மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐஎம்) திருவாரூர் மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர்.ஜெ.நாவலன் 2011 ஜனவரி 19 புதனன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சமூக விரோத கள்ளச் சாராய வெறிக்கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 54. இந்த படுகொலைச் சம்பவத்தையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாயவரம் திருவாரூர் சாலையில் பேருந்துகள் ஓடவில்லை என செய்திகள் வரத்துவங்கியபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த கொடுர சம்பவம் எதிர்பாராமல் நடந்தது அல்ல. கொலையாளிகளால் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்ற விஷயம் தோழர்கள் தகவல் சொன்னபோதே தெரிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐஎம்) திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெ.நாவலன். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளராகவும் செந்தொண்டர் அணியின் அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். பேரளம், நன்னிலம் பகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜெகந்நாதனின் மகனான தோழர்.நாவலன், சிறுவயது முதலே செங்கொடி இயக்கத்தில் செயலாற்றி வரும் முன்னணி ஊழியர் ஆவார். திருமெச்சூர் கிராமத்தைச் சேர்ந்த நாவலன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்தவர்..
1999 ஆம் ஆண்டு நான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாவட்ட செயலாராக பொறுப்பேற்ற பின்பு பேரளத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போதுதான் தோழர் நாவலன் எனக்கு பழக்கமானார். அன்று துவங்கிய எங்கள் தோழமை அவர் கொலை செய்யப்படும்வரை தொடர்ந்தது. அவர் குறித்த பிம்பம் என்னுள் எப்போதும் உற்சாகத்தை கொடுக்கவல்லதாய் இருந்தது. பளீர் என்ற வெள்ளை உடையும், எண்ணை தடவி அழுத்தி வாரிய தலையும், மெல்லிய முறுக்கு மிசையும், குளிங்கிளாசும், என்பிள்ட் புல்லட்டில் அவர் வரும் லவாகமும் எனது நினைவு பரப்பில் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
மரணச்செய்தி கிடைத்ததும் மறுநாள் காலை மார்க்சில்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் பேரளம் சென்று அவரது உடலுக்கு வீரவணக்கம் செலுத்த சென்றேன். அவரது உடலுக்கு அருகில் அவரது இளைய மகள் செங்கொடி கதறி அழுதபடியே அமர்ந்திருந்தார். என்னை பார்த்தது அவரது அழுகை வெடித்து எழுந்தது. ""தோழர் அடுத்த மாதம் என்னோட திருமணத்திற்கு நிங்கள் வருவிர்கள் என்று அப்பா சொல்லிக்கிட்டே இருந்தார் ஆனா அவரோட சாவுக்கு வந்திருக்கிங்களே தோழர்"" என அவர் கதறியது இப்போதும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கொரடாச்சேரியில் இதேப்போல கள்ளச்சாராய ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தியாகி கண்மணியுடன் இணைந்து வாலிபர் இயக்கத்தில் தீவிரமாகபணியாற்றிய இவர், விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் இயக்கத்தில் ஏராளமான போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்
2011 ஜனவரி 19 புதன்கிழமை நாகை மாவட்டம் திருமெய்ஞானம் தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாவலன் திருமெய்ஞானத்திற்கு சென்றிருந்தார். அவருடன் பேரளம் பேரூராட்சி உறுப்பினர், வாலிபர் சங்கத்தின் தலைவர் ராஜாவும் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து இருவரும் அங்கிருந்து பேரளம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பேரளம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கொட்டூர்மாங்குடி என்ற கிராமத்திற்கு அருகில் இவர்களைப் பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இடைமறித்து அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கியது.
கொலை வெறிக் கும்பலிடமிருந்து தப்பிக்க இருவரும் வாகனத்தை போட்டுவிட்டு ஓடினர். ராஜா வெட்டுக்காயங்களுடன் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்திற்குள் ஓடினார். தோழர்.நாவலன், கொட்டூர்மாங்குடி கிராமத்திற்குள் சென்று, குடிசை வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்தார். கொலை வெறியோடு அவரைத் துரத்திய அக்கும்பல், கதவை உடைத்து, குடிசைக்குள் புகுந்து நடுக்கூடத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் சரமாரியாக அவரை வெட்டிப்படுகொலை செய்தனர். இந்தப் கொடூரப்படுகொலை நடந்த கொட்டூர்மாங்குடி கிராமம் நன்னிலம் வட்டம் பேரளத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 2வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
கொல்லப்பட்ட தோழர் நாவலனின் சொந்த ஊரான திருமெச்சூர் பகுதியில் உள்ள தண்டத்தோப்பு பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயக் கும்பலின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்தக் கும்பலின் சட்டவிரோதச் செயல்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட இவர்களுக்கு எதிரான போராட்டத்தை ஒட்டி, தோழர்.நாவலன் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு புனைந்தது. தொடர்ந்த போராட்டங்களால் அங்கு ஆதிக்கம் செலுத்த முடியாத கயவாளிகள் வன்மத்துடன் அலைந்தனர்.
இதனிடையே, தோழர் நாவலனுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்தும், அப்பகுதியில் கூலிப்படையினர் முகாமிட்டிருப்பது குறித்தும் கட்சியின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழாக காவல்துறையும், தமிசக் அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழலில் அவர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
நாவலனை படுகொலை செய்ய கூலிப்படையை ஏவிய கள்ளச்சாராய கும்பலின் தலைவன் பன்னீர் செல்வம் மீது 53 கொலை, கொள்ளை, கள்ளச்சாராய குற்ற வழக்குகள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒய்யவந்தான் கிளை முன்னணி ஊழியர் தோழர் பழனியை படுகொலை செய்த குற்றவாளி இவன் . இந்த கள்ளச்சாராய வியாபாரி பன்னீர் செல்வம் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் ஒய்யவந்தான் கிராமத்தைச் சேர்ந்தவன். இங்குள்ள உடைகுளம் ஊராட்சி மன்றத் தலைவராக 1996ல் இருந்த இவர், இப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட்டான். இந்நிலையில் ஊராட்சி நிதியை மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து அன்றைய சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், ஊராட்சிமன்ற தலைவர் பதவியிலிருந்து பன்னீர் செல்வத்தை நீக்கி உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பன்னீர் செல்வம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒய்யவந்தான் கிளையின் முன்னணி ஊழியர் தோழர் பழனியை 2000 ஜூன் 13ம் தேதி கூலிப்படை மூலம் படுகொலை செய்தார். இதை எதிர்த்து அச்சமயத்தில் மிகப்பெரும் போராட்டங்கள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடந்தன. தோழர் பழனி படுகொலைக்குப் பிறகு ஒய்யவந்தான் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பன்னீர் செல்வம் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே தண்டந்தோப்பு பகுதிக்கு சென்று நிரந்தரமாக குடியேறினான் . இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கொலை,கொள்ளைகள், கட்டப்பஞ்சாயத்து என அனைத்து விதமான சமூக விரோதச்செயல்களையும் செய்து திமுகவின் பேரளம் நகரச் செயலாளராகவும் முன்னேறினான்.
தோழர் பழனிபடுகொலை உட் பட பன்னீர் செல்வம் மீது 53 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. போலீஸ் அதிகாரிகளை தாக்கி கொலைசெய்ய முயற்சித்த வழக்குகள், வழிப்பறி கொள்ளை வழக்குகள், 25 கள்ளச் சாராய வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு, கரூர் தனியார் பால்பண்ணை ஒன்றின் மேலாளரிடம் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகே வழிப்பறி கொள்ளை நடத்திய வழக்கு என மொத்தம் 53 குற்ற வழக்குகள் இவன் மீது உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
திமுகவின் நகர செயலாளர் ஒரு கொலைகாரன், கட்டப்பஞ்சாயத்து நடத்துபவன், பணத்திற்காக எதையும் செய்பவன் என தெரிந்தே பதவி பெற முடிந்திருக்கிறது. அவனை வளர்த்ததில் ஆளும் கட்சியின் பதவியும், காவல்துறையின் ஆதரவும் இருந்துள்ளது. சமிபத்தில்தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் கந்துவட்டி கும்பலை எதிர்த்த காரணத்தால் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் தோழர் வேலுசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதிலும் காவல்துறையின் அலட்சியம்தான் காரணமாய் அமைந்தது. இதோ தோழர் நாவலன் படுகொலையிலும் அதுவே நடந்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியில் கையில்தான் காவல்துறை இருக்கிறது. அவரும் இவைகளை அனுமதித்துக்கொண்டே இருக்கிறார். அவர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள மறுக்கிறார். அது ஆட்சி எப்போதும் நிரந்தரமல்ல என்பதுதான் அது.
மாலை இறுதி நிகழ்சியை முடித்துவிட்டு தோழர் நாவலன் விட்டிற்கு சென்று அவரது குடும்பத்தில் உள்ளவர்களை சந்தித்துவிட்டு புறப்பட சென்றோம். விட்டில் அனைவரும் அழுது கசங்கிக்கிடந்தனர். கண்ணீரோடு இருந்த நாவலனின் தந்தையிடம் தோழர் ஜி.ஆர் மெல்ல பேசத்துவங்கினர். அதற்கு நாவலன் என்ற மகத்தான வீரனின் தந்தை ஜெகநாதன் சொன்னார் "தோழர் பிறக்கும் போது மரணம் எல்லாருக்கும் வரும்,,, ஆனா எம்மகனை கோழை போல மறைந்து வெட்டியதைதான் என்னால ஜீரணிக்க முடியல. அடுத்து ஆகவேண்டியது பாருங்க தோழர் ... இனியும் இப்படி நடக்காம இருக்கனும்"
யாருக்கு யார் ஆறுதல் சொல்கிறார்கள் என்று சுற்றி இருந்த எங்களுக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. தோழர் நாவலனின் வீரத்தின் அடிப்படை எதுவென்று. வீரவணக்கம் தோழர் நாவலன்!
அகில இந்திய அரசியல் கட்சியின் பதவியிலுள்ளவர்களையே (செயற் குழு உறுப்பினர்/கிளைச் செயலாளர்)ஆளும் மாநிலக் கட்சியின் பதவிகளில் இருப்பவர்களின் அராஜகங்களைச் சுட்டிக் காட்டவோ, தட்டிக் கேட்கவோ முயன்றால், திட்டமிட்டு கொலை செய்கிறார்கள் எனில், நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது? இதற்கு பொறுப்பான முதல்வர் என்ன சொல்கிறார்? காவல்துறை தமிழத்தில் இயங்குகிறதா? கள்ளச்சாரயம் காய்ச்சுபவனும், கந்துவட்டிக்கு பெண்களை கேட்கிற கேடிகளும், நில புரோக்கர்களும் ஆளும் கட்சியின் அதிகார பீடத்தில்!
பதிலளிநீக்குவரும் தேர்தலின் முடிவு தீர்மானிக்குமா, ஆட்சிக்கு வருவது ஜனநாயகமா,மன்னராட்ச்சியா, சர்வாதிகாராமா அல்லது புரட்சியா என்பதை? நாமோ..வாக்குச்சீட்டின் மகத்துவம் அறிய முட்டாள்களாய்...ச்சீ..வெட்கம்.
திமுகவில் கொலை நடப்பது ஒன்றும் புதிதல்ல என முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை நடைபெற்ற போது முதல்வர் கருணாநிதி உரைத்த சொற்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. திமுகவில் கொலை செய்பவர்கள் பலர் உள்ளனர் என்பதை தான் சொன்னால் சொன்னார் கலைஞர் என்பதை தோழர் நாவலன் படுகொலையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குவீதியெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து பணம் பார்க்கும் தமிழக அரசு, மறுபுறம் கள்ளச்சாராயம் மூலம் ஆளுங்கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்கும், கொலை செய்தால் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கவும் உறுதுணையாக இருக்கிறது என்பது மிகையல்ல என்பதை தோழர் நாவலன் அவர்களைப் படுகொலை செய்ததன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.