வியாழன், 9 பிப்ரவரி, 2012

உங்கள் இளைமையை நினைவூட்டும் காமிக்ஸ் புத்தகங்கள்: மாற்றுவெளி ஆய்விதழை முன்வைத்து.


காமிக்ஸ் எனப்படும் சித்திரக்கதைகள் எப்போதும் ஈர்ப்புடையதாகவே இருக்கிறது. இளைமையின் நினைவுகளோடு பயணிப்பதாகவும், ஒவ்வொரு மணிதனுக்கும் எதோ ஒரு தனிப்பட்ட நினைவுகளை சுமந்தாகவும் அது இருக்கிறது. பள்ளி பருவத்தில் சித்திரக் கதைகளுடாகவே பலருக்கு வாசிப்பின் வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.  என்னுடைய இளைமைப் பருவமும் அப்படியே விளைந்தது. சித்திரக் கதைகளின் மீதான ஈர்ப்பு இப்போதும் அப்படியே தொடர்கிறது. ஆனால் அவைகளை தேடிப்படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது உண்மை. 90கள் வரை இளமைப்பருவத்தை எட்டிப்பிடித்தவர்களில்  அம்புலிமாமாவையும் வாண்டுமாமாவையும் சந்திக்காகத தலைமுறை குறைவாகவே இருக்கும். 

கிட்டதட்ட 300க்கும் மேற்ப்பட்ட சித்திரக் கதைபுத்தகங்களை சேர்த்துவைத்து 10 மற்றும் 20 காசுகளுக்கு வாடகைவிட்டது நினைவில் வந்தாடுகிறது. சக பள்ளி தோழர்கள் என்கையில் இருக்கும் ஸ்பைடர் மேனுக்கும், இரும்புக்கை மாயாவிக்கும், வேதாளத்திற்கும் என்னைச் சுற்றிவந்தது இப்போதும் மகிழ்ச்சியான நினைவுகளாக தங்கி இருக்கிறது.

பள்ளி இறுதியண்டுகளை நெருங்கும் சமயம் பாக்கெட் நாவல், க்ரைம் நாவல் பக்கம் கவனம் திரும்பியது. விவேக் - ரூபலா, பரத் - சுசி, நரேன் - வைஜயந்தி சாகசங்களும் அவர்களது அரட்டைகளும், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் ஈர்ப்பான மொழிநடையும், புதிய யுக்திகளுடான கதை சொல்லும் முறையும் ஒரு புதிய உலகத்தை திறந்தது. சுஜாதா ஒருபக்கம் கணேஷ் வசந்துடனும், விஞ்ஞான கதைகளுடனும் வசீகரம் செய்தார். சித்திரக் கதைகளிலிருந்து எழுத்துக்கள் நிரப்பிய நாவல்களை படிக்கும் பழக்கம் மற்றோர் பக்கம் சரித்திர நாவல்களை நோக்கிய  அடுத்து பயணத்தை தொடரவைத்தது. அப்போது சோவியத் நாவல்கள் வேறு ஒரு பாதையை திறந்தது.

கல்லூரி காலத்துவக்கத்தில் நினைவுகள் அழிவதில்லை, உண்மை மனிதன் கதை என இடதுசாரி இலக்கியங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தத்துவார்த்த புத்தகங்கள் அவைகள் சார்ந்த விவாதங்களுடன் படித்த நாட்கள் மறக்க முடியாத நாட்களாய் அமைந்தது. அம்பேத்கரும் பெரியாரும் தவிர்க்க முடியாமல் புத்தக அறையில் நுழைந்து சமூகத்தை புரிவவைத்தனர். மேலும் புதிய அரசியல் சூழலும் உலகமயமும் ததுவார்த்த கேள்விகளை விதைக்க.. அவைகளுக்கான மார்க்சிய அடிப்படை தீர்வும் அது சார்ந்த நூல்களும் தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியத்தை இன்றுவரை தொடர வைத்துள்ளது.
    
இதற்கிடையில் செய்திதாள்களில், மாத வார இதழ்களில் சித்திரக்கதைகளை படிக்கும் போது அவைகளுக்கான நாட்கள் நினைவு பரப்பை அசைத்துச்செல்லும். சமிபத்தில் மாற்றுவெளி ஆய்விதழ் தனது 9 வது இதழை தமிழ் சித்திரக்கதை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. மிகவும் முக்கியமான இதழ் இது. இதற்கு முன்பு கால்டுவெல், இந்திய பொருளாதாரம், கல்வி, ரோஜா முத்தையா நுலகம், நாவல்கள், மாற்று பாலியல், தமிழ் சமூக வரலாறு, போருக்கு பிந்தையா ஈழம் ஆகிய பொருண்மைகளில் 8 இதழ்கள் வந்துள்ள நிலையில் இந்த இதழ் சித்திரக்கதைகள் குறித்த ஆய்வையும், அனுபவங்களையும் பகிர்ந்துக்கொள்கிறது.

தமிழ் அச்சு பண்பாடு: தமிழ்  சித்திரக்கதை சார்ந்த உரையாடலை நோக்கிய தலையங்கமும், தமிழ் சித்திரக் கதைகள் ஒரு அறிமுகம் என்ற சிவக்குமாரின் கட்டுரையும், கட்டங்களுக்கு நடுவில் என்ற ட்ராஸ்கி மருதுவின் கட்டுரை, சித்திரக்கதைகளின் மொழி கட்டமைப்பு என்ற சு. பிரபாவதி கட்டுரை, கதைகதையாம் காரணமாம் அதிலே இந்திர ஜாலமாம் என்ற இரா.திருமுருகனின் கட்டுரை, சிறார் உலகில் சுட்டிவிகடன் படக்கதை என்ற வேலுசரவணன் கட்டுரை, அணில்: மிகைக் கற்பனைக் கதைகளின் முன்னோடி என்ற பி.என்.எஸ்.பாண்டியனின் கட்டுரை, தமிழ் சித்திரக் கதைகள்: விவாதத்திற்கான சில குறிப்புகள் என்ற பா.ரவிக்குமாரின் கட்டுரையும் பல்வேறு தளங்களில் சித்திரக் கதைகளின் பரிமாணங்களை நமக்கு மிகவும் விருப்பத்துடன் பறிமாற்றங்களை செய்கின்றன.

வாசக மனோபாவத்துடன் வலைதளங்களில் சித்திரக் கதைகள் குறித்து எழுதும், சித்திரக்கதைகளை மொழிபெயர்ப்பவர் என பலரின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அதைப்போவே பிரகாஷ் பப்ளிகேஷ்ன்ஸ் - லயன், முத்து காமிக்ஸை வெளியிட்டு வருகிற விஜயன், ஒவியர்கள் ஜெ, அரஸ், ராமு, ம.செ என்கிற மணியம் செல்வம், 25 ஆண்டுகளாக சித்திரக் கதைகளை வாசித்து வருகிற புதுவையை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலீல் ஆகியோரின் உரையாடல்கள் உங்களுக்கு நிச்சயம் சித்திரக்கதைகளின் நுட்பங்களை அறிமுகம் செய்யும்.

சில புத்தக அறிமுகம்,  ஓவியர்கள் அவர்களின் சித்திரக்கதை படைப்புகள், தமிழ் சித்திரக் கதைகளின் கால வரிசையென முடிந்த அளவு நிறைவாக இவ்விதழ் திகழ்கிறது. இந்த இதழை படிக்கு போதும் அதை தொடர்ந்தும் வாசகர்களின் மனதில் ஒரு உற்சாகத்தையும் இழந்த ஒன்றை அடைந்த மகிழ்வையும் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  சித்திரக்கதைகளின் பின்னால் இருக்கும் வலியை உணர செய்யும் இதழாகவும் இருப்பதுதான் இதழ் தயாரிப்பாளர்களின் கூடுதல் சமூக அக்கரையை பறைசாற்றுகிறது. இதழில் கொடுக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மற்றும் வலைப் பூக்களின் அறிமுகம் தொடர்ந்து சித்திரக்கதையின் தொடர்பை நமக்கு உறுதிப்படுத்துகிறது.

மிகவும் அக்கரையான முயற்சியை தொடர்ந்து தமிழ் சமூகத்திற்கு வழங்கிவருகிற மாற்றுவெளி ஆய்விதழை நீங்கள் படியுங்கள், உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் அறிமுகம் செய்யுங்கள். நல்ல புத்தகங்கள் எங்கே இருந்தாலும் உங்களை வந்தடையும் என்பது உண்மைதான். ஆனால் அது காலத்துடன் நடக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக