உறுத்தும் உண்மைகள்
-க. உதயகுமார்
அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்ற பயங்கரவாதி பின்லேடன் கூறிய பேட்டி எவ்வளவு சரியானது என்பதை இந்த நூல் மிகச் சரியாகவே தோலுரித்துக் காட்டுகிறது.
உலகின் பல நாடுகளிலும் தனக்கு ஆதரவாக பல்வேறு பயங்கரவாத குழுக்களை உருவாக்குவதிலும், அவர் களுக்கு உதவுவதிலும் கை தேர்ந்த அமெரிக்கா. அல் கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பையும் உருவாக்கியது.
சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரில் அன்று ஆப்கானிதானின் ஜனாதிபதியாகத் திகழ்ந்த டாக்டர் நஜிபுல்லாவை படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதற்காகவே பேணி வளர்க்கப்பட்டது.என்றென்றும் இந்த தாலிபான்கள் தனக்கு துணையாக இருப்பார்கள் என அமெரிக்கா தப்பு கணக்கு போட்டது.
80 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில் மிக ஆழமான பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பாகிதானில் பின்லேடன் கொல்லப்பட்ட விதம்; ஒசாமாவின் சிறு வாழ்க்கை வரலாறு; அல்கொய்தா என்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்பு உருவான விதம்; என ஒரு புறமும் மறுபுறம் கொலம்ப அமெரிக்காவின் பஹாமா தீவு கண்டுபிடிப்பில் துவங்கி கோடிக்கணக்கான செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டும்; அவர்களை அடிமையாக்கியும் அவர்கள் உழைப்பில் அமெரிக்கா உருவாக்கப்பட்ட விதம் வரை மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல; கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா பல்வேறு நாடுகளில் நடத்திய அரசியல் படுகொலைகள்; ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், ராணுவ தலையீடுகள் என மொசாம்பிக் என ஜாம்பியா, ஈரான், கியூபா, வியட்நாம் காங்கோ, சிலி, நாடுகளில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்களும் படுகொலைகளையும் திரைக் காட்சியாக சித்தரிக்கிறது இந்நூல்.
இந்த விவரங்கள் இளைய தலைமுறை வாசகர்களுக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்தை தோலுரித்துக் காட்டிட பயன்படும். அமெரிக்கா ஒரு பசு அல்ல; பசுதோல் போர்த்திய புலி என்பதை அம்பலப்படுத்த உதவிடும்.
ஒரு பயங்கரவாத நாட்டிற்கு (அமெரிக்கா) எதிராக இன்னொரு பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ள தாக்குதலை பட்டியலிட்டு காட்டுகிறார் நூலாசிரியர் பயங்கரவாதத்தை விதைக்கிற பயங்கரவாத அமைப்புகளைத் தொடர்ந்து ஆதரிக்கிற அமெரிக்கா திருந்தாதவரை அல்லது அவர்களை திருத்தாத வரை இத்தகைய நடவடிக்கைகளை தடுத்த நிறுத்த இயலாது என்ற வாசகம் முற்றிலும மிக சரியானது.
இளைய தலைமுறை எழுத்தாளரான எஸ்.ஜி. ரமேஷ்பாபு. இந்நூலை மிக தேர்ந்த நூலாசிரியர் வரிசையில் நின்று உருவாக்கியுள்ளார். இந்நூலின் விவரங்கள், அதனை கோர்வை படுத்தி கூறியுள்ள முறை மற்றும் எழுத்து நடை... அனைவரும் படிக்க தூண்டுவதாக இருக்கிறது. நூலாசிரியரின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து இந்நூலைக்கொண்டு வந்த பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது.
அமெரிக்க அல்கொய்தா
இருபயங்கரவாத வரலாறு
எஸ்.ஜி. ரமேஷ்பாபு
வெளியீடு: பாரதிபுத்தகாலயம்,
7, இளங்கோ தெரு,
சென்னை - 600 018.
பக். 80, விலை ரூ.40/-
30.10.11 தீக்கதிர் நாளிதழில் வந்த நூல் அறிமுகம்
புத்தகம் படித்தேன் தோழர்!எழுத்து நடையும் கருத்துக்களை சொன்னவிதமும் அருமை.செவ்விந்தியர்களின் அழிவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது அமெரிக்காவின் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிதுக்காட்டியது அருமை!தொடருங்கள்.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு