வெள்ளி, 1 நவம்பர், 2024

அல்வாவிற்கு பதிலாக பாயாசமா : விஜய் அண்ணனுக்கு ஒரு கடிதம்!

 


த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு!

அன்பு நிறைந்த வணக்கம்.

          வயதாகி அரசியலுக்கு வந்த நடிகர்கள், தன் படங்களின் வெளியீட்டின் போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என பூச்சி காட்டி, தள்ளாத வயதானதும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நடிகர், அரசியலுக்கு வந்தும் குழப்பாய் அலையும் நடிகர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் இளம் வயதில், புகழின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் கட்சியை துவக்கிய உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்!

          'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி, ”திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி” என்ற வார்த்தைகளும்.

          ”கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டும் நமது இரண்டு கண்கள், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு” என நீங்கள் விடுத்த அழைப்பும், அதிகாரப் பகிர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவு,  சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பது என்று சிறப்பாக பேசினீர்கள். வாழ்த்துக்கள்.

          ஆனால் உங்கள் குழுப்பம் எங்கு துவங்கியது? “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்” என்பதில்தான் துவங்கியது.

          திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் போதும், போக்கிரி படத்தில் கஞ்சா பிடிக்க போலிஸ் வரும் கைப்பந்தாட்ட காட்சியிலும், பிகில் படத்தில் ”பிகிலு கப்பு முக்கியம் பிகிலு” என அப்பா விஜய் சொல்லும் போது மகனாக நீங்கள் தோன்றும் காட்சியிலும், சர்கார் படத்தில் பழ.கருப்பையாவை மேடையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சியிலும் இருந்த அந்த அபாரமான நடிப்பாற்றலை விக்கிரவாண்டி மேடையிலும் கண்டு உங்கள் ரசிகர்களை போல நானும் பிரமித்தேன்.

          அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள்”என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது. எனெனில் நீங்கள் திமுக மட்டுமே ஊழல் கட்சி என குறிப்பிட்டது, அவரை உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

          நேற்று வரை என் தம்பி விஜய் என் அரசியலைத்தான் பேசுகிறார் என வழக்கம்போல உளறிக்கொட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ”திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும்” என்று பொரிந்து தள்ளி இருப்பதும் கவனத்தில் கொள்ளதக்கதுதான். அது இருக்கட்டும்,

          மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே நீங்கள் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, இந்தா கட் அவுட்டுகளுக்கு பின்னால் இருக்கும் சாதிய கணக்கீடு தெரியாத அப்பாவிகள் அல்ல தமிழக மக்கள்!

          அதுவல்லாமல், ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஆனாலும் சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட் - அவுட் வைத்தது அபத்ததின் உச்சத்தை தொட்டுள்ளீர்கள்! இருக்கட்டும் உங்களுக்கு உள்ள குழப்பத்தை எப்படியும் பேசி தீர்கலாம்.

          ஆனால் உங்கள் மாநாடு உரையில் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த மூன்று  பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

1.  உங்கள் உரையில் எங்கும்  இந்திய நாட்டை சுரண்டி கொழுக்கும் கார்ப்ரேட் சக்திகள் குறித்த வார்த்தைகளை தப்பி தவறியும் சொல்லவில்லை.  கத்தி படம் முழுக்க முழுக்க விவசாயத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை பற்றி வசனங்களுக்கு வாய் அசைத்தது நீங்கள்தான். ஆனால் உழைப்பாளி மக்களின் சொத்துக்களையெல்லாம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் அரசியலை நீங்கள் தொடவே இல்லை.  நூறு நாள் வேலைக்கு  இரண்டு லட்சம் கோடியை வெட்டி சுருக்கிய ஒன்றிய பிஜேபி அரசு, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடிகளை வரி சலுகையாக வழகுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை போலும்.

2. ஊழலுக்கு எதிராக சிலம்பாட்டம் ஆட தயார் என அறிவித்த நீங்கள் ஊழல் வழக்கால் தண்டனை பெற்ற ஒரு கட்சி குறித்து எதுவும் பேசாததும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாய் வாரி சுருட்டியவர்களையும், கொடுமையான கொரோனா நோய் தொற்று காலத்தில் பி.எம் கேர்ஸ் மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் குறித்தும் வாய் திறக்காததும் உங்கள் ஊழல் எதிர்ப்பை பல் இளிக்க வைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா?

3. இறுதியாக பாசிசம் குறித்த உங்கள் பேச்சு எத்தனை புரிதல் அற்றது என்பதை அறிவீர்களா? பாசிசம் என்பது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயாரால் அல்லது ஏதோ ஒரு அடையாளத்தின் பெயரால் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுத்தொதுக்குவது. அரசிலை அதிகாரத்திற்காக படுகொலைகளை செய்வது. சிறுபான்மையினரை குறிவைத்து அழிப்பது. இந்த அம்சங்கள் அனைத்து பொருந்துகிற பாசிச பாஜக குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உங்களால் ஒரு மாநாடு நடத்த முடியும் என்றால், தமிழக மக்களுக்கு அல்வாவுக்கு பாயாசம் கொடுப்பது நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! 

          இதுவரை தமிழக மக்களுக்கு பல கட்சிகள் அல்வா கொடுத்தனர், புதிதாக நீங்கள் பயாசம் கொடுக்க கிளம்பி உள்ளீர்கள் என்பதை தவிர வேறென்ன உங்களிடம்  வித்தியாசம் உள்ளது. சமதர்மம் என்பது வார்த்தைகளில் இல்லை அண்ணா, அது கொள்கையின் வெளிபாடு. உங்கள் கொள்கை பிரகடனம் வெற்று வார்த்தைகளாய் காற்றில் கரையாமல் இருக்க வேண்டுமெனில் சமூகத்தின் உண்மையாக பிரச்சினைகளை கண் கொண்டு பாருங்கள்! நன்றி!

அன்புடன்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

7 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு.. நன்றி

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் தோழர் நல்ல பகுப்பாய்வு

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறந்த பகுப்பாய்வு... வாழ்த்துக்கள் தோழர்

    பதிலளிநீக்கு