ஜூலை 2009ல் தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூல் ஒழுங்குபடுத்துதல்) மசோதாவை நிறைவேற்றியது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமானது. இச்சட்டத்தை செயல்படுத்த விதிகளும், சட்டத்தின்படி கட்டணம் தீர்மானிக்கும் குழுவும் அமைக்கப்பட்டது. மாநில அளவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவும், மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு இக்குழுக்களின் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்பட்டன. கட்டணம் தீர்மானிக்க காரணிகள் : - அமைவிடத்திற்கு தகுந்தாற் போல் - உள்கட்டமைப்பிற்கு தகுந்தாற்போல் - எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நிதி - குளிர் சாதன வசதி, நூறு விழுக்காடு தேர்ச்சி உட்பட பல காரணிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. சமச்சீர் கல்வி கொள்கைக்கு முரணானது மேற்சொன்ன காரணிகள் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்திருந்த "தரமான கல்வியை சமச்சீராக அனைவருக்கும் வழங்கும் சமச்சீர்க் கல்வி கொள்கைக்கு எதிரானது. அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு ஒரே சீராக இருக்காது எனச் சட்டப்படி ஒப்புக்கொள்வதாக அமைந்துள்ளது. குளிர் சாதன வசதி போன்றவை கற்றலுக்கு தொடர் பில்லாதது. பள்ளியின் அடிப்படை தேவை யாக ஏற்றுக்கொள்ள முடியாது. 100 சதவீத தேர்ச்சிக்கு பள்ளிகள் பின்பற்றும் விதிகளுக்கு முரணான நடைமுறைகள், குழந்தை உரிமை மீறல் ஆகியவை யாவரும் அறிந்ததே. 100சத வீத தேர்ச்சி என்பது கல்வியின் இலக்காக இருக்க முடியாது. 10 வருடம் பள்ளிக் கல்வியை முடித்த மாணவர் எத்திறன்களை பெற்றிருக்க வேண் டும் என அறிந்துகொள்ள, நெட்டுரச் செய்து பெறப்பட்ட 100சதவீத தேர்ச்சி பயன் படுமா? திறன்களை வளர்த்திடாமல் தேர்ச்சியை மட்டும் காட்டும் பள்ளிகள் தரமானவையா? இவ்வாறான விமர்சனங்கள் இச்சட்டத்தின் மீது வைக்கப்பட்டது. பெற்றோரை, மாணவரை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் பள்ளி நிர்வாகம் அதன் தேவை மட்டுமே கருத்தில் எடுத்து உருவாக்கப்பட்ட சட்டம் இது. கட்டணம் தீர்மானிக்கும் குழுவில் மாவட்ட அளவில் கூட பெற்றோரின்/மாண வரின் பிரதிநிதி கிடையாது. தீர்மானிக்கப்பட்ட கட்டணம் குறித்து குழுவிடம் கருத்து தெரிவிக்க மேல் முறையீடு செய்ய பெற்றோருக்கு சட்டத்தில் வாய்ப்பில்லை. ஆனால் இவ்வாய்ப்புகள் பள்ளி நிர்வாகத்திற்கு தரப்பட்டுள்ளது. சட்டமே கூடாது நிர்வாகத்திற்கு இவ்வளவு சாதகமான சட்டத்தைக் கூட எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். நாங்கள் முதலீடு செய்து பள்ளியை உருவாக்கி உள்ளோம். ஆசிரியர் சம்பளம் முதல் அனைத்தையும் நாங்களே தருகிறோம். எனவே எங்கள் கட்டணத்தை தீர்மானிக்க எங்களுக்கே உரிமையுண்டு. இதில் அரசு தலையீடு கூடாது என்பதே அவர்களின் வாதம். அவர்களின் வாதம் உயர்நீதிமன்றத் திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப் பட்டது. பிரிவு 11 தவிர சட்டம் செல்லும் எனவும் நீதியரசர் கோவிந்தராசன் தலைமையில் இயங்கும் குழு தன் பணியை தொடரலாம் என நீதிமன்றங்கள் கூறிவிட்டன. குழுவின் நடவடிக்கை நீதியரசர் கோவிந்தராசன் தலைமை யிலான குழு 22 கேள்விகளை அடங்கிய படி வத்தை தயார் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தது. விடைகளுடன் திரும்ப பெறப்பட்ட படிவங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை யிலான குழு சரிபார்த்தது. உப குழுக்கள் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை எடுத்துக்கொண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு பதிலும் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டது. அதன்பின், மேலும் சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அதுவும் பெறப்பட்டது. பள்ளிகள் தந்த தகவலின் அடிப் படையில் கட்டணம் பள்ளிக்குப் பள்ளி, வகுப் பிற்கு வகுப்பு தனித்தனியாக தீர்மானிக்கப் பட்டு பள்ளி முதல்வர்கள் கையில் நேரடியாக மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கப்பட்டது. கட்டண மர்மமும் - பெற்றோரின் தவிப்பும் ஒவ்வொரு பள்ளிக்கும் தீர்மானிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் தவிர வேறு எவருக்கும் தெரியாது. அந்தந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்க்கோ, பயிலும் மாணவர்க்கோ கூட அது தெரியாது. அவ்வளவு ரகசியமாக அரசால் தரப்பட்டு, பள்ளியால் மறைக்கப்பட வேண் டிய காரணம் என்ன? அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் செய்தால் நட வடிக்கை! அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் வந்தால் அங்கீகாரம் ரத்து! என விதவிதமான தலைப்புகளில் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வந்தன. தீர்மானித்த கட்டணம் என்ன? என்று தெரிந்தால்தானே வசூலிப்பது