மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

பிரியமுள்ள தோழர்களே, நண்பர்களே.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வீரமிகு தியாகிகளின் வாழ்க்கையை தொகுத்து புத்தகமாக்கும் பணி எனக்கு கிடைத்தது. அந்த இளைஞர்களின் வீர வரலாறு விதையாய் விழுந்தவர்கள் என்ற தலைப்பில் கோவையில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் குறித்து தீக்கதிர் நாளிதழில் கோவை நிருபரும்,புகைப்பட கலைஞரும்மான சக்தி எழுதிய புத்தக அறிமுகத்தை இங்கே கொடுத்துள்ளேன்.



வீரிய வித்துக்களாய் வீழ்ந்த அக்கினிக் குஞ்சுகள்....

எளியோரை வலியோர் அடித்தால், வலியாரை வாயில் படி இடிக்கும்’ என்றும் ‘ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன’ ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்றெல்லாம் பலவாறாக பொய்மான்களை உலவவிட்டு வேடிக்கை காட்டுகிறது ஆளும் வர்க்கம். பெருவாரியான உழைக்கும் மக்கள் திரளை மிரட்சிகளிலும், இயலாமையிலும் அழுத்தி வைத்து ‘விதி’ யென்று நம்ப வைத்து சதிவலை பின்னிக் கொண்டே யிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன எதையுமே முதலாளிகள், மதவாதிகள், நிலப் பிரபுகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கம் நம்பியதுமில்லை, கடைப்பிடித்ததுமில்லை. 

இத்தகு கூட்டத்தை எதிர்த்து நிற்பதும் இவர்களின் அதிகாரத்தை கேள்வி கேட்பதும் சரித்திரத்தில் எப்போதுமே எளிதாக இருந்ததில்லை. தமிழகத்தின் நெடும் பரப்பில் சற்றொப்ப நாற்பதாண்டு காலத்திற்குள் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியாகவும், பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாகவும் செயல்பட்டு வரும் சங்கம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரில் கொடுத்த விலையை, உயிர்ப் பலிகளை ரத்தசாட்சிகளை ‘விதையாய் விழுந்தவர்கள்’ என்று நூல் நம்முன்னே நிறுத்துகிறது. பக்கத்திற்கு பக்கம் ஆவே சமும் கொந்தளிப்புமாய் வாலிபர் சங்கத் தின் வீரம்மிக்க 19 தியாகிகளின் வரலாற்றை சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு பதிவு செய்திருக்கிறார்.

“எருக்கஞ் செடியோரம் இறுக்கிப் புடிச்ச என் மாமா! உருகும் நெய்யைப் போல உருகித்தவிச்சேனே ஆமா” என்றொரு திரைப்பாடல் இளையோர் கூட்டத்தை ஒரு புறம் கிறங்கடிக்கிறது. ஆனால் எருக்கஞ் செடிப்புதர்களும், காட்டுக் கருவேலஞ்செடி முட்புதர்களும் எங்கள் சீராணம்பாளையம் பழனிச்சாமியையும், அரசூர் சேட்டுவையும், காலிகள், ரவுடிகள், வெட்டி எறிந்து மறைத்து வைத்த இடம் என்று இந்த நூல் நம் முகத்தில் அறைகிறது. ‘எல்லோரும் தமக்கென ஓர் வாழ்வை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினால் சமூகத்தின் வாழ்க் கையைத் தீர்மானிப்பது யார்?’ என்று சிந்தித்த வாலிபர்கள் தான் இந்த ரத்த சாட்சிகள். கலர் கலரான கனவுகளில் கேளிக்கைகளில், சுயநலத்தில் மூழ்கிப் போகாது சமூகத்தேரை முன் நகர்த்த முயற்சித்து உரமாகிப்போனவர்கள் என்பதை வரலாற்றுப் பின்னணியுடன் இயக்கத்தின் போக்கில் பதிவு செய்துள்ளார் ரமேஷ்பாபு. 

‘ஆட்டோ ரவி’ கூழு, பால்ஸ், வெட்டேத்தி விஜயன், ‘எலி’ வெங்கடேசன், சுறா(எ)சுரேஷ், வெள்ளை கந்தன், ‘புல்லட்’ கணேசன் போன்ற அல்லக்கைகள் தான் நமது வீரம் செறிந்த பெரம்பூர் ராஜூ, அரகநாடு சுதாகரன், விக்கரம சிங்கபுரம் குமார் போன்ற வாலிபர் சங்கத் தியாகிகளை கொன்ற கொலை யாளிகளில் சிலர். ஆளும் வர்க்கத்தின் இந்த அடியாட்களையும் நமது அன்புத் தியாக சீலர்களின் பெயர்களையும் வாசித்தாலே புரிந்து போகிறது இதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

ஜனநாயகம் காக்கும் போரில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை யான மதுரை குட்டி ஜெயப்பிரகாஷ், மத வெறியை எதிர்த்த வீரம்மிக்க போராட் டத்தில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட அருமனை பாபு, அரகநாடு சுதாகரன், சமூக விரோதிகள், சாராய வியாபாரிகளால் கொல்லப்பட்ட விருதுநகர் சந்துரு, மண்டபம் முத்து, ஒடுக்கப்பட்டோர் தலித் மக்களின் உரிமைகளுக்காக களம் கண்ட இடுவாய் ரத்தினசாமி, பட்டி வீரன் பட்டி பாண்டி என்று வீழ்ந்துபட்ட இந்த வீரத்தியாகிகளின் கொலைக்கான காரணங்களை அசைபோட்டால் வாலிபர் இயக்கம் கடந்த 40 ஆண்டுகாலமும் எந்தத் திசை வழியில் பயணிக்கிறது எனச் சொல்லாமலே விளங்குகிறது. ‘ஊரின் பொது வருவாயில் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும், புளிய மர ஏலத்தில் தலித் துகளும் பங்கேற்க வேண்டும், ஏரிக் குத்தகையில் பங்கு, கோயிலில் மரியாதை’ போன்ற முழக்கங்களை அரசூர் (விழுப்புரம் மாவட்டம்) முழங்குகிறது. அதன் தொடர்ந்த போராட்டத்தில் ஆதிக்க சாதிப் படையணியுடன் மோதி ஊரைக் காக்க உயிர் விட்டு ‘காவல் தெய்வம்’ போலாகிறான் அரசூர் சேட்டு. இப்படி நூலில் பக்கத்துக்குப் பக்கம் தியாக மணமும், இரத்த வாடையும் வீசிக் கொண்டேயுள்ளது. இந்த வரலாற்றை வாசிக்கும் எவருக்கும் ‘உத்வேகம் கிடைக்குமெனில் அதுவே இந்த புத்தகத்தின் வெற்றி’ என்ற நூலாசிரியரின் விருப்பத்தில் வாசகனும் ஒன்றி ணைவதில் எந்த தயக்கமும் இருக்கப் போவதில்லை.

160 பக்கங்களில் 18 தலைப்புகளின் கீழ் 19 தியாகிகள் குறித்து தலைமுறை களைத் தாண்டியும் நினைவில் வாழும் வகையில் ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். தமிழகம் முழுவதிலும் இருந்து நூல் ஆக்கத்திற்கு உதவி யவரையும், தகவல் அளித்தோரையும் குறிப்பிட்டுள்ளது. கூட்டு உழைப்பின் மகத்துவத்தையும் பறை சாட்டி நிற்கிறது. “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் பொதிகைமலை, உச்சியில் தென்றலுடன் அமிர்தமான தண்ணீரும் புறப்படும், மேடுபள்ளம் மறைத்து பிரவாகம் எடுக்கும் காட்டாறு, முண்டந்துறை அருகில் இரண்டாகப் பிரிந்து பாபநாசத்தில் மூத்த அரசியல்வாதிகயைப் பார்த்தால் பரவசப்படும் தொண்டன் கைகுவிக்கும் லாவகத்துடன் இணைந்து தாமிர பரணியாய் வழியெங்கும் வளம் தந்து கடலில் கலக்கும்”. என்று இயற்கை வர்ணனையில் எள்ளல் நடையைத் தரும் ஆசிரியரின் எழுத்துபாணி சாதாரண இளம் வாசகனையும் சுண்டியிழுக்கும் மொழியழகு எனலாம். சமூக நலனுக்காக தன்னுயிரை ஈந்திட்ட குமாருக்காக மூன்று நாட்கள் போர்க்களத்தில் நின்ற விக்கிரம சிங்கபுரம் கிராம மக்களையும், சாவின் விளிம்பிலே தண்ணீர் கேட்டு துடித்த சுதாகரனுக்கு பயத்தைப் புறந்தள்ளி நீர் வார்த்த வீரப்பெண் கள்ளிக் குட்டியையும், மக்கள் ஒற்றுமைக்காக போரிட்ட மாவீரன் அருமனை பாபுவை காப்பாற்றப் பயமின்றி பாய்ந்து தன்னுயிரையும் சேர்த்து தந்த செல்லையனையும், சீறிப்பாயும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அஞ்சாமல் குட்டி ஜெயப்பிரகாஷை காப்பாற்ற முயன்று உயிர் விட்ட அஇஅதிமுக இளைஞன் ராஜூ வையும் அவ்வளவு எளிதில் வாசக மனதால் கடக்க முடியவில்லை.

காஞ்சிரமரத்திற்கு குங்குமம் பூசி கடவுளாக்க முயன்ற மதவெறிக்கயவர்கள் ‘இந்திராவே இந்தியா’ ‘இந்தியாவே இந்திரா’ ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்’ ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்ற வார்த்தை வித்தகர்கள், சித்தர்கள், சாராய ரவுடிகள், சமூக விரோதிகள், சாதிஆதிக்க வெறியர்கள் என ஒவ்வொருவரோடும் மோதி இந்த அக்கினிக் குஞ்சுகள் வீழ்ந்துள்ளன. ‘பரஸ்பர அரசியல் ஜனநாயகமும், மனிதாபிமானமும் மறந்தவர்களின் கடைசிப் புகலிடம் பயங்கரவாதமும், ரவுடித்தனமும் தான் என்பதை ஒவ்வொரு தியாக வரலாற்றினூடேயும் ரமேஷ்பாபு ஆணித்தரமாய் நிறுவிச் செல்கிறார். வாசித்து முடித்த பின்னும்’ ‘என்னை மண்ணில் புதைத்த, என் பகைவனே.. என் மண்ணை நீ எங்கே புதைப்பாய்?’ என்று கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில் ஒவ்வொரு தியாக இளைஞனும் எக்காள மிடுவதாய்ப்படுகிறது. புத்தகத்தில் விக்கிரமசிங்கபுரம் குமாருக்குப் பதில் கடலூர் தியாகி குமாரின் படம் மாறி பதிப்பிக்கப் பட்டுள்ளது. ஆங்காங்கு உள்ள எழுத்துப் பிழைகளும், வார்த்தை குறைபாடுகளும் கூட ஆவேசமும், பதட்டமுமான வாசக ஓட்டத்தை எங்கும் தடை செய்வதாயில்லை. 17 வயது முதல் 40 வயது வரையிரான இந்த இளம் வீரர்களின் களப்பலியானது உந்து விசையாக வாலிபர் இயக்கத்திற்கு பயன்பட்டுள்ளது பின்னோக்கி பார்க்கையில் தெரிகிறது. 

ஆம், இலட்சிய வேட்கை கொண்ட எந்தவொரு இயக்கமும் இழப்புகளின்றி முன்னேற்றத்தை சாதித்ததில்லை. ‘°பார்ட்டகஸின் மரணம் அடிமை முறைக்கு முடிவு கண்டது. அது போல் நமது தோழர்களின் தியாகம், பல இடங்களில் சமூகக் கொடுமைகளைத் தடுத்து முன்னேற வித்திட்டது’ என்று பதிப்புரையில் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் மிகச்சரியாகவே குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தமிழகத்தின் இளைஞர் சமு தாயம் இந்த வீரத் தியாகிகளின் வரலாற்றை அறிந்து உள்வாங்கி படிப் பினைகளைக் கற்று முன்னேற இந்தப் புத்தகம் கை வாளாகத் திகழும் என்பதில் ஐயமேதுமில்லை. ஒவ்வொரு இளைஞ னும் சமூகப் போராளிகளும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

விதையாய் விழுந்தவர்கள்
DYFI தியாகிகள் வரலாறு - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ் மாநிலக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம். விலை: ரூ.90.

3 comments

  1. வாழ்த்துக்கள்

     
  2. Unknown Says:
  3. விழுந்தவர்களின் வரலாற்றை எழுந்தவர்கள் எழுதுவார்கள் என்பது உண்மையாகி இருக்கிறது,மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி இருக்கிறீர்கள் ,உங்களின் எழுதுப்பணி தொடரவேண்டும் ,கலககாரருக்கு ஏன் வாழ்த்துக்கள்...

     
  4. வீரத் தியாகிகளின் வரலாற்றை அறிந்து உள்வாங்கி படிப் பினைகளைக் கற்று முன்னேற இந்தப் புத்தகம் கை வாளாகத் திகழும் என்பதில் ஐயமேதுமில்லை. ஒவ்வொரு இளைஞ னும் சமூகப் போராளிகளும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது

    வாழ்த்துக்கள்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark