நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி
நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 17.12.2025 புதன் கிழமை அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட 10 பிரதிநிதிகளை என்எல்சி அதிகாரிகள் இருக்கையில் அமரச் சொல்லாமல் அவமதித்தனர். இதனால் கொதிப்படைந்த தலைவர்கள் முற்றுகையைப் தொடரப் போவதாக அறிவிக்கவே, பணிந்த அதி காரிகள் மீண்டும் அழைத்து மரியாதையுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அதற்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச் சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்டச் செயலாளர்கள் ஆர்.கே. சரவணன் (விவசாயிகள் சங்கம்), எஸ். பிர காஷ் (விதொச) மற்றும்நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், பி.கர்ப்பினைசெல்வம், டி.கிருஷ்ணன், பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களின் சார்பில் த. சண்முகம், ஆர். ரவிச்சந்திரன், ஏ. சன்னியாசி, சூ. ராமச்சந்திரன், செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது.
சரி கோரிக்கைகள்தான் என்ன
எதறக்கு இந்த போராட்டம் ?
1956-ஆம் ஆண்டில் ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் ‘நவரத்தின’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL), இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் மிக முக்கியத் தூணாக விளங்குகிறது. இந்த மகத்தான நிறுவனத்தையும் மோடி அரசு தனியாரிடம் விற்பனை செய்ய துடிப்பது கொடுமை. தொழிலாளி வர்க்கத்தின் தொடர்சியான போராட்டத்தின் விளைவாக இந்த நிறுவனம் பாதுகாக்கப்படுகிறது.
2024-2025 நிதியாண்டிற்கான மொத்த லாபம் ₹10,861.41 கோடி ; மற்றும் நிகர லாபம் ₹2,713.61 கோடி ஆகும். இந்த நிதி வலிமையின் காரணமாக, நிறுவனம் தனது முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில் 2% என்ற சட்டப்பூர்வக் கடமையின் அடிப் படையில், ₹48.63 கோடியை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டிற்கான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கை களுக்காக ஒதுக்கி செலவிடுகிறது.
ஆனால் இந்த மாவட்டத்திற்கும், பாதுக்கப்பட்ட கிராமங்களுக்கு இந்த தொகை எவ்வுளவு உதவுகிறது என்பது மிகப் பெரிய கேள்வி.
பல பத்தாண்டுகளாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர் தங்களது வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். எளிமையக தீர்க்கப்பட வேண்டிய பல கோரிக்கைகள் இன்னும் தீரக்கபடாமல் உள்ளது.
1956 முதல் சுமார் 37,256 ஏக்கர் நிலத்தை 25,000 குடும்பங்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலம் வழங்கிய கிராம மக்கள் நியாயமான இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலை மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் (Rehabilitation and Resettlement – R & R) கொள்கையை முழுமையாக அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கீழ்க்காணும் 12 அம்ச கோரிக்கைகள் தற்போது முன்னுக்கு உள்ளது :
1. 2000 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குனர் மற்றும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் நீர் வெளியேறும் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணைத்தொகை கொடுத்து விடுங்கள் என்று கூறியும் ஒரு சில கிராமங்களுக்கு கொடுத்துவிட்டு மற்ற கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2. 2013 நில எடுப்பு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வேலை வழங்கக்கவில்லை.
1999-2006 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2007-2013 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2014 முதல் நிலம் எடுத்தவர்களுக்கு 50% வேலைவாய்ப்பு என்று பிரிக்கின்றார்கள் ஆனால் 90% நிலங்கள் 2013க்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அவர்களுக்கு 25% என்பது நியாயமல்ல. ஆகவே நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைபிடித்து வேலை வழங்க வேண்டும்.
3. என்.எல்.சியால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தமிழக விவசாயத்துறை அமைச்சர் மற்றும் சுரங்க இயக்குனர் இழப்பீடு கொடுத்து விடுங்கள் என்று கூறியதின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு போட்டும் என்எல்சி நிர்வாகம் வழங்க மறுக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த அனைத்து ஆழ்துளை கிணற்றுக்கும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் மின் இணைப்பை அவர்கள் கேட்ட இடத்திற்கு உடனடியாக மாற்றி தர வேண்டும்.
4. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ல் வாழ்வாதார தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று சொன்ன பிறகும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2017 முதல் வெறும் ரூபாய் 1,09,500/- மட்டுமே வாழ்வாதார தொகையாக கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆகவே இன்றைய மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 40,00,000/- லட்சததை வாழ்வாதார நிதியாக அனைவருக்கும் வழங்க வேண்டும்.
5. என்எல்சியால் நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள குத்தகை பயிர் செய்தவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் R&R சட்டம் 30/2013-ல் sec- 3 (1) வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.
6. ஊ.ஆதனூர், கத்தாழை, மேல் வளையமாதேவி கிராமங்களில் அரசால் கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்றுமனை உடனடியாக வழங்க வேண்டும் பிள்ளையார் குளத் தெருவில் வீடு கட்டி இருக்கும் அனைவருக்கும் மாற்றுமனை கொடுக்கப்பட வேண்டும்.
7. ஊ.ஆதனூரில் ஊராட்சி நிதியால் கட்டப்பட்ட 5 வீடுகளை என்எல்சி நிறுவனம் இடித்து விட்டது. அந்த வீடுகளுக்கான இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.
8. மும்முடிச் சோழகன் கிராமத்தில் 170 குடும்பங்கள் 2003 மற்றும் 2007 இல் எடுக்கப்பட்டு ஒரு தவணைத் தொகை வெறும் ரூபாய் 2000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை கொடுக்காத காரணத்தால் தற்பொழுது புதிய சட்டத்தின் படி அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.
9. கீழ் வளையமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீடு, மனை மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களில் 30 குடும்பங்களுக்கு மாற்றுமனை வழங்கப்படவில்லை, கருணைத்தொகை, வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. முத்துக்கிருஷ்ணாபுரத்தில் ஏழு குடும்பங்களுக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய வீட்டுமனை, வாழ்வாதாரம், வீடு கட்டும் பணம் கொடுத்துள்ளார்கள் அதேபோல் முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீட்டு மனை 2022-ல் தான் எடுத்துள்ளார்கள். ஆகவே முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்த அனைத்து மக்களுக்கும் வீடு கட்டுவதற்கான தொகை கொடுக்கப்பட வேண்டும் மனைக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்பட வேண்டும்.
10.
என்.எல்.சியால்
பாதிக்கப்பட்ட கம்மாபுரம்,
விருதாசலம்
புவனகிரி,
குறிஞ்சிபாடி
பகுதியில் அனைத்து வசதிகளும்
கொண்ட பல்நோக்கு மருத்துவமனை
அமைக்க வேண்டும்.
இப்பகுதிகளை
இணைக்கும் மையத்தில் அரசு
கல்லூரி மற்று ஒவ்வொரு
கிராமத்திலும் சமுதாய நலக்கூடம்
அமைக்க வேண்டும்.
11. தீர்ப்பு (Award) கொடுப்பதில் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் வழிகாட்டு மதிப்பு (Guideline Value) மட்டுமே நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது. வழக்கு முடிந்தவுடன் வட்டியுடன் வைப்பீடு செய்த தொகை மட்டுமே கிடைக்கிறது. இழப்பீட்டுத் தொகையில் வழிகாட்டு மதிப்பு போக பாக்கியுள்ள ஆனால் சந்தை மதிப்பீடு தொகையான அதிக இழப்பீடுத் தொகையை என்எல்சி நிர்வாகமே வைத்துக் கொள்கிறது வழக்கு முடிந்தவுடன் அத்தகைக்கு வட்டி ஏதும் கொடுப்பதில்லை. ஆகவே இழப்பீட்டின் மொத்த தொகையும் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட வேண்டும். இதுவரை என்எல்சி நிர்வாகம் வைத்துள்ள தொகைக்கு தீர்ப்பு (Award) தேதியிலிருந்து வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும்.
12. நிலம் தொழிற்துறை நோக்கங்களுக்கான சட்டத்தில் கையகப்படுத்தப்படுகிறது. கனிமவள சட்டத்தில் கையகப்படுத்தப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ராயல்டி கிடைக்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடந்த போராட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக