முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை விட்டுத் தராமல், இரண்டு மாநில மக்களுடைய பாதுகாப்பையும் ஒற்றுமையைப்பாது காக்கும் நோக்கத்தில் பிரச்சனையை அணுக வேண்டும்
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை 1979ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்த அணை பாதுகாப்பற்றது என்று 1979ல் கேரள அரசு பிரச்சனையை எழுப்பியது. அப்போது, மத்திய நீரிவள ஆணையத்தின் ஆலேசனையின் அடிப்படையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அனைத்து வகையான ஆய்வுகளையும் மேற்கொண்டது. இந்த அணை பாதுகாப்பானது என்று உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
நிபுணர் குழுவின் அறிக்கை மீது கேரள அரசு 34கும் மேற்பட்ட பிரச்சனைகளை எழுப்பி, அதற்கெல்லாம் விளக்கம் கேட்டது. அந்த விளக்கங்களுக்கு எல்லாம் அந்த நிபுணர் குழுவில் உள்ள அதிகாரிகள் மிக தெளிவான விளக்கங்களை தந்த பிறகுதான் அதை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் 27.2.2006ல் வரலாற்று தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பை அப்போதே கேரள அரசு ஏற்று அமலாக்கியிருக்க வேண்டும். அந்த தீர்ப்பை ஏற்காதது மட்டுமல்ல, அந்த தீர்ப்பின் மீது ஒரு மறுசீர் ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது கேரளா அரசு. அதனை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு அந்த தீர்ப்பை ஏற்பதற்கு மாறாகதான் கேரள நீர்பாசன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாதவையாக்கும் வகையில், அந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி னார்கள்.
அன்றைய தினம் அந்த சட்டத்திருத்தம் ஏற்புடையதல்ல. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாதவையாக்கும் வகையில் உள்ளதால் ஏற்புடையதல்ல என்று மத்திய அரசு அப்போதோ தெளிவு படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கு செல்ல வேண் டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஆனால் மத்திய அரசுக்கு எப்போதுமே இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த நதி நீர் தாவா பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான முறையில் தலையிட்டு தீர்வு காணுவதில் அக்கறைகாட்டுவதில்லை. இதனால்தான் அன்றைக்கு நம்முடைய உரிமையை வலுப்படுத்துகிற வகையில் நாம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தொடுத்து, அந்த வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின் விசாரணையில்தான் உச்சநீதி மன்றத்தால் முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இப்போது அந்தக் குழுவின் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், கேரள அரசு இப்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற அடிப்படை யில் சட்டமன்றத்தில் தீர் மானத்தை நிறைவேற்றியது. அது மட்டுமல்லாமல் கேரளத்தில் போராட்டங்களையும் நடத்துவது ஏற்புடையது அல்ல.
எனவே, நாங்கள் இந்த நேரத்தில் வற்புறுத்த விரும்புவது எல்லாம், இன்றைக்கு உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள ஐந்து பேர் கொண்ட அந்தக் குழுவின் விசாரணையின் அமைப்பில் பல நிபுணர் குழுக்களை எல்லாம் ஆய்வுக்கு அமைத்து, அந்த அணையின் பலம் உள்பட ஆய்வு செய்து வருகிறது. ஏற் கெனவே அந்த அணை பலமாக இருக்கிறது என்ற தீர்ப்பு வந்திருக்கிற சூழ்நிலையில், மீண்டும் எள்ளளவும் சந்தேக மற்ற முறையில் அந்த அணை யின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டிருக் கிறார்கள். அந்த அதிகாரம் பெற்ற நிபுணர்குழு, வருகிற பிப்ரவரி மாதம் தன்னுடைய இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிகிறது. அதன்மீது உச்ச நீதிமன்றம் உடனடியாக விரைந்து தீர்ப்பை வழங்கி, இந்த பிரச்சனையில் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், கேரளாவில் ஒரு தேவையற்ற உண்மைக்கு புறம்பாக, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பற்றது, அது உடையப் போகிறது என்கிற முறையில் அச்சத்தைக் கிளப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். மேலும், கிராபிக்ஸில் தயாரிக்கப் பட்டு மக்களை குழப்பு கிறார்கள். இதற்கிடையில், டேம்999 என்ற திரைப்படம் மேலும் இந்தப் பிரச்சனையில் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று அமைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதையெல்லாம் பயன்படுத்தி ஒரு அமைதியற்ற நிலைமை அங்கேயும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கேயும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, முதல்வர் கூறியுள்ளதை போன்று அந்த அணை இன்றைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு குழு பராமரிப்பில் அணையை ஒப்படைக்க வேண்டும் என்று நாங்களும் வற்புறுத்து கிறேம்.
ஆனால், அப்படி மத்திய தொழில் பாதுகாப்புக்குழு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் கேரளாவும் ஏற்றுக்கொண்டால்தான் அதை அனுப்பமுடியும் என்று பிரதமர் தெரிவித்ததாக வந்திருக்கிற செய்தி எந்த அளவிற்கு உண்மையோ, இல்லையோ நமக்குத்தெரியாது. ஆனால், அது உண்மையாக இருக்கும் என்று சொன்னால் அது ஏற்புடையது அல்ல. கேரளாவும் ஏற்றுக் கொண்டால்தான் அங்கே தொழில் பாதுகாப்புக்குழு அமைக்க முடியும் என்று சொன்னால், கேரளா ஏற்றுக்கொண்டால் பிரச்சனையே இருக்காது. எனவே, அந்த அணைபாது காப்பிற்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பவேண்டும் . இது நாள் வரைக்கும் இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் ஒரு ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல், நிதானமான முறையில் அணுகிவருவதை வரவேற்கிறேம். இது நிச்சயமாக அரசியல் பிரச்சனை அல்ல. இதை அரசியல் பிரச்சனையாக்கி ஆதாயம் தேடுகிற முறையில் சிலர் ஈடுபடு வதை நான் கவலையோடு இங்கு சுட்டிக் காட்ட விரும் புகிறேன்.
எல்லை மாவட்டமாக இருக்கிற தேனியில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கேரளத்திலேயும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நீண்ட நெடுங்காலமாக சகோதர பாசத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற கேரளா, தமிழக மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாக்கி, மோதலை உருவாக்கி ஆதாயம் தேடுவதற்கான எந்தவிதமான முயற்சிக்கும் யாரும் இட மளித்துவிடக்கூடாது. இன்னும் சொல்லப்போனால், ஒரு சுமுகமான சூழ்நிலை, அமைதியான சூழ்நிலை ஏற்படுகிற பொழுதுதான் இப்படிப்பட்ட எல்லை, நதிநீர் தாவா பிரச்சனைகள், இரண்டு மாநிலப் பிரச்சனைகளில் நல்ல தீர்வை எட்டமுடியும்.
எனவே, இந்தச் சூழ் நிலையில் இன்றைக்கு நாங்கள் விரும்புவது எல்லாம் மத்திய அரசு அதில் அலட்சியமாக இருக்காமல் அவசரமாக தலையிட வேண்டும். உண்மையில் உச்ச நீதிமன்ற விசாரணையில் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கிறபோது, அவை சம்பந்தமாக மத்திய அரசு பேசி எந்த நியாயமான தீர்வும் எட்டமுடியாது. ஆனால், அந்தப் பிரச்சனைகளைத் தவிர்த்து, உச்சநீதி மன்றத் தீர்ப்பு வரும் வரையில் நாம் காத்திருப்போம். அதே நேரத்தில் இரண்டு மாநிலங்களிடையேயும் ஏற்பட்டிருக்கிற பதற்றத்தால் அசம்பாவி தங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய இரண்டு மாநிலத்திலும் உள்ள தமிழர்கள், மலையாள மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. எனவே, மத்திய அரசு இரண்டு மாநிலத்திலேயும் உள்ள மலையாளிகள், தமிழ் மக்களுக்கும் ஆபத்து இல்லாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது நிலவும் பதற்றத்தை போக்கி சட்டம் ஒழுங்கைப் பாது காக்க இரண்டு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேசவேண்டும்.
அத்தகைய பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொண்டு இரண்டு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சணையில் எந்தச் சூழ் நிலையிலும் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். இரண்டு மாநில மக்களுடைய பாதுகாப்பு, ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்ற வகையில் பிரச்சனையை அணுகுவது அனைவருக்கும் பொருத்தமானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
............................................................................................................
முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது
நன்றி; தீக்கதிர் 16 .12 .11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக