திங்கள், 26 அக்டோபர், 2009

ஒடுக்கப்பட்டவர்கள் நீதிகேட்க புறப்படுகிறார்கள்

மதுரை மாவட்டம் தெற்கு தாலுக்காவில் உள்ள வடிவேல்கரை கிராமத்தில் அருந்ததிய மக்கள் ஊருக்குள் சைக்கிள் ஒட்ட மறுக்கப்படுவதும், தேனீர் கடைகளில் இரட்டை கோப்பை முறையால் கேவலப்படுத்தப்படுவதும் நடந்துகொண்டே இருந்தது. அங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கப்படும் வரை. அதன்பின் அங்கிருந்த வாலிபர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்களது உரிமைகளை கேட்கத்துவங்கினர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அங்கு ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். அதில் வாலிபர் சங்க கிளை செயலர் முருகனின் தம்பி கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீண்டும் அவ்வப்போது சிறிய உரசல்கள் இருந்தே வந்தது.
கடந்த ஆண்டு அங்கு மார்க்சிஸ்ட் கட்சியும் துவங்கிய-வுடன் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக மீண்டும் எழுச்சியோடு போராடத்துவங்கினர்.
ஒடுங்கிக்கிடந்தவர்கள் போராடத் துவங்கினால் ஆதிக்கசாதி எப்படி பொறுத்துக்கொள்ளும். அடிக்கடி பிரச்சனைகள் அங்கு நடக்கத்துவங்கியது. அந்த ஊரின் வாலிபர் சங்க கிளைசெயலர் முருகன்தான் அந்தப் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிகம் படித்தவர். முருகன் முதுநிலை ஆய்வு மாணவன். அந்த பகுதி அருந்ததிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச பாடசாலை நடத்தி வருகிறார்.
அவர் படித்ததையே பொறுத்துக்கொள்ளாத ஆதிக்க சாதியினர், இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் முருகனை கொலைசெய்யும் நோக்கத்துடன் தாக்கி உள்ளனர். தலையில் பதினாறு தையல்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கடுமையாக தாக்கப்பட்ட முருகன் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டு தனது நீதியை பறைசாற்றியது.
இந்தப் பின்னணியில்தான் தமிழகமே மக்கள் ஒற்றுமையில் சமத்துவபுரமாய் மாறும்வரை திமுக ஆட்சியும், தி.மு.கழகமும் ஓயாது. என செப்டம்பர் 30ம் தேதி மாலை தனது பிறந்த மாவட்டமான திருவாரூரில் தமிழக முதல்வர் ஆற்றிய வீரஉரையாற்றினார்.
ஆனால் அன்று காலை தமிழகத்தில் நடந்த பல சம்பவங்கள் அவருக்கு தெரியாமல் இதை பேசி இருக்க மாட்டார். தீண்டாமையை எதிர்த்து களப்போராட்டம் நடத்துபவர்களை அவரது காவல்துறை அடித்து நொறுக்கிய அன்று மாலை அவர் இந்த ததுவத்தை உதிர்த்தார். அன்றைய தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அங்கம் வகிக்கும் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி சார்பில் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
தாழ்த் தப்பட்ட மக்களின் உரிமை களுக்கு போராடிய தலைவர் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தையட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழகத்தின் எட்டு மையங்களில் தீண்டாமைக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் ஈடுபட்ட தினம் அன்று.
போராட்டம் 1
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் காங்கியனூர் கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்திற்குள் பல ஆண்டுகளாக தலித் மக்கள் நுழையவும், பொங்கல் வைக்கவும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் தடை விதிக் கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனிடையே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காங்கியனூரில் ஆலயப் பிரவேசம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உரிமை கேட்டு போராட்டம் அறிவிக்கப்பட்டதால்...காங்கியனூர் கிராமத்தில் தடைஉத்தரவு அமலில் உள்ளதால் அங்கு யாரும் செல்ல அனுமதியில்லை, மீறினால் அனைவரையும் கைது செய்வோம் என மாவட்ட காவல்துறை அறிவித்தது. காவல்துறையுடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா தலைமையில் 10பேர் கொண்ட ஒரு குழு ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
ஆனால் அதனை காவல்துறையும், வருவாய்துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வில்லை.இதனால், காவல்துறையினரின் தடையை மீறி ஆலயத்திற்குள் செல்ல முயன்றவர்கள் மீது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஜி. லதா எம்எல்ஏ, தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன், வாலிபர் சங்க மாவட்ட செயலர் செந்தில் உள்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். கூட்டத்தை கலைக்க காவல்-துறையினர் விரட்டி விரட்டி அடித்ததோடு 300 க்கும் மேற்பட்டோரை கைது செய்து அதில் 111 பேர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் ரிமாண்ட் செய்யப்பட்டனர்
போராட்டம் ௨
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது கட்டளைப்பட்டி கிராமம். இங்கு தலித் மக்கள் பொது கழிப்பறையை பயன்படுத்த ஜாதி ஆதிக்க வெறியர்கள் தடை விதித்திருந்தனர். மேலும் ரேசன்-கடை ஆதிக்க சாதியினர் குடியிருக்கும் பகுதியில்-தான் உள்ளது. இதனால் தலித் அருந்ததியர் மக்கள், பொருட்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நேரடி நடவடிக்கையில் ஈடுப டும் வகையில் கழிப்பறைக்குள் அருந்ததியர் மக்களை அழைத்துச் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் இதை அறிந்த ஜாதி ஆதிக்க வெறியர் சுகாதார வளாகத்தை முன் கூட்டியே பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர். போராட்டத்தின் விளைவாக அரசு அதிகாரிகள் பூட்டை உடைத்து அருந்ததிய மக்கள் சுகாதார வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர். மேலும் அருந்ததிய மக்கள் வாழும் பகுதியில் புதியதாக கழிப்பறை, ரேசன் கடை கட்ட அதிகாரிகள் உறுதியளித்-தனர். தற்போது உள்ள ரேசன் கடையில் அருந்ததியர்கள் பொருட்கள் வாங்கிக்கொள்ள அனுமதிக் கப்படுவார்கள் எனவும் உறுதியளித்தனர்.
போராட்டம் 3
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம் செட்டிப்புலம் ஊரில் உள்ள சிவன் கோயிலில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தலித் மக்களை உள்ளே அனுமதிப்பதில்லை. மேலும், அவ்வூரில் இரட்டைக் குவளை முறை, தலித்துகளுக்கு முடி வெட்ட மறுப்பு உள்ளிட்ட பல தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன.
இந்தச் சமூகக் கொடுமைகளுக்கு ஒரு விடிவு காண தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 600க்கும் மேற்பட்ட தலித்மக்களேடு பேரணி நடத்தி, ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 500 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை அறிந்த சாதி ஆதிக்க வெறியர்கள் ஏற்கெனவே கோயிலைப் பூட்டிவிட்டனர். இந்த ஆலய நுழைவுப் போராட்டத்-துக்கு எதிராக ஆதிக்கச் சாதியினர் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் ஆங்காங்கே கும்பல் கும்பலாக கைகளில் தடிகளுடன் நின்று கொண்டிருந்தனர்.
நாகை ஆர்டிஓ, வேதாரண்யம் டி.எஸ்.பி. ஏராளமான காவல்துறையினர் சூழ்ந்து நின்று இருப்பினும் ரவுடிகளை கலைக்காமல் இனி கோயிலுக்குள் எந்தத் தரப் பினரும் நுழையக்கூடாது, இது அரசின் அறிவிப்பு என்று அறிவித்துக் கோயிலுக்கு பூட்டு போட்டனர்.
ஆனால் மறுநாள் காலை 10 மணியளவில் செட்டிப்புலம் ஊராட்சித் தலைவர் மணிமாறன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க வெறியர் அரசு வைத்த சீலை உடைத்தெறிந்து, பூட்டைத் திறந்து கோயிலுக்குள் எக்காளமிட்டு நுழைந்தனர். கோயிலைப் பூட்டியவர்கள் சாதி ஆதிக்க வெறியரே. அவர்களிடம் தான் அந்த பூட்டின் சாவி உள்ளது. சீல் வைத்த அரசு அதிகாரிகள், வேறு பெரிய பூட்டைப் போட்டு சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதைச் செய்ய தவறிவிட்டனர். அரசின் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் தலித் மக்களுக்கும் எதிராக நடந்துள்ள இந்த வன்செயலுக்குத் தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் என்ன செய்யப் போகிறார்கள்?
போராட்டம் 4
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வரப்பாளையம் மற்றும் இராமநாதபுரம் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1000 தலித், அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களை இந்தக் கிராமங்களில் உள்ள பொதுமயானத்தில் சவஅடக்கம் செய்யவிடாமல் ஜாதி ஆதிக்க வெறியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்த கொடுமைக்கு முடிவு கட்ட பொது மயானத்தில் பாகுபாடு காட்டாமல் அருந்ததியர் மக்களுக்கும் சவஅடக்கம் செய்யும் உரிமையை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் 5
திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிராம ஆலயத்தில் நுழையதடை இருந்தது, தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருந்தது. சுடுகாட்டு பாதை மறுக்கப்பட்டு, தலைமுடி திருத்தக்கூட காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்க நேரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. முதன்முறையாக வேடந்தவாடி கிராமத்தின் கூத்தாண்டவர் கோயிலினுள் செல்லும் ஆர்வத்-துடன் ஏராளமான மக்கள் பூஜை பொருட்களுடன் ஆலயத்தினுள் சென்று வழிபாடு செய்தனர். பின்னர் கிராமத்தின் சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் முடிதிருத்தம் செய்தும், டீ கடைகளில் சரிசமமாக தேனீர் அருந்தியும் தங்கள் உரிமை களை நிலை நாட்டினர்.
போராட்டம் 6
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் உடையநத்தத்தில் பொது முடித்திருத்தும் கடைகளில் தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது காலகாலமாய் இருந்துவருகின்ற கொடுமையாகும் இதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 300 க்கும் மேற்பட்டோர் களமிறங்கி போராடி உரிமையை மீட்டனர்.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று பாட புத்தகங்களில் அச்சடிக்கும் தமிழக அரசும். தலித் மக்களின் சம்பந்தி என்று அவ்வப்போது புலகாங்கிதம் அடையும் தலைவர் கலைஞரும் தமிழகத்தில் ஏழாயிரம் கிராமங்களில் தீண்டாமை இருப்பினும் அதைபற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் காவல்துறையினர் இருக்கும் தமிழ்நாட்டில் காவல் துறையினர் ஆதிக்க சாதிக்கு எதிராக தனது பலத்தை காட்டிய வரலாறு இதுவரை இல்லை. அதனால்தான் அரசு போட்ட பூட்டை உடைத்தெரியும் தைரியம் செட்டிபுலம் ஆதிக்கசாதியினருக்கு வந்தது.
மேற்கண்ட போராட்டத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அதில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஓய்ந்து விடாது.
வருகின்ற அக்டோபர் 27ம் தேதி சென்னையில் அருந்ததிய நலவாரியம் அமைத்து அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை தடை செய்யக் கோரியும், மயானங்களில் உள்ள உழைப்பாளிகளை வெட்டியான்கள் என்று கேவலப்படுத்தாமல், அவர்களை மயான உதவியாளர்கள் என்று அழைக்க அரசாணை பிறப்பிக்கக் கோரியும், அவர்களை உள்ளாட்சி ஊழியர்களாக மாற்ற கோரியும் பிரமாண்டமான பேரணி நடைபெற உள்ளது.
டிசம்பர் 25
பரமபிதா பிறந்ததாக நம்பப்படும் நாளில், ஒந்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்காக இராமையாவின் குடிசையில் உயிரோடு கொளுத்தப்பட்ட வர்க்க போராளிகளின் நினைவு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 100 கிராமங்களில் தீண்டாமையை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதிகேட்க புறப்படுகிறார்கள்.
ஆட்சியாளர்களே பதில் சொல்லுங்கள்.
பதில் சொல்லும் வரை
கடலலை போல ஆர்ப்பரித்துக்கொண்டே இருப்பது எங்கள் சுவாசத்தை போல இயற்கையானது என்பதை நினைவில் வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக