சனி, 6 ஆகஸ்ட், 2011

காலத்தின் தேவையாய் எழுந்துள்ள காஃபிர்களின் கதைகள் - நூல் அறிமுகம்

இஸ்மாயில் என்ற பெயருடன் நாதூராம் கோட்சேவால் காந்தியைக் கொலை செய்ய முடிந்ததிற்கான காரணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்காவது குண்டு வெடித்தால் மிக எளிதாக நமக்கான பொதுபுத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ள முடிவதற்கான காரணமாய்!! அது பிற மதவெறியர்கள் வைத்த குண்டாய் இருந்தாலும் கூட.. இந்த ஒப்பிடல் ஏதோ சட்டென நமக்குத் தோன்றியதில்லை. இதன் பின்னால் மிகவும் திட்டமிட்ட ஒரு அடையாள அரசியல் பதுங்கி நிற்கிறது. இஸ்லாமிய மக்கள் பிறருடன் ஒன்றுகலந்து வாழும் கலாச்சாரம் இதனால் எல்லாம் இன்னும் உதிர்ந்துவிடவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை உதிர வேண்டும் என்ற வன்மம் தொடர்கிறது.

இந்த வன்மத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பதிவுகள் மூலமாகவும், கதையாடல்கள் மூலமாகவும் உரத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாய் எழுந்து நிற்கிறது. எனவே நம்மோடு இணைந்து வாழ்கிற 20 சதமான இஸ்லாமிய சமூக சொந்தங்கள் குறித்து நமது எழுத்தாளர்கள் எழுதுவதில் காட்டும் சிக்கனத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. இத்தேவையை உணர்த்துவதாக காஃபிர்களின் கதைகள் தொகுப்பு வந்துள்ளது. 18 எழுத்தாளர்கள்; அவர்களில் எவரும் இஸ்லாமியர்கள் அல்லர். ஆனால் அவர்கள் இஸ்லாம் சமுதாய வாழ்வை அவதானித்து அதை சிறுகதைகளாக வடித்துள்ளனர். இக்கதைகளைத் தொகுத்து மிகவும் முக்கியமான ஆவணமாக எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா வழங்கியுள்ளார். அவரது படைப்புகளைப் போலவே இந்த தொகுப்பும் மௌனமாக ஆனால் ஆழமான கேள்விகளை எழுப்பி நிற்கிறது.

டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் இந்திய தேசமே “அட்டென்ஷன்'' நிலைக்கு வந்து நிலைகுத்தி நிற்பது ஏன்? என்ற வினா உங்களுக்கு எப்போதாவது எழுந்திருக்கும் என்றால் இந்தத் தொகுப்பின் தேவையும் உங்களுக்குப் புரியும்!

தமிழின் முதல் சிறுகதையென அடையாளம் காணப்பட்ட வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் துவங்கி இன்று வரை லட்சக்கணக்கான சிறுகதைகள் இஸ்லாமியர் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவைகளில் எத்தனை கதைகள் இஸ்லாமிய சமூகம் குறித்த பதிவுகளைக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இந்தத் தொகுப்பு நிச்சயம் எழுப்பும். இத்தொகுப்புக்குள் வராத கதைகள் இன்னும் இருக்கலாம். அவைகளையும் தொகுக்க வேண்டியது இன்றைய சமூகச் சூழலின் அவசியமாகப் படுகிறது.

பெருமிதங்களை நிரப்பி, உணர்ச்சிகளைத் தூண்டி சவால்களை முன்நிறுத்தி, எதிரிகள் என சுட்டப்பட்டு அவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கி, அறை கூவல்களைக் கொண்டாடும் மனநிலைமைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்துள்ள இந்துத்துவ வாதிகளின் முன்னால் இத்தகைய நூற்றுக்கணக்கான காஃபிர்களின் கதைகளை தேவைகளைத் தேடி முன்வைக்க வேண்டியது காலத்தின் அவசியம். இந்தத் தொகுப்பில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கதைகள் அணிவகுக்கவில்லை. தேச ஒற்றுமையை வலியுறுத்த வேண்டுமெனில் கோயில், மசூதி, சர்ச் படங்களை போட்டால் ஒற்றுமை பொங்கிவரும் என்ற நினைப்பும் பொதுவாக இருக்கிறது. முற்போக்கு இயக்க ஊர்வலங்களில்கூட ஒரு பூனூல் அணிந்த பார்ப்பனர், குல்லா அணிந்த இஸ்லாமியர், கோட்டு போட்ட ஃபாதர் கைகோர்த்து வருவது போல மதச்சார்பின்மை வலியுறுத்தப்படுகிறது. (அது சரி இந்து என்றால் பிராமணர்கள் மட்டும்தானா?) மற்ற மதங்களுக்கு இடம் எங்கே?

ஆனால் இந்தத் தொகுப்பு அமைதியாய் பேசும் அரசியல் மிகவும் முக்கியமானது. சுப்ரமணிய பாரதி, சுந்தர ராமசாமி, கு.ப.ராஜகோபாலன், அசோகமித்ரன், பிரபஞ்சன், பொன்னீலன், வண்ண நிலவன், எஸ்.பொன்னுத்துரை, சுகுமாரன், நாஞ்சில் நாடன், தஞ்சை ப்ரகாஷ், எஸ். ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், ரமேஷ் பிரேதன், சோ. தர்மன், ஆ. மாதவன், வேல ராமமூர்த்தி, சா.சுப்பாராவ் எனப் பல தலை முறை எழுத்தாளர்களின் எழுத்தினுள் இஸ்லாமியப் படிமம் பதிந்துள்ள விதம் என்ற உளவியலைக் கண்டறிய உதவும் கதைகளின் தொகுப்பு.

இத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதை குறித்தும் அறிமுகம் செய்வது நன்றெனினும் பக்கங்கள் அதற்கு இடம் தராது. இஸ்லாமியர்கள் அல்லாதோரின் எழுத்துக்கள் என்கிற ஓர்மையைத் தாண்டி இக்கதை களுக்குள் இன்னும் நிறைய ஒற்றுமைகள் இழைந்து நிற்கின்றன. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் விதையாய் இந்திய இருப்பில் இஸ்லாமியர் வாழ்வின் நிலைகொள்ளாத் தவிப்பை பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. எந்த ஒரு கதையிலும் இஸ்லாமிய சமூகத்திற்காகப் ''பெருந்தன்மையுடன்'' பரிந்து பேசும் தொனி தட்டையான மதிப்பீட்டில் வராதது கவனம் கொள்ளத்தக்கது.

ஹஸர் தினார், அக்பர் எனும் அப்பா என்ற இரு கதைகளைத் தவிர்த்து மற்ற கதைகள் எல்லாம் சராசரி மனிதர் களின் தினசரி வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன. ஒரு வகையில் அக்பர் என்ற மாமனிதனும், கோபங்களை உடைக்கச் சுற்றியலைந்த மாலிக் காபூரும் சராசரி வாழ்க்கையுடைய மனிதரூபமாய் பார்க்கப்பட வேண்டியவர்களே. மனிதர்களே மகாபுருஷர்களாக மாறுகின்றனர். ஹஸர் தினார் மறுவாசிப்புக்கு உட்படுத்த தூண்டுகிற கதையாக இருக்கிறது.

1920 களிலேயே இஸ்லாமிய சமூகத்தை கரிசனத்தோடும் விமர்சனத்தோடும் அணுகியுள்ள பாரதியும், மனக் கணக்குப் புலியான ஹசன் ராவுத்தரும், தன்வாழ்வில் நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் மறைக்க விரும்பாத பட்டாணியும், பெற்ற மகள் திருமணத்திற்கு பயன் பட்டிருக்க வேண்டிய பணமாகினும் அது வந்தவழி தவறு என்பதால் தன் மகனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாயம்மாவும், ஒரு இந்து திருமணத்தின் நம்பிக்கை சார்ந்த வலியைப் புரிந்து கொண்டு உதவும் மொகிதீன் ஷா என்கிற இன்ஸ்பெக்டரும், தன் தாடியும், சாயலும் ஒரு இஸ்லாமியரைப் போன்று இருப்பதால் அவஸ்தைக்குள்ளாகும் அதனால் தன்னுடைய இறுதி ஆயுதமாய் ஆண் உறுப்பை எடுத்துக் காட்டும் அவலம் நிறைந்த இளைஞனும், ஜன்னல் வழியே காதல் கொண்டவனுக்காக எல்லாம் துறந்த நூரி இறுதியில் அவனையே துறந்ததும், எல்லா சோகங்களையும் தனது வயலின் வழியே இசையாய் அனுப்பும் மெஹருன்னிசாவும் தொகுப்பைப் படித்து முடித்த பல நாட்கள் உங்களுடன் தொடர்ந்து வருவார்கள். கரீம் என்ற பெயர் இருப்பதாலேயே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ''விழிப்பு'' கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. இன்னும் இதில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றிருக்கும். இந்தியாவில் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் என் மீது செலுத்தப்படும் அவமானத்தையும் ஒடுக்கு முறைகளையும் தாங்க முடியாமல் மனம் வெந்து தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன். இப்போது இப்படி யோசிக்கிறேன். நல்லவேளை நான் ஒரு முஸ்லீமாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் பயந்து பயந்தே செத்திருப்பேன். என் நிழலே என்னைத் துரத்த ஒரு எலியைப்போல வளைக்குள் அடைந்திருப்பேன்'' என்று ரமேஷ் பிரேதன் பதிந்துள்ளது நாகரிக சமூகத்தை வெட்கப்பட வைப்பதாகும்.

இந்த புத்தகத்தைப் படிக்கும்போது வாசக மனநிலை எங்கு செல்லும் என்பதற்கு நானே சிறந்த உதாரணமாய் இருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் பிரியாணி என்ற உணவை முதலில் சுவைத்தது நான் பிறந்த பரங்கிப்பேட்டையில்தான். குமத் பள்ளியில் என்னுடைய அம்மா ஆசிரியையாக பணியாற்றிய காலம் அது. மியாங்கடை ரொட்டியும், தில்ஷாத் அக்கா நெய் சாதமும் இஸ்லாமியர்கள் நிறைந்த தெருவில் வாஞ்சையுடன் எங்களை அரவணைத்த முக்காடு அத்தைமார்களும் முப்பத்தைந்து வருடகாலங்களுக்குப் பின் என்னுடைய நினைவலைகளில் எழுந்து வந்தார்கள். சுவாசத்தைப்போல மிகவும் இயல்பாகப் பழகியவர்களை தூரம் வந்தவுடன் மறந்தது மட்டுமல்ல, என்னுடைய எழுத்தில் இதுவரை அவர்களை எங்கும் பதியவில்லை என்ற குற்ற உணர்வும் எழுந்தது. இந்த குற்றவுணர்வு எழுவது நல்லதுதான். இது பற்றிப்படர வேண்டும்.

மிகச்சிறிய மனித வாழ்வின் தூரத்தினை கடக்கும் வழியில் நம்மோடு பயணிக்கும் சகபயணிகளை ஆராயும் நோக்கோடு உற்றுப் பார்ப்பதும், முகம்திருப்பி யோசிப்பதும் பயணத்தை நரகமாக்கும். அதற்கான சூழல் உருவாகியுள்ள இந்தியா போன்றொரு கொந்தளிப்பான தேசத்தில் இதைப்போல் இன்னும் நூறு தொகுப்புகள் வரவேண்டும் என்று கீரனூர் ஜாகிர் ராஜா குறிப்பிடுவதை அப்படியே வழிமொழியலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக