வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

திருப்பரங்குன்றம் : என்னதான் நடகிறது ?

 


 திருப்பரங்குன்றம் இன்று தமிழக விவாத பொருளாக மாறியுள்ள சூழலில் அங்கு நடைபெறும் உண்மை தரவுகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர செயற்குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிரமானியன் மிக தெளிவாக தீக்கதிர் நாளிதழில் இரண்டு நாளாக பதிவு செய்துள்ளார். 

--------------------------------------    

 திருப்பரங்குன்றம்   மத நல்லிணக்கக் கோட்டம்!

சங்க இலக்கிய நூலான பரிபாடல்-  ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரை பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றம்” என்று திருப்பரங்குன்றம் வாழ் மக்களை வாழ்த்திப் பாடுகிறது. இதன் பொருள் தானம் செய்பவரைக் கொண்டாடியும், அதைப் பெற்று மன மகிழ்வோடு செல்வோரைப் பார்த்து பெருமிதமும் கொள்ளுகின்ற மக்களைக் கொண்டுள்ள கொற்றவையின் மகனும் கையில் வேலுடனும் காட்சி தரும் முருகன் குடி கொண்டுள்ள திருப்பரங்குன்றம் என்பதாகும். இப்பாடல் திருப்பரங்குன்றத்தில் குடியிருக்கும் மக்கள் எத்தகைய ஈகை குணமும், உயர்ந்த பண்பும் கொண்டவர்கள் என்பதை குறிப்பாய் உணர்த்துகிறது.

அருணகிரிநாதர் தனது கந்தரலங்காரத்தில்..  ‘சூர்க்கொன்ற ராவுத்தனே! மாமயிலேறும் ராவுத்தனே!”-  என்று முருகனை வருணிக்கிறார், அக்காலத்தில் முஸ்லிம்களில் குதிரை வணிகர்களை “ராவுத்தர்” என்று அழைப்பது வழக்கம், இதேபோல் திருவிளையாடற் புராணமும் 59-ஆவது படலத்தில் குதிரைகளை ஓட்டிவந்த குதிரை வணிகரை ராவுத்தர் போல் வேட மணிந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இலக்கண வழக்கில் ராவுத்தர் என்பது “மேதகு” என்கிற சொல்லைக் குறிக்கும். எப்படியிருந்த போதிலும் தமிழ்க் கடவுளான முருகனுக்கும், முஸ்லிம்களுக்குமான உறவு பலநூறு ஆண்டுகளாக நிலவி வந்துள்ளது என்பது மட்டும் உறுதியாகின்றது.

இத்தகு பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து சங்பரிவாரக் கும்பல் மதுரை மாவட்டம் முழுவதும் இந்து-முஸ்லிம் மதப் பகையை உண்டாக்க முனைகின்றது. இது நாடு முழுவதும் இந்துத்துவா சக்திகள் முன்னெடுக்கும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு  பகுதிதான் என்ற போதும் இதன் மூலம் உருவாக்கப்பட்டு வருகிற பதற்றமும் மதவெறிப் பிரச்சாரமும் அனைவரையும் கலக்கமடையச் செய்யக்கூடிய வையே!

ஆனால், “யாமிருக்க பயமேன்” என்று முருகனே கூறுவதைப் போல இத்தகைய மதவெறி சக்திகளை எதிர்கொள்ளவும் முறியடிப்பதற்கான சாரத்தை தன் கருப்பையிலேயே கொண்டுள்ள திருப்பரங்குன்றம் உணர்த்தும் செய்தி என்னவென்றால், நல்லிணக்கமும் அதற்கு அடித்தளமாக விளங்கும் பன்மைத்துவக் கூறுகளுமே! ஆகும். ஒற்றைக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் திணிக்க முயலும் சங்கிகளை எதிர்த்த போரில் முற்போக்காளர்கள் கையில் ஏந்த வேண்டிய வலிமையான ஆயுதங்களாக மேற்சொன்ன மத நல்லிணக்கமும் பன்மைத்துவக் கூறுகளும் விளங்கும்

முருகனும் வீரவழிபாடும்!

பண்டைய தமிழர்கள் வகை பிரித்து வாழ்ந்த ஐவகை நிலத்தில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படும் குறிஞ்சி நிலத்தின் வழிபாட்டுத் தெய்வங்கள் ‘சேயோன் மற்றும் கொற்றவை’ ஆகும். இதில் கொற்றவை தாய் வழிபாட்டுத் தெய்வமாகும். இத்தெய்வங்களுக்கு படையலிட்டு வணங்கும் வழிபாட்டு முறையை வைத்து வீரவழிபாட்டுத் தெய்வங்களாக குறிப்பிடப்படுகின்றன. “நிறம் படின் குருதி புறம்படின்” (பதிற்றுப்பத்து -89) என்கிற வரியில் தொடங்கும் பாடலின் மூலம் கொற்றவைக்கு உயிர்கள் பலியிடப்பட்டதையும், “விடா முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்” (குறுந்தொகை -218) -  எனத் தொடங்கும் பாடல் வரியின் மூலம் கொற்றவை ஆலத்தைக் கொண்டிருந்ததால் “சூலி” எனப்பட்டாள் என்பதையும் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்கள் ‘கொற்றவை மகன் சேயோன்’ என குறிப்பிடுகின்றன.

இதனை “வேல் போர்க் கொற்றவை சிறுவ’ (திரு முறுகாற்றுப்படை 258) என்கிற வரியில் அறியலாம். இது காலப்போக்கில் முருகு. முருகன், வேலன் எனவும் வழங்கப்படலாயின. மேலும், சேயோன் அதாவது முருகனுக்குரிய வாகனம் மற்றும் கொடி பற்றிய செய்தியை,மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக ஆர்தி பொன்செய் யோனுமென” (புறநானூறு -56) எனும் பாடல் வரிகளும், கருங்கின் விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு (பதிற்றுப்பத்து 11.6) என்கிற பாடல் வரிகளும் தெரிவிக்கின்றன. அதாவது முருகனுக்கு கொடியாக மயிலும், ஊர்தியாக யானையும் போற்றப்பட்டன என்பது இதன் பொருளாகும்.

முருக வழிபாடு வீரவழிபாடாக இருந்ததினால் “செம்மறியாடு” வெட்டிப் படைக்கும் மரபும் தமிழ கத்தில் நிலவி வந்துள்ளது. இதனை “மறிக்குரல் அறுத்துத் தின்னப் பிரப் பரீடு” (குறுந்தொகை -263) என்கிற வரியின் மூலமும் “சிறுமறி கொன்று” (குறுந்தொகை 362) என்கிற வரியின் மூலமும், குறுந்தொகை முருகனுக்கு ஆடு அறுத்து பலி கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.

கூடுதலாக... “மதவலி நிலைஇய மாத்தாட கொழுவிடைக் குருதியோடு விரைஇய தூவெண் அரிசி சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரிஜ் (திருமுருகாற்றுப்படை 232-234) என்கிற வரிகளில் தினை அரிசியில் ஆட்டு ரத்தத்தைக் கலந்து முருகனுக்கு படையலிட்டதையும், “முருக இயம் நிறுத்து முரணின் உட்க” (திரு முருகாற்றுப்படை - 244) என்கிற வரியின் மூலம் முருகன் ஈச்ச இலையால் வடிகட்டிய கள்ளைக் குடிப்பான் என்பதையும் திரு முருகாற்றுப்படை தெரிவிக்கிறது. ஆக, மேற்சொன்ன கொற்றவையும், சேயோன் என்கிற முருகனும் இயற்கை வழிபாட்டு தமிழ் கடவுளர்கள் என்பது மட்டுமல்ல சுத்த “அசைவப் பிரியர்கள்” என்பதும் தெரிகின்றது!

சமணர்களின் குன்றம்

எண் பெருங்குன்றத்து இருந்தவ முனிவர்” என நாலடியார் அதிகாரவியல் அடைவிலும், “

பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி” என யாப்பருங்கால விருத்தியுரையிலும், மதுரையைச் சுற்றியுள்ள எண்பெருங்குன்றத்தில் சமணர்கள் வாழ்ந்ததையும் அதில் திருப்பரங்குன்றம் முதலாவதாகவும் குறிப் பிடப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கருகில் உள்ள பாறையில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் சுனை ஒன்றுள்ளது. அதன் அருகில் பாறையில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவை காலத்தால் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சமணம் இங்கு மிகவும் செல்வாக்கோடு திகழ்ந்தது என்பதற்கு இவைகள் சான்றுகளாகும்.

வைதீகம் கிளம்பியது

கி.பி.9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சாத்தான் கணபதி என்பவரால் பராந்தக நெடுஞ்சடையானின் ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமானுக்காக கோயில் எடுத்ததை இங்குள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இப்போது காணப்படும் வடதிசை குடைவரைக்கோயிலில் 5 தெய்வங்களுக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிவன், திருமால், துர்க்கை, விநாயகர், முருகன் ஆகிய ஐவர் சிற்பங்களும் இங்குள்ளன. முருகனை பரங்குன்றத்தின் இரு (வட தென் திசை களில் உள்ள) குடைவரை கோயில்களிலும் துணை கடவுளராகத்தான் காண முடிகின்றது.

வடக்கே உள்ள குகையில் உள்ள முருகன் தான் இப்போது வழிபடப் படும் கடவுள். இந்தக் குகையில் துர்க்கைக்கும், சிவலிங்கத்திற்கும் தனித்தனி கோயில் குடைந்திருக்க முருகனை சுதை வடிவத்தில் துணை கடவுளாகத்தான் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது.

இங்கு முருகன் சுப்பிரமணிய சுவாமியாக தெய்வானையுடன் மணக் கோலத்தில் காட்சி தருகிறான் (செ.போசு, கல் வெட்டாய்வாளர், தொல்லியல் ஆய்வுத்துறை.) பிராமணிய வைதீக நெறிப்படி திருப்பரங்குன்றம் என்பது சிவபெருமானுக்கு உரிய மலையாகும். முருகனே இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பயனெய்திய பெருமை உடையது என்கின்றனர். இதை உணர்த்தும் வண்ணம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு முருகனின் கைவேல் ஆண்டுதோறும் எடுத்துச் செல்லப்படுகிறது

சூழ்ச்சிகள் எத்தனை சூழ்ச்சியடி?!

பிராமணிய வைதீகத்தின் சூழ்ச்சிகள்தான் எத்தனை? எத்தனை? முருகனின் வீரவழிபாட்டை ஒழித்துக்கட்டி சுப்பிர மணியசுவாமி என்கிற பெருந்தெய்வமாக மாற்றியது. பலியிடும் படையலை தடை செய்து ஆகமத்தை வரித்துக் கொண்டது. கொற்றவையை துர்க்கையாக மாற்றி தாய் வழிபாட்டை நிராகரித்தது. முருகனின் வாகனமான யானையை பிராமணியம் செரித்து தெய்வயானையை துணைவியாக்கியது. தெய்வானையாக மாற்றி முருகனின் கொடியிலிருந்த மயிலை வாகனமாகவும், கொடியில் சேவலையும் பொறித்தது. சமணர்களை கழுவிலேற்றி ஒழித்துக் கட்டியது. பரங்குன்றத்தை சிவதலமாகவே பாவிப்பது.  வைணவக் கடவுளான திருமாலுக்கும் கூட கருவறை உண்டு. ஆனால் தமிழ் கடவுளான முருகனுக்கு தனிக் கோவிலோ, கருவறையோ இன்றி துணை கடவுளராகவே  பாவிப்பது ஆக மொத்தத்தில் திருப்பரங்குன்றத்தை முருகனின் படைவீடுகளில் முதலாவது என சொல்லிக் கொண்டாலும் வைதீக பிராமணியம் என்னவோ முருகனை துணைக் கடவுளராக ஒதுக்கி வைக்கப்பட்டவராகத்தான் பாவிக்கிறது.

இப்பேர்ப்பட்ட நிலையில், பரங்குன்றமானது வைதீக பிராமணியத்தின் சூழ்ச்சியையும் மீறி முருகனின் திருத்தலமாகவே அறியப்படுவதும் மக்களால் கொண்டாடப்படுவதும் எதனால்? “திருமலையான் திருப்பரங்குன்றத்தை மாற்றி வைத்தான்” என்றொரு பழமொழி உண்டு அதாவது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் திருமலை மன்னன் (வைணவர்) காலத்திலிருந்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையே இது குறிப்பிடுகிறது. இங்கு பெருவிழா வாகக் கொண்டாடப்பெறும் பங்குனி உத்திரவிழா அதையே பறைசாற்றுகிறது.

சிக்கந்தர் பாதுஷாவைப் பற்றி..

கி.பி.1186-ஆம் ஆண்டு சையது இப்ராகிம் என்கிற முஸ்லிம் மன்னன் மதுரையை அரசாண்ட வீரபாண்டிய னுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றினான். அங்கு  அவர் தம்முடைய தளபதிகளில் ஒருவரான சிக்கந்தர் பாதுஷாவை மதுரைக் கோட்டையின் தளபதியாக நியமித்து விட்டு, கிழக்கேயுள்ள பெரிய பட்டினம் நகருக்குச் சென்றான்.

இந்நிலையில் மதுரைக் கோட்டையின் பாதுகாவலராக இருந்த சிக்கந்தர் பாதுஷாவுடன், ஏற்கனவே தோற்று ஓடிய வீரபாண்டியன் சில ஆண்டுகள் கழித்து பெரும்படையுடன் மதுரை திரும்பி போர் புரிந்தான். சிக்கந்தர் பாதுஷா தனது ஆலோசகர் தர்வேஸ், தளபதி பாலமஸ்தான், மருத்துவர் லுக்மான் ஹக்கீம் ஆகியோருடன் திருப்பரங்குன்றம் மலையில் தஞ்சமடைந்தார். இதனை அறிந்து கொண்ட வீரபாண்டியன் திருப்பரங்குன்றம் மலைக்கு வந்து, வழியில் எதிர்ப்பட்ட சிக்கந்தர் பாதுஷாவின் உதவியாளர்களைக் கொன்றதுடன், இறுதியில் மலை உச்சியில் இருந்த சிக்கந்தர் பாதுஷாவையும் போரிட்டுக் கொன்றான்.

ஏற்கனவே, சிக்கந்தர் பாதுஷாவின் மறைவுக்குப் பின் வெறும் அடக்கத்தலமாக மட்டுமே இருந்ததை கி.பி.1762-இல் மதுரையின் ஆளுநராக இருந்த கான்சாகிப் அழகிய கல்மண்டப தர்ஹாவாக கட்டித் தந்ததுடன், அத்தர்ஹாவின் பராமரிப்பிற்காக திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் என்ற கிராமத்தையும் சர்வமானியமாக அளித்து உதவினான். சிக்கந்தர் பாதுஷா வீரமரணம் எய்திய நாளிலிருந்து இன்றுவரை முஸ்லிம்களும், இந்துக்களும் அன்றாடம் சென்று தரிசிக்கும் இடமாக விளங்கி வருவதோடு அது மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றது

தமிழ் இஸ்லாமியர்களின் தர்ஹா

இஸ்லாமியர்களின் வழிபாட்டுக் கூடங்களாகிய பள்ளிவாசல்களில் இஸ்லாத்தின் ஷரீஅத் கோட் பாட்டின் அடிப்படையில் ஐந்து வேளை தொழுகை என்னும் ஏக தெய்வ வணக்கமுறை இடம் பெறுவதால், அவை பண்பாட்டுத் தலங்களாக நிலைபெற்று விட்டன. ஆனால், இஸ்லாமியப் பெரியார்களின் அடக்கவிடங்களாகிய தர்ஹாக்கள், பிற பண்பாட்டுத் தாக்கத்திற்கு உள்ளாகி பிற சமயத்தின் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளுக்கும் தமிழ் சமூகத்தின் சமயப் பண்பாட்டுக் கூறுகளுக்கும் இடம் அளித்தன. இதன் காரணமாக இஸ்லாத்தின் சார்பு நிலைப் பண்பாடாக நடைமுறைகள் உருப்பெற்றன என முனைவர் அ.பசீர் அகமது கூறுகிறார். இதே கருத்தை நாட்டுப்புறவியல் ஆய்வாளர் ஆ.சிவ சுப்பிரமணியனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

மேலும் “எளிய மனிதர்கள் தர்ஹாவில் மேற்கொள்ளும் பக்திப்பூர்வமான (உயிர்ப்பலி உட்பட) செயல் பாடுகள் தமிழகத்தில் நிலவும் சிறுதெய்வ வழிபாட்டுக் கூறுகளோடு ஒத்துள்ளன என்று சமூகவியல் ஆய்வாளர் சூஸன் பெய்லி கூறுகிறார். ஒரு சில தர்ஹாக்களில் அடங்கியுள்ள பெரியோர்களின் இறந்த தினத்தில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வின்போது நடைபெறும் கொடியேற்றம், சந்தனக்கூடு வலம் வருதல், சந்தனம் பூசுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல், அருள்வாக்கு கூறுதல், இனிப்பு, பழம் பூ மணப்பொருட்கள், மயிலிறகு, விளக்கேற்றுதல் ஆகியன இந்து தமிழர் திருவிழாக்களின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன என கீழைத்தேய பண்பாட்டு ஆய்வாளர் மாட்டிஸன் மைன்ஸ் குறிப்பிடுகிறார். இதே கருத்தை கே.கே.பிள்ளை தமது ‘தென்னிந்திய வரலாறு’ என்ற நூலிலும் சுட்டிக் காட்டுகிறார்.

தர்ஹாக்களில் கடைப்பிடிக்கப்படும் இந்நடை முறைகள் இஸ்லாத்தில் இல்லாத நூதனமான பழக் கங்களாகும் எனவும் பேரா.பஹீர் அகமது தெரி விக்கிறார்.

இதன்படி பார்க்கும்போது பரங்குன்றத்தின் மேலுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவும், பலநூறு ஆண்டுகளாக இஸ்லாம் மற்றும் இந்துக்களாக உள்ள விளிம்பு நிலை மக்களின் வழிபாட்டுக் கூடமாக திகழ்ந்து வந்துள்ளது. மேற்படி தர்ஹாவில் ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவதும், உணவு சமைப்பதும் இஸ்லாமியர்களின் வழக்கமாக மட்டும் இருந்துவர - அது இந்துக்களுக்கோ இறந்தோரை தெய்வமாக வழிபடும்  சிறு தெய்வ வழிபாட்டு பண்பாட்டுக் கூறாக விளங்குகிறது.

ஆக; சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் ஆடு கோழி பலியிடுதலுக்கு எதிராக சங்கிகள் எழுப்பும் கலவரக் குரலானது முஸ்லிம்களின் வழக்கத்துக்கு மட்டுமே எதிரானது. ஆனால்; அது இந்து சமய நாட்டார் தெய்வ வழி பாட்டு பண்பாட்டுக்கு எதிரானது என்பதுதான் மிக முக்கியமான விசயமாகும். இதை அனுமதித்தால் எதிர் காலத்தில் குலதெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிடு தலை தடை செய்தால், அதையும் நாம் ஏற்க வேண்டிய நிலை வரும்.

தர்ஹாவின் உரிமையும்... வரலாற்றுப் படிப்பினையும்!

பரங்குன்றம் தர்ஹா வழிபாடு மற்றும் பாத்தியம் சம்பந்தமாக இந்துத்துவா சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது.

இது தவிர, தர்ஹாவின் இடம் சம்பந்தப்பட்ட உரிமை குறித்து 1923-இல் திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் தொடுத்த வழக்கிலும், பின்னர் 1931-இல் தேவஸ்தானம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கிலும், 1996, 1998, 2013 மற்றும் 2023 ஆகிய வழக்குகளிலும் ஒவ்வொரு முறையும் தர்ஹாவின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பரங்குன்றத்தின் மலைக்கு இடையில் உள்ள நெல்லித்தோப்பு- பகுதியிலிருந்து தர்ஹாவரை செல்லும் படிக்கட்டுகள், தர்ஹா கொடிமரம் மற்றும் மலை உச்சி ஆகிய பகுதிகள் தர்ஹாவுக்கு சொந்தமானவை எனவும் நீதிமன்றங்கள் சட்டப்பூர்வமாக உறுதி செய்துள்ளன.

இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் ‘ஸ்கந்தர்’ மலையை மீட்போம் என அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அது அமலில் இருக்கும் போதே உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழங்கிய அனுமதியின் பேரில் பிப்ரவரி 4 ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் மாநில நிர்வாகியும், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா, ‘திருப்பரங்குன்றத்தை ‘அயோத்தியாக’ மாற்றுவோம்’ என்று வன்மத்தைக் கக்கினார்! அவர் அயோத்தியைப் பற்றி பேசியதால் அதன் கடந்த கால கசப்பான அனுபவங்களை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அதேவேளையில், அதிலிருந்து சில படிப்பினைகளை நாம் கற்றுக் கொள்ளவும்; அதிலிருந்து இதுபோன்ற வகுப்புவாத விவகாரங்களை கையாளவும் பொருத்தமான அணுகு முறையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசிய மாகும்.

அயோத்தி விவகாரத்தில் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பலவீனம் எதிலுள்ளது? நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் ஏராளமான போராட்டங்களை அவை முன்னெடுத்தன.  இந்துத்துவாவின் பொருளாதாரக் கோரிக்கை சார்ந்த போராட்டங்களைப் போலவே பொதுவான அணுகுமுறையையே இவற்றிலும் கையாண்டன. மறுபக்கம் மக்கள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களை அணி திரட்டுவதை கைவிட்டு நீதி மன்றங்கள் மேல் அதீதமான நம்பிக்கையைக் கொண்டிருந்தன. - இது மிக அவசியமானது என்றாலும் கூட, அதன் காரணமாக அயோத்தி மற்றும் காசியா பாத்தைச் சுற்றிலும், இந்து முஸ்லிம் மதநல்லிணக்கத்திற்கான பல நூற்றாண்டு வரலாறு மற்றும் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளை பயன்படுத்தி இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் மதச் சார்பற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகள் தவறி விட்டன. இதற்கு பின்னர் 30 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் கேலிக்கூத்தான தீர்ப்பை! வழங்கியது வேறு விசயம்.

விளைவு; அயோத்தியில் சங்கிகள் பாபர் மசூதியை இடிக்கும்போது மக்கள் பார்வையாளர்களாகவே! இருந்தனர் அல்லது மெளனம் காத்தனர்; ஜனநாயக சக்திகளோ மாநில அரசிடமும், ஒன்றிய அரசிடமும் இதைத் தடுக்க வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தன. இதைச் சொல்லும் போது அந்தோனியோ கிராம்சி யின் புகழ்பெற்ற வார்த்தைகளை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.

ஆளும் வர்க்கங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு - அவர்களிடமிருந்தே ஒப்புதலைப் பெறுகின்றன.என்பதே அந்த வரிகள்.

எனவே, திருப்பரங்குன்ற விசயத்தில் முற்போக்கு சக்திகளாகிய நாம், நீதிமன்றங்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்,  மக்கள் மீது முழு நம்பிக்கை வைப்பதும் அவர்களுடன் களத்தில் எப்போதுமே நிற்பது இப்போதைய தேவையாகும். அப்படியானால் இதற்கு எப்படிப்பட்ட அணுகு முறையைக்  கையாளுவது? என்பதைப் பற்றி இப்போது காண்போம்.


பண்பாட்டு அரசியல்...

பிரச்சனையின் சாராம்சத்தை மிகச்சரியாக மதிப்பிடவும், அதற்கான அணுகுமுறையை கையாளவும் லெனினியம் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பதென்ன

திட்டவட்டமான நிலைமைகளைப் பற்றிய திட்ட வட்டமான ஆய்வு முறையாகும்.”

அதன் கண்கொண்டு பார்க்கையில் பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் பாதுஷா வழிபாட்டு முறைக்கு  எதிராக சங்கிகள் முன்னெடுப்பது வெறும் வெறுப்பரசியல் மட்டுமல்ல, அது வலது பிற்போக்கு, ஆதிக்கப் பண்பாட்டு அரசியலுமாகும்!

பண்பாட்டு அரசியல் விவகாரத்தை வழக்கமான எதிர் அரசியல் நடவடிக்கை மூலமாகவோ அல்லது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாகவும் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும் -(இது மிகவும் அவசியமான ஒன்று என்ற போதிலும்) -மட்டும் இத்தகையப் பிற்போக்கு சக்திகளை பின்னுக்குத் தள்ள முடியாது! அவற்றை பண்பாட்டு ரீதியாகவும் ‘எதிர்கொள்வது’ மிக மிக அவசியமாகும். அதே நேரத்தில் இத்தகைய அணுகுமுறை  நவீன தாராளமயப் பொருளாதாரக் கோரிக்கை சார்ந்த போராட்டத்திற்கு  மாற்றானது அல்ல. ஆனால் அதற்கு இணையானது.!

ஆதிக்கப் பண்பாட்டு  அரசியலை எதிர்கொள்ளல்...

பிற்போக்கு சக்திகள் முன்னெடுக்கும் ஆதிக்கப் பண்பாட்டு அரசியலை எதிர்கொள்ளவும் - அதற்கு மாற்றாகவும் முற்போக்கு சக்திகள் உழைக்கும் வர்க்கங்களின் பண்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும்

இதற்கு நாம் உள்ளூர் வரலாற்றிலிருந்தும், தலப் புராணங்கள் மற்றும் இலக்கியங்களிலிருந்தும், வெகுமக்கள் பங்கேற்கும் திருவிழாக்களிலிருந்தும் அதாவது பிரச்சனையாக மாற்றப்படும் பொருளின் சாராம்சத்திலிருந்து - முற்போக்கு பண்பாட்டு சாரத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். பண்டிதர்களுக்கானதாக மட்டும் இருக்கும் முற்போக்கு பாரம் பரிய இலக்கியக் கருத்துக் கருவூலங்களை மக்களுக்கானதாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

பரங்குன்றத்திலும் அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் இந்து-முஸ்லிம் பகைமையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த முயலும் சங்கிகளின் ஆதிக்கப் பண்பாட்டு அரசியலுக்கு மாற்றாக முற்போக்காளர்கள் பரங்குன்றத்தின் பன்மைத்துவக் கூறுகளையும். மத நல்லிணக்கக் கூறுகளையும் உயர்த்திப்பிடிக்கவும் அதனை வளர்த்தெடுக்கவும் வேண்டும். உண்மையில் பரங்குன்றத்தின் சிறப்பே - அது தமிழர்களின் இயற்கை வழிபாடு, பௌத்தம், சமணம், சைவம், வைணவம் மற்றும் இஸ்லாம் ஆகிய சமயங்களின் மத நல்லிணக்கக்கோட்டமாக விளங்குகிறது என்பதேயாகும். இந்த அம்சம்தான் சங்கிகளுக்கு சவாலாகவும் முற்போக்காளர்களுக்கு சாதகமாகவும் விளங்குகிறது. உழைக்கும் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தும் பன்மைத்துவ பண்பாட்டுக் கூறாகவும் திகழ்கின்றது.

தேவை இயக்கவியல் அணுகுமுறை!

பிற்போக்கு சக்திகளை பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் போது வெறும் முற்போக்குத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மட்டும் போதாது! ஏனெனில்; சில முற்போக்காளர்களின் அணுகுமுறைகளில் வறட்டுவாதமும், யாந்திரீகவாதமும், இயக்க மறுப்பி யல்வாதமும் பல நேரங்களில் தலைதூக்குகின்றன. இது பிற்போக்கு சக்திகளை வீழ்த்துவதற்கு சாதகமான நிலைமையை உருவாக்குவதற்கு மாறாக அவர்களது செயல்பாட்டை ஊக்குவிப்பதாக அமைந்திட்ட அனுபவம் ஏராளம் உண்டு.

முக்கியமாக, இது போன்ற தருணங்களில் சிறுபான்மை அடிப்படைவாதிகளின் எதிர்மறையான அணுகுமுறைகள் - பெரும்பான்மைவாத வகுப்பு வாதத்தை விசிறிவிடுகின்றது. இது திருப்பரங்குன்றத்திலும் நடந்தது.  எனவே இவ்விசயத்தில் அனைத்து வகைப்பட்ட முற்போக்காளர்களையும் உள்ளடக்கிய - அதே நேரத்தில் இயக்கவியல் அணுகுமுறையைக் கொண்ட செயல்பாடே பொருத்தமானது. மட்டுமல்ல சரியானதும் கூட; பிரச்சனையின் “உள்ளடக்கம்” எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு “வடிவமும்” முக்கிய மானதாகும்!

இயக்கவியல் அணுகுமுறையின் மையமான அம்சம் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருப்பதும்;  அதன் விளைவாக ஏற்படும் முன்னேற்றத்தை (வளர்ச்சியை) அடுத்தடுத்த கட்டத்திற்கு அளவு ரீதியாக நகர்த்துவதும்-இறுதியில் குணாம்சரீதியில் அதனை மேல்நோக்கி உயர்த்துவதுமாகும்.

இந்த அம்சத்தை பரங்குன்றம் விசயத்தில் எவ்வாறு பொருத்துவது? அந்த மலையைப் பற்றிய தல வரலாறுகளின் பன்மைத்துவக் கூறுகளையும், பங்குனி திருவிழா போன்ற பெருவிழாவின் உள்ளீடாக - இது குறித்த சிறப்பான வர்ணனையை தோழர்.சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலில் காணலாம் - உள்ள மத நல்லிணக்கக் கூறுகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு இலக்கியச் சொற்பொழிவுகள், நிகழ்த்துக் கலைகள், நாடகக் குழுக்கள், பட்டிமன்றம், பல்வேறு மதப்பிரிவினர் மற்றும் சாதிப்பிரிவினரோடு உரையாடுதல் அவர்களை பங்கேற்பாளர்களாக மாற்றுதல்; துண்டு பிரசுரங்கள் மூலம் மக்கள் சந்திப்பை நடத்துதல் போன்ற பல்வேறு வடிவங்களை கையாள வேண்டும்.

குறிப்பாக தமிழில் அர்ச்சனை மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகுதல் ஆகிய கோரிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும்  அதில் மட்டும் திருப்தி கொள்வதும் இயக்க மறுப்பியலாகும்! தொடர்ந்து இயங்குவதே இயக்கவியல் அணுகுமுறையாகும்.

இதற்கான அத்தனை சாத்தியப்பாடுகளும் திருப்பரங்குன்றத்தில் உள்ளன. அதனால் சங்கிகள் உருவாக்கும் கலவர பீதியைக் கண்டோ, திரளும் ‘பக்த’ கோடிகளைக் கண்டோ, முற்போக்காளர்களும், மதச்சார் பின்மையில் நம்பிக்கை கொண்ட மக்களும் கலக்க மடைய வேண்டியதில்லை!




3 கருத்துகள்:

  1. ஒரு பண்பாட்டு வரலாற்றையே பதிவு செய்துவிட்டீர்கள். இயக்கவியல் சார்ந்த அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டுடன் முன்னுரை எழுதியிருக்கிறீர்கள். நல்லிணக்கத்திற்கான களப்பணியாளர்களாக இறங்குவோருக்கு ஒரு கையேடு போல இந்தக் கட்டுரை ஒரு சிறு புத்தக வடிவில் அச்சிட்டு வழங்கப்படலாம். வாழ்த்துகள் தோழர்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் திருப்பரங்குன்றத்தில் நடக்கும் சமீபத்திய விவகாரங்களைப் பற்றி விரிவாகப் பகிர்ந்துள்ளீர்கள். இதில் முக்கியமான விவாதங்கள் மத நல்லிணக்கம், சங்க இலக்கியங்களில் முருகன் வழிபாடு, சமண மற்றும் வைதீக பாரம்பரியங்கள், சங்கிகளின் செயல்பாடுகள், மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சமகால நிலைமை போன்றவை.

    நன்றி!
    ராஜேஷ்

    பதிலளிநீக்கு
  3. தமிழர் பண்பாட்டு வரலாற்றின் ஒரு பகுதியை தெளிவாக பதிவு செய்து உள்ள தோழர் எஸ்ஜிஆர்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு