வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கல் சிறப்பு கொள்ளை


பொங்கல் பண்டிகையை ஒட்டி, பஸ், ரயில், விமான கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளதால், சொந்த ஊருக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வு அரசு அறிவித்தோ அல்லது பெட்ரோல் விலை உயர்வால் ஏற்பட்டதோ அல்ல, பண்டிகையை பயன் படுத்தி கொள்ளையடிக்கும் கும்பலால்  உருவாக்கப்பட்டது. இது குறித்து தினமலர் செய்தி கிழ்கண்டவாறு எழுதியுள்ளது. 

/////////"பொங்கல் பண்டிகையையொட்டி, 15, 16, 17ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பஸ் ஆப்பரேட்டர்கள், ஏஜன்டுகள், இடைத்தரகர்கள், டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கின்றனர். பஸ் ஆப்பரேட்டர்களே தங்கள் கட்டணத்தை கூடுதல் விலை வைத்து ஏஜன்டுகளிடம் ஒப்படைக்கின்றனர். இதில், ஏஜன்டு தங்கள் கமிஷனையும் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதவிர, சில இணையதளம், பஸ் ஆப்பரேட்டர்களிடம் நேரடியாகவும், ஏஜன்டுகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை புக்கிங் செய்கின்றனர். அவர்கள், 10 சதவீதம் கமிஷன் எடுக்கின்றனர். இதனால், கடைசியில், பயணிகள் தலையில் பெரும் தொகையாக விழுகிறது. ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், 100 முதல் 400 ரூபாய், இடைத்தரகர்களுக்கும், பஸ் ஆப்பரேட்டர்கள் கூடுதலாகவும் விற்பதால், பயணிகள் திகைக்கின்றனர். 

இதுபோன்று, விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதை தடுக்க, போக்குவரத்துத் துறை சார்பில், குழு அமைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இது வெறும் கண்துடைப்பாகவே அமைந்தது. டிராவல் ஏஜன்டுகள், ஆர்.டி.ஓ.,க்களுக்கு தலா 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மாமூல் செலுத்தி விடுவதால், அவர்கள் இந்த கட்டணக் கொள்ளையை கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது ரயில் டிக்கெட் கொடுமை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளுக்கு டிக்கெட் வழங்க, ரயில் நிலையங்களில் தனி கவுன்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள், பொதுமக்கள் வரிசையில் நின்று, மொத்தமாக டிக்கெட் எடுப்பதாக புகார் கூறப்படுகிறது. டிக்கெட் கவுன்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்கள் பலர், டிராவல் ஏஜன்டு நிறுவனங்களை நடத்தி கொண்டு, அவர்களே, "தத்கல்' உள்ளிட்ட டிக்கெட்டுகளை, "புக்கிங்' செய்வதாக கூறப்படுகிறது. டிக்கெட் புக்கிங் கவுன்டர்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்றினால் மட்டுமே, இப்பிரச்னை தீரும் என்கின்றனர்.
"புக்கிங்' குறைவாக உள்ள மையங்களில், இந்த அதிகார பூர்வமற்ற ஏஜன்டுகள், ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்புடன் டிக்கெட்டுகளை போலி பெயர்களில் பதிவு செய்கின்றனர். இதில், அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளே ஓரங்கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆர்.பி.எப்., போலீசார் தங்கள் பங்கிற்கு, "தத்கல்' டிக்கெட்டுகளை பதிவு செய்கின்றனர். ஏஜன்டுகளிடம் ஆர்.பி.எப்., போலீசார் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், மக்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.விமான கட்டணம் விடுமுறை காலங்களில் விமானக் கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தி விற்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, மும்பை, டில்லி ஆகிய ஊர்களுக்கு, 5,000 முதல் 7,000 ரூபாய் வரை இருந்த விமான டிக்கெட், தற்போது, 30 சதவீதம் கூடுதலாக விற்கப்படுகிறது."//////////

இது தடுக்கப்பட முடியாததோ அல்லது தவிர்க்கப்பட முடியாதோ அல்ல. அரசு மனது வைத்தால் இதை ஒரே நாளில் தடுத்திட முடியும். ஆனால் அரசு செய்ய தயாரில்லை. காரணம் தனியார் பேருந்து முதலாளிகளின் அன்பான கவனிப்புதான். ஆனால் ஊடகங்களில் "சும்மா" அறிக்கைவிடுவதும், மிரட்டுவதும் எந்த பலனையும் கொடுக்காது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் தமிழக அரசு சிரிப்பு போலிஸ் போல " அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவிப்பு செய்யும்.  ஆனால் இந்த பேருந்து கம்பெனிகள் இதை கண்டுக்கொள்வது இல்லை. 

இதுவரை எந்த கம்பெனிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக தகவல் இல்லை. ஆனால் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பலகோடி ரூபாய் தமிழக மக்களில் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இளைஞனுக்கு வசனம் எழுதும் பணியும், வைரமுத்து 1000  பாடல்கள் புத்தகத்தை வெளியிடும் பணியும் தமிழக முதல்வருக்கு இருப்பதால் இதுவெல்லாம் பெரிய பிரச்சனையாக அவருக்கு தெரிய வாய்ப்பில்லைதான். இருப்பினும் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தினால் கவனிப்பாரா? "தனியார் முதலாளிகளின் தயாபரன்" என்ற பட்டம் கொடுக்கலாமா? அதுசரி இந்த மீசை அண்ணாச்சி நேருதான போக்குவரத்து மந்திரி??? '
ச்சும்மா யோசிங்க பாஸ்   

4 கருத்துகள்:

  1. இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இந்த பெரிய கொள்ளையை சிறிய ஏஜண்டுகளும் செய்ய ஆரம்பித்து விட்டனர்

    பதிலளிநீக்கு
  3. பாராட்டு விழா நல்ல ஐடியா.. ஆனால், தயாபரன் சம்ஸ்க்ருத வார்த்தை இல்லையா? ஏதேனும் தூய தமிழில்.....அல்லது பாராட்டு விழாவிற்கு வரிவிலக்கு/வரியே கிடையாது என்பதால், சம்ஸ்க்ருத வார்த்தையும் ஓகே ஆகி விடுமோ??!!!!!

    பதிலளிநீக்கு
  4. கூட்டுக் களவாணிகளைப் பிடிக்கவேண்டியதே பெரிய களவாணிதானே

    பதிலளிநீக்கு