அதைவிட அதிகமா என அறிந்து புகார் சொல்ல! அரசு நிர்ணயித்த கட்டணம் என்ன என்று பொதுமக்களுக்கு அறிவித்தால்தானே அதைவிட அதிகம் வசூலிக்கப்படுகிறதா என்று தெரிந்து கொள்ள! வெளிப்படைத் தன்மையில்லா சூழ்நிலை யில் எந்த கட்டணம் கட்டுவது என தவித்து நிற்கின்றனர் பெற்றோர். தவிப்பு கொதிப்பாகி மறியலாகவும் முற்றுகையாகவும் மாறியது. அரசோ மவுனம் காத்தது. பள்ளி நிர்வாகமோ பெற்றோரை பந்தாடத் தொடங்கியது. பள்ளிகளின் மேல் முறையீடு தனக்கிருந்த மேல்முறையீடு செய்யும் உரிமையை பயன்படுத்தும் பொறுமை கூட இல்லாமல் கட்டணம் தீர்மானிக்கப்பட்டு பள்ளிகளுக்கு தரப்பட்டவுடனேயே பள்ளிகளை திறக்க மாட்டோம் என சில தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் அறிவித்தன. தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு அடிபணியாது என பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதியுடன் கூறினார். அதே உறுதி முத லமைச்சரிடம் இல்லாமல் போனதுதான் வேதனை. செம்மொழி மாநாட்டை எப்படி யாவது நடத்தி முடிப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்பட்டுக் கொண் டிருந்த வேளையில் அவருக்கு பெற்றோரின் தவிப்பு புரியவில்லை. தனியார் பள்ளி முதலாளிகளின் மிரட்டலே பெரிதாக இருந்தது. அதனாலேயே, மேல் முறையீடு செய்தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றார். முதலமைச்சர் இவ்வாறு கூறும் வரை சில நூறு மேல் முறையீடு மனுக்கள் மட்டுமே வந்திருந்தது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு தெம்பூட்டியது. உற்சாகமடைந்த தனியார் பள்ளிகள் மேல் முறையீட்டு மனுக்களை குவிக்கத் தொடங்கின. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் பெறப்பட்டது. கட்டணம் ஏற்க மறுத்ததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் தங்களுக்கு கட்டணம் மூன்றாண்டு களுக்கு பொருந்தும் எனத் தெரியாது. கட்டணம் தீர்மானிக்கத்தான் கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் தெரியாது. இந்த கட்டணத்தை வைத்து பள்ளி நடத்த முடியாது. இப்படி காரணம் கூறிய பள்ளிகள்தான் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தையே செல்லாது என அறிவிக்கக் கோரிமனு செய்தவர்கள். சட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு பொருந்தும் என எழுதி உள்ளதே அது தெரியாமலா வழக்கு போட்டார்கள்? நீதியரசர் கோவிந்தராசன் குழுவிடம் இருந்து கேள்விகள் வந்தால் வேறு எதற்கு வரப்போகிறது? எங்கிருந்து கேள்வி வந்தாலும் பதில் ஒன்றாகத்தானே இருக்க முடியும். வேறு வேறு நபர்களிடமிருந்து கேள்விகள் வந்தால் பதிலும் வேறு வேறாகவா இருக்கும்? எனவே, இந்த இரண்டு கூற்றும் நியாயமற்றவை. மேலும், இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த தொகையை வசூல் செய்தால் பள்ளியை நடத்த இயலாது என்றால் கடந்த ஆண்டு வசூல் உபரி இருந்திருக்கும் அல்லவா? அதை என்ன செய்தார்கள்? கல்வி உரிமைச் சட்டம் 2009 பொதுப் பள்ளி மூலம் கல்வி உரிமையை வழங்காமல் தனியார் - அரசு கூட்டு என்ற அளவில் அறிமுகமாகியிருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் கூட பள்ளியை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் 75 பேர் பெற்றோராகவும் அதில் 50 பெண்களாகவும் சமூகத் தின் அனைத்து பிரிவு மக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இட ஒதுக் கீட்டுடன் அக்குழு பள்ளியை நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் இத்தகைய நிர்வாகக் குழுவை அமைத்து அதன்மூலம் ஆசிரியர் நியமனம் முதல் பள்ளிக் கட்டணம் தீர்மானிப் பது வரை அனைத்து நிர்வாகப் பணிகளையும் அதுவே செய்ய வேண்டும். எனவே, பள்ளி நிர் வாகத்தை முதலில் இவர்கள் சட்டப்படி நிர்வாகக் குழு அமைத்து அதனிடம் ஒப்படைக் கட்டும். பள்ளியை தொடங்க அரசுதான் அனுமதி அளிக்கிறது. நிர்வகிக்க இயலாவிட்டால் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளி யை அரசே ஏற்று நடத்த வேண்டும். அல்லது பள்ளியை என்ன செய்வது என்று அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க பள்ளியை மூடுவேன் என்று மிரட்டுவது சட்ட விரோதமானது. அரசு யார் பக்கம்? பொறுப்புணர்வுடன் சிக்கலை தீர்த்து அமைதியான கற்றல் சூழலுக்கு வழி செய்ய வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகம்தான் பெரியது என்ற எண்ணத்தை அரசு கைவிட்டு, மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அரசு, அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையையும் ஆராய்ந்து பெற்றோரின் கொதிப்பை தணிப்பதற்கும் சிக்கலை தீர்ப்பதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை |
புதன், 29 செப்டம்பர், 2010
பள்ளிக் கட்டணம் : தடுமாறும் அரசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
டிவி கொடுத்தால் பெற்றோர்கள் கொதிப்பு அடங்கி விடும்.
பதிலளிநீக்கு