மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவளித்து அவரை வளர்த்தெடுக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு அதிகாரிகளை, இங்குள்ள தூதரக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் உள்விவகாரங்களில் இங்குள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தலையிட்டு வந் தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகவே இருந்தது. விக் கிலீக்ஸ் கேபிள்கள் மூலம் ஆவணங்களாக இந்த சதிவேலைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க நிலைமை பற்றி அக்டோபர் 20, 2009 (கேபிள் எண் : 230353) அன்று கொல்கத்தா அமெரிக்கத் தூதரக அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிள், அம்மாநிலத்தில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என்று கோருகிறது. 34 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சியைக் கவிழ்க்க, மம்தா பானர்ஜியை வளர்த்துவிட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி பெத் ஏ பெய்ன் கையெழுத்திட்ட கேபிள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அவர் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கும் தகுதியைப் பெற்று விட்டாரா என்ற சந்தேகத்தையும் அந்த கேபிள் எழுப்பியுள்ளது. “வெளிப்படையாக அவரது கட்சி எழுப்பும் முழக்கங்களை எல்லாம் மீறி, தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட பானர்ஜி தலைமையில் அமையும் அரசு அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படக்கூடியதாக இருக்கும். அதனால் பானர்ஜியைத் தொடர்ந்து வளர்த்து விடுவதில் அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்...” என்று அந்தக் கேபிள் கூறுகிறது.

விக்கிலீக்சிடமிருந்து இந்தக் கேபிள் விபரங்களைப் பெற்றுள்ள தி இந்து ஆங்கில நாளிதழ் ஏப்ரல் 20ந் தேதியிட்ட இதழில் செய்தி வெளி யிட்டிருக்கிறது. மேலும் அந்த கேபிள் கூறுவதாவது : “நிதானம் கொண்டவ ராக, வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்பவராக அவர் உண்மையிலேயே மாறியுள்ளாரா அல்லது வெறும் அரசியல் ஒப்பனைதானா என்ற சந்தேகம் அப்படியேதான் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் நான்காவது மாநிலத்திற்கு தலைமை தாங்கும் பெண்மணியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பது பொதுக்கருத்தாக உள்ளது.”

“மம்தா பானர்ஜி : களப்போராளி முதல் வருங்கால முதல்வர் வரை” என்ற தலைப்பிலான கொல்கத்தா தூதரகக் கேபிள் இவ்வாறு கூறுகிறது: “2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், பிராந்தியக் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரசை மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக மாற்றியது. ரயில்வே அமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் தன்வசம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு வருங்கால முதல்வர் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். அவருடைய ஆதரவாளர்களும் சரி, விமர்சகர்களும் சரி, அவடைய இந்த புதிய அந்தஸ்தை ஒப்புக் கொண்டாலும், இது புதிய தலைமையா அல்லது வெறும் ஒப்பனைதானா என்கிற கேள்வி அப்படியேதான் உள்ளது.”

தொழில்துறைக்கு எதிரானவர் என்ற முத்திரை அவர் மீது இருந்தாலும், தொடர்ந்து நிறுவனங்களை திருப்திப்படுத்த மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைக் கவர்ந்திழுத்திருக்கிறது. “தொழில் நிறுவனங்களை நாடுகிறார் மம்தா” என்ற தலைப்பில் உள்ள கேபிள் கூறுவதாவது : தன் மீது விழுந்துள்ள தொழில்துறைக்கு எதிரானவர் என்கிற முத்திரையை நீக்க கொல்கத்தாவின் தொழில்நிறுவனங்களை மம்தா பானர்ஜி திருப்திப்படுத்த முனைகிறார். பல முதலாளிகளைத் தனது ஆலோசகர்களாக நியமிக்கிறார். சிறிய கார் தயாரிக்கும் டாடாவின் ஆலையை வெளியே துரத்திவிட்ட மம்தாவின் நடவடிக்கையை தொழில் நிறுவனங்கள் மறக்கவில்லை. மாற்றம் ஏற்படலாம் என்பதால் மம்தா பக்கம் தொழில் நிறுவனங்கள் சாய்கின்றன.”

முதல்வராகும் அளவுக்கு தகுதி பெற்றிருக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பிக் கொண்டே, எப்படியாவது 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜியை வளர்த்து விட வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் முயற்சி, உள்விவகாரங்களில் தொடர்ந்து அந்த நாடு தலையிடுகிறது என்பதையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பைக் கண்மூடித்தமாக பின்பற்றுகிறது என்பதையும் அம்பலப்படுத்துவதாக இந்தக் கேபிள்கள் அமைந்துள்ளன.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark