சனி, 9 மே, 2009

மதுரை தினகரன் ஊழியர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி


கருணாநிதியின் குடும்ப சண்டையின் காரணமாக மதுரையில் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு இன்றோடு இரு ஆண்டு நிறைவடைகிறது. 2007ம் ஆண்டில் இதே தினத்தில் கொழுந்துவிட்டு எரிந்து சூழ்ந்த நெருப்பில் தனது இறுதி நிமிடங்களை நரக வேதனையுடன் அனுபவித்து தோல் தீய, நரம்புகள் வெடிக்க, கரிக்கட்டையாய் உதிர்ந்து போன அந்த மூன்று உயிர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது தமிழக மக்களின் கடமையாகும்.
தேர்தல் நேரம், கருத்துக்கணிப்புக் காலம் என்பதால் அந்த கருத்துக் கணிப்பை மறந்துவிடக்கூடாது என்று நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். மதுரையில் தனது ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பும் அண்ணனுக்கு (அவருக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பெயரும் உள்ளதாம். போங்கடாங்க...) எதிராக கருத்துக்கணிப்பை வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்தை கொலைவெறியுடன் தாக்கிய, மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்திய அந்த நரவேட்டை மிருகங்கள் இன்று அண்ணனுக்கு தேர்தல் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் அண்ணன் வாகனத்தில் சிரித்தபடி கையசைத்துச் செல்கின்றனர். அண்ணனும் புன்னகை சிந்தும் முகத்துடன் வாக்குகளை சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் தங்களது குடும்பங்களில் வருமானத்திற்கு ஆதரவாக இருந்த ஒரு ஜீவனை இழந்த அந்த குடும்பங்கள் சோகங்களை நெஞ்சில் சுமந்து மௌனமாக அழுதுக்கொண்டு இருக்கிறார்கள். கொலை மற்றும் கலவர குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட மதுரை நகரின் மேயர் தேன்மொழி, அவரது கணவர் கோபிநாதன் மற்றும் பி.பிரபு, எம்.சரவணன், கே.மாரி, பி.இருளாண்டி உள்ளிட்டவர்கள் இப்போது எங்கே, எப்படி சுபிட்சமாக உள்ளனர் என்று மதுரை நகர மக்கள் மட்டுமல்ல அனைவரும் அறிவர். தங்கள் குடும்பத்தில் எழுந்த அதிகார போட்டியின் வெறியை தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு மூன்று உயிர்கள் தேவைப்பட்டுள்ளது.
தினகரன் பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு, உள்ளே ஊழியர்கள் இருக்கும் போதே கொளுத்தப்பட்டு மரண ஓலம் அடங்கிய போது அங்கு வந்த கலாநிதிமாறன் இதை சும்மாவிடப்போவதில்லை என்று சபதமிட்டார். அப்போது யாரும் நினைக்கவில்லை, அது வெற்று வார்த்தைகளாக காற்றில் கரையும் என்றும், நிறம் மாறுமென்றும். அதன் பிறகு தயாநிதி மாறனின் பதவி போனதும் சற்று கோபம் அதிகமானது. அதன் விளைவு சன் தொலைக்காட்சியில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் தலைகாட்டத் துவங்கினர். தினகரன் பத்திரிகையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் படங்களும் பேட்டியும் வரத்தொடங்கியது.
1990ல் துவங்கிய டீவி ராஜ்ஜியம் மெல்ல மெல்ல தனது வலையை விரித்து இன்று சன் நியூஸ், கிரன் நியூஸ், உதயா நியூஸ், ஜெமினி நியூஸ், சன் மியூசிக், உதயா மியூசிக், ஜெமினி மியூசிக், உதயா கேபிள் விஷன், சுட்டி டீவி, கே டீவி, ஆதித்தியா டீவி, தேஜா டீவி, சூர்யா டீவி, ஜெமினி டீவி, உதயா டீவி, சிந்து டீவி, குஷி டீவி, கிரன் டீவி, உதயா வர்தகளு, உதயா மூவிஸ் போன்ற 22 தொலைகாட்சி சேனல்களும், சூரியன் எப்.எம் போல நாற்பதுக்கும் மேற்பட்ட பண்பலை அலைவரிசைகளையும் கொண்டு பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது அதை சமாளிக்க வேண்டுமெனில் ஆளும் கட்சிக்கு பலமான ஊடக பலம் தேவைப்பட்டது.
எனவே உடன் கலைஞர் டீவி துவக்கப்பட்டது. சன் டீவி நிர்வாகத்தில் உள்ள பலர் மிரட்டப்பட்டு அல்லது அன்பாக கவனிக்கப்பட்டு கலைஞர் டீவி நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பலநிகழ்ச்சிகள் சன் டீவியிலிருந்து கலைஞர் டீவிக்கு மாற்றப்பட்டது. சிரிப்பு நிகழ்ச்சி கலைஞர்கள் மிரட்டப்பட்டடு கண்ணீருடன் கலைஞர் டீவியில் இணைந்தனர். தினகரனுக்கு எதிராக எதிரொலி என்ற பத்திரிக்கை முளைத்து வந்தது. சுமங்களி கேபிள் நிறுவனத்திற்கு எதிராக அரசு கேபிள் விஷன் துவக்கப்பட்டது, மதுரையில் அண்ணன் ராயல் கேபிள் விஷனை துவக்கினார்.
அவரது அடிப்பொடிகள் தங்களிடமே தொடர்புகளை பெறவேண்டுமென கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டினர் அல்லது உதைத்தனர். சன்னுக்கு எதிராக முழுமையான போராட்டத்தை அண்ணன் அழகிரி துவங்கிட மதுரை மண்டலத்தில் சன் தெரியாமல் போனது. அதே நேரம் அண்ணா அறிவாலயத்திலிருந்தும் சன் நிறுவனம் துரத்தப்பட்டது.
ஆட்சி அதிகாரம், பணபலத்தால் நெருக்கடி அதிகமாகன நேரத்தில்தான் தினகரனுக்கு மத்திய மந்திரி ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் உதவிக்கரம் நீட்டினார்.
இந்திய நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை நட்டப்படுத்தி கோடி கோடியாய் கொள்ளையடித்த, தொலைத்தொடர்புத்துறையில் ஸ்பெக்ட்ரம் என்ற பூதத்தை தினகரன் கையில் எடுத்ததும் கலைஞர் தரப்பு கொஞ்சம் அடக்கி வாசிக்கத்துவங்கியது. தினம் தினம் தினகரன் நாளிதழில் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக விபரங்கள் பக்கம் பக்கமாக வரத்தொடங்கியது. இந்த தகவல் மத்திய அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தாத்தாவை பார்க்க பேரன்கள் அழைக்கப்பட்டனர். கலாநிதி மற்றும் தயாநிதி என்ற பேரன்கள் கருணாநிதி என்ற தாத்தாவை பார்க்கும் போகும்போது, ஸ்டாலின் மற்றும் அழகிரி என்ற மாமாக்களும் உடன் இருந்தனர். பிரிந்தவர்கள் சேர்ந்தனர். அவர் கண்ணீர் சிந்த, இவர் அதை துடைக்க, பலகோடி தமிழ்மக்கள் இளித்த வாயர்களாக மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டனர். குடும்பத்துடன் அனைவரும் சிரித்தபடி பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். எங்களுக்குள் காற்று கூட நுழைய முடியாது என்று அண்ணன் அழகிரி தயாநிதி மாறனை கட்டிப்பிடித்து பேட்டி கொடுக்க இவர்களது நாடகத்திற்கு சுபம் போடப்பட்டது.
இதற்கிடையில் மற்றொரு காட்சியும் அரங்கேறியது. எம்.ஜி.ஆருக்கு எதிராக நடிகனாக களமிறக்கப்பட்டு மூக்குடைப்பட்ட மூத்த மகன் மு.க.முத்து வந்து ஒட்டிக்கொண்டார், அவரது மகன் உலக புகழ்பெற்ற (!!!!?) பாடகராக அடையாளப்படுத்தப்பட்டார். முக்கு முத்தான வைரமுத்துவும் முடிந்த அளவு தூது சென்று கல்லாக்கட்டினார்.
இந்த நாடகத்தால் கருனாநிதி குடும்பம் அடைந்த நன்மைகள் பல- புதிய சேனல்களும், பத்திரிகையும் துவக்கபட்டது.- ஸ்பெக்ட்ரம் லஞ்சம் பலருக்கு (அவர் குடும்பத்தினுள்தான்) பங்குபிரிக்கப்பட்டது.- டெல்லியை கவனிக்க கனிமொழியும் பதவியேற்றுக்கொண்டார். (கனிமொழி அம்மா எனக்கு சும்மா என்ற வசனம் உங்கள் நினைவுக்கு வந்தால் கட்டுரையாளர் பொறுப்பல்ல) - அண்ணன் அழகிரி அதிகார பலம் அதிகரித்தது.
தமிழக மக்கள் திடீரென ஏற்பட்ட இந்த பரபரப்பூட்டும் நாடக காட்சியை வழக்கம் போல சுவராசியமாக விவாதித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல தங்களது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு "கவர்" ஸ்டோரிகள் எழுதினர். ஆனால் இதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் பல கேள்விகள் நிச்சயம் எழும் என்பதை பலர் மறந்தே போனார்கள்.
- தனது தாத்தாவுடன் ஏற்பட்ட மோதலின் போது பக்கம் பக்கமாய் எழுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமான செய்தி திடீரென நின்று போனதன் காரணம் என்ன என்பதை தினகரன் மறைப்பது ஏன்?
- அண்ணனின் ராயல் கேபிள் விஷனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கேபிள் ஆப்ரேடர்களின் கதி என்ன?
- அரசு கேபிள் திட்டம் என்ன ஆனது என்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமா?
- தனது குடும்ப உறுப்பினர்களின் நலன் காக்கப்பட தினம் தினம் உழைக்கும் முதல்வர் மதுரையில் அண்ணனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
- தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட மூன்று அப்பாவி ஊழியர்களின் குடும்பங்களின் கதி என்ன?
- அந்த ஊழியர்களின் குடும்பங்கள் கொடுத்த வழக்கு இனி என்னாகும்?
- பணம் இருப்பவர்கள் மோதிக்கொண்டால் இடையில் இருக்கும் சாதாரண மக்களின் கதி இனியும் இப்படிதான் ஆகுமா? கேள்விகள் நீண்டுகொண்டே போகிறது...
மதுரையில் போட்டியிடும் அண்ணன் இன்று கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து, தனது அதிகார எல்லையை இந்திய நாட்டின் தலைநகர் வரை கொண்டு செல்லத் துடிக்கிறார். மதுரை நகர மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக