பாய்களும் பயன்படுத்திக்கொள்ளப் பட்டனர். அஞ்சாமல் தீரத்துடன் போரிட்ட பேகம் ஹசரத் மஹல் வேறு வழி இல்லாமல் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டர். போர்களத்தில் ஜான்சிராணி, வேலுநாச்சியார் போன்ற மங்காத வீரம் கொண்டவர்களுக்கு இனையாக நின்ற பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் இமயமலை காடுகளை நோக்கிச் சென்றார். பல மன்னர்களிடம் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராத நேரத்தில் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர். 

வரலாற்றின் வீதிகளில் அந்த மகத்தான வீரப்புதல்வி அனாதை பிணமாக கிடந்த சோகம் மறக்க முடியாதது. ஆங்கிலேய கால்களை நக்கிப் பிழைந்த மன்னர்களை உயர்த்திப் பேசும் பாரம்பரியத்தை அவளது மரணம் வெட்கப்பட வைத்தது. இந்த நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை இஸ்லாமியர்களின் உதிரமும், தியாகமும் இல்லாமல் யாரும் எழுத முடியாது. அப்படி எழுதுபவர்கள் பேகம் ஹசரத் மஹல் என்கிற அயோத்தியின் விடுதலை கீதத்தை இசைக்காமல் இருக்க முடியாது. 

(மகளிர் சிந்தனை ஏப்ரல் 2013 இதழில் வெளியானது..)

(வீரமங்கைகள் இன்னும் எழுவார்கள்)   

1 Responses to அனாதை பிணமாக கிடந்த இஸ்லாமிய விடுதலை போராளி

  1. neenda edaivelikku pin ungal katturai padippathil oru sugam..

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark