சனி, 22 நவம்பர், 2008

உரிமை முழக்கம் - உத்புரத்தில் ஒரு ஆய்வு

தமிழகம் மட்டுமல்ல இந்த நாடு முழுவதும் உத்தபுரம் என்ற கிராமத்தின் பெயர் பரபரப்பாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. தேசங்களை பிரிக்கும் சுவர்கள் உடைபடும் இந்த காலத்தில் ஒரு ஊருக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கும் சுவரால் நாடு தழுவிய பரபரப்பு. தலித்துகளை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த தகவல்களை கேட்டு பழகிய பொதுசமூகத்திற்கு ஒரு ஊரையே சுவர் கட்டி தடுத்தது கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். தலித்மக்களுக்காக எங்கள் உடல், உயிர், எலும்பு, ஆவி, சாம்பல் அனைத்தும் கொடுப்பதாக அறிவித்தவர்களும், தலித்துகளின் சம்பந்தி என வித்தாரம் பேசியவர்களும், 2011 கனவில் சுற்றித் திரிபவர்களும், மனதில் உள்ள சுவர்தான் முதலில் உடைக்கப்பட வேண்டியது என அறிக்கை விட்டவர்களும் அந்த சுவற்றின் பக்கம் தலைவைத்து படுக்காதது ஏதோ தற்செயலான நிகழ்வல்ல.
வாக்குகளின் மறு உருவாய் மக்களை பார்ப்பவர்களுக்கு கண்ணில் சாதி புறை நோய்வந்து சிலப்பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியாமல் போவது ஆச்சரியமல்ல. உத்தபுரத்தின் உரிமை முழக்கம் ஆளும் வர்க்கத்திற்கும், ஆதிக்க சாதியினருக்கும், தலித் தலைவர்களுக்கும் கலகக் குரலாய் கேட்பது அதிசயமல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாய் சாதி புரையோடிய சமூகத்தின் யதார்த்தம் இது.
இந்த யதார்த்தத்தை உடைக்க போராடும் மார்க்சிஸ்ட் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் உத்தபுரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு சம்பவத்தில் ஆதிக்க சாதி அரசியலுக்கு அஞ்சி நடுங்கி, கண்களை பொத்திக் கொண்டு அம்மணமாய் நின்றதை தேசம் கவனித்துக் கொண்டுதான் இருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அங்கம் வகிக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 19 ஆண்டுகளாய் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு சவால் விடுத்த, அரசியல் சட்டத்தின் மீது காறி உமிழ்ந்த தீண்டாமை சுவற்றை இடி? அல்லது இடிப்போம்! என்று முழக்கமிட்டு இடிக்கவைத்தது நடந்த வரலாறு.
பார்ப்பனியத்தின் குணத்தை அப்படியே தங்கள் பொது புத்தியில் சுமந்து திரியும் ஆதிக்க சாதியினர் சுவர் இடிப்புக்கு பின்னர் அந்த கிராமத்தில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பழிவாங்க நினைப்பது இயல்பான ஒன்றாய் மாறி உள்ளது. சுவர் இடிக்கப்பட்டதால் கோபம் தலைக்கேறி குடும்ப அட்டைகளை தூக்கி எறிந்து விட்டு கானகத்திற்கு தவம் இருக்கப் போனவர்களை சாந்தப்படுத்தி அனைத்து தரப்பையும் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது அரசு. பல ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் முழுவிபரங்களும் இருக்கட்டும், சாக்கடையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஊரின் மொத்த சாக்கடையும் முத்தாளம்மன் கோயில் பக்கம் அதாவது காலனிக்கு செல்லும் மத்திய பாதையின் ஓரமாக வந்து நிரம்புகிறது. (அங்கு நின்றால் தான் அந்த நாற்றத்தின் மகாத்மியம் புரியும்) இந்த சாக்கடையின் பாதையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சொன்னதை செய்வோம் என்று அரசு பேசுவதெல்லாம் இங்கு ஒத்துவராது. எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கடந்த செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த தினத்தில் இந்த சாக்கடைக்கு மூடிபோடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அந்த சாக்கடையின் மீது சிமெண்ட் கட்டை கட்டினால் அங்கு பேருந்துக்காக வரும் தலித்மக்கள் அமர்ந்து விடுவார்கள். அது தங்கள் கவுரவத்தை பாதிக்கும் என்று ஆதிக்க சாதியினர் உயர்ந்த எண்ணத்தால் தான் இன்று வரை அங்கு மறைப்பு கட்டை கட்டப்படவில்லை என்பதன் பின்னணியில் அரசின் இந்த அலட்சியப் போக்கை எதிர்த்த இந்த போராட்டத்தை பார்க்க வேண்டியுள்ளது.
இந்த சூழலில்தான் செப் 15ஆம் தேதி வைரன் என்பவர் காலனியில் தான் கட்டிய வீட்டின் திறப்பு விழாவும், காதணி விழாவும் வைத்துள்ளார். இடிக்கப்பட்ட சுவரின் பக்கம் போடப்பட்டுள்ள பொதுப்பாதையின் வழியே தலித் மக்கள் ஊர்வலம் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.ஆனால் தமிழக அரசு தலையிட்டு உருவாக்கிக் கொடுத்த பொதுப் பாதையை தலித் மக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு ஆதிக்க சக்திகள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்து தடைகளையும் வன்முறைகளையும் ஏவி விட்டுள்ளனர்.
இது குறித்து நான்கு முறை பாதிக்கப்பட்ட தலித் மக்களால் புகார் செய்யப்பட்டு 2 புகார்கள் மீது பி.சி.ஆர். பிரிவு உட்பட வழக்கு பதிவு செய்தும், 2 புகார்களின் மீது எவ்வித நடவடிக்கையும் காவல் துறையால் எடுக்கவில்லை. வழக்குப் பதிவான பிரச்சனையில் கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யவில்லை. காவல்துறையின் இத்தகைய செயல்பாடு ஆதிக்க சக்திகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைமார்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் உத்தபுரத்து காவல்நிலையம் செயல்படுவதிலிருந்தே இவர்கள் லட்சணம் தெரியும்.
இப்பின்னணியில் 2008 அக்டோபர் முதல் நாள் உத்தப்புரத்தில் விரும்பத் தகாத சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதையட்டி காவல்துறை, அப்பாவி மக்கள் 540 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் இக்கிராமத்தில் உள்ள மிகக் கணிசமான ஆண்கள் ஊரைக்காலி செய்து விட்டு வெளியே சென்றனர். காவல்துறையினர் கைக்குழந்தைகள் உள்பட 80 பெண்களையும், ஊரில் இருந்த சில ஆண்களையும் கைது செய்தனர். மாவட்ட காவல்துறை நிர்வாகத்திடம் பேசிய பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் மறுநாள் விடுவிக்கப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது தலித் பெண்களிடம் தனது வீரத்தை காட்டிய நமது காவல்துறை கடுமையாக அடித்து உதைத்து போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர். குழந்தைகளும் தாக்கப்பட்டனர். பெண்கள் கைது செய்யப்பட்ட பிறகு தலித் குடியிருப்புகளில் யாருமே இல்லாத சூழ்நிலையில் காவல்துறையினர் சென்று ஏராளமான வீடுகளைத் தாக்கி, பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். வீடுகளின் கதவுகள், சன்னல்கள், கண்ணாடிகள், மின் விசிறிகள், டி.வி.க்கள், கட்டில்-கள், சைக்கிள்கள், பண்ட பாத்திரங்கள், விவசாய பம்ப் செட்டுகள் மற்றும் பல பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். விலை உயர்ந்த சில பொருட்களும், சில வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பணமும் மாயமானது.
தலித் மக்களுக்கு கடுமையான தாக்குதல் மட்டு மல்ல பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல் துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்களுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் செய்யப்படவில்லை. ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பு தாக்கப்பட்டு அப்பெண் தனிப்பட்ட முறையில் சிகிச்சைப் பெற்றதும், பாதிக்கப்பட்ட இதர பெண்கள் சில நாட்கள் எவ்வித சிகிச்சையும் இல்லாமல் ஆண்களும் இல்லாத சூழலில் பரிதவித்து நின்றதும் அவர்களின் வாழ்க்கையில் அதுவரை சந்திக்காத கொடூரம்.
அக்டோபர் 18ஆம் தேதியன்று உத்தபுரத்திற்கு வாலிபர் சங்க மாநிலக் குழு சார்பாக மக்களை சந்திக்கச் சென்றோம். அன்று காலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற காவல்துறை தாக்குதலை கண்டித்த ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு அப்போதுதான் திரும்பிக் கொண்டிருந்தனர். எங்களை அங்கிருந்த இளைஞர் கூட்டம் எதிர்கொண்டழைத்தது. அந்த கூட்டத்தின் மையத்தில் இருந்த இளைஞனின் பனியனில் கலைஞரும் ஸ்டாலினும் சிரித்தபடி காட்சியளித்-தனர். நாம் அந்த இளைஞனிடம் “என்னங்க உங்க கட்சிகாரங்க காலனிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்த்தார்களா என்றோம்.” அதற்கு அவர் “அவங்க வந்து பார்க்குறது இருக்கட்டும் நாங்க போனாலே உதைப்பாங்க என்றார்’’.
உண்மையும் அதுதான் உத்தபுரத்தில் இத்துனை பிரச்சனை நடந்தும், மார்க்சிஸ்ட் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் அந்த உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக களமிறங்கவில்லை. ஆனால் காலனிக்குள் கருப்பு எம்.ஜி.ஆர், சிகப்பு எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அனைத்து கட்சி விளம்பரங்களும் சுவற்றில் பளிச்சிடுகின்றன. காலனி நுழைவாயிலில் இருந்த சிறியப் பெட்டிக்கடையும், தேனீர்கடையும் சுத்தமாக அடித்து நொறுக்கப்பட்டு கிடந்தது. காதணி மற்றும் புதுமனை புகுவிழா நடந்திருக்க வேண்டிய வீட்டினுல் அடித்து நொறுக்கப்பட்ட கண்ணாடி சில்லுகள் தரை முழுவதும் இறைந்து கிடந்தது.
காவல்துறையின் கோபம் கதவு, ஜன்னல் என அனைத்திலும் பதித்து கிடந்தது. அந்த வீடு மட்டுமல்ல அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளும் அப்படிதான் பாதிக்கப்பட்டு இருந்தது. வாலிபர் சங்க கிளை செயலர் முருகன் வீட்டில் அவர் மைக்செட் வாடகைக்கு விடும் பொருட்கள் நொறுங்கிக் கிடந்தது. மூன்று அடி உயரம் உள்ள அம்பேத்கர் படத்தின் கண்ணாடி நொறுக்கப்பட்டிருந்தது. அப்பகுதி மக்களின் வாழ்க்கையைப்போல.
காவல்துறையின் கடுமையான அடக்குமுறை, மிரட்டல் மற்றும் தாக்குதல் காரணமாக ஊருக்குள் எந்த ஆண்களும் இல்லாத சூழலில் சித்ரா என்ற பெண் மரணமடைகிறார். அவர் மரணத்தின் இறுதி சடங்குகளுக்கு கூட அவளது வயதான தந்தையும் உடன் பிறந்தவர்களும் வர இயலவில்லை. அங்கிருந்த பெண்களே இறுதி சடங்குகளை செய்து பிணத்தை புதைத்துள்ளனர். நாங்கள் சித்ராவின் வீட்டிற்கு சென்றபோது அவரது பெற்றோர்கள் எங்களைப் பார்த்து கண்ணீர் சிந்தினர். அவரது தந்தையின் கண்களில் தனது அன்பு மகளின் இறுதி சடங்கில் பங்கேற்காமல், அவளது முகத்தை இறுதியாய் பார்க்கமுடியாத இயலாமை தெரிந்தது.
அப்போது அங்கு நின்ற ஒரு பெண் சொன்னார் “நாங்க குழிபறிச்சி பாப்பாவ உள்ள இறக்கும் போதுதான் தெரிந்தது குழியோட நீட்டு பத்தலன்னு, பாப்பாத் திருப்பி மேல தூக்கி வச்சிட்டு மீண்டும் குழிநோண்டி அப்புறமா பொதச்சோம்’’ என்றார். பொதுப்பாதையில் நடக்க வேண்டும் என்ற சாதாரண கோரிக்கைக்காக அம்மக்கள் அனுபவிக்கும் கொடூரத்தின் உச்சம் இது. ஊரை இரண்டாகப் பிரிக்கும் ஒரு சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றியடைந்த காரணத்தால் ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், காவல்துறையும் இப்படி அம்மக்களை விரட்டி விரட்டி அடிப்பது நியாயமானதா? அதுவும் நமது தமிழக காவல்துறை ஒடுக்கப்பட்ட மற்றும் உழைப்பாளி மக்களை தாக்குவது எனில் உற்சாகம் கறைபுரண்டோட அப்பணியில் ஈடுபடுவார்கள்.
கடந்த சில மாதங்களில் மட்டும் ரெட்டணை, கடலூர் சிப்காட், சென்னை திருப்போரூர் என தடியடி நடத்திய இடங்களின் பட்டியல் நீளும். நெல்லையில் அந்தோணிராஜ் என்ற உடல் ஊனமுற்ற பிச்சைகாரரிடம் லஞ்சம் வாங்கிய இரண்டு காவல்துறை கடமை வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது (24.10.08 தினகரன்) இந்த கணக்கில் வராது.
நாங்கள் உத்தபுரத்திலிருந்த மக்களிடம் விடைப்பெற்று இருள் சூழ்ந்த நேரத்தில் புறப்பட்டோம். அந்த நேரம் ஒரு வயதான மூதாட்டி எங்களை வழிமறித்தார். எங்கள் கைகளை பற்றிக்கொண்டு சொன்னார் “தம்பி அந்த படுபாவிங்க என்ன வூட்டுலேந்து தூக்கி வெளியில போட்டுவிட்டு வீட்ட அடிச்சி நொறுக்குனாங்கப்பா, நான் எவ்வுளோ கெஞ்சியும் விடலப்பா’’ ஆற்றாமையுடன் சொன்ன அவர் கண்களிலிருந்து கண்ணீர் எங்கள் கைகளில் சொட்டிய நேரம் மெல்ல மெல்ல தூரல் துவங்கி பெருமழையாய் உரு கொண்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக