ஞாயிறு, 13 ஜூன், 2010

நன்கொடை கொள்ளை தடுப்பு - ஒரு ஆலோசனை




தமிழகத்தில் சமச்சீர்கல்வி கேட்டு போராட்டங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசு வழக்கம் போல நாங்கள் அதைச்செய்வோம் என்று அறிவித்தது. சமச்சீர்கல்வி கேட்ட இடத்தில் பாடதிட்டங்களை சில வகுப்புகளுக்கு ஒரே மாதரி மாற்றி அமைத்துவிட்டு சமச்சீர் கல்வி கொடுத்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டிருக்கிறது. "சமச்சீர்கல்வி கொடுத்த சரித்திர நாயகனே" என்று போஸ்டர் வேறு. அதுசரி இலங்கைக்கு தனது பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவிட்டு "இலங்கை பிரச்சனையை தீர்த்த இந்திய  தலைவா" என்று போஸ்டர் ஒட்டியவர்கள்தானே!

ஜூன் மாதம் பெற்றோர்களுக்கு கடுமையான சோதனை மிக்க மாதம். நன்கொடை என்ற பெயரில் தநியார் கல்வி "கடைகள்" அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இக்கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை முறைபடுத்த அமைக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு மூவாயிரம் முதல் பதினோராயிரம் வரை கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அவ்வுளவுதான் கொதித்தெழுந்துவிட்டார்கள் நம்முடைய கல்வி வள்ளள்கள். அது எப்படி தனியார் பள்ளிகளின் உரிமையில் அரசு தலையிடலாம் என போராட துவங்கிவிட்டனர். ஊடகங்கள் வாயிலாக பள்ளிகளை திறக்க மாட்டோம், கட்டணத்துக்கு ஏற்ப தரமற்ற கல்விதான் கொடுப்போம் என அரசுக்கு சவால் விடுக்கின்றனர். மற்றொருபுறம் அவர்கள் கட்டணத்தை கொஞ்சமும் குறைக்காமல் "துண்டு சீட்டு பில்" போடுகின்றனர். வாங்கிய தொகைக்கு ரசீது கேட்டால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டல் வேறு. அரசாங்கம் சட்டம் எல்லாம் இவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. தினமும் செய்தி தாள்களில் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை என்று செய்தி வந்துக்கொண்டே இருக்கிறது. எனினும் தனியார் பள்ளிகளில் கொள்ளை தொடர்கிறது.

பெரம்பலூரில் உள்ள கோல்டன் கேட்வே ("தங்க வாயில்" யாருக்கு என்று அவர்கள் வாங்கும் கட்டணத்தை பார்த்தால் தெரியும்) என்ற பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்க கட்டணம் 16 ஆயிரம். கடந்த 05.06.10 அன்று இந்திய மாணவர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பெற்றோர்களுடன் இனைத்து நடத்திய போராட்டத்திற்கு பிறகு 6 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் உள்ளிட்ட பலஇடங்களில் போராட்டம் நடந்தால் அங்குள்ள பள்ளிகள் கட்டணத்தை குறைத்துள்ளன. சட்டம் போட்டு தடுக்கமுடியாததை மக்கள் போராட்டம் தடுக்கும் அனுபவம் மிகவும் முக்கியமானது.

1990 களில் நான் இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது சிதம்பரம் நகரில் (Anti Donation Action Committee - ADAC) அடாக்  என்ற அமைப்பை மாணவர்கள், பொற்றோர்கள், சமூக அமைப்புகளை ஒன்றினைத்து உருவாகினோம். ஜூன் மாதத்தில் அந்த நகரில் நன்கொடை வாங்கும் பள்ளிகளுக்கு எதிராக வலுவான போராட்டங்களை செய்தோம். அது பெருபாலும் தகராறில்தான் முடியும். பிறகு காவல்துறை அரசு அதிகாரிகள் தலையிடுவார்கள். அந்த நகரில் எந்த பள்ளிகளாலும் நன்கொடை கொள்ளையை தொடர முடியவில்லை. பல பெற்றோர்கள் எங்களது எஸ்.எப்.ஐ அலுவலகத்திற்கு வந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வர்.

 இது ஒரு சிறிய அனுபவம்தான் எனினும் இதை நாம் தமிழகம் முழுவதும் ஏன் பயன்படுத்த கூடாது? அரசு அனைத்து வட்டங்களிலும் இப்படிபட்ட நன்கொடை கண்காணிப்பு குழுக்களை ஏன் ஏற்படுத்தக்கூடாது. பெற்றோர்கள், மாணவர்கள், அணைத்து அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், சமூக ஆர்வளர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவாய் அது இருக்கும் போது அதிகாரிகளின் தவறும் தடுக்கப்படும். முனைப்பான மக்கள் பங்கேற்பும் கிடைக்கும். 
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது, கல்வி திருடர்கள் தானாய் திருந்தமாட்டார்கள். திருடும் கூட்டத்தை மக்கள் ஒன்றினையாமல் தடுக்க முடியாது. அரசு மக்களை பயன்படுத்துமா?  மக்களை பார்வையாளர்களாக வைத்தே ஆட்சியை தக்கவைப்பவர்களா இதை செய்வார்கள் ?
                                           18.06.2010 அவள் விகடன் இதழில் வந்த பேட்டி

2 கருத்துகள்: