இந்திய வரைபடத்தில் ஒரு புள்ளிபோல தோன்றும் உத்தபுரம் என்ற கிராமம் தீண்டாமைக் கொடுமையால் தேசத்தின் கரும்புள்ளியாக மாறி உள்ளது. அங்கிருந்த 600 அடி தீண்டாமைச் சுவரை இடிக்க கடுமையாண போராட்டம் நடத்திய பிறகு 10 அடி சுவர் மட்டும் இடிக்கப்பட்டு ”ஆஹா! பாருங்கள் உத்தப்புரம் உத்தமபுரமாக மாறி விட்டது” என்று திமுக அரசு மார்தட்டிக்கொண்டது. ஆனால் அங்கு தலித் மக்கள் வாழ்க்கை மிகவும் கொடுமை மிக்கதாக இருந்தது மாறவே இல்லை. எத்தனை முறை மனு கொடுத்தும் அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் திரும்பிப் பார்க்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அங்குள்ள் தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதியால் மட்டுமல்ல காவல்துறையாலும் அவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அவர்கள் செய்கிற ஒரே குற்றம் தீண்டாமையை எதிர்த்துப் போராடுவதுதான்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு அரசு உருவாக்கிய பொதுப்பாதையில் தலித் மக்கள் “ஆட்டோ” உள்ளிட்ட எந்த வாகனத்திலும் செல்லக்கூடாது என்ற ஆதிக்க சக்திகளின் நிலைபாட்டை காவல்துறையே ‘ஷிப்டு’ போட்டு அமல்நடத்திவரும் நிலையில், காலம்காலமாக முத்தாலம்மன் கோவில் அரசமர வழிபாடு தலித் மக்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமையாக இருந்துள்ளபோது, அதனை ‘சுவர் வைத்து’ அடைத்துக்கொண்டு தலித் மக்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி மறுப்பதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்கள், வளர்ச்சிப் பணிக்கான நிதியிலிருந்து ரூ. 3.75 லட்சத்தை உத்தப்புரம் தலித் மக்கள் மற்றும் இதர பிரிவினரின் பயன்பாட்டிற்காக பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க ஒதுக்கியும் அரசு அதை கட்டாமல் காலம் தாழ்த்தி வருவது ஆதிக்க சாதிகளின் வற்புறுத்தலால்தான். தொடர்ந்து ஏதாவது பிரச்சனை எனில் உத்தப்புரத்தில் உள்ள மொத்த தலித் மக்கள் மீதும் காவல்துறை வழக்குப் போடுவதும், ஒவ்வொரு வழக்கிலும் 300 பேர், 500 பேர் என பெயர் குறிப்பிடாமல் எண்ணிக்கையைச் சேர்ப்பதும், தலித் மக்கள் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும்போதெல்லாம் மிகப் பெருவாரியான ஆண்கள் உள்பட தலித் மக்களை காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கி கைது செய்வதும் வழக்கமாக உள்ளது.
இந் நிலையில் அங்கு சட்டத்தின் ஆட்சியை அமலாக்கக் கோரி 12.07.10 அன்று மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது தமிழக அரசின் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் காவல் துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன்மாறன், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் படுகாயமடைந்தனர். பெண்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியதோடு நில்லாமல், தலைவர்கள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 384 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டார்கள். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணம் என்ன? "அம்பேத்கர் சுடர்" விருது பெற்ற முத்தமிழ் வித்தகர் பல காரணங்களை அறிக்கைகளாக இனி வெளியிடலாம்; தம்பிகளுக்கு கடிதம் எழுதலாம். அவரது குடும்ப சேனல்களும், சொந்தங்களின் அலைவரிசைகளும் பொய்களுடன் வலம் வரலாம் ஆனால் உண்மையை யாரும் மறுக்க முடியாது.
உத்தப்புரத்தில் அரசு திறந்து விட்ட பொதுப்பாதையை தலித் மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும், நிழற்குடை அமைக்க வேண்டும், அரசமர வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த தேசம் ஜனநாயக நாடு என்று மீண்டும் மீண்டும் வெட்கம் இல்லாமல் அழைக்கப்படுகிறது. உத்தப்புரத்தில் ஆதிக்க சாதியினர் அகங்காரத்தை தடுக்கமுடியாமல் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்து நிற்பதற்குப் பெயர் ஜனநாயகம்?
தலித் மக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் தலைவர்கள் எடுத்துரைத்தனர். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல்துறை உதவி ஆணையர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர். அரசு திறந்து விட்ட பாதையை தலித் மக்கள் பயன்படுத்தி வருவதாக மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன் கூறினார். அதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பாதையை பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை எனக்கூறிக் கொண்டே, எங்களை அன்று உத்தப்புரத்தில் வாகனத்தில் செல்ல விடாமல் காவல்துறை தடுத்தது என சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் குற்றம் சாட்டினார். மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் பொய் சொல்லக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.
'கடந்த பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதுவரை 4 மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தலைவர்கள் வலியுறுத்தினர். தான் நேரடியாக வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார். அதற்கு பதிலளித்த தலைவர்கள், 'உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும் தலித் மக்களுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவித்துள்ளனர். அந்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள். ஒவ்வொரு ஆட்சியரும் வந்து பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்காத நிலை தொடரக் கூடாது. இன்னும் எத்தனை காலம்தான் தலித் மக்கள் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள்?' என வினா எழுப்பினர்.
'இது குறித்து அதிகாரிகளிடம் பேசிவிட்டுக்கூட சொல்லுங்கள் காத்திருக்கிறோம்' என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆட்சியரிடம் கூறினார். ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியர், 'பொதுப்பாதையில் தலித் மக்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை கண்காணிப்பாளருடன் பேசியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் அந்த நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற விஷயங்கள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. உத்தப்புரம் சென்று விட்டு வந்துதான் பேச வேண்டும்' என்றார். 'அதுவரை நாங்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் உத்தப்புரம் சென்று விட்டு வரும் வரை வெளியே காத்திருக்கிறோம்' என டி.கே.ரங்கராஜன் கூறி விட்டு தலைவர்களோடு வெளியேறினார்.
அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமைதியான முறையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அப்போது அங்குவந்த மாநகர் காவல்துறை ஆணையர், எம்.பாலசுப்ரமணியன், தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் அடித்து வண்டியில் ஏற்றுங்கள் என உத்தரவிட்டதும், காவல்துறையோடு சேர்ந்து கொண்ட அதிரடிப்படையினர் ஒவ்வொருவரையாக குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று தாக்க ஆரம்பித்தனர். தடுத்த பெண்கள் மீதும் கடுமையாகத் தாக்கினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி. சம்பத்தை சூழ்ந்து கொண்ட காவல்துறையினர், அவர் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜைத் தூக்கி வந்து மிருகத்தனமாக தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், என்.நன்மாறன் ஆகியோரை மக்கள் பிரதிநிதிகள் என்றும் பார்க்காமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச்சென்று பேருந்தில் எறிந்தனர் அதிரடிப்படையினர். காவல் துறையினரோடு, மப்டியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த காவலர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார். பெண்களை நடுரோட்டில் மானபங்கம் செய்வது போல தலைகீழாகத் தூக்கிச் சென்று ஆண் காவலர்கள் கேவலப்படுத்தினர்; அவர்களையும் தாக்கினர்
இத்தாக்குதலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம். தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வேலம்மாள், முத்துராணி, முத்து பேயாண்டி, நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பாலசுப்ரமணியன், பி.தேவி, செங்குட்டுவன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒவ்வொருவரையும் கைது செய்து குண்டு கட்டாகத் தூக்கி வந்த காவல்துறையினர், பலரின் செல்போன்களை பறித்துக் கொண்டனர். காவல்துறை தாக்குதலில் பி.சம்பத், சாமுவேல்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, செங்குட்டுவன் ஆகியோர் மயக்கமடைந்தனர். கடைசியாக டி.கே.ரங்கராஜன் எம்.பி மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்தபோது, பெண்கள் அவரைக் கேடயம் போல சூழ்ந்துகொண்டு காவல்துறையினரின் தாக்குதலை தங்கள் மீது வாங்கிக் கொண்டனர். கடைசியாக அனைவரையும் அடித்து வாகனங்களில் ஏற்றிய காவல்துறையினர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று டி.கே.ரங்கராஜனை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
காவல்துறையினரின் இந்த திட்டமிட்ட வன்முறையால் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. செருப்புகள், பேனாக்கள், சில்லரைக் காசுகள் அப்பகுதியில் சிதறிக்கிடந்தன. காவல் துறையினரின் இத்தாக்குதலைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சென்று கதவுகளைத் தாழிட்டுக் கொண்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களை தமுக்கம் மைதானத்தில் அடைத்தது. பலமணி நேரமாகியும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. பிற்பகல் 2.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நல்லதங்காள், விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தி.மு.கழகத்தின் பத்திரிக்கையான முரசொலியில் இந்தப் பிரச்சனை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக கட்டுரை எழுதி மகிழ்கிறார் முதல்வர். மாவட்ட ஆட்சியர் 30 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியதும் அதை அப்படியே எழுதிக்கொடுங்கள் அல்லது பத்திரிக்கையாளர்களிடம் சொல்லுங்கள் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கேட்கிறார். இதில் ஏதாவது ஒன்று நடந்திருந்தாலும் இவ்வுளவு பெரிய பிரச்சனை எழுந்திருக்காது. எழுதிக்கொடுப்பதில் ஆட்சியருக்கு என்ன சிரமம்? சிரமம் எதுவும் இல்லை, அவருக்குத் தெரியும் உத்தபுரத்தின் தலித்துகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்று. இப்பிரச்சனை துவங்கி இவர் நான்காவது ஆட்சியர். இதில் திட்டமிட்டு பிரச்சனையை உருவாக்கியது யார் என்று கலைஞர்தான் சொல்ல வேண்டும்.
மனசாட்சி உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்வார்களா? ஒரு சிறிய கிராமத்தில் உள்ள தீண்டாமைப் பிரச்சனையை தீர்க்க முடியாத தமிழக அரசும் காவல்துறையும் போராட்டத்தில் வந்த பெண்களிடம் தனது வீரத்தைக் காட்டுவது முறையா? பெண்களை சேலை அலங்கோலமாக ஆண் காவலர்கள் இழுத்து வருவது ஜனநாயகமா? காவல்துறைக்கு போட்டோ எடுக்கும் ஒரு அயோக்கியன் போராட்டத்திற்கு வந்த மாணவனை தலையில் மிதிப்பதை ஆதரிக்கலாமா? பொதுப்பாதையை அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சாதியினரிடம் வீராதி வீரர்களான காவல்துறையின் தடிகள் நீளாதது ஏன்? கேள்விகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. வழக்கம் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் இந்த அரசு கள்ள மெளனம் சாதிக்கிறது. இப்படி தடியால் அடித்து மண்டைகளைப் பிளந்து உரிமைக்கான போராட்டத்தை அடக்கிவிடலாம் என்று கலைஞர் நினைத்தால் அது பகல் கனவாக மாறும் என்பதை அவர் உணர்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக