மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


மாஸ்கோவின் மழையும் வாஷிங்டன் வெயிலும்

"அத்திப்பழங்கள் இப்போதும் சிகப்பாய்தான் இருக்கிறன"  பத்திரிக்கையாளர் ஆர்.விஜயசங்கரின் படைப்புகளைதாங்கி வந்துள்ள புத்தகம். அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், ஊடகங்களின் உள்ளார்ந்த பார்வைகள், நேர்கானல், உலக அரசியல், மொழிபெயர்புகள் என பலத் தளங்களின் தடையிலாமல் 423 பக்கங்களில் பயணிக்கிறது இப்புத்தகம். வம்சி பதிபகத்தால் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் சமீபத்தில் வந்துள்ள முக்கியமான புத்தகங்களில் ஒன்று. பல கட்டுரைகளை முன்பே தனித்தனியாக படித்திருப்பினும் அவைகளை ஒரே புத்தகமாக படிக்கின்ற போது அனைத்துக் கட்டுரைகளிலும் சமூக மாற்றத்திற்கான வேண்டுகோள் விடுக்கிற ஓர்மை தெரிகிறது. இது வெறும் எழுதாளனாய் மட்டும் இருந்தால் சாத்தியப்படுவதல்ல, சமூகத்தின் மீது அக்கறை கொண்டு மக்கள் போராட்டக் களத்தினில் கவனம் குவிக்கிறவர்களால்தான் முடியும். விஜயசங்கர் அப்படிதான் கவனம் குவித்துள்ளார்.

எப்போதோ எங்கோ பார்த்த சில பொருட்கள் வெறும் பொருட்களாய் மட்டும் நினைவு அடுக்குகளில் பதிவாவது இல்லை, என்றாவது ஒரு நாள் மீண்டும் அந்த பொருளை சந்திக்கும் போது அது அந்த காலகட்டத்தின் வரலாற்றை நினைவு படுத்தும். மாணவர் இயக்கத்தில் தனது வாழ்க்கையை துவக்கி, கம்யூனிஸ இயக்கத்தின் சிகரங்களை தொட்ட ஒரு மகத்தான போராளியின் மகன் தனது தந்தைக்கு எழுதிய கடித்ததில் அத்திப்பழம் இந்த வேலையை செய்கிறது. ஒரு முழுநேர புரட்சிகாரனின் வாழ்க்கையில் அவரது குடும்பம் செய்த தியாகங்களை மிகச்சில வார்த்தைகளில், ஆனால் உணர்வுபூர்வமாய் சொல்லிச்செல்லும் இப்புத்தகத்தின் முதல் படைப்பு அழுத்தமான பாதிப்பை வாசகர்களுக்குள் விதைக்கும். 

சொல்ல வந்ததை அளவான வார்த்தைகளில் அழுத்தமாய் சொல்லும் கலை விஜயசங்கருக்கு கைவந்துள்ளது. மண்டேலாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். பல உலக நிகழ்வுகளை மிக எளிமையாக சொல்ல விபரங்கள் மட்டும் போதாது, எப்படி சொன்னால் முழுமையாக வாசகனுக்கு புரியவைக்க முடியும் என்பதும் முக்கியமானது. கியூபா குறித்த இரண்டு படைப்புகளில் இந்த முழுமையை வாசகனால் உணரமுடியும். ''மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடைபிடிப்பவர்கள் என்று கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்தவர்கள் இன்று வாஷிங்டனில் வெயிலடித்தால் வந்தவாசியில் ஏன் கூரை போடவில்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள்'' என்ற பகடியுடன் இந்தியாவின் சூப்பர் பவர் கனவு, எப்படி அமெரிக்கா என்கிற சூப்பர் பவரின் திட்டத்தால் வடிவமைக்கப்படுகிறது என்பதை ஏராலமான உலக அனுபவங்களுடன் விளக்கும் பாங்கு அலாதியானது. அமெரிக்காவின் பொருளாதர நெருக்கடியை விளக்க இன்றைய விபரங்கள் மட்டும் இருந்தால் அது புள்ளிவிபர அறிக்கையாக மாறி இருக்கும் ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரத்தில் இருந்த அமெரிக்காவையும், தற்பொதுள்ள அமெரிக்காவயும் அவர் ஒப்பிடுவது வரலாற்று போக்கில் அதன் நெருக்கடிக்கான விதை எது என்பதை புரிய வைக்கிறது. நெருக்கடிகள் ஊடாக உருவாகும் ஏகாதிபத்தியத்தின் சவக்குழிகளின் முகவரியை காரண காரியங்களுடன் விவரிக்கிறார்.  

சமூக இயக்கங்களின் அவசிய தேவை சமகாலத்தில் ஆளுமை செலுத்தும் அரசியல் இயக்கங்களை அதன் தத்துவ பின்புலத்துடன் எடைபோடுவது. இயக்கங்கள் செய்ய வேண்டிய இந்த ஆளுமை மிகுந்த பணியை மிகவும் கவனத்துடனும் இடதுசாரி பார்வையுடனும் நேர்மையுடனும் செய்திருப்பதன் வெளிப்பாடுதான் திராவிட இயக்கம் இன்று என்கிற ஆய்வு கட்டுரை. ஆரியர் - திராவிடர், பிராமணர் - பிராமணரல்லாதார், தமிழ் - சமஸ்கிருதம் என்ற முரண்பாடுகளை பேசிவந்த தி.மு.க வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்ததன் காரணத்தை மிகவும் தர்க்க ரீதியாக விளக்குகிறார். திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து திராவிட கட்சிகள் பிறழ்வதென்பது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதம் தொடர்பானது மட்டுமல்ல தத்துவார்த்த பிறழ்வும் ஆகும் என்பதை திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியினை 1940 களிலிருந்து ஆழமாக ஆய்வு செய்து வரும் இலங்கையைச் சார்ந்த மிகச்சிறந்த தழிழறிஞரான கார்த்திகேசு சிவதம்பி அவர்களின் நேர்கானல் மூலம் வெளிக்கொண்டு வருகிறார். இந்த நேர்கானல் தமிழ்சமூக அரசியல் வளர்ச்சி, பெரியாரின் ஆளுமையில், அண்ணாவின் எழுத்தில் இருக்கின்ற சாதக பாதகங்களை சுருக்கமாய் ஆனால் மைய கரு எது என்பதை மிகவும் அழுத்தமாய் பதிவு செய்கின்ற ஒன்றாய் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுந்த அடிப்படையான அரசியல் நிகழ்வுகளில் தாக்கத்திற்கு உள்ளாகி அவைகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்திய போராளி பெரியாரின் அரசியல் தத்துவ சுருக்கத்தை பெரியார் - நேற்று இன்று நாளை என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். இவைகளுடன் அடையால அரசியல் குறித்த கட்டுரையும் இணைகிற போது, இன்றைய தமிழக சமூகத்தை புரிந்துக்கொள்ள ஒரு இயங்கியல் சட்டகமாய் பயன்படுகிறது.

வார்த்தைகளை மொழிபெயர்க்கும் வேலையாக இல்லாமல் தமிழ் வாசகனுக்கு மிக அருகாமையில் நின்று பேசுகிற மொழிநடையில் இவரது மொழிபெயர்ப்பு உள்ளது. அருந்ததிராயின் செப்டம்பர் நினைவுகள், கே.என் பணிக்கரின் மதச்சார்பின்மை: புதியசவால்கள், விஸ்வமோகனின் அருண் சொளரிக்கு ஒரு கேள்வி இம் மூன்று மொழியாக்கப்படைப்புகளும் அரசியல் வரலாற்று புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டதால்தான் அவை உயிரோட்டமாக இருக்கிறது. பணிக்கரின் கட்டமைப்பு ஆழம் கொண்ட வாசகங்கள் அதன் அழுத்தம் குறையாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடு கடத்தப்பட்டபோது தான் கடந்த இடங்கள் குறித்து பாப்லோ நெருடாவின் பதிவை மொழிபெயர்ப்பு செய்யும் போதும், அமெரிக்க கண்டத்தினை ஒரு பெண்ணாக கற்பனை செய்து, அவள் காதல் அனுபவங்களையும், அவள் மீது நிகழ்ந்த பலாத்காரங்களையும் அவளிடம் ரகசியமாக தனது காதுகளில் வாங்கி "லத்தின் அமெரிக்காவின் திறந்திருக்கும் ரத்த நாளங்கள்" என்ற படைப்பை உருவாக்கிய எட்வர்டோ கலியானோவை அறிமுகம் செய்யும் போதும் ஒரு கவிஞனுக்குரிய மொழிநடையுடன் எழுதிச்செல்கிறார். இந்த கலியானோவின் புத்தகத்தைதான் ஒபாமவுக்கு சாவேஸ் பரிசாக கொடுத்தது.

அதிகார பசி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதன் இந்திய உதரணம் இருண்டகாலமான எமர்ஜென்சி. அந்த காலத்தின் இருள் நிழலில் நடந்த கொடூரங்களை இன்றைய இளம் தலைமுறை கற்க வேண்டிய அவசியத்தை இப்புத்தகம் ஏற்படுத்துகிறது. எரிக் ஹோப்ஸ்வாம், நேபாளம், கொலம்பஸ் அள்ளிக்கட்டிய தங்கக் கனிமம் குறித்தெல்லாம் மிகவும் நுட்பமான பதிவுகளை இப்புத்தகத்தில் பதிந்துள்ளார். சர்வதேச, தேச முக்கியம்துவம் வாய்த எழுத்துக்கள் புத்தகம் முழுவதும் தொடர்ந்து வந்தாலும், மொத்த மக்கள் தொகையில் 70 சதம் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்கள் கொன்ட நமது தேசத்தில் அவர்கள் குறித்த பதிவுகள் இல்லாதது தெரிகிறது. தொகுப்பில் விடுபட்டிருக்கலாம்? எல்லா தளங்களிலும் ஒருவரிடம் எதிர்பார்ப்பது நமக்கான பேராசையாக இருப்பினும் அது இத்தகைய எழுத்தாளர்களிடம் நியாயமானதாகவும் இருக்கலாம். ஜோனா ரஸ்கினுக்கு எடுவார்டோ கலியானோ கொடுத்த நேர்கானலில் கலியானோ சொல்கிறார் "நேர்மையாக எழுதுவது என்பதுதான் முக்கியமானது. நாம் பேசும் வார்த்தைகளை வைத்துதான் ஒருவரை ஒருவர் அறிந்துவைத்திருக்கிறோம். நாம் பேசும் வார்த்தைகள் தாம் நான். நான் ஒரு சொல்லை உங்களுக்கு தரும்போது என்னையே தருகிறேன்" என்பார். அப்படிதான் மன்கடா வீரர்களின் வழிதோன்றல்களையும், மாவீரன் பகத்சிங்கின் வழிதோன்றல்களையும் கரம் இணைக்கச்சொல்லி நேர்மையாக மிகவும் கோபத்துடன் தனது படைப்புகளை தந்திருக்கிறார் விஜயசங்கர்.   

 - புத்தகம் பேசுது .ஏப்ரல் 2011

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark