வியாழன், 4 ஜூன், 2009

பயணக்குறிப்புகள் -


உலகில் பலவிதமான பயணக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. சீன தேசத்தின் யுவான் சுவாங் துவங்கி பாகியான் தொடர்ந்து, ஸ்பெயினின் மெகஸ்தனிஸ், 1333 - 1342 காலத்தில் இந்தியா குறித்து குறிப்புகளை எழுதிய அப்துர் ரஸாக்கோ, போர்த்துகீசிய வணிகரும், விஜயநகரப் பேரரசசைப்பற்றி குறிப்பு களை எழுதி உள்ள பெர்னோவோ நூனிஸி, பாரசீக நாட்டை சார்ந்தவரும் 1570 - 1611 வரை அகமதாபாத் நிஜாம் அரசவையிலிருந்து குறிப்புகளை எழுதிய பெரிட்ஷா, வாஸ்கோடகாமா கப்பலில் பயணம் செய்தபோது எழுதிவைத்த டயரிக்குறிப்பு, 13ம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ஆப்பிரிக்க முஸ்லிம் பயணியான இபான்-பகதூதா போன்றோரும், கண்டங்களை கடப்பவர்களும், நாடு களை கடப்பவர்களும், ஒரு தேசத்திற்குள் பலபகுதிகள் செல்பவர்களும், மலைகளை, வனப்பகுதிகளை பற்றியும்கூட பல குறிப்புகளை எழுதியுள்ளனர்.

ஆளும் வர்க்கங்களின் பண்பாடுகளை, அவர்களின் குடும்ப ஆட்சிமாற்றங்களை, தங்களது குலம் நிலைத்து வாழ அவர்கள் செய்த தந்திரங்களை, அவர்களின் லாபகரமான வியாபார தொடர்புகளை, அதன் விளைவாக நாடுகளை இழந்ததை பயணக் குறிப்பாக நீங்கள் படித்திருக்கக்கூடும். உதாரணமாக "ராய்ச்சூர் கோட்டை முற்றுகை என்றால் அதில் பங்கேற்ற கிருஷ்ண தேவராயரின் காலாட்படை எண்ணிக்கை, குதிரைவீரர்கள் எண்ணிக்கை, யானைகளின் எண்ணிக்கை, மன்னர் முகாம் செல்லும் போது உடன் வருகிறவர்களில் அலிகள் எத்தனை பேர், நவராத்திரி வைபவங்களில் தேவதாசிகளின் நடனம், அந்தபுர நாயகிகளுடன் தேவதாசிகள் இயல்பாக பழகுதல், சிற்றரசர்கள் ஆண்டுதோறும் கட்ட வேண்டிய கப்பம், விஜய நகரத்தின் சந்தையில் என்னென்ன விற்கப்பட்டன என்பதுவரை விபரங்களை தந்து விடுவார் நூனிஸி* ஆனால் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள் வாழ்வியல் நிலை குறித்து நீங்கள் அறிந்து கொள்ள முடியாது. இக்கட்டுரையின் தலைப்பை பார்த்து நீங்கள் மேற்கண்ட பயணகுறிப்புகளின் கற்பனையுடன் பயணிக்க வேண்டாம்.

இது வானுயரக் கட்டடங்களால் நாகரீகமாய் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஒரு மாநகரத்தினுள், அரைமணி நேரப் பயணம் செய்தவ னின் குறிப்பு. இம்மாநகரம் சென்னை என்று பிரஸ்தாபிக்கப்படுகிறது.

பரபரப்பான வாகனப் போக்குவரத்தும், எந்திரத்தனமான மனித நடமாட் டமும் இல்லாத இரவில் ஏதோ ஒரு மாநகரத்தினுள் நீங்கள் தனிமையில் நடந்ததுண்டா? அப்படி நடக்கும்போது உங்கள் சுயம் குறித்த நினைவு களிலிருந்து விடுபட்டு, சாலை ஓரங்களில் உறங்கும் அல்லது புகைமூட்டி கொசுவிரட்டும் மனிதர்களைப் பார்த்த துண்டா? "இறைவா குளிப்பதற்கு ஒரு மறைவான இடம் கொடு" என்று பரம பிதாவிடம் மனுபோட்ட பிரபஞ்சனின் நாவலில் வரும் பெண்ணை சந்தித்ததுண்டா? வாகனங்கள் செல்லும் உணர்வேயற்று நடைபாதையில் விளையாடும் குழந்தைகள் உங்களை பதற வைத்துள்ளார்களா? குறைந்தபட்சம் உங்கள்கவனத்தை அசைத்திருக்கிறார்களா?

காதலும் காமமும் நிகழ்கின்ற இடமாய், குழந்தை சூல் கொண்ட சூழலும் நடைபழகிய இடமும் சாலையோரம் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நடைபாதையிலேயே குளித்து, உடை மாற்றி, துவைத்து, துவைத்த துணியை உலர வைத்து, பறக்கும் புழுதிக்கு இடையில் சமையல் செய்து உணவருந்தி, எங்கோ சென்று மாலையில் மீண்டும் அதேஇடத்திற்கு வருகிறவர்களை சந்தித்ததுண்டா? நகரம் விழிப்பதற்கு முன் விழித்து காலைக்கடனை முடிக்க இடம் தேடி அலையும் நரக வாழ்க்கை உங்களில் யாருக்கேனும் வாய்த்திருந் தால் என்ன செய்வீர்கள்?

"சினிமாவிலும் நாவலிலும் இலகுவில் தரிசனம் கொடுக்கத் தவறும் சென்னை நகரத்தின் இன்னுமொரு உலகம் பாதையோரத்திலும் குப்பைமேட்டி லும் புதைந்து கிடந்தது. பழங்கிடுக்குகள்,கிழிந்த பனர்கள், காட்போடுகள், கோணிகள், தகரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகள் அந்த நகரம் வேண்டாம் என்று ஒதுக்கிவைத்த சகல இடங்களிலும் தம் இஷ்டத்திற்கு முளைவிட்டு வளர்ந்தன. கூவம் நதி ஓடும் பகுதியெல்லாம் அந்த குடிசை கள் சல்வேனியக் கொடிகள் படரும் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு புதிதுபுதிதாக பிறந்து கொண்டிருந்தன. அதற்குமீ வழியில்லாத குடும்பங்கள் பல தெருஓரங்களில் வானத்தை கூரையாக்கிக் கொண்டு அப்படியே கிடந்தார்கள். அவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக இல்லை. அவர்களுக்கும் யாரைப் பற்றியும் கவலை இல்லை." **

சென்னை என்று மட்டுமல்ல இந்த நாட்டின் பெருநகரங்களில் பொது வான கதை இதுதான். நகரங்கள் நிராகரித்த வாழ்வு இவர்களுடையது. ஆயிரமாயிரமாய் வாழ்கின்றனர். கடுமையான மழை பொழிந்தால் மூடி யிருக்கும் கடைகளின் ஓரங்களில் கைகளில் கிடைத்த சினிமா போஸ்டர் களால் சாரலைத் தாங்கி, மழைநிற்க வேண்டிக்கொண்டிருப்பார்கள். சட்டியில் வேப்பிலை கொளுத்தி கொசுக் களுடன் போராடி தோல்வி அடைந்து தினம் தினம் அவை களுக்கு இரத்த தானம் செய்து கொண்டிருப்பார்கள்.

நாகரீகங்கள் நதிக்கரை ஓரங்களில் தோன்றியதாக வரலாறுகள் சொல்கின் றன. சென்னை மாநகரத்தின் கூவம் நதிக்கரை ஓரங்களிலுள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று பாருங்கள், உமது மேலான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் 5 கழிப் பிடங்கள் மட்டுமே இருக்கின்றன. மாநகரின் கழிவுகளை உள்வாங்கி சாக்கடைக் குழம்பாய் மாறிப்போன கூவம் முடைநாற்றம் வீசிக்கொண்டே தேங்கி நிற்கிறது, ஐநூறு வீடுகள் கொண்ட பகுதியில் பொதுவில் இரண்டு குடிநீர்க் குழாய்கள் நின்று தினம் தினம் பெண்களை மோத விடுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு மாநகரத்தினுள் தான் நமது பயணம்.

(இடைக்குறிப்பு: ஒவ்வொரு பகுதிக் கும் பயணம் செல்லும் முன்னர் கொசு வர்த்திச் சுழலின் நினைப்பிலோ கருப்பு வெள்ளையிலோ கொஞ்சம் "பிளாஷ் பேக்" வரும், பொருத்தருள்க)

குறிப்பு:1

நாம் பயணத்திற்கு தயாராகலாம். ஒரு நபர் இந்த பயணத்திற்கு செலவழிக்க வேண்டியத் தொகை ஏழு ரூபாய். பூங்கா நகர் அல்லது பார்க் டவுன் என்றழைக்கப்படும் ரயில் நிலையம். இங்கிருந்துதான் நமது பயணம் துவங்குகிறது.

1853ல் கிழக்கிந்திய கம்பெனியின் வியாபார வளர்ச்சிக்காக டல்ஹெளசி பிரபுவால் ஆற்காட்டுக்கும் சென்னைக் கும் போடப்பட்ட ரயில் பாதையின் துவக்கமான சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு முன் பூங்கா நகர் ரயில் நிலையம் இருக்கிறது. இதன் முன் புறம் 100 ஆண்டுகளைக் கடந்து, தற் போது இடிக்கப்பட்டு வரும் மத்தியச் சிறை. கைதி எண்:6342 என்ற புத்தகம் எழுத அண்ணாவைத் தூண்டிய,ஜெயலலிதாவும் அதன் விளைவாய் கலைஞரும், வேலுப்"பிள்ளை"பிரபாகர னும், மிசாவில் சிட்டிபாபுவும், மு.க.ஸ்டாலினும் அடிவாங் கிய, 1999 கலவரத்தில் ஜெயக் குமார் என்ற சிறையதிகாரியும், 14 கைதிகளும் கொல்லப்பட்ட அதே மத்தியச்சிறை. பின்புறம் 150 ஆண்டுகளுக்கு முன் பிரிட் டிஷாரால் கட்டப்பட்ட, மருத்துவ நகரம் என்று சென்னியப்ப பட்ட ணத்திற்கு பெயர் வாங்கித் தந்த மருத்துவமனை காட்சியளிக்கும். கர்நாடக மசூலிப்பட்டினம் துவங்கி மரக்காணம் வரை செல்லும், பெரும் பஞ்சகாலத்தில் வேலைக்கு உணவுத் திட்டத்தில் தோண்டப்பட்ட பக்கிங்காம் கால்வாயும், பூண்டி ஏரியின் வரத்து நதியான, தற்போது கடந்து போனால் துர்நாற்றம் சகியாமல் அனிச்சையாக மூக்கைப் பிடிக்கும் கூவமும் இணையும் இடம் இதுதான்.

பூங்கா நகர் மின்சார ரயிலில் நீங்கள் திருவான்மியூர் நோக்கி பயணத்தை துவக்கினால் வலதுபுறம் தெரியும் பகுதியின் பெயர் ஐந்து குடிசை மற்றும் நெடுஞ்செழியன் நகர். சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குள் வருவது. (முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞர் வாழ்க! தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க! - சுவர்களில் விளம்பரம்).

அங்கு மொத்தம் 1600 குடிசைகள். 6000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் 1000 பேருக்கு மேல் ரேஷன் கார்டு இல்லை. துவக்கப் பள்ளியோ, ஆரம்ப அல்லது துணை சுகாதார நிலையமோ கிடை யாது. ஒரு வீட்டிலும் குடிநீர்க் குழாய் இணைப்பு இல்லை. மொத்த பகுதிக்கும் சேர்த்து 10 குடிநீர்க் குழாய்களே உள்ளன. (ச்சேச்சே .. இந்த குழாயடிச் சண்டை எப்பத்தான் நிற்குமோ என்று இனி எளிதாக கிண்டல் செய்யாதீர்) எந்த வீட்டிலும் கழிப்பிடம் கிடையாது. பொதுக்கழிப்பிடம் மூன்று மட்டுமே உள்ளன. இளைஞர்களுக்கான உடற் பயிற்சிக்கூடம் எதுவும் இல்லை, மிஷனரி நடத்துகிற இலவச டியூஷன் 200 மாணவர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்த வீட்டுக்கும் பட்டா கிடையாது. அதற்காக அரசு டோக்கன் கொடுத்துள்ளது. அரசு டிவி கொடுக்கத் துவங்கியும் 50% வீடுகளில் மட்டும் டிவி உள்ளது.

மாதா சொரூபமுள்ள நான்கு தேவாலயங்களும், முருகன், துர்க்கையம்மன், விநாயகர், கருமாரியம்மன் என ஒன்பது கோயில்களும் உள்ளன.

அங்குள்ள மக்கள் பெயின்டிங், மீன் கூடை தூக்குவது, கட்டுமான பணி களில் வேலைசெய்வது, ரிக்ஷா இழுப்பது, ஆட்டோ ஓட்டுவது, பெரும் பாலான பெண்கள் வீட்டு வேலைகளுக்கு செல்வது என்றே பிழைப்பு நடத்துகின்ற னர்.நெடுஞ்செழியன் நகரில் பத்துபேர் மட்டுமே கல்லூரி வாசலை மிதித்தவர்கள்.

இடதுபுறம் கூவம் நதிக்கரை ஓரத்தில் தெரியும் அப்பகுதி பல்லவன் நகர். சேப்பாகம் சட்டமன்ற தொகுதிக்குள் வருவது.(முத்தமிழ்வித்தகர், தமிழினத் தலைவர்,டாக்டர் கலைஞர் வாழ்க?).

மொத்தம் 500 குடிசைகள். இதில் 323 அரசு கட்டிக் கொடுத்தவை. 1500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இப்பகுதி யில் 150 பேருக்கு மேல் ரேஷன் கார்டு இல்லாதவர்கள். இங்கும் துவக்கப் பள்ளியோ, ஆரம்ப அல்லது துணை சுகாதார நிலையமோ கிடையாது. ஒரு வீட்டிலும் குடிநீர்க் குழாய் இணைப்பு கிடையாது. மொத்தப் பகுதிக்கும் சேர்த்து 8 குடிநீர்க் குழாய்களே உள்ளன. 10 வீடுகளில் மட்டுமே கழிப் பிடம் உள்ளது. பொதுக்கழிப்பிடம் ஒன்று மட்டுமே உள்ளது. அசூயை யற்று பொதுவெளியில் இயற்கை உபாதை கழிப்பவர்களை புறக்கண் ணால் கவனித்து மற்றவர் பார்த்தால் அசிங்கமாகிவிடும் என்ற நினைப்பில் யோக்கியன் போல அந்த இடத்தை கடப்பவர்களை இந்த விபரங்கள் நேர்க் கண்ணாக மாற்றக் கடவது.

குறிப்பு:2

அடுத்த நிறுத்தம் சின்னதறிப் பேட்டை என்று புகழ் பெற்று விளங்கிய- காஞ்சி புரத்திற்கு அடுத்து கைத்தறி உற்பத் திக்கு அதிகம் புகழ்பெற்ற- தற்போது அந்த சுவடே தெரியாத அல்லது அந்த எச்சங்களை மட்டும் சுமந்து நிற்கும் சிந்தாதரிபேட்டை.

இங்கிருந்து அடுத்த நிறுத்தம் கண்கவர் விளக்கொளியோடு கோடிகோடியாய் பணம் புரளும் கிரிகெட் மைதானம் உள்ள சேப்பாக்கம். இந்த வழித்தடத் தின் ஒருபுறம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியும் மற்றோர்புறம் கூவம் நதியும் உள்ளதால் குடிசைகளை தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காது. அடுத்து சேப்பாக்கத்திலிருந்து....

"வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் / கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவல யத்தார் தொழுதேத்தும் / ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா /மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே" என்று நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரம் சுட்டும் திருவல்லிக்கேணியை நோக்கிச் செல்ல வேண்டும்.

திருவல்லிக்கேணி செல்லும் தூரத்தில் இடதுபுறத்தில் கட்டிடங்கள் ஆக்கிர மித்துள்ளதால் அங்கு வசிக்கும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்க வில்லை. வலதுபுறம் அரசு இடித்து தள்ளியது போக மீதம் 100 குடிசைகள் பரிதாபமாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிற்கின்றன.

இந்த பகுதி மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள பார்த்தசாரதி கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் சம அளவில் இந்துக்களும் இசுலாமியர்களும் உள்ளனர். தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்கு தான் உள்ளன. திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பாலகுமரனால் சேவல் பண்ணைகள் என்று சுட்டப்படும், மேன்ஷன் என்றழைக்கப் படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலைதேடி சென்னை வரும் பல இளைஞர்களுக்கு திருவல்லிக்கேணிதான் புகலிடமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.

பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணி பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் இங்குதான் அமைந்துள்ளது. எழுத் தாளர் சுஜாதா, கிரிக்கெட் வீரர் எம்.ஜே. கோபாலன்,கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், டபிள்யூ. வி. ராமன் போன்ற பல புகழ்பெற்ற மனிதர்களை உரு வாக்கி இருக்கிறது. 150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலைப் பள்ளி இங்குதான் உள்ளது. நோபல் பரிசு வென்ற சுப்ரமணியம் சந்திரசேகர் இப்பள்ளியில் (1922- 1925) படித்தவர் போன்ற குறிப்புகளுடன், இங்குள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு வெளியே செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப் பட்ட போது அதற்காக போராடி அவர்களை உள்ளே அழைத்து சென்றவர் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பி.ராமமூர்த்தி என்ற குறிப்பை நாம்தான் சேர்க்க வேண்டியுள்ளது.

குறிப்பு:3

அடுத்து திருவல்லிக்கேணியிலிருந்து கலங்கரைவிளக்கம் செல்லும் தூரத்தின் இடதுபுறம் இருப்பது நடுக்குப்பத்தின் ஒருபகுதியும், நீலம் பாட்ஷா தெரு வின் ஒரு பகுதியும் ஆகும். திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதிக்குள் வருவது. அங்கு மொத்தமுள்ள 200 குடிசைகளில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்தாலும் 80 பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டு உள்ளது. இப்பகுதிக்குள் துவக்கப்பள்ளியோ, ஆரம்ப அல்லது துணை சுகாதார நிலையமோ கிடை யாது. ஒரு வீட்டில்கூட குடிநீர்குழாய் இணைப்பு கிடையாது. மொத்த பகுதிக்கும் சேர்த்து 2 குடிநீர்க் குழாய் களே உள்ளன. எந்த வீட்டிலும் கழிப் பிடம் இல்லை. பொதுக்கழிப்பிடம் ஒன்று மட்டுமே உள்ளது. இளைஞர் களுக்கான உடற்பயிற்சிக்கூடம் எது வும் இல்லை. இலவச டியூஷன் 100 மாணவர்களுடன் இயங்கிக் கொண்டி ருக்கிறது. எந்த வீட்டுக்கும் பட்டா கிடையாது. எந்த வீட்டிலும் மின்சாரம் கிடையாது.கருமாரியம்மன், விநாயகர், நாகாத்தம்மன் என மூன்று கோயில்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் மீன்சந்தை கூலிவேலைக்குச் செல்வது, பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளுக்கு செல்வது என்றே பிழைப்பு நடத்துகின்றனர். இரண்டு பெண்கள் மட்டுமே கல்லூரி வாசலை மிதித்தவர்கள்.

வலதுபுறம் தெரியும் பகுதியில் இரண்டு பகுதிகள் உள்ளது. வி.ஆர். பிள்ளை தெரு மற்றும் ரோட்டரி நகர். திருவல்லிக்கேணி தொகுதிக்குள் வரு வது. அங்கு மொத்தம் 1500 குடிசைகள் (பல வீடுகளும்) உள்ளன. 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதி யில் அனைவருக்கும் ரேஷன் கார்டு உள்ளது. இப்பகுதிக்குள் துவக்கப் பள்ளி உள்ளது. ஆரம்ப அல்லது துணை சுகாதார நிலையமோ கிடை யாது. ஒரு வீட்டில்கூட குடிநீர்க் குழாய் இணைப்பு கிடையாது.மொத்த பகுதிக் கும் சேர்த்து ஏழு குடிநீர் குழாய்களே இருக்கின்றன. 10% வீடுகளில் கழிப் பிடம் உள்ளது. பொதுக் கழிப்பிடம் 2மட்டுமே. இளைஞர்க்கான உடற் பயிற்சிக்கூடம் உள்ளது. அம்பேத்கர் மன்றம் நூலகம் மற்றும் இலவச டியூ ஷன் 200 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. தி.மு.க சார்பில் ஒரு படிப்ப கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு இரவு பாடசாலையும் உள் ளன. எந்த வீட்டுக்கும் பட்டா கிடை யாது. அரசு டிவி கொடுத்தும் 50% வீடு களில் மட்டும் டிவி உள்ளது. பச்சை யம்மன், விநாயகர் உள்ளிட்ட 3 கோயில்கள் இருக்கின்றன. கூலி வேலை, நீல்மெட்டல் கம்பெனியில் நகரை தூய்மைப்படுத்தும் வேலை, பெண்கள் வீட்டுவேலை, சிலர் அரசு வேலை என பிழைப்பு நடத்துகின்ற னர். 10 மாணவர்கள் மட்டுமே கல்லூரி வாசலை மிதித்தவர்கள். அடுத்து மயி லாப்பூரை நோக்கி செல்ல வேண்டும்..

குறிப்பு:4

சென்னை மாநகரம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தாலமியின் நூலில் இது மைலார்பொன் எனக் குறிப்பிடப்பட்டு, வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்ல வர் காலத்தில் இது சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போர்த்துக்கீசியர் ஆதிக்கம் ஏற்பட்ட போது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பி னார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தி னார்கள். நகர்த்தியது எப்படி?

சென்னை தோன்றும் முன்பே இது கடலோர நகரமாக பெயர் பெற்றது என்றால் அது கடலும் கடல் சார்ந்து வாழும் மீனவர்களும் இல்லாமலா? அப்படியெனில் அவாள் எங்கே? மன்னிக்கவும் அவர்கள் எங்கே? இப் போதுள்ள பார்ப்பனர்கள் எப்போது வந்தார்கள்? மைலார்பொன் நகரை கண்டடைந்தவர்கள் அந்த பூர்வகுடி களை விரட்டிட இங்கு உதவியவர்கள் யார்? பூர்வகுடிகளை தமது சொந்த மண்ணிலிருந்து விரட்டிய சக்திகள் எவை? வளம்மிக்க இடத்தை கொள்ளை கொள்ளும் சமூகம் ஆளும் வர்க்க ஆதரவுடன் கொள்ளையிடும் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபிக்கப் பட்ட இடமாய் இது இருக்கலாம்.

தமிழ்நாட்டில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் செழிப் புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு சமணப்பள்ளி இருந்ததாகவும் அதில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் வைக்கப் பட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்ற நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இதுதவிர திருக்கலம்ப கம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப்பள்ளி தொடர்பில் எழுந்தவையாகும். இப்பள்ளி தொடர் பான தொல்பொருட்கள் பல சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் நீண்டகாலமாகவே சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ் வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படு கிறது. போர்த்துக்கீசியர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ் வரர் கோயில் 16, 17 ஆம் நூற்றாண்டு களில் கட்டப்பட்டதாகும்.

இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவ ரான தோமஸ் கி.பி.52ல் கேரளாவுக்கு வந்து சமயப்பணி செய்து பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72ல் சென்னை அருகிலுள்ள சின்ன மலை அருகே கொல்லப்பட்டார் என வும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டு அவ்விடத்தில் தேவால யம் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

நகரத்தின் மகாத்மியங்களை இப்படி சொல்லிச் செல்வது இந்த குறிப்பின் நோக்கமல்ல. நாம் கடக்கும் பகுதிக ளின் மக்கள் வசிப்பிடம் நகல் எடுத் ததுபோல் ஒரே பாவனையில் இருக் கும் என்பதாலும் காலிக்குடங்களும், சாக்கடை ஓரத்தில் புழங்கும் மக்களும் மீண்டும் மீண்டும் தென்படுவதால் நீங்கள் சுவராசியம் இழக்கக்கூடும் என்பதாலும் அடுத்துள்ள மந்தவெளி, பசுமைச்சாலை நிறுத்தங்களை கடந்து சென்று இந்திரா நகர் நிறுத்தத்தை அடைவோம். அங்கு நீங்கள் பார்க்கும் காட்சி ஐந்து குடிசை மற்றும் நெடுஞ் செழியன் நகர், பல்லவன் நகர் போன்ற பகுதிகளின் சுவடே தெரியாமல் தனி உலகம்போல காட்சியளிக்கும்.

குறிப்பு: 5

சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன் றாக விளங்குகிறது. தென் சென்னை யில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. மென் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால், வானுயர் கட்டிடங்க ளால் நிரப்பப்படும் இடமாக இந்திரா நகர் துவங்கி வேளச்சேரிவரை மாநகர் வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்பகுதி யில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் இருந்த வாடகை ஏற்ற விகிதம் 80 மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண மக்க ளுக்கு இங்கு வாடகைவீடு கிடைப்பது அரிது. ஆனால்...

இந்தியாவின் வாகன உற்பத்தியில் வட சென்னை முதலிடம் வகிக்கிறது. அம் பத்தூர், பாடி பகுதிகளில் பல தொழிற் சாலைகள் உள்ளன.டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹ§ண்டாய், போர்டு, மிட் சுபிஷி, டி.ஐ, எம்.ஆர்.எஃப், பி.எம். டபிள்யூ போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடி யில் இந்திய ராணுவம் தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள் உள் ளன. இந்தியாவின் முக்கியப் போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக் கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி தொடர்ந்து புறக்கணிப்புக்குள்ளாகி இருப்பதும், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளிகள் வீதியில் அலைவதும், பன்னாட்டு நிறுவனங் களுக்குள் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதும் ஊடகங் களின் கண்களுக்கு தெரிவதில்லை.

இந்திராநகர் துவங்கி நீங்கள் பார்க்கும் காட்சிகள் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் - திரைப்படங்களில் காணும் காட்சிகள் போல.தாங்கள் நவீன கொத்தடிமைகள் என்ற பிரங்ஞையே இல்லாமல் மென் பொருள் நிறுவனங்களின் அடையாள அட்டைகளை மாட்டிய யுவன்களும், யுவதிகளம் நுனிநாக்கில் ஆங்கிலம் புரள உங்களை கடந்து செல்வர், சாலைகள் பளபளப்பாக காட்சி தரும், உயர்ரக கார்கள் உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.. எந்த நேரமும் மின்சார வெட்டில்லாத உலகம் அது. கண்ணாடி பதிக்கப்பட்ட வானுயர் கட்டிடங்கள். இதுவரை நீங்கள் பயணத்தில் கண்ட சென்னை இதுதானா எனக் காட்சி மயக்கமாய் தோன்றி மறையும். இப்படிப்பட்ட இந்தியாதான் தங்க ளின் கனவு என்று முன் நிறுத்தப்படு கிறது. இந்த தேசத்தில் ஒளிரும் இந்தியாவும் ஒடுக்கப்பட்ட இந்தியா வும் ஒரே பாதையில் சந்திக்க முடிகிற பயணமாக இந்த ரயில்பயணம் அமைந்தது தற்செயலானதா அல்லது இந்த தேசத்தின் யதார்த்தமா?

பயணக்குறிப்பின் பின்குறிப்பு:

இந்தப் பயணகுறிப்புக்காக சென்னை மாநகரின் வரலாற்றைத் தேடியபோது எந்தப் பதிவேட்டிலும் உழைப்பாளி மக்கள்- குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எந்தப் பதிவும் காணக் கிடைக்கவில்லை. இந்த நகரத்தின் வளர்ச்சிக்காக தம் வாழ்வை இடு பொருளாக இட்டு நிரப்பியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களது வாழ்வியல் சூழல் எது? இக்கேள்விகள் உடன் பயணித்துக் கொண்டே இருக் கின்றன. குளத்தின் நடுவில் ஒரு கல் எறியப்படும் போது ஏற்படும் வட்ட அலைகள் கரையை நோக்கிச் சென்று மறைவது போல நகரம் வளர வளர இந்த உழைப்பாளிகள் நகரத்திற்கு வெளியே சென்று மறைகின்றனர்.

ஒரு மாநகரத்தில் செல்லும் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது? பிரமிப் பூட்டும் கட்டிடங்களா? அல்லது அதை கட்டிய தொழிலாளிகளா? பெரும் மழை பெய்கிற காலத்தில் சூடேற்றப் பட்ட அறையில், இதமான சூட்டில் தேநீரை உறிஞ்சிக் குடிக்கிற போதோ அல்லது கோடையில் குளிரூட்டப் பட்ட அறையில் ஒரு மென்பானத்தை சுவைக்கும் போதோ இந்த கேள்வி தோன்றினால் ரூபாய் ஏழு செலவு செய்து பாரிமுனை முதல் வேளச்சேரி வரை மாடி இரயிலில் பயணம் செய் யுங்கள். புத்தகத்தில் அல்லது செல் போனில் அல்லது வாக்மேனை காதுக்கு கொடுத்து கண்களை மூடிய படி அல்ல.. இருபக்கமும் பார்த்துக் கொண்டே!

மேற்கோள்கள்:

*'விஜயநகர பேரரசு' பெர்னாவோ நூனிஸின் குறிப்புகள்

**1985ம் ஆண்டில் வெளிவந்த 'புதியதோர் உலகம்' நாவலிலிருந்து

நன்றி: தகவல் திரட்ட என்னுடன் வந்து உதவிய தென்சென்னை இந்திய ஜன நாயக வாலிபர் சங்க தோழர்களுக்கு..
--------புது விசை----- ஏப்ரல் - ஜூன் 2009

3 கருத்துகள்:

  1. DEAR COMRADE,
    WE WILL CHANGE IT, TOMORROW WILL BECOME SOCIALISM

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக நாளை உலகம்
    மாறும் தோழா!

    ரமேஷ் பாபு நீங்கள் கடலூர் தானே?
    நான் வடலூர் DYFI டேனியல் நன்பன்!

    பதிலளிநீக்கு
  3. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    பதிலளிநீக்கு