வியாழன், 26 ஜூலை, 2012

புலம்பெயர் பிரச்சனைகள் குறித்த சில குறிப்புகள்..



குறிப்பு -  ஒன்று

ஆதிமனிதகுலம் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் 
பெயர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறது. இயற்கை உருவாக்கத்தில் எந்த உயிரினங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பறவைகள், விலங்குகள் போன்றவை உணவிற்காகவும், நீருக்காகவும், வாழிடங்களுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர்வது இயற்கையாய் அமைந்துள்ளது. மனித இனம் உலகம் முழுவதும் பரவியதும் இப்படியே.

நமது இலக்கியங்கள்கூட புலம்பெயர்தலை பதிவு செய்துள்ளன. பொதுவான புலம்பெயர்தல் குறித்து "திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே" எனவும்... கல்வி, படையெடுத்தல், பொருள் ஈட்டல், தூதுவராகச் செல்லல் போன்ற தற்காலிக 
புலம்பெயர்தலை "ஓதல் பகையே தூதிவை பிரிவே" என தொல்காப்பியமும், புலம் பெயர்ந்து நிரந்தரமாய் வாழ்பவர்களைப் பற்றி "பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய" என சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது.

வரலாற்று நெடுகிலும் மனிதர்கள் வாழ்வின் சாரம்சத்தை பாதுகாத்திட ஒவ்வொரு 
காலகட்டத்திலும் ஏதோ ஒரு காரணத்திற்காக காலச்சக்கரத்துடன் இணைந்து 
நடந்துகொண்டே இருந்தனர். இயற்கையை புரிந்துக்கொண்ட மனிதன் அறிவியலின் 
உதவியுடன் உழைப்பின் வலிமையால் நிறந்தர வாழ்வாதாரத்தை மேற்கொள்ள துவங்கினான். ஆனால் தனியுடமையும் லாபவெறியும், நாடு பிடிக்கும் ஆசையும் 
இந்த நிரந்தரத்தின் மீது விசையுடன் தாக்குதலை தொடுத்தது. கருப்பர்கள்  அடிமைகளாக கப்பலில் பல பிரதேசங்களுக்கு பிடித்துச் செல்லப்பட்ட கொடூர வரலாற்றின் அடிப்படை மூலதனத்தின் வெறியெடுத்த லாப பசிதான்.

ஆங்கிலேயர் கொடூரமாய் இந்தியாவை சுரண்டிய போது தங்களது செல்வாதாரத்தை 
பெருக்க நமது தேசத்தின் மக்களை அடிமைகளாக, மந்தைகளாக பல பிரதேசங்களுக்கு ஓட்டிச்சென்றனர். தேயிலை தோட்டங்களுக்கும், ரப்பர் காடுகளுக்கும், கரும்பு தோட்டங்களுக்கும், சுரங்கத் தொழிலுக்கும், கட்டுமான பணிகளுக்குமென குடும்பம் குடும்பமாக, தலைமுறை தலைமுறையாக புலம் பெயர்ந்து அடிமைகளாக வாழ்ந்த மக்களின் கண்ணீர் வரலாறு எங்கும் பரவிக்கிடக்கிறது. அவர்களின் மரண ஓலம் காற்றில் சுழன்றுகொண்டே இருக்கிறது.

உயிரியல் ரீதியாக பார்த்தால் உயிரினங்களிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த உயிரினம் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே உயிரினமும் மனிதன் தான் என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் அனுபவத்திலிருந்துதான் வந்துள்ளது.

இன்று பொருளீட்டல், வேலை, கல்வி, மருத்துவம், சாதீயப் பூசல், இனக்கலவரம், வறுமை, வேலையின்மை, உள்நாட்டுப் போர், அயல்நாட்டாரின் படையெடுப்பு, அரசியல் ஆகிய காரணங்கள் புதிதாகப் புலம் பெயர்தலுக்கு காரணமாக விளங்குகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காவும், அணைகளை கட்டவும் அப்பகுதிகளிலிருந்து விரட்டப்பட்ட மக்கள தேசம் முழுவதும் அனாதைகளாக சுற்றித்திரிகின்றனர். இந்த நெருக்கடிகளுக்கு ஆதார சுருதியாய் உலகமயம் திகழ்கிறது. இவைகளிள் தவிர்க்க முடியாமல் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே.

குறிப்பு - இரண்டு

வேலை வாய்ப்பு, நாட்டின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, நாளைய வாழ்வு
என்ற கருத்து சட்டகத்தின் மீதுதான் புலம்பெயர்வும் அதுசார்ந்த துன்பங்களும் நியாயப்படுத்தப் படுகிறது. உன்மையில் இன்று வேலை வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகிப் போன சூழல் ஏதோ தவிர்க்க முடியாமல் நடந்ததல்ல. மிகவும் திட்டமிட்டு மூலதன குவிப்பிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட சூழல் இது. வேலைதேடி அளவுக்கு அதிகமாக உழைப்பாளர்கள் கிடைக்கும் போதுதான் கூலிமலிவான தொழிலாளர்கள் சந்தையில் கிடைப்பார்கள். கூலிப் பட்டாளம் அதிகமாக அதிகமாக குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பதை சாத்தியமாக்குகிறது. தேசம் முழுவதும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கிக்கொண்டே இருக்கிறது. 
விவசாய விலை நிலங்கள் சுருங்குவதால் கிராமப்புற வேலை வாய்ப்பு அடியோடு மறுக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் வேலை தேடி பெரு நகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

தமிழக கிராமப்புற மக்களும், நகர்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் வேலை தேடி பெருநகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும், தொழில் நகரங்களுக்கும் இடம்பெயர்வது ஒருவகையாக இருக்கிறது. குறிப்பாக இவர்களது உழைப்பை கிராமப்புறங்களில் பயன்படுத்த எந்தவித எற்பாடும் இல்லை. கிராமப்புற வயதான பெண்கள் தொடர்ந்து இருந்திடவும், ஓரளவாவது கிராமப்புற வறுமையை  போக்க இடதுசாரிகள் போராடிக் கொண்டுவந்த 100 நாள் வேலை உறுதி சட்டம் நடைமுறையில் பல்வெறு கோளாறுகளால் நாசப்படுத்தப்படுகிறது. இப்படி வேலை தேடி புலம் பெயர்பவர்களின் பிரச்சனை ஒருவகை.

மற்றொருபுறம் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் சென்னை, அதன் சுற்றுப்புறங்கள், கோவை, திருச்சி, மதுரை, ஓசூர், திருப்பூர், கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி நகரங்களை மையங்களாக வைத்து ஏறக்குறைய 10 லட்சம் புலம் பெயர்ந்த தெழிலாளர்கள் பணி புரிவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

அசாம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்பு தேடி வரும் இத்தகைய தெழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு சார்ந்த கட்டிட கட்டுமான பணிகள், சிறிய சிறிய பெறியியல் நிறுவனங்களின் பிரிவுகள், ஸ்டீல் ரேலிங் மில், லேத், பனியன் நிறுவனங்கள், ஆகியவற்றில் தெழிலாளர்களாக, சாலையோர உணவகங்கள்,  நகரின் ஆடம்பர உணவகங்கள் பேன்றவற்றில் உணவு தயாரிப்பு, காவலர் பணி, பண்ணை வீடுகள் பேன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனை வெறொருவகை.

உள்ளூர் புலம்பெயர் தொழிலாளியைவிட வெளிமாநில தொழிலாளிகளே முதலாளிகளால் அதிகம் விரும்பப்படுகின்றனர். காரணம் மொழி தெரியாத பிரதேசத்தில் அவர்கள் சங்கமாய் ஒன்றிணைந்து உரிமையை கோரிட முடியாது. அடுத்து அவர்களுக்கு மிகக்குறைந்த கூலியை கொடுத்து மணிக்கனக்கில் மிகக்கடுமையான உழைப்புச் சுரண்டலை செய்ய முடியும். இதுவல்லாமல் இவர்களை அழைத்து வரும் ஏஜெண்டுகளும் இவர்களின் உழைப்பில் மிகப்பெரிய லாபம் அடைந்திட முடியும். கடுமையான பணிச்சூழலும், மோசமான தங்குமிடமும், தரமற்ற உணவும் அவர்கள் சுகாதாரத்தை காவுகேட்கின்றன. பணியிடங்களில் நடக்கும் பல மரணங்கள் மிக சாதாரணமாக மறைக்கப்படுகிறது.

குறிப்பு - மூன்று

இந்த மாற்றங்களினூடாக  அலைகழிக்கப்படும் பெண்கள் குறித்தும் அவர்தம் பிரச்சனை குறித்தும் அக்கறையுடன் அணுகவேண்டியுள்ளது. கிராமப்புறங்களில் விவசாய நிலங்கள் அழிவதால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அவர்களது மொத்த வாழ்க்கை சுழற்சியும் பாதிக்கப்படுகிறது கழிப்பிடம், விறகு சேமித்து சமைப்பது, அருகாமை வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவை நேரடியாய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவைகளின் தொடர்ச்சியாய் சுகாதாரக்கேடும் உடல்நல பாதிப்பும் அவர்களை தாக்குகின்றன. கடுமையான வட்டிக்கு பணம் பெற்று அதை அடைக்கமுடியாமல் தவிப்பவர்கள் வேறுவழியின்றி தேர்தெடுக்கும் வழி எங்காவது வேலைக்குச் சென்று கடனை அடைப்பதுதான். இந்த வகையிலான வேலைதேடி பல இடங்களுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை சமீபத்தில் உயர்ந்துள்ளது.

பெண்கள் உழைப்பு சந்தையில் மலிவான உழைப்பாக பார்க்கப்படுகிறது. அது ஆணுக்கு இணையான உழைப்பென்றாலும் சமவேலைக்கு சம ஊதியம் என்பது கோரிக்கை அளவில்தான் உள்ளது. பல நிறுவனங்கள் அதிகமாக பெண்களை வேலைக்குச் சேர்க்கக் காரணம் அவர்கள் சங்கமாக இணைவது சிரமம் என்பதை புரிந்துள்ளதாலும்தான். புலம்பெயர் பெண் தொழிலாளிகளுக்கு என்றே திருப்பூர் போன்ற நகரங்களில் சுமங்கலி திட்டம், மாங்கல்ய திட்டம் என்பன போன்ற நவீன கொத்தடிமை திட்டங்கள் அமலாக்கப்படுகிறது. இது போன்ற இடங்களில் பல்வேறு வடிவங்களில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது அதிகரித்து வருகிறது. இளம் பெண்களை மிக எளிதாக ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

கிராமப்புறங்களிலிருந்தும், பல்வெறு மாநிலங்களிலிருந்தும் இத்தகைய கொத்தடிமைகளை பிடித்துவர பல தரகர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியே அழைத்து வருகின்றனர் ஆனால் பணியிடச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. வாழ்வியல் பிரச்சனை நெருக்கடிக்கு உள்ளாகும் போது விஷச்சக்கரத்தில் வீழ்ந்த பிறகு மீள்வதென்பது முடியாத காரணமாய் மாறிப்போகிறது.

எந்த அரசும் இவைகள் குறித்தெல்லாம் அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் உலகமய கொள்கையை அமலாக்குவதில்தான் உற்சாகமாய் செயல் படுகின்றனர். கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, பொதுவிநியோகம், சமூக பாதுகாப்பு, அரசு துறைகள் போன்றவைகளிலிருந்து தங்களது பொறுப்புகளை படிப்படியாக வெட்டிக்குறைத்திடவே விரும்புகின்றனர். அதுதான் உலகமயம் அவர்களுக்கு விதித்துள்ள நிபந்தனை.

குறிப்பு - நான்கு

உலகமயத்தின் இரத்த வெறி ஒரு சில மக்களைத்தவிர பெரும்பான்மையினருக்கு தெரிவதில்லை. உலகமயத்தின் முதற்கட்டம் தொழிற்புரட்சிக்கு முன்பே தொடங்கி விட்டது. 1500 -1800 வரையிலுமான 300 ஆண்டுகளில் வர்த்தக மூலதனம் தனது கடல் பயணங்கள் மூலம் இருண்ட கண்டங்களை வர்த்தகச் சூதாட்டத்தால் வெளிச்சமாக்கியது. அதன் பிறகு எந்திரங்களின்  வளர்ச்சியால் எழுந்த தொழில் புரட்சி இதனை அதிவேகப்படுத்தியது. உற்பத்தி அதிகமாக அதிகமாக உலக மூலதனத்திற்கு சந்தைகள் தேவைப்பட்டது. சந்தைகளை தேடி கிடைத்த நாடுகளையெல்லாம் காலனிகளாக மாற்றினர். நுட்பமாக திட்டமிட்டு அடக்குமுறை மூலம் தொடர்ந்து சூறையாடினர்.

1990 க்கு பிறகு உலக மயத்தின் வளர்ச்சி அதிவேகமாகியது. சோவியத் யூனியன் வீழ்ச்சி அதை எளிதாக்கியது. உலகமயம் மிக இலகுவாக தனிமனித தாக்குதலில் ஈடுபட துவங்கியது. சேமநல அரசுகள் என்ற போர்வையை உலகின் பல நாடுகள் உதறித் தள்ளியது.

உலக மக்கள் மீது சொல்லொணாத் துயரத்தை உலகமயம் திணித்தது. தொழிற்துறை உற்பத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பங்குச்சந்தை, தகவல் தொடர்பு, காப்பீடு, வங்கி, நிதி, கேளிக்கை, நுகர்பொருள், திரைப்படம் போன்ற சேவைத் துறைகளை வைத்தே பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் கொள்ளையடிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் தனித்தன்மையுடன் விளங்குகின்ற பண்பாட்டை சீரழித்து அதில் அடங்கியுள்ள போர்க்குணமிக்க கூறுகளை இல்லாததாக்குவது உலகமய பண்பாட்டு நடவடிக்கையின் முக்கிய முயற்சியாகும். இவற்றின் சமூக விளைவாக பணவெறி, நுகர்வுவெறி, தனிநபர்வாதம், சூதாட்டம், பாலியல் சுற்றுலாக்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் உலகம் முழுவதும் பரவிவருகின்றன. இதையும் கணக்கில் கொண்டுதான் புலம்பெயரும் மக்களின் பிரச்சனையை அனுகவேண்டியுள்ளது.

இன்று நடக்கிற உழைப்புச் சுரண்டலும், கோடிக்கணககான மக்கள் வேலை இல்லாமல் துன்புறுவதும், சொந்த மண்ணை விட்டு அகதிகள் போல கடும் துயரங்களுக்கு நடுவே பிழைப்புக்காக அலைவதும், பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் நமது ஊடகங்களில் பெட்டிச்செய்தியாக சுறுங்கிப்போவதும், பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பொறுத்துக் கொள்ளப்படவேண்டியதுதான் என்ற உபதேசமும், போராடிப் பெற்ற 8 மணிநேர வேலை என்ற உரிமையை 12 மணி நேரங்களுக்கு மேலாக உயர்த்துவதும் மக்களிடம் உள்ள போர்க்குணமிக்க கூறுகளை இல்லாததாக்கிய உலகமய பண்பாட்டு நடவடிக்கையின் முக்கிய முயற்சியாகும்.

இதற்கு எதிராக உழைக்கும் மக்களின் பண்பாட்டை, அவர்களது போர்குணம் மிக்க பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்பது நமது முக்கிய கடமையாக எழுந்துள்ளது. புலம்பெயர்ந்து வரும் தொழிலாளிகளுக்குள் மோதலை உருவாக்க தொடந்து பல அமைப்புகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆணோ பெண்ணோ, உள்ளூர் தொழிலாளியோ வெளிமாநில தொழிலாளியோ அனைவருக்கும் சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்தை இந்த பிரிவினைக்கு எதிராக நிறுத்தி உழைப்பாளி வர்க்கத்தை திரட்ட வேண்டியுள்ளது,  பாலியல் வன்முறைக்கு எதிராக கருத்துருவாக்கமும் களப்பணியும் மிக அவசரத்தேவையாய் எழுந்துள்ளது.

உலகமயம் உருவாக்கி உள்ள நெருக்கடிக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள போராட்ட அலையுடன் நாமும் கைகோர்த்து நிற்கும் போதுதான் நம்பிக்கையின் கீற்று நம்மை உரசி உற்சாகப்படுத்தும். துனிசிய நாட்டின் போராட்ட நெருப்பை இணையதளம் மூலம் உரசி பற்றவைத்தது ஒரு 20 வயது நிரம்பிய இஸ்லாமிய பெண் என்பது வெறும் செய்தி மட்டுமல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக