ஞாயிறு, 29 நவம்பர், 2009
தீண்டாமைக்கு எதிரான சி.பி.எம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா?
( தீண்டாமைக்கு எதிரான சி.பி.எம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா? இந்த கட்டுரை கீற்று இணைய தளத்தில் நடந்த உரையாடல் மறு உரையாடல் தொகுப்பு)
- 1 -
மார்க்சிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம் என்ற தலைப்பில் முனைவர் வே.பாண்டியன் சமீபத்தில் கீற்றில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒருவர் எழுதும் கட்டுரையில் தனக்கு தோன்றும் கருத்தை முன்வைக்க உரிமையுண்டு. அது கட்டுரையாளரின் கருத்து சுதந்திரம். ஆனால் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ஒரு இயக்கத்தின் மீது சேற்றைவாரி இறைப்பது நாகரீகம் அல்ல. அதே போல தான் விரும்பும் நிலைபாட்டை அனைவரும் எடுக்க வேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல.
அவரது அந்த கட்டுரையின் சாரம் இதுதான்.
மார்க்சிஸ்ட் கட்சி விடுதலைப்புலிகளின் நிலைபாடுகளை ஆதரிக்க வெண்டும், இலங்கைப் பிரச்சனையில் விமர்சனம் செய்யக்கூடாது. இலங்கையில் தனிநாடுதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தீண்டாமையெல்லாம் ஒரு முக்கிய பிரச்சனையே அல்ல, எனவே இலங்கை பிரச்சனை தீர்ந்தவுடன் அதை பார்த்துக் கொள்ளலாம். இந்த கருத்தைதான் முனைவர் வே.பாண்டியன் சொல்ல வருகிறார். அதை நேரடியாக சொல்லும் நேர்மை இல்லாமல் ஆலயநுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்துகிறார்கள் எனத் துவங்கி அவரும் குழம்பி படிப்பவர்களையும் குழப்புகிறார். முனைவர் அல்லவா?
அவரை போல சுற்றிவலை(ளை)க்க தேவையில்லை, அவருக்கான பதிலை நேரடியாக சொல்லலாம். இலங்கையில் இருக்கும் வஞ்சிக்கப்பட்ட, வாழ்க்கையை இழந்துநிற்கும் அப்பாவி தமிழ் மக்களுக்காகத்தான் குரல் கொடுக்கமுடியுமே அல்லாது புலிகளின் அனைத்து நிலைபாடுகளையும் ஆதரிக்கமுடியாது. புலிகளின் அனைத்து நிலைபாடுகளையும் ஆதரிக்காதவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள் என்ற குற்றச்சாட்டு மிகவும் பாசிசதனைமை வாய்ந்தது என்பதை இவரைப் போல முனைவர்கள் உணர்வதில்லை. இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட பின் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உலகத்திற்கு இரண்டு வாய்ப்புகளே இருப்பதாகக் கூறினார். ஒன்று அமெரிக்கா பக்கம் நிற்க வேண்டும் அதாவது யோக்கியன் எல்லாம் என்பக்கம் வா! அப்படி நிற்காதவர்கள் பின்லேடன் ஆதரவாளர்கள், அதாவது அயோக்கியன் கூட்டாளி என்றார். (தமிழ் தேசியவாதி அய்யா முனைவரே.. சார்சு புசு என்று கூட தங்களை அழைத்துக்கொள்ளுங்கள்) அதேபோல தமிழகத்தில் சில நபர்கள் புலிகளை கேள்வி கேட்காமல் ஆதரித்தால்தான் இலங்கைப் பிரச்சனையை பற்றி பேச முடியும் இல்லையெனில் பேசுபவர்கள் அங்கு நடக்கும் கொலைகளுக்கு ஆதரவான நிலைபாடு எடுப்பதாக முத்திரை குத்துகின்றனர். இந்த உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தனர் என்பது இருக்கட்டும், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான அப்பாவி தமிழ்மக்களைவிட இவர்களுக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதுதான் முக்கியமாகப்படுகிறது.
1983 முதல் மார்க்சிஸ்ட் கட்சி என்று ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதேசம்தான் தீர்வு என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போதும்தான். இன்றைய அம்மக்களின் நிலையை முதலில் மாற்ற அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்பதை விடுத்து, போரை முடித்த ராசபக்சே மீள்குடியமர்த்துவதை தாமதப்படுத்துவதை எதிர்த்து, அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் விவசாயம், சுகாதாரம், வேலை, கல்வி போன்ற அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த அரசியல் ரீதியாக நிர்பந்தங்களை உருவாக்குவதை விட இப்போது முதன்மைப் பணி வேறெதுவும் இல்லை. இதற்காக அனைவரும் தமிழகத்தில் போராடுவதுதான் அறிவுடைய செயலாக இருக்கும். இப்படி மாற்றுக் கருத்தை முன்வைத்தால் அதற்கும் ஒரு கூட்டம் இலங்கை கைக்கூலிகள் என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் இவர்களால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று சொல்லத் தெரியாது. கொஞ்சம் கூட கூச்சமின்றி இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு என்று எழுதுவது கயமையின் உச்சகட்டம். ஆதாரம் இல்லாமல் யாரும் யார்மீதும் குற்றம் சுமத்த முடியும் என்பதை கட்டுரையாளர் உணர்வது நல்லது. ஆக இணைய தளத்தில் இடம் கிடைப்பதாலும், நேரம் கிடைப்பதாலும் ஆதாரமற்ற எதையும் எழுதுவது __________ சமம். கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க. இவர் எழுதுகின்ற கட்டுரையைப் படித்தவுடன் ஆதவன் தீட்சன்யா எழுதிய இது வேறு மழை கவிதைதான் நினைவுக்கு வந்தது.
- 2 -
அடுத்து முனைவரின் அரிய கண்டுபிடிப்புக்கு வருவோம். "மார்க்சிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம்". இதை கண்டுபிடித்து அவர் அடுக்கும் ஆதாரங்களும், தீர்வும் புல்லரிக்க வைக்கிறது. மார்க்சிஸ்டுகளின் குறைந்த பட்ச வரலாற்றைக் கூட தெரிந்துக்கொள்ளாமல், நமது நாட்டின் சாதிய அமைப்பின் அழத்தை, அதன் வெளிப்பாட்டு தளங்களை புரிந்துக்கொள்ளாமல் முனைவர் எழுதியது நகைப்பிற்குறியது. அதே போல மார்க்சிஸ்டுகள் ஏதோ ஆலய நுழைவுப் போராட்டத்தை மட்டுமே நடத்துவது போலவும் அதனால் தமிழகத்தில் சாதிகளுக்கிடையே பகைமை உண்டாகி பழந்தமிழர் ஒற்றுமை சிதைந்துவிடும் என்றும் கவலைப்படுகிறார். இப்போது பழம் பெருமை உள்ள தமிழர்கள் நிலையைப் பார்ப்போம்.
ஆலயங்களில் நுழையத் தடை, கோயில் விழாக்களில் பாரபட்சம், இரட்டை டீ கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட்கார முடியாமல், பொதுக்குழாய்களில், கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாமல், குளங்களில் குளிக்க முடியாமல், பொதுப்பாதைகளில் நடக்கமுடியாமல், குடைபிடிக்க முடியாமல், செருப்பு போட முடியாமல், தோளில் துண்டு போடமுடியாமல், பொது மயானத்தை பயன்படுத்த முடியாமல், தனி மயானத்திற்குப் பாதை மறுக்கப்பட்டு, சலூன்களில் முடிவெட்ட முடியாமல், துணிகளுக்கு இஸ்திரி போட முடியாமல், பிணக்குழி தோண்ட கட்டாயப் படுத்தப்படுவது, மலம் அல்ல கட்டாயப்படுத்தப்படுவது, சாவு சேதிச் சொல்ல கட்டாயப்படுத்தப்படுவது, தப்படிக்க கட்டாயப்படுத்தப்படுவது, செத்த விலங்குகளை அப்புறப்படுத்த கட்டாயப்படுத்தப்படுவது, தலித் பெரியவர்களை ஒருமையில் அழைப்பது, தலித் பெயரில் மரியாதைப் பகுதியை அழைக்காமல் விடுவது, தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அவர்களை துன்புறுத்துவது, சாதியின் பெயரால் திட்டுவது, தலித் தரும் பணத்தை கையால் தொடாமல் இருப்பது, தலித் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிமை மறுப்பது, உரிமையை நிலைநாட்டினால் படுகொலை செய்வது, தலித் பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் தடுப்பது, பள்ளிகளில் தலித் மாணவர்களை பாரபட்சமாக நடத்துவது, கிராம பொது சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்தாமல் தடுப்பது, தலித்துகள் நிலங்களை அபகரித்து திருப்பித்தர மறுப்பது, பொது விநியோகம் - அரசு அலுவலங்களை தலித் குடியிருப்பு பகுதியில் அமைக்க மறுப்பது, தலித் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை செய்துதர மறுப்பது, தலித் மக்களிடம் காவல் துறையின் பாரபட்சம் என தொடர்கிறது.... அதாவது பச்சைத் தமிழன் மற்றொரு பச்சைத் தமிழன் மீது தொடுக்கும் தாகுதல்களில் குறைந்தபட்ச பட்டியல் இது.
இது ஏதோ கற்பனையில் பட்டியலிடப்பட்டது அல்ல. தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்து, தீண்டாமை குறித்த சர்வே எடுத்தது. உண்மை நிலையை பட்டியலிட்ட பின்பு தமிழக அரசு ஏழாயிரம் கிராமங்களில் தீண்டாமை நிலவுவதை ஒப்புக்கொண்டது.
குடும்பத்தில் பெண்களை அடுக்களைக்குள் ஒதுக்கி வைப்பது எப்படி இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோ அப்படி ஊருக்கு வெளியே சேரி என்ற பெயரில் தலித் மக்களை ஒதுக்கி வைப்பதும் சமூக பொது புத்தியில் இயல்பாய் இருக்கிறது. இந்தியாவில் ஒரு அமெரிக்க அளவும், தமிழகத்தில் பாதி இலங்கை அளவும் மக்கள் தொகையில் உள்ள தலித் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த மண்ணில் வர்க்கம் இருக்கிறது. அதற்குப் பக்கதிலே சாதியும் இருக்கிறது. இங்கு காற்றுக்கும், பாசன கால்வாய்க்கும், விளையும் பூமிக்கும், கோவிலுக்கும், குளத்திற்கும், பள்ளிக் கட்டிடத்திற்கும், ஊர் பொது இடத்திற்கும், உண்ணும் உணவிற்கும், குடிக்கும் தண்ணீருக்கும், உடுத்தும் உடைக்கும், பேசும்மொழிக்கும், இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத்திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயானத்திற்கும், சாமிக்கும், பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.
இந்தப் புரிதல் இருப்பதால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட பின்பு நடந்த முதல் மாநாட்டில் சாதிய வேற்றுமைகளை எதிர்த்துப் போராட அறைகூவல் விடப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குப் பெயர் "பறையன் கட்சி". காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று இயக்கம் கண்டதுதான். அதே போல அந்த மக்களுக்காக வாழ்ந்து மறைந்த சீனுவாசராவ் பார்ப்பனர் என்பதைவிட உழைக்கும் மக்கள் தலைவராகவே அடையாளம் காணப்பட்டார். விழுப்புரம் மாவடத்தில் 1988ல் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் அரசூர் சேட்டு (முனைவர் ஊருக்குப் பக்கம்தான்) கொலை செய்யப்பட்டதும், அங்கு 152 குடிசைகள் கொளுத்தப்பட்டதும் திரவுபதி அம்மன் ஆலைய நுழைவு உரிமைக்கான போராட்டம் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. திருப்பூர் ரத்தினசாமி கொலை செய்யப்பட முதல் காரணம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார் என்பதுதான். சாதி திரட்சிக்கான போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் எப்போதும் ஆதரித்தது இல்லை. ஏனெனில் அது கலவரங்களையே உண்டாக்கும் எனத் தெரியும். ஆனால் தலித் மக்கள் எழுச்சியை வரவேற்றது. ஏனெனில் அது காலகாலமாக அடக்கப்பட்ட கோபம்.
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி சென்னை அண்ணாசாலையிலிருந்து கோட்டையை நோக்கி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் பேரணி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட அந்தப் பேரணியில் தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்களில் சரிபாதி பேர் தேவர்களும், வன்னியர்களும் உள்ளிட்ட தீண்டாமையை கைக்கொள்ளும் ஆதிக்க சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சியால் இது எப்படி முடிந்தது எனில் அனைத்து சாதியில் இருக்கிற உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டியதால்தான் சாத்தியப்பட்டது. இது ஒரு சிறிய முயற்சிதான் செல்ல வேண்டியதூரம் அதிகம் என்பதை அறிவோம்.
- 3 -
பல ஆண்டுகலாய் களத்தில் கிடைத்த அனுபவத்துடன் தான் தீண்டாமை எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது. இதனால் ஆதிக்க சாதியினர் கோபித்துக்கொள்வார்கள் என்பதும் அவர்களுக்கு வகுப்பெடுத்து, வியர்த்தால் துடைத்து விட்டு அவர்கள் முழுமன சம்மதத்துடன்தான் தீண்டாமையை ஒழிப்பது என்பது பம்மாத்து வேலை.
முனைவர் அய்யா என்ன சொல்கிறார்..
"........தமிழகத்தின் நீண்ட வரலாற்றையும், அது கண்ட பெருமிதங்களையும், அந்தப் பெருமிதங்களில் பங்கேற்ற அனைத்து மண்ணின் மக்களையும், இந்த மண்ணின் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அபாயங்களும், அந்த அபாயங்களை எதிர்கொள்ள இந்த மண்ணின் மக்கள் ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தங்களையும், அக்குவேறு ஆணி வேறாக எடுத்தியம்பினால், இம்மக்கள் விரைவில் மனமுதிர்ச்சி அடைவார்கள்." என அப்பாவித்தனமாக எழுதுகிறார்.
நாம் எல்லாம் ஒரே தமிழருப்பா என சாதி வெறிபிடித்த ஆதிக்க சக்திகளிடம் சென்று பேசிப்பார்த்தால் தெரியும் "அக்குவேறு ஆணிவேறாக" கிழிவது எது என்று. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடிகள் தான் பார்ப்பனிய சிந்தனைகளை தூக்கித் திரிகின்றனர் என்பதை மறக்கிற அல்லது மறைக்கிற வாதம் இது. ஒருவர் பிறப்பால் பார்ப்பனராய் இருந்தாலும் அவர் உழைப்பாளி மக்களுக்காக நிற்பதை கொச்சைபடுத்துகிற முனைவர்தான் ஆதிக்க சாதியினருக்கு வகுப்பெடுக்கச் சொல்கிறார். மற்றொரு இடத்தில்
"..........பார்ப்பனீய வர்ணாசிரமக் கோட்பாட்டால் செயற்கையாக சிதைக்கப்பட்ட, தனித்துவமான, பழம்பெரும் இந்திய நிலப்பரப்பின், சாதிய வேற்றுமைகளை இவர்கள் திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு, சாதிய வேற்றுமைகளைக் களையவேண்டிய ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை நேர்மையுடன் முன்னெடுக்காமல், வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர்" என எழுதுகிறார். அதாவது மார்க்சிஸ்டுகள் திடீரென ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துகிறார்கள், தலித் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று எழுதிவிட்டு, மேற்கண்ட பத்தியில் இங்கு உள்ள சாதிய ஆபத்தை புரிந்துகொள்ளவில்லை, வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அவரது கூற்றில் கூட அவரால் உண்மையாய் இருக்க முடியவில்லை.
முனைவரின் பிரச்சனை மிகவும் எளிதானது. தான் கட்டமைக்கின்ற தமிழ் தேசிய கருத்தில் சாதி பிரச்சனைகளை கண்டும் காணாமலிருக்க வேண்டும் என்பதுதான். இதற்கு இவர் மார்க்சிஸ்டுகளை வசைமாரிப் பொழிகிறார். முல்லை பெரியாறு பிரச்சனை முதல் மேற்குவங்கம் வரை உதாரணம் காட்டுகிறார். முல்லைப் பெரியாறு பிரச்சனை பேசி தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைபாடு. ஏனெனில் அது மற்றொரு தேசிய இனத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரே தேசிய இன மக்களான பாண்டிச்சேரி தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு டி.எம்.சி தண்ணீரை தமிழ் தேசிய இனம் கொடுக்காமல் ஏமாற்றுவது குறித்து தமிழ்த் தேசியவாதிகள் வாய்திறக்க மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. அதற்கும் ஒரு கட்டுரை எழுதி இலங்கைப் பிரச்சனையை அதில் நுழைத்து திசைத் திருப்பினாலும் திருப்புவார்.
- 4 -
மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பன தலைமையில் சிக்கி இருப்பதாக அந்த கட்சி உறுப்பினர்களை விட முனைவர்தான் மிகவும் கவலைப்படுகிறார். அவருக்கு இந்தக் கவலை தேவையற்றது. ஏனெனில் இந்தத் தலைமைதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்பணித்துள்ளது. தமிழக உழைக்கும் மக்களின் உரிமைக்காக நிறைய போராடி உள்ளது. ஒருவரை கொச்சைப்படுத்த அவரது சாதியைப் பயன்படுத்துவது அறிவுடைய செயலா என்பதை யோசிக்க வேண்டும். இந்தியாவில் ஆதிக்க சாதி என்று அழைக்கப்படுகிற நம்பூதிரி சாதியில் பிறந்த ஈ.எம்.எஸ் என்கிற வரலாற்று மனிதன் முதலமைச்சரானபோது போட்ட கையெழுத்து தலித் மக்களுக்கு நிலத்தை உரிமையாக்கும் சட்டத்திற்குப் பயன்பட்டது என்பதை மறந்துவிடகூடாது. தான் ஒரு தலித் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி இன்று வரை தமிழகத்தில் உள்ள ஐம்பது லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை ஒடுக்கப்பட்ட நிலமற்ற மக்களுக்குக் கொடுக்க மறுக்கிறார்.
சமீபத்தில் மட்டும் மார்க்சிஸ்டுகளின் தொடர்சியான போராட்டத்தினால், அருந்தியர்களுக்கு 3 சதம் உள் ஒதுக்கீடு கிடைத்தது. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக்களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில், நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வநாதர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில், விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில், நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில், ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது. தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன.
மார்க்சிஸ்டுகள் இப்படிப்பட்ட ஆலயங்களை கடவுள் இருக்கும் இடமாக பார்க்கவில்லை, அது தீண்டாமை என்ற அதிகாரத்தை ஆதிக்கசாதிக்கு வழங்கும் இடமாக இருப்பதால் அதில் நுழைந்து அதிகாரத்தை கேள்வி எழுப்ப விரும்புகிறது. இந்தப் போரட்டங்களில் ஏராளமான ஆதிக்கசாதியைச் சார்ந்த மக்களும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளைக்காரர்கள் தலித் மக்களுக்கு கொடுத்த பஞ்சமி நிலம் இன்று அந்த மக்கள் கையிலிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கட்சி. ஆக..
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் தலித் மக்கள் விடுதலையை நிலம் என்ற வாழ்வியல் உரிமை சார்ந்த, உழைக்கும் வர்க்கம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுகிறது. வர்க்கப் போராட்டத்திற்கான அணி திரட்டல் தாமதப்பட காரணம் இங்கு வர்க்கம் சாதியாய் பிளவுபட்டு நிற்பதுதான். அதனால்தான் சாதியப் பிரச்சனைகளையும், வர்க்க அணி திரட்டலையும் இணைத்து நடத்துகிற கடினமான பணியை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது.
அதே நேரம் உலகமயம், அது விதைக்கிற தாராளமயம் தனியார்மயம் நிதிமூலதனம் போன்றவை இன்று அனைத்துப் பகுதி மக்களையும் வீதியில் நிறுத்துகிறது. தேசங்களின் எல்லைகள் அதற்குக் கிடையாது, இனங்களின் எல்லைகள் அதற்குக் கிடையாது, மொழிகளின் எல்லைகள் அதற்குக் கிடையாது, சாதிகளின் எல்லைகள் அதற்குக் கிடையாது ஆகவே தமிழ் முதலாளியும், பார்பன - பனியா முதலாளிகளும் தங்களுக்குள் ஒற்றுமையாய்த்தான் இருக்கின்றனர். உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சாதியத்தைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்று உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து போராடுவதுதான் அதற்கு முதல் நிபந்தனை சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதுதான். அந்தப் பணியை செய்யும் மார்க்சிஸ்டுகளுடன் தமிழ்த் தேசியவாதிகளும் கைகோர்ப்பதுதான் இன்றைய தேவை. முனைவர்கள் விழித்துக்கொள்வார்களா? - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
Dr. V. Pandian
2009-11-24 07:53:15
எஸ். ஜி. ரமேஷ்பாபு அவர்களே!
பழிந்தமிழரின் நிலையில் வடதமிழ்நாடு, தென்தமிழ் நாடு என்று பகுத்துணர முடியும். வட தமிழ்நாட்டில், எனது சிறுவயது முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில், அது அவர்கள் நகரங்களின் கட்டிடத்தொழுல் மூலம் பொருள் சேர்த்து, தனது கிராமங்களில் நிலஉடைமையும், நல்வீடுகளையும் பெற்ற நிலையில், பழந்தமிழர், ஆதிக்க சாதிகளிடையே புதிய சமன்பாடுகள் தோன்றியதின் அடிப்படையில் எனது கட்டுரை அமைந்தது. அந்த சமன்பாடுகள் முழுமையானதல்ல என்பதும் தெரியும். அந்த முழுமைக்கு இன்னும் சிலகாலம் பிடிக்கலாம்.
இப்போது, சுதந்திர நாளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அனைத்து சமூகங்களிலும் கல்வியறிவு பெருகியுள்ளது. அவர்களில், ஜனநாயகவாதிகளைக் கண்டெடுத்து, அவர்களுக்கு முறையான கல்வி மூலம் அந்தந்த சமூகங்களில் மாற்றம் கொணர முடியும். எனது கட்டுரையின் சாரம் இதுதான். சிற்றிதழ்கள், இணையதளக் கட்டுரைகளின் தேவையும் அது கருதிதான்.
சோம்நாத் சாட்டர்ஜி, தான் முதலில் ஒரு பிராமணன், பிறகு ஒரு இந்தியன், பிறகு தான் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், ஈ. எம். எஸ்., தான் முதலில் ஒரு பிராமணன், பிறகு தான் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் சொன்னதாக எனது, பழந்தமிழர் வகுப்பைச் சார்ந்த C.P.M. தோழரே சொன்னார். எனவே, பார்ப்பனர்களின் கம்யூனிஸத்தை நான் நம்பியதில்லை. ஆனால், பாரப்பனர்கள் அனைவருமே அப்படி என்று சொல்லவும் வரவில்லை. ஆனால், அவர்களின் நேர்மை அவர்களது செயல்பாடுகளில் தெரியவேண்டும். அது தான் இங்கு பிரச்சனையே!
// 1983 முதல் மார்க்சிஸ்ட் கட்சி என்று ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதேசம்தான் தீர்வு என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம்//
என்று எழுதியுள்ளீர்கள். 1983லிருந்தே, கடந்த 26 வருடங்களாகவே உங்களின் நிலைப்பாடு மாறா நிலையிலேயே உள்ளது. மாற்றம் தான் நிலையானது என்ற கார்ல்மார்க்ஸின் பெயரைத்தாங்கியுள்ள உங்களுது கட்சியின் இந்த "மாறா"க் கோட்பாட்டைப் பற்றி உங்களுக்கு வெட்கமில்லையா?
சிங்களன் மாற மறுக்கிறான். நீங்களும் மாற மறுக்கிறீர்கள்.
அவன் தமிழருக்குத் தனி மாநில அந்தஸ்துகூடக் கொடுக்க மறுக்கிறான். ஆனால், உங்களின் கோட்பாட்டுப் படியே, ஒரு கட்டத்தில் புலிகளும் சுயாட்சி அதிகாரம் கொண்ட மாநில ஆட்சிக்கு ஒத்துக்கொண்டனர் என்ற உண்மை தெரியும் தானே! அப்படி இருந்தும் அங்கு அது வழங்கப் படாதபோது, தமிழருக்கு நீதி கிடைக்காது என்று உணர்ந்த பிறகும், நீங்கள் பழைய பல்லவி பாடுவது, உள் நோக்கத்தாலா இல்லையா?
சோம்நாத் சாட்டர்ஜியின் வரிசைப்படி, அவர் முதலில் பிராமணர், பிறகு இந்தியர். அதில் அவர் குறியாய் இருக்கிறார். பிரகாஷ் காரத்துகளும், வரதராஜன்களும் குறியாய் இருக்கின்றனர் இந்தக் கருத்தியலில். இந்த பிராந்தியத்தில் ஒரு தேசம் விடுதலை அடைந்தால் அது காஷ்மீரைத் தூண்டும், அஸ்ஸாமைத் தூண்டும் என்பது தானே உங்களின் அச்சம்! அதனால், வதைபடும் ஈழமக்கள் நாதியில்லாமல் ஒடுக்கப்பட்டு, அவர்களது நிலம் பிடுங்கப்பட்டு அழிந்தாலும் அழியட்டும், உங்களின் சுயநல அரசியலின் அச்சத்தால், தமிழீழம் மட்டும் மலரக் கூடாதென, மாறாக் கோட்பாடு தானே உங்களது? இது தான் உங்களின் சர்வதேசிய உழைக்கும் மக்களுக்கான சிந்தனையா?
இந்தியாவிலாவது பலப்பல இனங்கள் உள்ளன. ஏதோ ஒரு பாதுகாப்பை இங்கு எதிர்பார்க்கலாம். ஆனால், இரண்டே இனங்கள் வாழும் ஒரு நாட்டில், 25 சதவீதமே உள்ள மக்களுக்கு, ராஜபக்ஷ சம உரிமை கொடுக்க, வௌிப்படையாகவே, மறுக்கிறான். நீங்கள் போராடக் கூட வேண்டாம், ஆனால், அங்கு தனி ஈழ தேசம் தான் தீர்வென்ற ஒரு அறிக்கையாவது விடலாமே! எது உங்களைத் தடுக்கிறது? ஏன் இந்தத் தடுமாற்றம். இந்தத் தடுமாற்றத்திற்கு மார்க்ஸிய அடிப்படை உண்டா?
ரஷ்யா பிரிந்தது லெனின் கொடுத்த சுய நீர்ணய உரிமையின் அடிப்படையில் தானே! அது போன்று ஒரு உரிமையை ஈழ மக்களுக்கு வழங்க மறுக்கும் உங்களது கோட்பாடு எது?
உங்களின் கருத்துப்படி புலிகள் பாஸிஸ்ட் என்றால், அவர்கள் அழிந்து நாசமாய்ப் போயுள்ள இன்றய நிலையிலாவது, தனி ஈழம் தான் தீர்வென்ற கருத்தை வைக்க முடியாத உங்களின் இடர்பாடு எது?
இதற்கு உங்களால் நேர்மையான பதில் கொடுக்க இயலவில்லை என்றால், C.P.M. பற்றிய எனது குற்றச்சாட்டை சாடும் உரிமையை இழக்கிறீர்கள்!
எனக்கு ஓய்வு நேரம் இல்லை தோழரே! நேரத்தை உருவாக்கிக் கொண்டு எழுதுகிறேன். எனது வாழ்வாதாரத்திற்கான வேலைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
புதூர் சிபி
2009-11-24 08:00:07
தோழர் ரமேஷ்பாபு அவர்களுக்கு,வணக்கம்.
முனைவர் பாண்டியன் எழுதிய அவதூறுக்கு சரியான பதிலடி தந்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.
ப.கவிதா குமார்
2009-11-24 12:38:40
தமிழகத்தில் வடமாவட்டங்களில் உள்ள ஆண்டைகள் எல்லாம் தலித் மக்களின் காலில் விழுந்து இனி உங்களுக்குத் தொல்லைக் கொடுக்கமாட்டோம் என்று பாண்டியனிடம் யாரும் சத்தியம் எதையும் செய்து விட்டார்களா எனத்தெரியவில்லை. வட தமிழ்நாட்டில் ஆதிக்கசாதியினரிடையே புதிய சமன்பாடு ஏற்பட்டுள்ளதாம்! இன்னமும் அது முழுமையடையவில்லையாம். . . என்னே கண்டுபிடிப்பு !
இன்னமும் வடமாவட்டங்களில் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அவ்வப்போது மோதிக் கொண்டிருப்பது சாதிப்பிரச்சனையா அல்லது சமன்பாட்டின் வெளிப்பாடா? தமிழகத்தில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்து கொண்ட தலித் இளைஞரைக் கடத்திச் சென்று ரயில்தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை செய்த கொடூரச்செய்தியை பாண்டியன் படித்தாரா எனத் தெரியவில்லை. அவருக்கு எங்கே தலித் மக்கள் படுகொலை செய்யப்படுவதைப் பற்றி கவலையிருக்கப்போகிறது. கடல்கடந்த மக்கள் கொல்லப்படுவது தான் அவருக்கு நினைப்பில் இருக்கும்.
சுதந்திர இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வியறிவு பெருகியுள்ளதாக பாண்டியன் "புதியமனு" எழுதுகிறார். கிராமப்புறங்களில் 26 சதவீத தலித் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை இயற்பியல் அறிஞருக்குத் தெரியுமா? பட்டப்படிப்பு படித்த ஒரே காரணத்திற்காக, "சக்கிலியப்பையலுக்கு என்னடா படிப்பு" என மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல்கரையில் அருந்ததிய இளைஞன் முருகன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலால் அவருக்கு தலையில் 16 தையல் போடும் அளவிற்கு சாதித்திமிர் கோலோச்சியுள்ளதை பாண்டியன் அறிவாரா?
பார்த்தால் தீட்டு, படித்தால் தீட்டு, கேட்டால் தீட்டு என மனுவாதிகள் வாசித்த பழைய செல்லறித்த சுவடிகளை ஏந்திப்பிடித்துள்ள பாண்டியன், சிறுவர்கள் பாண்டியாட்டம் ஆடும் போது தாண்டிக்குதிப்பதைப் போல் தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக எழுத ஆரம்பித்து, கடைசியில் அதை இலங்கைக்குள் இழுத்துச் சென்று , கடைசியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை பார்ப்பனிய தலைமை என கீறல்விழுந்த ரெக்கார்டை எடுத்து மீண்டும் சுழலவிட்டுள்ளார். ஏற்கனவே, இதற்கு பலமுறை பல நண்பர்கள் பதில் அளித்துள்ளனர். அதைப்படித்து விட்டு மீண்டும் அதே பொய்யை பலமுறை சொன்னால் உண்மையாகும் என்ற கோயாபல்சின் வாரிசைப் போன்று தோழர் ரமேஷ்பாபு கட்டுரைக்கு பின்னூட்டம் என்ற பெயரில் பழைய பல்லவியை பாண்டியன் பாடியுள்ளார்.
இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள் சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள் என தங்களுடைய அபிலாஷையை வெளியிட்ட ஆர்எஸ்எஸ் கருங்காலிகளின் பங்காளிகள் போல பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும், அதன் தலைவர்கள் பற்றி தனது அவதூறைப் பதிவு செய்து வருகிறார்.
தலித் மக்களின் விடுதலைக்காக இந்தியாவில் அதிக இயக்கங்களை நடத்தியவர்கள் என்பதோடு மட்டுமின்றி , தாங்கள் ஆளும் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தலித் மக்களுக்கு நிலம் வழங்கியது மார்க்சிஸ்ட் கட்சி என்பது பாண்டியனுக்குத் தெரியும். பூனைக் கண்ணை மூடிக்கொண்டால். . . உலகம் என்றும் இருண்டு விடாது. தனது தோளில் போட்டிருந்த பூணுhலை அறுத்தெறிந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் குறித்து யாரோ பாண்டியனுக்குத் தெரிந்த சிபிஎம் தோழர் சொன்னராம்" முதலில் ஒரு பிராமணன், பிறகு தான் ஒரு கம்யூனிஸ்ட்" என்று. . .
இணையத்தில் கட்டுரை என்ற பெயரிலும், பின்னூட்டம் என்ற பெயரிலும் தன்னை "இயற்பியல் அறிஞன்" என்றும், "முனைவர்" என்றும் சொல்லி எழுதிவரும் பாண்டியன் என்பவருக்கு எதற்கு மெனக்கெட்டு பதிலுரை எழுதுகிறீர்கள் தோழர்? **********. ஏனெனில் ஓய்வு நேரமில்லாமல், வாழ்வாதாரத்திற்கான வேலைகள் பாதித்தாலும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அவருக்கு நோக்கம் இல்லாமல் இருக்காது.
மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் ஏகாதிபத்திய, நிலபிரபுத்துவ, பண்ணைமுதலாளிகள்கள் மட்டுமின்றி சாதிவெறிசக்திகள் என்பதையும் நன்கு உணர்ந்தவர்கள் நாங்கள். தலித் மக்களுக்கான விடுதலையை நோக்கி எங்களது பயணம் எத்தனை இன்னல்கள் நேர்ந்தாலும் தொடரும் அதே வேளையில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் அவதியுற்றுவரும் தமிழ்மக்களுக்கான நிரந்தரத்தீர்வையும் தொடர்ந்து வலியுறுத்துவோம். போராடுவோம் .
நெடுஞ்சேரி கண்ணன்
2009-11-24 14:38:51
நல்ல பதிவு வாழ்த்துகள் ....ஆனால் ஈழம் பற்றிய உங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை ...
Dr.Thirumugam
2009-11-25 03:48:15
தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?......
லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது, “உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு, மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டு பாடுபடாமல் ராஜபோகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப்பனர்கள் - இந்த நாட்டுப் பொது உடைமைக்காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன?” என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்!......
பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்......
ஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாகும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள்......
தந்தை பெரியார், ‘குடி அரசு’ - 25.3.1944
Dr. V. Pandian
2009-11-25 05:37:51
எனது கட்டுரையினாலும், பின்னூட்ங்களினாலும் முன்று காந்திரமான விடயங்களை முன்வைத்தேன்.
பார்ப்பனர்கள், மலையாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள கட்சி தான் C.P.M. தமிழ் மக்கள் இக்கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை.
ஈழத்தில் தமிழனுக்கு சமஉரிமை கிடைக்காதென்பது தெரிந்தும், தனி ஈழத்தை அங்கீகரிக்க மறுக்கும் C.P.M. ன் அடிப்படை எது?
இந்தியா தமிழர்களை மதிக்காமல் தான் ஈழ விடயத்தில் நடந்து கொண்டுள்ளது. தமிழரின் கச்சத் தீவை நம்மைக் கேட்காமலேயே இலங்கைக்கு தாரைவார்த்தது. அங்கு மீன்பிடி உரிமையையும் தமிழன் இழந்து வருகிறான். 544 போர் கொண்ட இந்திய சபையிலே 40 தமிழ் உறுப்பினர்களால் தங்களது உரிமைகளைக் காக்க இயலாதது வௌிப்படை. எனவே, இந்தியாவில் கூட்டாட்சி முறைக்காகவாவது C.P.M. குரல் கொடுக்குமா?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்காமல், என்னை பழந்தமிழரது எதிரியாகக் காட்டமட்டும் முனைகின்றனர்.
60 ஆண்டுகளாக அகில இந்தியப் புரட்சி செய்ய முடியவில்லை. ஆனால், ஏகாதி பத்தியங்கள் இந்தியாவை ஆக்கிரமித்தது தான் நாம் காண்பது. பெரிய பொருளாதாரத்தால் பெரிய ஊழல் சாத்தியமாகிறது. பெரிய ஊழல் எப்பேர்பட்ட நல்லவனையும் கெடுக்கிறது. டெல்லியிலே "ஒரு சிலரை" "பல நூறு / ஆயிரம் கோடிகளால்" கவனித்து விட்டு இப்பெரும் தேசத்தையே சுரண்டுகின்றன ஏகாதிபத்தியங்கள். எனவே, இந்தியா சிறிய பொருளாதாரங்களாகப் பிரிந்தால் தான், ஏகாதிபத்தியங்களைக் கட்டுப்படுத்த இயலும்.
சிறிய பொருளாதாங்களை நிர்வகிப்பது எளிது. எனவே தான், இந்திய இனங்கள் இறையாண்மையுள்ள தேசங்களாகப் பிரிந்து, இவைகள் ஐரோப்பிய ஒன்றியம் போல இந்திய ஒன்றியத்தை உருவாக்கி, ஒரு மாற்றத்தின் மூலமாக, 60 வருடங்களாக தங்களது கோட்பாடுகளால் அடையமுடியாத மாற்றத்தை அடைய முயலலாம். மார்க்ஸியப் படி மாற்றம் தான் நிலையானது. எனவே, இந்த மாற்றத்திற்கு C.P.M. தயாரா?
மேலும், கவிதா அம்மையார் சொல்கிறார், ஆதிக்க சாதி பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்த பழந்தமிழரை தண்டவாளத்தில் கட்டி கொன்றனாரம். விலங்குகளை விடக் கொடுமையாக நடத்தப்பட்ட சமூகம் முதன்மையாகப் போராடவேண்டியது,
தமது சமூகத்தின் கல்விக்கும்,
தமது சமூகத்தின் பொருளாதார மேன்மைக்கும்,
தனது சமூகத்தின் சம உரிமைக்கும், மதிப்பிற்கும், சுயமறியாதைக்கும் தான்.
இவற்றில் முதலிரண்டு கிடைத்தாலே, மூன்றாவது இயல்பாகவே கிடைக்கும் என்பது நடைமுறையால் உணரப்படும் உண்மை. இவை தான் முதல் படி, இவை நிகழ்ந்த பிறகு மற்றவற்றுக்காக போராடவேண்டும். இவற்றிற்கே தடைகள் உள்ளபோது, மேல் சாதிகளிலேயே சாதிகடந்த மணங்கள் நிகழாத போது, இத்தகைய காதல் வெற்றிபெற வாய்ப்புள்ளதா? இது மேலும் அடக்குமுறையைத் தான் கொடுக்கும். இதற்காகத் தான் எனது கட்டுரையில் சாதிகடந்த காதலைத் தவிர்த்திடுங்கள் என்றேன். அதையும் ஒரு சிலர் விமர்சித்தனர்! இந்த அம்மையாரோ, தன்னையுமறியாமலேயே நான் சொன்னதை நிறுவியுள்ளார்.
நான் வைத்த நடைமுறைகள் சமூக இயங்கியலை உணர்ந்த இயல்பான நடைமுறை. இதற்கு மார்க்ஸிய அறிவு கூடத் தேவையில்லை. ஆனால், மார்க்ஸியர்களுக்கே இதை நான் சொல்லவேண்டி இருப்பது தான் பரிதாபகரமானது.
இந்திய மண்ணிலே ஏன் பிறந்தோம் என்ற அளவுக்கு, இங்குள்ள ஏற்றத் தாழ்வுகள், என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. சுயநலச் சிந்தனைகள் உள்ளவர்களுக்கு இந்த உளைச்சல் வராது.
வடநாட்டிலே தலித்துகளுக்காக போராடியவர்கள் தலித்து சமூகத்தைச் சேரந்தவர்கள்.
ஆனால், தமிழ் நாட்டிலே, அயோத்திதாசர் பத்திரிகை மூலமாகப் போராடினார். ஆனால், வள்ளலாரும், பெரியாரும் ஆதிக்க சாதிகளில் பிறந்திருந்தாலும், அமைப்புகள் மூலமாக, செயல்பாடுகள் மூலமாக சமூக ஒப்புரவுக்காக போராடினார்கள். அதனால், பெரிய மாற்றங்கள் தமிழகத்திலே நடந்துள்ளன என்பதும் உண்மை. அப்படி இருக்க, ஆதிக்க சாதி முத்திறை குத்தி, நல்ல கருத்துகளை எதிர்ப்பது சீர்குலைவு சக்திகளின் இயல்பு.
தமிழகத்திலே உட்பகைகள் உண்டு. நல்ல கருத்துகளுக்கு எதிராக எழுதுபவரின் நதிமூலம் அறியப்பட வேண்டும்.
நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்!
S.G.Ramesh Babu
2009-11-25 22:15:47
நட்புமிக்க முனைவர் வே பாண்டியன் அவர்களுக்கு...
1. "........பழிந்தமிழரின் நிலையில் வடதமிழ்நாடு, தென்தமிழ் நாடு என்று பகுத்துணர முடியும். வட தமிழ்நாட்டில், எனது சிறுவயது முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில், அது அவர்கள் நகரங்களின் கட்டிடத்தொழுல் மூலம் பொருள் சேர்த்து, தனது கிராமங்களில் நிலஉடைமையும், நல்வீடுகளையும் பெற்ற நிலையில், பழந்தமிழர், ஆதிக்க சாதிகளிடையே புதிய சமன்பாடுகள் தோன்றியதின் அடிப்படையில் எனது கட்டுரை அமைந்தது. அந்த சமன்பாடுகள் முழுமையானதல்ல என்பதும் தெரியும். அந்த முழுமைக்கு இன்னும் சிலகாலம் பிடிக்கலாம்......"
என்று எழுதி உள்ள தாங்கள் தயவு செய்து வடமாவட்ட நில உடைமையின் தற்கால நிலைமையை பார்க்க வேண்டும். குத்துமதிப்பாக எழுதுவது முனைவர் என்ற பட்டத்திற்கு அழகல்ல. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்ப்புரம், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நிலம் யார் கையில் உள்ளது என்பதை படித்துவிட்டு பதில் சொல்வது நலம்.
2. "......சோம்நாத் சாட்டர்ஜி, தான் முதலில் ஒரு பிராமணன், பிறகு ஒரு இந்தியன், பிறகு தான் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், ஈ. எம். எஸ்., தான் முதலில் ஒரு பிராமணன், பிறகு தான் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் சொன்னதாக எனது, பழந்தமிழர் வகுப்பைச் சார்ந்த C.P.M. தோழரே சொன்னார். எனவே, பார்ப்பனர்களின் கம்யூனிஸத்தை நான் நம்பியதில்லை.........."
மீண்டும் ஆதாரமில்லாமல் ஒரு பொய்யை கட்டமைக்கிறீர்கள் அவர்கள் இருவரும் இப்ப்படி எங்கும் பேசவில்லை. ஒரு பொய்யை பலமுறை கூறும் கோயபல்ஸ் வேலை அரச்யல் விவாதத்தை மதிப்ப்பிழுக்கச் செய்யும் என்பதை உணர்வது நலம்
3. "....1983லிருந்தே, கடந்த 26 வருடங்களாகவே உங்களின் நிலைப்பாடு மாறா நிலையிலேயே உள்ளது. மாற்றம் தான் நிலையானது என்ற கார்ல்மார்க்ஸின் பெயரைத்தாங்கியுள்ள உங்களுது கட்சியின் இந்த "மாறா"க் கோட்பாட்டைப் பற்றி உங்களுக்கு வெட்கமில்லையா......"
ஆரம்பம் முதல் 26 வருடங்களாக தனிஈழம் கேட்க்கும் அமைப்ப்புகளுக்கு வெட்க்கமில்லை என்று சொல்லுவீர்களேயானால், ஒரே விஷயத்தை வலியுறுத்தும் உங்களுக்கும் வெட்கம் இல்லை எண்றால் எங்களுக்கும் அப்படியே. அய்யோ அப்பாவி தனமாகமாக மார்க்ஸ் வார்த்தைகளை பயன் படுத்தாதீர்களய்யா?
4.".......இரண்டே இனங்கள் வாழும் ஒரு நாட்டில், 25 சதவீதமே உள்ள மக்களுக்கு, ராஜபக்ஷ சம உரிமை கொடுக்க, வௌிப்படையாகவே, மறுக்கிறான். நீங்கள் போராடக் கூட வேண்டாம், ஆனால், அங்கு தனி ஈழ தேசம் தான் தீர்வென்ற ஒரு அறிக்கையாவது விடலாமே! எது உங்களைத் தடுக்கிறது? ஏன் இந்தத் தடுமாற்றம். இந்தத் தடுமாற்றத்திற்கு மார்க்ஸிய அடிப்படை உண்டா?....."
அய்யா பண்டியனாரே நாங்கள்தான் எங்கள் நிலைபாட்டை சொல்லிவிட்டோமே பிறகு எப்படி உங்கள் ஆசையை அறிக்கையாக விடமுடியும். தயவு செய்து கட்டுரையை மீண்டும் படிக்கவும்.
5.".........உங்களின் கருத்துப்படி புலிகள் பாஸிஸ்ட் என்றால், அவர்கள் அழிந்து நாசமாய்ப் போயுள்ள இன்றய நிலையிலாவது, தனி ஈழம் தான் தீர்வென்ற கருத்தை வைக்க முடியாத உங்களின் இடர்பாடு எது?........."
மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்தத அப்படியே படிப்பதுப்போல எழுதுவது சரியில்லை. நான் எனது கட்டுரையில் எங்கும் பாசிஸ்டுகள் என்று எழுதவில்லை. உங்களது நோக்கம் அது என்றால் அதற்கு நான் பொருப்பல்ல. உங்களுக்கு ஆதராவக நண்பர்களை சேர்ப்பது என்றால் உண்மையை சொல்லி சேர்க்கவும். அதற்காக பொய்களை விதைப்பது சைரியல்ல.
இறுதியாக ஒன்று நல்ல விவாதத்திற்கு அழகு உண்மைகளையும், ஆதாரங்களையும் வைத்து விவாதிப்பதுதான். தாங்கள் அதற்கு முயற்சிக்கவும் நன்றி.
Dr. V. Pandian
2009-11-25 22:12:24
திரு. எஸ். ஜி. ரமேஷ் அவர்களே!
புலிகளை பாஸிஸ்ட் என்றழைப்பது வழக்கமாக C.P.M. தோழர்களால் செய்யப்படுகிறது. அந்த முறையில் மட்டுமே எழுதினேன். தவறுக்கு வருந்துகிறேன்.
//ஆரம்பம் முதல் 26 வருடங்களாக தனிஈழம் கேட்க்கும் அமைப்ப்புகளுக்கு வெட்க்கமில்லை என்று சொல்லுவீர்களேயானால், ஒரே விஷயத்தை வலியுறுத்தும் உங்களுக்கும் வெட்கம் இல்லை எண்றால் எங்களுக்கும் அப்படியே.//
மேற்குறிப்பிட்ட உங்களது கருத்து "அபாரம்"! வாழ்த்துக்கள்! மற்றபடி, உங்களின் விளக்கத்தையும் எனது கேள்விகளின் நியாயத்தையும் வாசகர்கள் சீர்தூக்கிப் பார்க்கட்டும். நன்றிகள்.
பாவண்ணன்
2009-11-25 22:13:48
ஈழச் சிக்கலில், மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியின் நிலைபாட்டில் எனக்கு வருத்தமிருந்தாலும், சாதிக்கு எதிரான, தீண்டாமைக்கு எதிரான அதன் போராட்டத்தை இருகரம் கூப்பி வரவேற்பவன்.
அந்த வகையில், சாதிவெறியை நியாயப்படுத்தி 'கட்டு.... உரை' எழுதிய டண்டணக்காவை, தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு சரியான சாத்து சாத்தியிருப்பது, மகிழ்ச்சிக்கு உரியது.
தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபுவின் கட்டுரையை, கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், சுயசிந்தனை உள்ளவர்கள் நிச்சயம் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
மற்றபடி பாண்டியனைப் போன்ற சாதிவெறியர்களுக்கு இந்த கட்டுரை சுரீர் சுரீர் என உரைத்திருக்கும்....
.............உரைத்திருக்கும்???
இளஞ்செழியன்
2009-11-27 11:02:46
இயல்பான தமிழ்த்தேசியத்தை மறுத்து இல்லாத இந்திய தேசிய வெறியில் ஊறித்திளைக்கும் மார்க்சிஸ்டு கட்சி அப்பாவிகளே! மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் சாதிச்சிக்கல் தீர்ந்து விட்டதா? ஒழுங்காய் பெரியாரைப் பின்பற்றியிருந்தால், மலைவாசிகள் மாவோயிஸ்டுகளாக மாறியிருப்பார்களா? எந்த நம்பூதிரியும், ஆச்சாரியும் வந்து தமிழனுக்குப் பாடமெடுக்க வேண்டாம். இந்த ஆலயப்பிரவேசங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவது ஈ.வே.ரா நாயக்கர் தன் சாதிப் பட்டத்தைத் துறந்து சாதியை எதிர்த்தனால்தான் அல்லவோ? இட ஒதுக்கீட்டை மறுத்து பொருளாதார ஒதுக்கீடு வேண்டுமென்று கூறியவர்களல்லவோ நீவிர். தீக்கதிரில் தீபாவளிக்குச் சிறப்பிதழ் வெளியிடுவது, சாதியைக் கணக்கெடுத்து வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்துவது போன்ற உங்கள் கட்சி க்குழப்பங்களை மக்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் கணக்கில் கொண்டுதான் உங்கள் நெலப்பாட்டைப் போலவே உங்கள் கட்சியின் அளவையும் மாறாமல் வைத்திருக்கிறார்கள். எவ்வளவு குறைபாடுகள் இருப்பினும், தீண்டாமைக்கெதிராக யார் பணியாற்றினாலும் தமிழர்களாகிய நாம் கூடி வரவேற்போம், செயல்படுவோம். அதற்காக, சந்தடி சாக்கில் தமிழ்த்தேசியம் ஏதோ சாதிக்கு ஆதரவானதைப் போல் காட்ட முயல்வது கண்டிக்கத் தகுந்தது.
Dr. V. Pandian
2009-11-28 01:21:52
இளஞ்செழியன் அவர்களது பின்னூட்டத்தைப் படித்த பிறகு எனக்கு நினைவுக்கு வரும் ஒர நிகழ்ச்சியை எழுதவேண்டும் என்று தோன்றியது. "உத்திரப் பிரதேசத்தைச்" சேர்ந்த "போத்தா" எனப்படும் பௌத்த சமூத்தைச் சேர்ந்த நன்பர் ஒருவர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். சென்றபோது தான் தெரிந்தது, அவரது திருமணம், இரண்டு குடும்பங்களின் ஒப்புதலோடு நடைபெற்ற காதல் திருமணம் என்று.
அவரது துணைவியார், "மேற்கு வங்கத்தைச்" சேரந்தவர். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நான் கேட்கவில்லை, எனக்கும் அது வௌிப்படையாகத் தெரியவில்லை. நான் பொதுவான கேள்வியாக இங்கெல்லாம் சாதிப்பிரச்சினை இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் மேற்கு வங்கத்தைப் பற்றி சொன்னார். தலித்துகளைத் தவிர்த்து, பார்ப்பனர்கள் உட்பட மற்ற அனைத்துச் சமூகத்திற்குள்ளும், மேற்கு வங்கத்தைப் பொருத்த வரை, கலப்புத் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. ஒதுக்கப்படும் சமூகம் தலித் சமூகம் மட்டும் தான் என்றார்.
25 வருடங்ளுக்கு மேலாக, பார்ப்பனீய C.P.M. ன் ஆட்சி நடந்த மேற்கு வங்கத்தின் யோக்கியதை இது தான். ஆனால், அப்படிப்பட்ட அணிசேர்க்கை தமிழகத்திலில்லை. அதோடு, இங்கே பழந்தமிழர் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து முற்றிலுமாக மீளவில்லை என்றாலும், பார்ப்பனீயத்தை ஒரு ஒதுக்கப்பட்ட சமூகமாக, பேரளவுக்கு காணும் நிலைக்குக் காரணம், பெரியாருக்கே செல்லும்.
அயோத்தி தாசர், வள்ளலார், பெரியாரால் மட்டுமல்ல, இந்த மண் சமூக ஒப்புரவைக் காக்க நல்லக் கருத்துகளை ஆதியிலிருந்து கொண்டிருந்த மண் என்பது நமது இலக்கியங்கள் நிறுவும் சான்று. உலகெலாம் நிலவிய பொருளாதாரம் சார்ந்த ஆண்டான், அடிமைத்தனம் இங்கு நிலவி இருந்தாலும், தீண்டாமை என்பது பார்ப்பனீய திணிப்பு தான். அது இந்த மண்ணின் தன்மை அல்ல!
இந்தியாவிலேயே சமூக ஒப்புரவில் முதன்மையாய் இருப்பது தமிழகம் தான். இதில் முமுமை பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கான அடிப்படைகள் இங்குண்டு! அதற்காகவே செயல்படும் பெரியாரிய இயக்கங்களும் இம்மண்ணில் உண்டு!
முனியாண்டி. எம்
2009-11-28 07:35:35
பாவண்ணன் அவர்களே .. .
ரமேஷ்பாபுவின் கட்டுரை சுயசிந்தனை உள்ளவர்களுக்கு உரைத்திருக்கும். ஆனால், பாண்டியனுக்கு அப்படி ஏற்பட்டு இருக்குமா எனத் தெரியாது. ஏனெனில் ****** அவர் இணையத்திற்குள் புகுந்து கொண்டு செய்யும் அட்டகாசம், நல்ல விவாதங்களை வேறுதளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து கீற்றில் எத்தனையோ நல்லபதிவுகள் வருகின்றன. அவைகளில் வைக்கப்படும் விவாதங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன. ஆனால், நட்பு வளர்க்க வேண்டிய விஷயத்தில் பகைமுரணோடு அனைத்தையும் பதிவு செய்யும் முனைவர் குறித்து கீற்று சற்று பரிசீலித்தால் நல்லது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக