இலங்கையின் மனித படுகொலைகள் ஓய்ந்த அல்லது அப்பாவி தமிழர்கள் ஒழிக்கப்பட்ட பின்பு வெறிபிடித்த இலங்கை ராணுவம் அழிப்பதற்கு யாரும் இல்லாததால் முகாம்களில் இருக்கும் இளைஞர்களை வேட்டையாடி வருகிறது. சரணடைந்த பெண் புலிகளை மிகவும் கேவலமாக வேட்டையாடிய இலங்கை ராணுவம் உலக அளவில் அம்பலப்பட்டு நிற்கிறது. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த இலங்கை அரசின் அதிபர் இன்னும் ரத்த வெறி அடங்கியதாக நடந்துக்கொள்ளவில்லை.
நடந்த படுகொலைகளில் இலங்கை ராணுவத்திற்கு மட்டும்,அல்ல விடுதலை புலிகளுக்கும் பங்கிருக்கிறது.ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் உணர்வு மய அரசியலின் பிரதிபலிப்பு மிகவும் மோசமாய் உள்ளது. இங்கு விடுதலை புலிகளை விமர்சனம் செய்தாலே அவர்கள் இலங்கை அரசின் கைகூலிகளாக, அல்லது துரோகி என தூற்றப்படுவது நடக்கிறது. விடுதலைபுலிகளும் தனி ஈழம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை முடிந்த அளவு களபலி கொடுத்து ஓய்தனர். இப்போது கூட ஐ.நா அறிக்கையின் ஒருபகுதியை மட்டும் எடுத்து போட்டு ஆஹா பார்த்தீர்களா நாங்கள் சொன்னதைதான் ஐ,நாவும் கூறுகிறது என சிலர், தாங்கள் மட்டுமே தமிழின பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கின்றனர். இலங்கை அரசின் கொடூரத்தை மட்டுமல்ல விடுதலை புலிகளின் சர்வாதிகார பலியிடலையும் ஐ.நா பட்டியலிடுகிறது.
தமிழகத்தில் உள்ள பல வீராவேச அமைபுகள் உடனே இலங்கைமீது போர் தொடுக்க வேண்டும் என்றெல்லாம் கதைத்தனர். வார்த்தைகளால் மக்களை உசுப்பேற்றும் கலையில் வல்லவர்கள் பலர் நடக்க முடியாதைதை எல்லாம் பேசினர். போர் நடக்கும் போதும் சரி, நடந்த அழிவுகளின் மிச்சமாய் எஞ்சி இருக்கும் நமது தமிழ் சொந்தங்களை பாதுகாக்கவும் சரி, ஐ.நா சபை தலையிட வேண்டும் என தொடர்ந்து கேட்டுவந்தோம்.
இனி அறிக்கையின் பகுதிகள்....
2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் கொடூரமாக முடிவுக்கு வந்தபிறகு 13 மாதங்களுக்குப் பிறகு ஐ.நா நிபுணர் குழுவை அமைத்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்ஸகி தாரூஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல இது விசாரணைக் குழு அல்ல. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்கிற ரீதியில் விசாரணை நடத்துவது இதன் நோக்கமுமல்ல. இலங்கை அரசை அதன் கடமைக்குப் பொறுப்பாக்குதல் என்கிற அடிப்படையிலேயே இந்த நிபுணர்குழு பணியாற்றியது. அதுவும் ஐ.நா.வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே.
சர்வதேச மனிதநலச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் மீறியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் சில போர்க்குற்றங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அளவுக்கு மிகக் கொடிய குற்றங்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் போர் முடிவுக்கு வரும் வரையில் வன்னிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கியிருக்கிறது.
1
வன்னிப் பகுதியில் முன்னேறிச் சென்ற ராணுவம் மிக அதிக அளவில் குண்டுகளை வீசி, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்றிருக்கிறது. இந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியோடிய சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டனர். இவர்களையே விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் தாக்குதலைச் சமாளித்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்த ஊடகங்களையும் விமர்சித்த சமூக ஆர்வலர்களையும் இலங்கை அரசு பல்வேறு வழிகளில் மிரட்டியும் துன்புறுத்தியும் அடக்கியிருக்கிறது. மர்மான "வெள்ளை வேன்களை' பயன்படுத்தி அரசுக்கு எதிரானவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இப்படிக் கடத்தியவர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள். ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் மிக முக்கியமான தகவல், 3 பாதுகாப்பு வலயப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றியது.
கடுமையான தாக்குதல் நடக்க இருப்பதால், இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சென்று விடுமாறு ராணுவம் முதலில் பொதுமக்களை அறிவுறுத்தியது. இந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் ராணுவம் உறுதியளித்தது. இதனால், பல இடங்களில் சிதறிக்கிடந்த மக்கள் இந்தப் பகுதிகளில் குவிந்தனர். இந்தப் பகுதிகளைப் பற்றிய தெளிவான வரைபடமும் உளவுத் தகவல்களும் ராணுவத்திடம் இருந்தன. அப்படியிருந்தும், பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த ஐ.நா. மையமும் உணவு வழங்கும் பகுதியும் ராணுவத்தால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.
காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் நின்று கொண்டிருந்த கடற்கரைப் பகுதியிலும் இலங்கை ராணுவம் சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தக் கப்பல் வருவது குறித்த தகவல் ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் இதுபற்றித் தெரியும். அப்படியிருந்தும் கப்பலையட்டிய கடற்கரைப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
வன்னியில் இருந்த எல்லா மருத்துமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. இது தவறுதலாக நடந்ததாகக் கூற முடியாது. மருத்துவமனைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது ராணுவத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், குறிவைத்து இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதுபோன்ற தாக்குதல்களால் உணவு, மருந்து வினியோகம் ஆகியவை முடங்கின. வன்னிப் பகுதியில் யாருக்கும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளும் கருவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிகவும் கவனமாகவே இருந்தது. போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் கூறப்பட்டது. இதன் பிறகு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது.
முடிவில் 2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யாரென்றே அடையாளம் காணப்படவில்லை. போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் அரசின் கொடுமைகள் நிற்கவில்லை.
போரில் இருந்து தப்பியவர்கள் பிரத்யேக முகாம்களில் அடைக்கப்பட்டனர். அடையாளம் காண்கிறோம் என்கிற பெயரில் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் முகாம்களில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். முகாம்களில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட சித்திரவதை முகாம்கள் போலவே இவை இருந்தன என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2
இலங்கையில் நடந்த உச்சகட்ட போர் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போர் நடக்கும் பகுதியில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. தங்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
போர் நடந்து கொண்டிருக்கும்போது கட்டாய ஆளெடுப்பு நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். போர் உச்சகட்டத்தை எட்டியபோது, ஆளெடுக்கும் பணி தீவிரமாக இருந்தது. எல்லா வயதினரையும் தங்களது படையில் விடுதலைப்புலிகள் சேர்த்துக் கொண்டனர்.
பாதுகாப்புக்காகப் பதுங்கு குழிகளைத் தோண்டுவதற்குப் பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்குக் கூடுதலான ஆபத்து ஏற்பட்டது.
2009-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு, சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
போர் உச்சகட்டத்தை எட்டியபோது, மருத்துவமனைகள், பொதுமக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் போன்றவற்றை ஆயுதங்கள் பதுக்கி வைப்பதற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். தற்கொலைப் படைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர் என்று ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.
3
இவற்றின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளை 5 வகையாக ஐ.நா. நிபுணர் குழு பிரித்திருக்கிறது.
1. குண்டுகளை வீசி பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொன்றது,
2. மருத்துவமனைகள் மற்றும் மனிதநலப் பணிகளுக்கான இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது,
3. பொதுமக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்கவிடாமல் செய்தது
4. போரில் கொல்லப்பட்டவர்கள், தப்பியவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்,
5. போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகங்கள், அரசு எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை ஆகியவற்றையே நம்புவதற்குரிய 5 குற்றச்சாட்டுகளாக ஐ.நா. குழு கூறுகிறது.
இதுபோல்
1. பொதுமக்களைக் கேடயமாக பயன்படுத்தியது,
2. தங்களது பிடியில் இருந்து தப்பியோட முயன்றவர்களைக் கொன்றது,
3. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களைப் பதுக்கியது,
4. குழந்தைகளைப் படையில் சேர்த்தது,
5. கட்டாயமாக வேலை வாங்கியது,
6. தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொன்றது ஆகிய விடுதலைப் புலிகளுக்கு எதிரான 6 வகையான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
4
இவைகளுக்கு பிறகு ஐ.நா அறிக்கை...
போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனிதநல மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணையை அரசு உடனடியாகத் துவக்க வேண்டும்.
வன்னி போரில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்கள் ஆகியோருக்கான குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் துணை ராணுவப் படையினரின் அத்துமீறல்களை நிறுத்துவது, போரில் இறந்து போனவர்களின் உடல்கள், அஸ்தி உள்ளிட்டவற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பது, இறந்து போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை உரிய மரியாதையுடன் எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது, போரில் பிழைத்தவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளைத் தருவது, முகாம்களில் வசிப்பவர்களை உடனடியாக விடுவிப்பது, மறுகுடிமயர்வுப் பணிகளை மேற்கொள்வது, இடைக்கால நிவாரண உதவிகளைச் செய்வது.
கடத்தப்பட்டு பின்னர் மாயமானவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.
அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்குத் தொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கொடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாதவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். மக்கள் கூடுவதற்கும், இடம்பெயர்வதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
சில நீண்டகால நடவடிக்கைகளையும் ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது. இனப் பிரச்னை, பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்த கடுமையான போர் உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
இறுதி கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தனது பொறுப்பை ஏற்று, அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும். என அறிக்கை கூறுகிறது.
விரைவில் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றிட உலக நாடுகளின் நிர்பந்தத்தை இந்தியா கோரிட வேண்டும். பிணந்திண்னிகளான காங்கிரஸ் அதை செய்யாது. மத்திய அரசை தலையிட வைக்க வலுவான குரலை நாம் எழுப்ப வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக