சனி, 26 மார்ச், 2011

தி.மு.க. எனும் அரசியல் ஆக்டோபஸ் : ஆனந்த விகடன்















ப.திருமாவேலன். 
படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன்













ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!



42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.


1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!



குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.


ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.


ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.


கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.


கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.


அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.


பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!



டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!


 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

 மதுரை கவுன்சிலர் லீலாவதிகொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
 தி.மு.க-வின் முன்னா

ள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!


 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தஅண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
 சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!


டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! 


7 கருத்துகள்:

  1. வரலாற்றுப் பாடம் - முகலாய வரலாறு படிப்பது போல இருந்தது!

    நம் நிலைமையைப் பார்த்து நாமே சிரித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான்!

    எழிலரசியின் வீணை மீட்டலை நானும் டிவியில் கேட்டேன். இப்போது தான் கற்றுக் கொள்கிறார்போல!

    பதிலளிநீக்கு
  2. நாட்டிற்க்காக தன்னை அர்பணித்து கொண்ட தலைவர்களை பார்த்தோம், ஆனால் இப்போது தான் நாட்டிர்க்காக் தன் குடுமபத்தையே அர்பணித்து இருக்கிறார் கலைஞர். அவருடைய குடும்பத்தை பற்றி நன்றாகவே சொன்னீர்கள். அவரால் பல கோடி மக்கள் காப்பாற்ற பட்டு இருக்கிறார்கள். பலகோடி மக்கள் பயன் பெற்று இருக்கிறார்கள். கலைஞர்-க்கு ஒரு தம்பி இருந்து இருக்க கூடாத என்று என்ன தோனுகிறது.
    நாட்டிர்க்காக் தன் குடும்பத்தை அர்பணித்து கொண்ட கலைஞருக்கு கோடான கோடி நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இதுதான் தமிழ் நாட்டின் நிலமையா? இதை மாற்ற வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  4. இதைத் தான் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்லிக் கொண்டிருந்தாரோ ?

    பதிலளிநீக்கு
  5. //வரலாற்றுப் பாடம் - முகலாய வரலாறு படிப்பது போல இருந்தது!//

    இதுவும் வ‌ர‌லாறாக‌த்தான் போகிற‌து.

    சூரிய‌ன் அஸ்த‌மித்துதானே ஆக‌ வேண்டும். அப்ப‌டியே புக‌ழ் ம‌ங்காம‌ல் இருக்க‌ இவ‌ர்க‌ள் என்ன‌ ராஜ‌ ராஜ‌ சோழ‌ர்க‌ளா?

    பதிலளிநீக்கு
  6. இப்போ உள்ள அணைத்து தலைவர்களும் பிழைப்புககதான் கட்சியில் முக்கியமாக அரசியலில் இருக்கிறார்கள் இவர்கள் எதனை பேர் மனதில் மக்கள் நலன் இருக்கும் என்பது ஊர் அறிந்த ரகசியம்.எதனை படங்கள் வந்தாலும் எதனை நூல்கள் வந்தாலும் யாரும் திருந்தபோவதில்லை.அவர்கள் செய்த விஷயங்கள் இவ்வளவு தூரம் வெளியே வந்து இருக்கிறது அனால் எதுவுமே நடக்காததுபோல் அவங்க வேலைய பார்த்துட்டு இருக்காங்க.தமிழனை பிட்சகரனகவும் ஏமாளியாகவும் பொருக்கி தின்னுபவனகவும் இவர்கள் மனதில் இருக்கு......மாமன்கெட்ட தமிழனே என்று விழிப்பாய்?????????????

    பதிலளிநீக்கு
  7. I think we are reading too much into it. When a selvi conducted her adopted son's marriage for 100 crores in mid 90s, this is just nothing.

    பதிலளிநீக்கு