ஏபரல் 23 உலக புத்தக தினம் :
பள்ளி நாட்களில் பாடப் புத்தகங்களைப் பார்த்துப் பயந்த நான், முதலில் என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகங்கள் எவை என அசைபோடுகிறேன்.
காமிக்ஸ் புத்தகங்களே என்னை முதலில் ஈர்த்தவை. லயன் காமிக்ஸ் வெளியிட்ட ஸ்பைடர் மேன். நீங்கள் இப்போது பார்க்கும் அழகான ஸ்பைடர் மேன் இல்லை! புரபெரஸ் பெல்ஹாம் உருவாக்கிய நீண்ட காதுகள் கொண்ட, முதுகில் இரண்டு சிலிண்டர்களை சுமந்த ஸ்பைடர் மேன் அவர்.
அதைத் தொடர்ந்து இரும்புக்கை மயாவி, ஜானி நீரோ, C.I.D. லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, சார்லின் மாண்ட்ரேக், பிலிப் காரிகன், கேப்டன் டைகர், லார்கோ வின்ச், தோர்கல், ரிப்போர்டர் ஜானி, ப்ளூகோட் பட்டாளம், சிக் பில், டிடெக்டிவ் ரபின், மர்ம மனிதன் மார்டின், கேப்டன் பிரின்ஸ், பேட்மேன், சாகச வீரர் ரோஜர், C.I.D. மார்ஷல், ப்ருனோ ப்ரேசில் போன்ற காமிஸ் ஹீரோக்களுடன் பயனித்தேன்.
பின்புதான் தெரிந்தது இவர்கள் எல்லாம் பிரிட்டிஷ், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெளிவந்த கதைகளில் இருந்த நாயகர்கள் என! நான் பிறந்த 1972-ஆம் ஆண்டு முத்து காமிக்சின் முதலாவது புத்தகம் இரும்புக்கை மாயாவி எனும் தலைப்பில் வெளிவந்தது என்று பின்பு அறிந்துகொண்டேன். அப்படியெனில் ”தமிழ் இரும்புக்கை மாயாவியும்” நானும் ஒத்த வயதுடையவர்கள். ஆஹா!
அனேகமாக 100க்கும் மேற்பட்ட கமிக்ஸ் புத்தகங்கள் என்னிடம் இருந்தது. என் டிரங் பெட்டியில் என் ஆடைகளைவிடப் புத்தகங்களே அதிகம். எனது நண்பர்கள் 5 பைசா அல்லது 10 பைசா கொடுத்து வாங்கி படிப்பார்கள். அதில் வரும் காசு அடுத்த புதிய புத்தகம் வாங்க உதவியது.
இதனூடாக பொன்னியின் செல்வன் தூதாக வத்தியதேவன் ஒருபக்கம் குந்தவையை பார்க்கக் கிளம்பினான். அது ஒரு தனி உலகமாக விரிந்தது. பார்த்திபன் கனவும், கடல் புறாவும் எழுத்து பிரமாண்டங்களை விதைத்தது. மன்னர்களின் அரண்மனைகளும், வீரர்கள் நின்ற போர் களங்களும், ஆட்சியின் சுவை ரசிக்க நடந்த துரோகங்களும் கண் முன் எழுந்து நின்றது.
அந்த நேரத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் முழு ஈடு பாட்டுடன் பணியாற்றத் துவங்கினேன். அப்போதுதான் முதன் முறையாக என் கையில் சவுத் விஷன் வெளியீடான ”நினைவுகள் அழிவதில்லை” கிடைத்தது. அந்த புத்தகம் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை விதைத்தது.
புத்தகங்களின் படிப்பைப் பொறுத்தவரைக் கற்பனை உலகில் வாழ்ந்த என்னைக் கன்னத்தில் அறைந்து இழுத்த புத்தகம் அது. ஆம் அந்த கற்பனைகளை மிஞ்சும் நிஜங்கள் இருக்கத்தான் செய்தன. கையூர் தியாகிகள் குறித்த நிரஞ்சனாவின் நாவல் அது. கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குப் போய் மலையாளத்திலிருந்து தமிழில் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்த நாவல். மக்களுக்காக அவர்கள் வாழ்க்கைக்காக தங்கள் உயிரைக் கொடுக்கும் மகத்தான மனிதர்கள் முன்பு இரும்புக்கை மாயாவிகள் எறும்புகளைப் போல் தெரிந்தனர்.
அன்று துவங்கியது தீவிர அரசியல் வாசிப்பு. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் குணசேகரன் அப்போது மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அவர் 1991 ஆம் ஆண்டு சிதம்பரம் வட்ட மாநாட்டிற்கு வந்தபோது ஒரு புத்தக பட்டியல் கொடுத்துப் படிக்கச் சொன்னார் மார்க்சிய மெய்ஞானம், அரசியல் பொருளாதாரம், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம் போன்ற நூல்களைக் கொண்ட பட்டியல் அது. அந்த வயதில் அவைகள் புரியவில்லை எனினும் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொள்ள முயன்றேன். அதில் என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் மார்க்சிய மெய்ஞானம் தான்.
எங்கள் சிதம்பரம் கீற்றுக் கொட்டாய் கட்சி அலுவலகம் மிகவும் உற்சாகமாக எங்களுக்கான படிக்கும் சூழலை உருவாக்கியது. என் பால்யத்தின் பல ஆண்டுகளின் இரவு அங்குதான் கழிந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன் எங்களுடன் உரையாடியதும், அவர் மார்க்சிய நூல்களுடன் அம்பேத்கர், பெரியார் நூல்கள், மட்டுமல்ல அப்போது சிபிஎம் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் நூல்கள் உட்பட எல்லாவற்றையும் படிக்கச் சொல்வார்.
1992 ஆம் ஆண்டு தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுடன் 35 நாட்கள் கடலூர் மத்தியச் சிறையிலிருந்தது மறக்க இயலா அனுபவம். அந்த நாட்களில் அவர் சிறையில் எடுத்த கட்சி வகுப்புகள் சிறையிலிருந்து வந்து மேலும் படிக்கத் தூண்டியது. தொடர்ந்து படிக்கப் பேரார்வத்தைத் தூண்டியதாக அவரது உரைகள் அமைந்தன. ஆயுள் தண்டனை கைதிகளைக் கொண்ட ஒரு கட்சி கிளையை அங்கு உருவாக்கியது தனிக் கதை.
இப்போது தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் தோழர் ஆர்.கோவிந்தராஜன் எப்போதும் என்னுடைய ஆதர்சம். ஏனெனில் அவருடன் அணுக் குண்டு துவங்கி மணல் குன்று வரை எதையும் நீங்கள் விவாதிக்க முடியும். 10 மணி நேரம் நீங்கள் பேசினாலும் அய்யயோ அதற்குள் நேரம் கடந்துவிட்டதா என அவர் இழப்பை உணர்வீர்கள். அவருடன் பேச அல்லது விவாதிப்பதற்காகவே நிறைய நூல்களைப் படித்தேன்.
தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் தோழர் ஜி.மாதவன், இப்போது மும்பையில் வசிக்கும் தோழர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் எனது வாசக பரப்பைப் பெரிதாக்க உதவிய தோழர்கள். மார்க்சிஸ்ட் கட்சியை நான் தேர்ந்தெடுக்காமல் விட்டிருந்தால் இப்படி ஒரு படிக்கும் பழக்கம் எனக்கு வந்திருக்குமா தெரியாது. இதன் பொருள் இக்கட்சியில் இல்லாதவர்கள் படிப்பார்வம் இல்லாதவர்கள் என்றில்லை. என் வாழ்வனுபவத்தில் எனது கட்சி என் நூல் பயணத்தை உற்சாகப்படுத்தியது என்பதுதான்.
ஒருபக்கம் மார்க்ஸ் என்னை ஈர்த்த அதே சமயம் இலக்கிய நூல்களும், வள்ளலாரும், திருமூலரும் என்னை ஈர்க்கத்தான் செய்தனர். கீழடிக்குப் பிறகு சங்க இலக்கிய நூல்கள் குறித்த ஒரு புதிய தரிசனம் கிடைத்தது. சங்ககால மனிதன் வாழ்வின் வெளிச்சங்களைப் பரப்பியது அது. சங்ககால மனிதர்கள் வாழ்வின் தடயங்களைச் சங்க இலக்கியங்கள் வைத்திருப்பதை கீழடி ஆய்வு மெல்லச் சொல்லத் துவங்கி உள்ளது. மதுரைக் காஞ்சி சொல்லும் மதுரை வீதிகளின் பரப்பு மெல்ல விரிகிறது.
நான் சொந்தமாக வீடு கட்டிய போது என் தோழமை கீதாவும் மகன் சத்யாவும் எனக்கென ஒரு நூலக அறையை அமைத்துக்கொள்ள மகிழ்வுடன் அனுமதித்தனர். எனது வீட்டில் உள்ள நூலக அறையில் நுழையும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. அய்யோ இன்னும் இவ்வுளவு புத்தகங்களைப் படிக்கக் காத்திருக்கிறதே என! இன்னும் வாங்க வேண்டிய நூல்கள் எண்ணிக்கையும் அதிகம் என! களப்பணிகளுக்கு ஊடாக படிப்பதற்கும் எழுதுவதற்கும் நேரம் கண்டறிவது சிரமமான பணியாக மாறி உள்ளது. எனினும் இவற்றைச் செய்துதானே ஆக வேண்டும்.
ஸ்டீவன் ஹாக்கிங் இப்போது உற்சாகமான தகவல்களை சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான சிந்தனையாளன் மறைந்த பிறகும் அறிவியல் அதிசயங்களை விளக்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் இல்லை என 30 ஆண்டுகளுக்கு முன் நான் புரிந்து கொண்டதற்கு ஆதாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார், மொத்த உடலும் சுருங்கி அவன் வாழ்ந்த, அவனது சக்கர நாற்காலியின் ஒரு பல் சக்கரமாக இருந்திருந்தால் அவனோடு ஒன்றும் நெருக்கமாக இருந்திருக்கலாமோ?
புத்தகங்களைப் படிப்பது ஆகாய வெளிகளை, வனாந்தரங்களை கடந்து செல்லும் ஒரு நீண்ட பயணம் அதற்கு முடிவு கிடையாது, நாம் இறங்கிக்கொள்ளும் நிறுத்தம் வரும் வரை படித்துக்கொண்டிருக்கலாம். ஆக, எனது நிறுத்தம் வரும் வரை படிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்காகக் கொண்டிருக்கிறேன்.
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக