செவ்வாய், 7 அக்டோபர், 2008

கடமை, கண்ணியம், காட்டுமிராண்டித்தனம்

“பொதுவாகவே, சட்டம் யாவற்றுக்கும் முன்பாகத் தோன்றி இன்னின்னது இப்படியிப்படி இருக்குமாறு உத்தரவிட்டதன் பேரிலேயே சமூகத்தில் சகலமும்உருவானதான புனிதத்தோற்றம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அனாதிக்காலந்தொட்டு சட்டப்படியே சமூகம் இயங்குவதாயும் அதன்முன்னே அனைவரும் சமம் என்றும் நம்புகிற மூடப்பழக்கம் நீடிக்கிறது நெடுங்காலமாய்.”- ஆதவன் தீட்சண்யா
மக்களின் பிரச்சனைகளை ஆளுபவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லத்தான் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சம்பந்தபட்ட கோரிக்கையை மக்களிடம் கொண்டுச் சென்றால் ஆட்சியாளர்களுக்கு கோபம் வருகிறது. தன் கையில் உள்ள காவல் துறையை ஏவிவிட்டு காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் தொடுக்கின்றனர். தமிழக காவல்துறைக்கும் மாதம் ஒருமுறையாவது மக்கள் மண்டையை உடைக்கவில்லை என்றால் தனது புகழை நிலைநாட்ட முடியாது என்று ஒரு குரூர மனப்பான்மை வளர்ந்துள்ளது.
சமீபத்தில் காவல் துறையின் சாதனை ரெட்டணையும், கடலூரும்.ஆகஸ்ட் 16ம் தேதி ரெட்டணை கிராம மக்கள், செய்த வேலைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை கொடுங்கள் என்று கேட்டதற்காக காவல் துறை கண்மூடித்தனமாகத் தாக்கி துப்பாக்கிச்சூட்டை நடத்திய பஞ்சாயத்து தலைவரும் வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவருமான கலைச்செல்வனையும் மற்றும் இரண்டு பேரையும் மண்டையை உடைத்தது.

இத்தனைக்கும் அப்பிரச்சினையில் காவல்துறை தலையிட வேண்டிய அவசியமே இல்லை. பேருந்து எப்போதாவது வரும் சாலையில் மறியல் செய்ததற்காக விழுப்புரம் காவல்துறை “சட்டம் ஒழுங்கை பாதுகாக்க’’ கடுமையாகத்தாக்கி உள்ளது. ரெட்டணை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட அரசு நிர்ணயித்த அளவிற்கு வேலை செய்யவில்லை என்று காரணம் கூறி 40 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர். 500பேருக்கும் ரூ.80 சம்பளம் கிடையாது; ரூ.40தான் சம்பளம் என்று அதிகாரிகள் நிர்ணயித்தார்கள். நிர்ணயித்த அளவில் 500 பேருமே பாதி அளவுதான் வேலை செய்தார்களா? ஒருவர் கூட முழுமையாக வேலை செய்யவில்லையா?ஒரு நபருக்கு சட்டக்கூலி 80 ரூபாய் என்றால் அதில் 40 ரூபாய் கொடுக்கவில்லை எனில் மீதம் 40 ரூபாய். அதாவது 500 பேருக்கு 40 என்று கணக்கிட் டால் 20 ஆயிரம் ரூபாய். ஒருநாளைக்கு 20 ஆயிரம் என்றால் 100 நாளைக்கு 20 லட்சம். உழைப்பாளி மக்கள் பணம் எங்கு சென்றது, அரசு மீதம் பிடிக்கச் சொன்னதா? அப்படி எனில் இது குற்றம் இல்லையா? மக்களை ஏமாற்றும் வேலைதானே! அரசு யோக்கியமானதுதான் அதிகாரிகள் தவறு செய்தார்கள் எனில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதா? அல்லது மீதம் பிடிக்கப்பட்டதா? அரசின் சட்டத்தை மீறும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது? சட்டப்படி அவர்கள் மீதுதானே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? காவல்துறையின் தடியும், துப்பாக்கி முனையும் அவர்களை நோக்கித்தானே திரும்பி இருக்க வேண்டும்!
அதிகாரம் இருக்கும் பக்கம் இவைகளுக்கு திரும்பும் சக்திகிடையாது, வளைந்து நெளிந்து வணக்கம் போடத்தான் தெரியும்.. உதாரணம் வேண்டுமா?அடுத்த ஆறு நாட்களில், ஆகஸ்ட் 22ம் தேதியன்று தமிழக அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்கும், சுயஉதவி குழுக்களுக்கான விழாவிற்கும் அமைச்சர் ஸ்டாலின் விழுப்புரத்தில் எழுந்தருளினார். அன்று திமுக இளைஞர்அணி அணிவகுப்பு சென்னை திருச்சி சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்து, பொதுமக்களை பாடாய் படுத்தியது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விழுப்புரம் காவல்துறைக்கு கொஞ்சம் கூட கோபமோ, ரோஷமோ வரவில்லை என்பது ஆச்சரியமானது அல்ல, ஏனெனில் அவர்களது தடியும், துப்பாக்கியும் இல்லாத மக்களிடம்தான் தனது கோபத்தைக் காட்டும். அதிகாரம் உள்ளவர்களிடம் அவர்கள் பயிற்சியளிக்கும் நாயைப்போல வாலை ஆட்டும். ஆனாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டம் தன் கடமையை செய்யும் என்பது போன்ற வசனங்களை நீங்கள் நம்ப வேண்டும்.ரெட்டணை சம்பவத்திற்கு முன் ஆகஸ்ட் 11ம் தேதி கடலூர் சிப்காட்டில் பயோனியர் கம்பெனி யில் நடந்த தடியடி.
அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் கிராமப்புற ஏழைப்பெண் தொழிலாளர்களுக்கு வெறும் 45 ரூபாய் கூலி கொடுத்து உழைப்பு சுரண்டப்படுகிறது. சுகாதாரமோ, பாதுகாப்போ, சட்டப்படியான உரிமைகளோ எதையும் கொடுக்காமல் சட்டத்தை மிதிக்கும் நிர்வாகம் தொழிற்சங்கத்தை அழைத்து பேசக்கூட தயாரில்லாமல், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல நாட்களாக அடாவடி செய்கிறது. இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து போராட்டம் நடத்தினால் தடியடி, பெண்கள் என்றும் பாராமல் காவல்துறை ஓடஓட விரட்டி அடிக்கிறது இந்த தாக்குதலில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.சுகுமாறனின் வலது கண்பார்வை பறிபோகும் அளவிற்கு காவல்துறை கோரத்தாண்டவம் ஆடியது. இந்த கொடூரச்செயல் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதே கடலூரில் திமுக மகளிர் அணி மாநாட்டிற்காக இரண்டு தினங்கள் போக்குவரத்து மாற்றப்பட்டதும், தேசிய நெடுஞ்சாலைகள் பள்ளம் தோண்டப்பட்டதும், கட் அவுட்டுகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்தது குறித்து ஏதும் பேசக்கூடாது. அப்படி பேசினால் அது அரசியல் நாகரிகமாகாது.
திருப்போரூர் ஆர்க்கிட் கெமிக்கல் நிறுவன தொழிலாளர்கள் 30 பேர் மீது கிரிமினல் வழக்கு. இருங்காட்டுக்கோட்டை பெய்லி ஹைட் ரோபவர் நிறுவன தொழிலாளர்கள் 28 பேர்மீது கிரிமினல் வழக்கு, புரோடெக் சர்க்கியூட் அண்டு சிஸ்டம்ஸ் நிறுவன தொழிலாளர்கள் 3 பேர் மீது கிரிமினல் வழக்கு, ஹ¨ண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் 47 பேர் மீது கிரிமினல் வழக்கு என நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் வழக்கு என்று பட்டியலை அடுக்கிக்கொண்டே போகமுடியும். கடந்த ஆட்சியின் போது காவல்துறை இன்றைய முதல்வரை படுத்திய பாடு குறித்து அனல் கக்கும் கவிதையையும், கட்டுரைகளையும் தீட்டிய முத்தமிழ் அறிஞர் தற்போது, காவல்துறையின் தாக்குதல்களுக்கு தாளம் போடுவதும், சட்டம் தன் கடமையைத்தான் செய்கிறது என்று கதையளப்பதும் விந்தையிலும் விந்தை.
உலகமயம் நமது நாட்டை சூறையாடும் சூழலில், பன்னாட்டு கம்பெனிகள் தினம் ஒன்றாக இங்கு துவங்கப்படும் நேரத்தில் அவர்களுக்கு ஏற்ப நமது சட்டங்கள் வளைக்கப்படுகிறது.
சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையைக்கூட ஹ¨ன்டாய் கம்பெனி அனுமதிக்காததும், நமது அரசு அதை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல தொழிலாளிகளை கைது செய்து பன்னாட்டு முதலாளிகளுக்கு தனது விசுவாசத்தை பறைசாற்றிக்கொண்டதும் அதன் உதாரணம்தான்.
ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு உரிமையை கேட்க சங்கம் இல்லையெனில் அவர்கள் அத்துக்கூலிகளாக நடத்தப்படுவார்கள். எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகும், எந்தவித சமூக பாதுகாப்பும் இருக்காது. எப்போதும் ஒருவித பதட்டத்துடனே இருப்பார்கள். இந்த மனநிலைதான் உலகமயம் விரும்பும் மனநிலையாகும். அப்போதுதான் குறைந்த கூலிக்கு நிறையத் தொழிலாளர்களை அவர்களால் பயன்படுத்த முடியும்.
மற்றொரு பக்கம் தினம்தினம் முதல்வருடன் கையப்பமிட்டு லட்சக்கணக்கான இளைஞருக்கு வேலை என்று அறிவிக்கும் பன்னாட்டு கம்பெனிகள், அதன் பின் எத்துனை பேருக்கு வேலை கொடுத்தோம் என்று அறிவிப்பதில்லை, ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இல்லை. இந்த பன்னாட்டு கம்பெனிகளும், நமது உள்ளூர் முதலாளிகளும் தற்போதெல்லாம் பாதுகாப்புக்கு ஆட்களை நியமிப்பதில்லை, அந்த வேலையை இலவசமாகவே தமிழக காவல்துறை அவர்களைவிட சிறப்பாக செய்வதால் முதலாளிகளுக்கு கவலை இல்லை. (சென்னை மாநகர காவல்துறைக்கு ஃபோர்டு கார் கம்பெனி 100 கார்களை அன்பளிப்பாக கொடுத்ததை நீங்கள் இதனுடன் இணைத்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.)
தொழிலாளர் சட்டங்களை, தொழிற்சாலை சட்டங்களை அமலாக்காத, நிரந்தரத்தன்மையுள்ள வேலையில் கூட காண்ட்ராக்ட், பயிற்சியாளர், கேசுவல், தினக்கூலி, கேம்ப்கூலி போன்ற வடிவங்களில் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டும், சட்டப்படியான கூலியை மறுக்கும், வரி ஏய்ப்பு செய்யும், மின்சாரத்தை திருடும் முதலாளிகள் மீது இது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவும் இல்லை என்பதிலிருந்து இதை தெரிந்துக்கொள்ளலாம்.
நமது காவல் துறையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், சிறிய அளவில் தவறு செய்பவர்களையும், சாராயம் காய்ச்சுபவர்களையும் தங்கள் வருமானத்திற்காக வளர்த்து விடுவதும், அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி அவர்களுடன் கொஞ்சிக்குலாவுவதும் நமது காவல் துறையின் தனிச்சிறப்பாகும். அரூரில் உள்ள மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஒருவர் கிராமங்களில் புகுந்து சாதாரண ஏழை மக்களின் வீடுகளின் முகப்பில் கத்தியால் வெட்டி அடையாளப் படுத்துவார். காரணம் கேட்டால் சாராயம் விற்பவர்களின் வீடுகளை அடையாளம் காண்பதற்கு என்பாராம், ஆனால் அவர் அடையாளப் படுத்தும் எந்த வீட்டிலும் சாராயம் காய்ச்சுவதில்லை, ஏனெனில் சாராய வியாபாரிகளின் வீடுகளை உள்ளூர் காவல்துறையினர் அடையாளம் காட்டுவதில்லை. காவல் நிலையத்தில் உள்ள மாமுல் வருமானப் பட்டியலை பார்த்தால் தெரிந்துவிடும் ஒரு சாதாரண செயலுக்கு இத்தனை அலைச்சல் படும் வீரதீர பராக்கிரம அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆட்சி மாறிய உடனும் காவல் துறையின் மகாத்மியங்களை பறைசாற்ற சில ரவுடிகளை அதாவது தங்களுக்கு தொடர்ந்து மாமுல் கொடுக்கும் அந்த வளர்க்கப்பட்ட “பணம் காய்க்கும் மரங்களை” என்கவுண்டர் என்ற பெயரில் கொலைசெய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுவும் எல்லா என்கவுண்டர் கொலைகளுக்கும் ஒரே கதை வசனம்தான் எழுதுவார்கள்.”..பிடிக்கச் சென்றோம்.. எங்களை கொலை செய்ய முயற்சி செய்தார்கள், வேறு வழியில்லாமல் சுட்டுக்கொன்றோம்.’’ என்று. ஆனால் எழுதும் போது “இன்னுமா இந்த ஊர் நம்பள நம்புது’’ என்று வடிவேலு பாணியில் நினைத்துக் கொள்வார்களா எனத் தெரியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை அருப்புக்கோட்டை மாசர்பட்டில் தஞ்சநாயக்கன் பட்டி வரதராஜன், பூந்தமல்லியில் ரவியும், விக்கிரவாண்டியில் சென்னையை சார்ந்த ரங்கநாதன், கன்னியாகுமரி உருண்டைராஜன், மாதங்குளம் குப்பத்தில் வியாசர்பாடி நாகூர்மீரான், திருக்கழுகுன்றத்தில் திருவேற்காடு செந்தில்குமார், கோனேரிகுப்பத்தில் காஞ்சிபுரம் கொரகிருஷ்ணன், சென்னையில் ‘பங்க்’குமார், பனையன் குளத்தில் மதுரை டோரிமாரி, தஞ்சை கந்தர்வகோட்டை சாலையில் மணல்மேடு சங்கரும், வெள்ளைரவி, ஓசூர் அருகில் சென்னை குணா, திருச்சியில் முட்டை ரவி, தஞ்சை பைபாஸ் ரோட்டில் மிதுன்சக்ரவர்த்தி, சென்னை அயனாவரத்தில் தூத்துக்குடி ஜெயக்குமாரும், சுடலையும், கொடைக்கானலில் தருமபுரி நவீன் பிரசாத், தஞ்சையில் பாம் பாலாஜி, சென்னையில் பாபா சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னும் ‘’தொடரும்’’ என்று சேர்த்து படித்துக் கொள்ளுங்கள்.
என்கவுண்டர், தடியடி, மண்டைஉடைப்பு, கண்பறிப்பு, துப்பாக்கிச் சூடு, பொய்வழக்கு புனைதல், உரிமைகள் மறுப்பு போன்ற செயல்கள் செய்யும் போது எந்த ஆட்சியாளர்களும் அதை நியாயப்படுத்தவே செய்கிறனர், அவர்கள் ஆட்சியை இழந்த பின்புதான் அதன் விளைவை அறிகின்றனர். இந்த முறையாவது ஆட்சியில் இருக்கும் போதே இந்த அரசு விளைவு குறித்து சிந்திக்குமா?

1 கருத்து: