அன்புள்ள நண்பன் ராகுல்காந்திக்கு.. நன்றி! மற்றும் வணக்கம்,
தாங்கள் தமிழகம் வந்து சென்றவுடன் தங்களுக்கு இந்த கடிதத்தை எழுத வேண்டும் என நினைத்தேன், கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது எனவே வருந்துகிறேன். ஆனால் பலர் உங்களுக்கு கடிதங்களை எழுதி குவிப்பதை கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள் என நம்பிக்கையுடன் இந்த கடித்தத்தை எழுதுகிறேன்.
கடிதம் துவங்கியவுடன் நன்றி என்ற வார்த்தை எதற்கு? என்ற கேள்வி நிச்சயம் எழுந்திருக்கும். அந்த நன்றி எதற்கு எனில் உங்கள் மீது நான் வைத்த நம்பிக்கையின் பரிசு. அதாவது தாங்கள் தமிழகத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொன்னதன் விளைவாக எனக்கு கிடைத்த பரிசும்,. அதுகுறித்து எனது மகிழ்ச்சியையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம்.
தாங்கள் வருவதற்கு முன்பே மோப்ப நாய்களின் உதவியுடன் பாதுகாப்பு, ஊடக விளம்பரம், உங்கள் கட்சி கோஷ்டிகளின் வாழ்த்து கானம் என சகல ஏற்பாடுகளும் இங்கு துவங்கிவிட்டது. அதில் துவங்கி தங்களின் தமிழ்நாடு வருகை அனைத்தும் நமது ஊடகங்களில் மிகவும் சிறப்பான முறையில் "படம்" பிடித்துக் காட்டப்பட்டது தாங்கள் வந்தால் என்னென்ன பேசுவீர்கள், எதை பேச மறுப்பீர்கள் அல்லது மறப்பீர்கள், தங்கள் வருகையை யட்டி எப்படிப்பட்ட விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்படும் என் நண்பனிடம் கூறினேன். எனது நண்பனிடம் நான் சொன்ன விஷயங்கள் அவனை சுவாரிசியம் கொள்ளச் செய்தது மட்டுமல்ல, என்னுடன் பந்தய ஒப்பந்தம் போடுமளவுக்கு அவனைத் தூண்டியது. நான் சொன்னப்படி நடந்தால் ரூ. 500 பரிசாக தருவதாக ஒப்புக்கொண்டான். பாவம் உங்கள் பரம்பரை பற்றி அறியாத பாலகன் அவன்.
வறுமையை ஒழிப்போம், இந்தியா இரண்டாக இருக்கிறது அதை சரிபடுத்த வேண்டும், அதற்கு தமிழக இளைஞர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று கட்டாயம் தாங்கள் பேசுவீர்கள் என்றேன். அதுதான் நடந்தது. தாங்கள் அப்படியே பேசினீர்கள். நான் ஒன்றும் ஆருடம் கூறும் ஜோதிடன் அல்ல... ஆனால் உங்கள் பரம்பரையின் மீது மிகவும் நம்பிக்கை கொண்டவன்.
உங்கள் பரம்பரை சொன்ன சொல்லை மாற்றிப் பேசாத "சுத்தமான" பரம்பரை. "வறுமையை ஒழிப்போம்" என்று உங்கள் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி தாங்கள் என 62 வருடமாய் ஒரே வார்த்தையை மாற்றிப் பேசாத நேர்மையாளர்கள் என்று எனக்குக் தெரியும். ஆனால் உங்கள் திறமை அதை அழகாகச் சொன்னதுதான் "இந்தியா இப்போது இரண்டு இந்தியாவாக இருக்கிறது. ஒன்று ஏழை இந்தியா, மற்றொன்று பணக்கார இந்தியா பெரும்பான்மையான மக்கள் ஏழை இந்தியாவில் தான் இருக்கின்றனர். சாமானியர்களாக இருக்கும் அவர்கள் அரசியலில் உயர் பதவிக்கு வரும்போது தான் நிலமை மாறும்" என தாங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி பேரவை தேர்தலே நூற்றுக்கணக்கான கல்லூரிகளில், பல பல்கலைகழகங்களில் நடத்தாத பெருமைமிக்க மாநிலம் எங்கள் தமிழகம். காரணம் கேட்டால் கல்லூரி வளாகத்தில் தேர்தல் நடத்தினால் அரசியல் புகுந்துவிடும் என்று விசித்திர காரணம் கூறுவர். ஆனால் இங்கு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களை தாங்கள் இளைஞர் காங்கிரசுக்கு ஆள்பிடிக்கும் இடமாக மாற்றியது வருந்தத்தக்கது. என்றாலும் ஒருவகையில் பாராட்டத்தக்கதுதான். மற்ற அரசியல் இயக்கங்களும் இதுதுவங்கி உள்ளே புகட்டும். ஆனால் மற்ற அரசியல் இயக்கங்களுக்கு இல்லாத சலுகை உங்களுக்கு மட்டும் கிடைத்தது ஏன்? தாங்கள் கூறிய இரண்டு இந்தியாவின் முதல் பகுதி இந்தியர்களூக்கு தாங்கள் தலைமை தாங்குபவர் என்பதால் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
வேலூர் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் உரையாடியபோது "இந்தியாவில் ஆண்டுக்கு எத்தனை இதய நோய் நிபுணர்கள் தயாராகிறார்கள் தெரியுமா?" என கேள்வி கேட்டு சரியாக பதில் தெரியாத அவர்களிடம் வெறும் 70 பேர் என பதில் சொல்லி திகைக்க வைத்துள்ளீர்கள் ராகுல்... சரி உங்களுக்கான சில தகவல்கள் உள்ளது. உங்களுக்கு தெரியுமா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு 42 குழந்தைகள் வீதம் நாள் ஒன்றுக்கு 1000 குழந்தைகள் என்று ஆண்டுக்கு 3,6,5000 குழந்தைகள் ஊட்டச்சத்து போதாமல் மரணமடைகின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு 38 பேர் வீதம் நாள் ஒன்றுக்கு 900 பேர் என ஆண்டுக்கு 3,28,500 பேர் காச நோயால் மரணமடைகின்றனர்.
கருவுற்ற தாய்மார்களில் 73 சதம் பேர் இரத்த சோகை நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.
ஆண்டுக்கு 30 கோடி சம்பளம் வாங்கும் அம்பானி இருக்கும் நமது நாட்டில் 11 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 86 லட்சம் விண்ணப்பங்கள் குவிகின்றது.
இப்படி இன்னும் பல விபரங்கள் உங்கள் மடிக்கணினியுள் நிரம்பிக்கிடக்கலாம்.
போகட்டும்...... தமிழகத்தில் தாங்கள் சந்தித்தவர்களிடமெல்லாம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல கேட்டுள்ளீர்கள். எங்கள் ஊரில் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடக்கும் குறைகேட்பு தினத்தில் புலம்பி புலம்பி பழக்கப்பட்ட எங்கள் மக்கள் அதே நம்பிக்கையுடன் அல்லது அந்த அளவுகூட நம்பிக்கையற்றுதான் உங்களிடம் பதில் சொல்லி உள்ளனர். எங்கள் மக்களுக்கு தெரியும். இப்படி தலைவர்கள் வரும் போது பயிற்சி கொடுக்கப்பட்டு முன்வரிசையில் நிற்க வைக்கப்படுவது பள்ளிக்கூடத்தில் துவங்கும் வழக்கம் என்று.
அதைவிட தாங்கள் பேசியதில் அங்கத சுவை கொண்ட பேச்சு கீழ்காணும் வரிகள்தான். "நாட்டின் மொத்த வாக்காளர்களைப் பொருத்தவரை 40 முதல் 45 சதவிகிதம் பேர் இளைஞர்கள்தான், ஆனால் அந்த விகிதாச்சாரப்படி எந்த அரசியல் கட்சியும் இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதில்லை. தமிழகத்தில் இளைஞர்களின் குரலை ஒலிக்க அரசியல் ரீதியாக எந்த இயக்கமும் இல்லை, ஓர் இளைஞர் பணக்காரராகவோ அல்லது அவரது அப்பா கட்சியில் செல்வாக்கு உள்ளவராகவோ இருந்தால் மட்டும் அரசியலில் மேலே வரமுடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்"
தாங்கள் கலைஞர் குடும்பத்தையும், தங்கள் கட்சியையும் மனதில் வைத்துக்கொண்டு இப்படி பேசியிருப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால் எங்கள் ஊர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகழ்பெற்ற வசனம் ஒன்று உள்ளது. "வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது" என்பதுபோல "நல்லவன் மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது" என்ற நினைப்புடன் தான் பேசி இருப்பீர்கள். தங்கள் கட்சியின் வரலாறு வாரிசு வரலாறு என்பது மட்டுமல்ல தற்போது தங்களுடன் உள்ள பட்டாளம் எது. ஜி.கே.மூப்பனார் மகன், கலைஞர் மகன், மகள், மற்றும் மருமகன், சங்மா மகள், சரத்பவார் மகள், மாதவராவ் சிந்தியா மகன், ஆதித்யா குடும்பம் என நீளும் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் வகையறாக்கள் தானே?
ஒரு தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையிலோ, ஆளும் கட்சியின் சக்திமிக்க மனிதன் என்ற முறையிலோ தாங்கள் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய, அல்லது உரத்து பேச வேண்டிய பல உண்மைகளை மூடி மறைப்பது சரியா? நீங்கள் வந்த மூன்று நாட்களில் ஒரு நாள் கக்கன் விழாவில் கலந்துகொண்டு பேசினீர்கள், தலித் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தலைமைதாங்க வரவேண்டும் என்றீர்கள். மகிழ்ச்சியான வார்த்தைதான்.
ஆனால் தமிழகத்தில் 7000 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தொடர்வது குறித்து உங்கள் கட்சி வாய்திரக்காமல் இருப்பது குறித்து மவுனம் சாதித்தீர், மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் கொடூரம் நிகழ்கிற நாட்டில் அதை தடுக்கும் சக்திமிக்க இடத்தில் இருக்கும் நீங்கள் வாய்திறக்க மறுப்பது ஏன் ராகுல்?
"சந்திரயான்" அனுப்பி நிலவில் தண்ணீர் இருப்பதாக மார்தட்டும் விஞ்ஞானம் உள்ள நாட்டில், பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கும் நிலை குறித்து மவுனம் சாதிப்பது முறையா?
நிலமற்று அல்லது நிலம் மறுக்கப்பட்டு ஊருக்கு வெளியே, நாட்டுக்குள் ஒரு நாடு போல வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து மவுனம் சாதித்தீர். நியாயமா ராகுல்.
மன்னிக்கவும், இதையெல்லாம் உங்களிடம் கேட்கக் கூடாதுதான்.... உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய உத்திரபிரதேச மாநிலத்தில் பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் நடுரோட்டில் சாதியின் பெயரால் கொலை செய்யப்பட்டபோது கூட கயர்லாஞ்சி பக்கம் எட்டிப்பார்க்காத உத்தமன் நீங்கள்.
உங்கள் பயணத்தை பயன்படுத்திய எங்கள் மாநிலத்தின் பெருமைமிகு "சில" பத்திரிகைகள் நன்றாக விளம்பர வருமானம் பார்த்தனர். ஆனால் அந்த நேரம் முக்கியமான பல செய்திகளை ஏதோ ஒரு மூலைக்கு தள்ளினர். இடமில்லாத காரணத்தால் அல்ல. அந்த செய்திகளுக்கு எந்த இடத்தை கொடுக்க வேண்டும் என அறிந்ததால்தான்.
குறிப்பாக சோராபுதின் ஷேக்கும் அவரது மனைவியும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு குடும்பநிதி கொடுக்கச்சொல்லி குஜராத் அரசை கண்டித்த சூழலில், 2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற 19 வயது பெண்ணும், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி, ஜூஷான் என்ற 4 அப்பாவி முஸ்ஸிம் இளைஞர்கள் போலி எண்கவுன்டரில் கொல்லப்பட்ட தகவல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புறம் தள்ளப்பட்டது.
இந்துமதவாதிகளின் கொலைவெறி தாண்டவத்தை, அதை அவர்கள் மூடி மறைத்து அம்பல படுத்தப்பட்டதை தாங்கள் அந்த நேரத்தில் பேசி இருந்தால் அது தேசிய செய்தியாய் ஆகியிருக்கும் தானே, ஆனால், தாங்கள் அதற்கு தயாரில்லை.
ஆக வறுமையைப் பற்றியோ, தீண்டாமைக் கொடுமைகள் குறித்தோ, பட்டினி சாவுகள் குறித்தோ, மதவெறி குறித்தோ எதுவும் பேச மறுத்த அல்லது மறந்த தங்கள் வருகை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளப்படுத்தும் என நம்புகின்றீர்கள் ராகுல்....... தமிழக இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் வேதனையில் புலம்பித்திரிவது உங்களுக்கு தெரியுமா, சொந்த கிராமங்களை விட்டு அனாதைகள் போல வேலைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்.
லட்சக்கணக்கான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
உங்கள் மத்திய அரசு ஓய்வுபெறும் வயது வரம்பை 62 வயதாக உயர்த்தி 4 லட்சம் இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டுள்ளதே!
இந்த இரண்டு ஆண்டில் எத்துனை லட்சம் இளைஞன் பணி பெறும் வயது வரம்பை கடந்து காரிருளில் விழப்போகிறானோ
எப்படி உங்களால் சிரித்த முகத்துடன் கட்சிக்கு ஆள் சேர்க்க முடிகிறது ராகுல்........
உங்களால் ரூபாய் 500 கிடைத்த காரணத்தால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத நேர்ந்தது. உங்களுக்கு கலாவதியை நினைவிருக்கும் என்று நம்புகிறேன் உங்கள் தொகுதியில் இருக்கும் ஏதோ ஒரு கலாவதிக்கு உங்கள் மீது வைத்த "நம்பிக்கை" தொகை ரூ. 500 கொடுக்கவும். பணம் நான் அனுப்புகிறேன், வங்கி கணக்கை சொல்லுங்கள் நண்பரே!
---------------------------------------------எஸ்.ஜி. ரமேஷ்பாபு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக