விடுதலைப் போரில் பெண்கள் - 6
தியாகத்தின் மானுட உருவம் ஜல்காரி பாய்
1857ல் முதல் சுதந்திர போராட்டம் என அழைக்கப்படும் ஓரளவு ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவாக நடந்த சிப்பாய்களின் எழுச்சியில் ஜான்சிரானி லட்சுமிபாயின் போர் களத்திலிருந்து இன்னும் வீரர்களை திரட்ட தலைமறைவானார். அவரை போலவே வேடமிட்ட ஒரு பெண் போர் களத்திலிருந்து அவரை தப்பிக்க வைத்தார். அந்த 27 வயதுடைய வீரப் பெண்ணின் பெயர் ஜல்காரிபாய். தனது ராணிக்காக தனது உயிரைக் கூட தூக்கியெறிய துணிந்த விசுவாசத்தின் மானுட ரூபம் அவர்.
1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். கடுமையான உழைப்பை செலுத்தும் விவசாயிகளான சடோபா சிங் - ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் தாயின் அரவணைப்பும், அன்பும் அவருக்கு நீண்ட நாள் கிடைக்கவில்லை. அவரது சிறு வயதிலேயே தாயான ஜமுனா தேவி இறந்தார். அதன் பின்னர், சோகத்தை சுமந்த சடோபா சிங் இவரை தாயுமானவனாய் வளர்த்தார். சர்வ சுதந்திரத்துடன் அன்பு மகளை வளர்த்தார்.
அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறமுடியவில்லை. ஆனால் ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் மிகவும் நுட்பத்துடனும், வீரத்துடனும் கற்றுக் கொண்டார். இதனால் விரைவிலேயே நன்றாகப் பயிற்சி பெற்ற வீராங்கனையாக வளர்ந்தார். அடர்த்தியான காட்டில் ஒரு புலியால் தாக்கப்பட்டபோது, தனது கோடாரியைப் பயன்படுத்தி புலியைக் கொன்றதாக ஒரு சம்பவத்தின் செய்தி பரவியது. இது புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவ காரணமாய் அமைந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயுதம் தாங்கிய கூட்டத்தை சவால் விட்டு, நேரடியாய் மோதி அவர்களைப் பின்வாங்கச் செய்த கதையும் இவர் குறித்து இருக்கிறது.
அதைவிட அதிசயம் ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்ததுதான். ஜல்காரிபாய் வாழ்க்கையின் மிக முக்கியமான சந்தர்ப்பம் ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை சந்தித்ததுதான். இருவருக்கும் அன்பு மலர்ந்து பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். தனது அன்பு மனைவியை பூரண் சிங், ஜான்சிராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஜான்சிராணிக்கு ஜல்காரிபாய் தோற்றம் முதல் வியப்பென்றால், அவரது திறமையும், மதிநுட்பமும் மிக, மிக வியப்பாக இருந்தது. ஜல்காரிபாய் நடவடிக்கைகள் ஜான்சிராணியை மிகவும் ஈர்த்தது. அது போலவே ஜான்சி ராணியின் ஆளுமை ஜல்காரிபாயை மிக இயல்பாக அவர் பக்கம் ஈர்த்தது.
இதன் பின்னர், ஜல்காரிபாயை ஜான்சி ராணி லட்சுமிபாய் தனது பெண்கள் படையில் முக்கிய வீரராக இணைத்துக்கொண்டார். இதை தனது வளர்ச்சிக்கு கிடைத்த மிகவும் சிறந்த வாய்ப்பாக ஜல்காரிபாய் பயன்படுத்திக் கொண்டார், ஜான்சி ராணியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் மிகச் சிறந்த நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு அன்பும், கரிசனமும் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக, உற்ற தோழியாக விளங்கினார் ஜல்காரிபாய்.
1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார். 1858ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் தேதி ஹீ ரோஸ் மிகப் பெரிய படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டான். ஜான்சி ராணி லட்சுமிபாய் அந்த அசுரப் படையை எதிர்த்து வீரம் நிறைந்த போராட்டத்தை நடத்தினார். ஆனால் தொடர்ந்து போர் புரியக்கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. காரணம் அவர் கல்பியிலுள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்து சங்கமித்த ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதற்கு திட்டம் போட்டிருந்தார்.
எப்படி கல்பிக்குச் சென்று பெரும்படை திரட்டுவது என குழப்பத்திலும், சிந்தனையிலும் ஆழ்ந்தனர் அனைவரும். ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இம்முடிவை தனது வாழ்நாளின் மிகப் பெரிய கவுரவமாக ஏற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். அவருடன் அவரது பெண் படையைச் சேர்ந்த சிலரும் மிகவும் திட்டமிட்டு ஜான்சி ராணி லட்சுமிபாயை மிகுந்த சிரமத்துடன் தப்பிச் செல்ல வைத்தார்கள்.
ஏப்பிரல் 4ஆம் தேதி நிலவு கண்மூடிய இரவில் ஜான்சி ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ஜான்சி ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, மிகுந்த தீரத்துடன் படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த திறமையுடன், மதிநுட்பத்துடன் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து சண்டையிட்டார். ஆனால், இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளயடித்து, இங்கிருப்பவர்களை வைத்து பிருமாண்டமான படை நடத்திய வெள்ளையர்களிடம் கடைசியில் பிடிபட்டார்.
போர்களத்தில் அடிமேல் அடிவாங்கிய ஆங்கிலேய அதிகாரிகள், தாங்கள் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி கொண்டாட்டங்களை நடத்தினர். தங்களது மேதாவிலாசத்தை பெருந்தன்மை என காட்டிட, ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். பெண்தானே, உயிர் பிச்சை கேட்பார் என நினைத்தனர். ஆனால் அவர்கள் ஜான்சி ராணி என நினைத்த உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வீராங்கனை ஜல்காரிபாய் துணிச்சலுடன் தூக்கிலிடுங்கள்! என்று கூறினார். ஆனால் ஆங்கிலேயர்கள் பிரச்சினையின் உண்மையைச் சிறிது தாமதமாகத்தான் ஒரு ஒற்றன் மூலம் அறிந்து கொண்டனர்.
ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தங்கள் எதிரில் நின்ற ஜல்காரிபாயின் வீரமும், தியாகமும், தேச விசுவாசமும் தெரிந்தது. அவரது தேசப்பற்றும், தியாகமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர்கள் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தனர்.
ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் மிகச் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. இவைகளில் உண்மை எதுவாகினும் அவரது வீரமும், தியாக குணமும் அசாதாரணமானது. இந்த தேசத்தின் மீது அவர் வைத்த நம்பிக்கையில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
(இன்னும் போராளிகள் எழுந்து வருவார்கள்)
Janis rani serialil parththathai, naan Unmai enru therindhu konden! (dramatized of course!)