புதன், 16 பிப்ரவரி, 2011

வடமாநில இளைஞர்களும் மனிதர்கள்தானே??????


நாடு அதிவேக வளர்ச்சி அடைவதாக தினம் ஒரு அறிவிப்பை ஆளும் கட்சியினர் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வளர்ச்சி என்பதன் அளவுகோல் நீள அகலங்களில் செல்லும் வழவழப்பான சாலைகளாகவும், வானுயர கட்டிடங்களாகவும், மனிதர்களை புறம் தள்ளி எந்திரங்கள் நிறைந்த தொழிற்சாலைகளாகவும் ஊடகங்களால் காட்டப்படுகிறது.

தமிழ்நாட்டின் எந்த ஒரு மூலையிலிருந்து நீங்கள் பயணம் செய்தாலும் அல்லது எந்த ஒரு குக்கிராமத்திற்கு நீங்கள் பயணம் செய்தாலும் நீங்கள் செல்லுகின்ற பேருந்தில் சில வடநாட்டு இளைஞர்களை சந்திக்க முடியும். எங்கிருந்து வருகிறார்கள்? எங்கே செல்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கை எங்கே நடக்கிறது? திருமணம் ஆனவர்களா? அவர்களது தாய் அல்லது சகோதரி, காதலி அல்லது மனைவி எங்கே இருக்கிறார்கள்? இந்த இளைஞர்களை நீங்கள் கவனிக்கிறீர்களா? யாருக்கும் எதுவும் தெரியாது! அவர்கள் எவர் கணக்கிலும் வராதவர்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை தென் மாநிலங்களில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கேரள அரசின் ஒரு மதிப்பீட்டின்படி அங்கு மட்டும் 30 லட்சம் வரை இந்த வடமாநில இளைஞர்கள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் நிச்சயமாக இதைவிட இரண்டு மடங்குக்கு மேல்தான் இருக்கும்.

திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற தொழில்நகரங்களில்தான் எங்கும் வியாபித்து இருந்தனர். அதன்பின் பிரம்மாண்டமான சாலை, ரயில் போக்குவரத்து கட்டமைப்பில், எண்ணெய், அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகளில் அத்தக்கூலிகளாய் அடைக்கப்பட்டனர். தலைமைச்செயலகக் கட்டிடம் துவங்கி இப்போது ஹோட்டல், ஜவுளி, வீடு கட்டு மானம் என எங்கும் பரவி வருகின்றனர். மொழி புரிந்த தமிழக தொழிலாளிக்கே பாதுகாப்பு இல்லாத தமிழகத்தில், இந்த புலம்பெயர்ந்த அப்பாவிகள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் புரியாத மொழியை பேசியபடி விறகுக்கும், மண்ணெண்ணெய்க்
கும் இவர்கள் அலைவதை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும். இவர்கள் வாழும் சூழலும் அங்கு சுகாதார நிலைமையும் மிகவும் கேவலமாக இருக்கிறது. செய்யும் பணியிடங்களில் இவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களும், நிகழ்கின்ற மரணங்களும் யார் கவனத்தையும் ஈர்ப்பதில்லை. விபத்து நடந்த அடுத்த சில மணி நேரங்களில் அதன் சுவடு தெரியாமல் அங்கு வழக்கம் போல வேலைகள் நடக்கிறது.

பண்டைய நாட்களில் நடந்த அடிமைத்தொழில் நவீன வடிவத்தில் உலகமய
வளர்ச்சி என்ற அரிதாரம் பூசி இப் போது நடக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை பொழுதுகளில் அகல விழிகளை விரித்தபடி ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் பல ஏஜென்டுகளால் அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து சிறு சிறு அலகாக பிரிக்கப்பட்டு, எக்மோர், கோயம்பேடு வழியாக தமிழகம் முழுவதும் அடுத்த பல ஏஜென்டுகளால் கைப்பற்றப் பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு தனி ஏஜெண்டுகள் உண்டு. இவர்கள் உழைப்பு சுரண்டப்படுவது மிகவும் கொடூரமானது. உதாரணமாக கடலூர் சிப்காட் அருகில் வரவுள்ள நாகர்ஜூனா எண்ணெய் கம்பெனியின் கட்டுமான பணிக ளில் மொத்தம் 3500 தொழிலாளர்களுக்கு மேல் ஒப்பந்த தொழிலாளியாக பணி யாற்றுகின்றனர். இவர்களில் சரிபாதிக்கு மேல் வடமாநில இளைஞர்கள். இவர் களுக்கு நாள் ஒன்றுக்கு கிடைக்கும் கூலி 160 ரூபாய். வேலை நேரம் ஒப்பந்ததாரர் நினைப்பதுதான். ஆனால் இங்கு தமிழக தொழிலாளிக்கு 8 மணிநேர வேலைக்கு கிடைக்கும் கூலி 300 ரூபாய். இவர்களுக் கும் முழு கூலி இல்லை. இவர்களும் வஞ் சிக்கப்படுபவர்களே. இந்த தொழிலாளிகள் பெயரில் கம்பெனியிடம் காண்ட்ரக்டர் என்ற இடைத்தரகர்கள் பெறும் கூலித் தொகை ஒரு நபருக்கு 500 ரூபாய். இதிலிருந்து இந்த சுரண்டலின் பிரம்மாண் டத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

கேரளாவில் எந்த மாநிலத்தை சார்ந்த தொழிலாளியாக இருந்தாலும் சமவேலைக்கு சமஊதியம் என்பதால் அங்கு இவர்களுக்குள் பிரச்சனை எழுவது அரிதானது. இடதுசாரிகளின் ஆட்சி நடக்கும் கேரளாவில் இந்நிலை முற்றிலும் வித்தியாசமான சூழலை உருவாக்கி உள்ளது. தமிழக தொழிலாளிக்கு கலைஞர் படம் போட்ட அட்டை கொடுத்து நலவாரியம் பாரீர்! என விளம்பரம் செய்து, வி.ஏ.ஓ கையெழுத்து போன்ற பல காரணங்களை கூறி நலவாரிய சலுகைகளுக்கு இழுத்தடிக்கும் நிலை உள்ளது. ஆனால் கேரளாவில் புலம்பெயர்ந்து வந்த வடமாநில தொழிலாளியைக்கூட அக்கறையுடன் பராமரிக்கும் போக்கு உள்ளது. சமீபத்தில் கேரள அரசு புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் நிலைமையை கணக்கெடுத்ததில் அவர்கள் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளதை கவனத்தில் கொண்டு, 2010 மே மாதம் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்த வந்த தொழிலாளிகளுக்காக தனி நலவாரியம் ஒன்றை துவக்கி உள்ளது.

பிற மாநில தொழிலாளிகள், அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் அல்லது உரிமையாளரிடம் அங்கு வேலை செய்வதாக சான்று பெற்றுவந்து கொடுத்து, முப்பது ரூபாய் கட்டி நலவாரிய அட்டை வாங்கிக்கொள்ளலாம். பின்பு இந்த நலவாரிய அட்டைகள் அடிப்படையில் ரேசன் கார்டு வழங்கப்படும். இந்த நலவாரியத்தின் மூலம் 25 ஆயிரம் ரூபாய் மருத்துவ நிதியாகவும், நோய்வாய்ப்பட்டு இறந்தால் ரூ.25 ஆயிரமும், விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.10 ஆயிரமும், குழந்தை கள் கல்வி நிதியாக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரமும், இறந்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ரூ.15 ஆயிரம் வரையும் நிதி உதவிகள் கிடைக்கும். இந்த நலவாரியத்தை டாம்பீகமாக அறிவித்து, பின்பு கண்டுகொள்ளாமல் இருக்கிற அரசு அல்ல கேரளத்தின் இடதுசாரி அரசு. அங்கு முறையாக புலம்பெயர் தொழிலாளிகள் கணக்கெடுப்பு துவங்கி உள்ளது. வீடுதேடிச்சென்று நலவாரிய அட்டைகள் வழங்கப்படுகிறது. மக்கள்நல அரசு என்பதன் உண்மையான அர்த்தம் இது தான். தங்கள் பிறந்த மண்ணைவிட்டு வேலைதேடி நிராதரவாக அலையும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை பாதுகாப்பது மனிதநேயப் பணி மட்டுமல்ல, மக்கள் நலன் காக்கும் அரசியல் நெறியாகும். தமிழகத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளில் சங்கம் வைக்கும் உரிமையைக் கூட அனு மதிக்காத தமிழக அரசுக்கு இது புரியுமா?

1 கருத்து: