கலாச்சார காவலர்கள் என்ற
பெயரில்காதலர்களை விரட்டும் மதவாதிகளே...
கோயில்களில்.. கடவுள்
கதைகளில்உள்ள காதல்களை என் செய்வீர்?
உங்கள் நோக்கம் சாதி கலப்பை தடுப்பது தானே?
இந்தியா முழுவதும் காதலர் தினத்தன்று நாடு முழுவதும் காதலிக்கும் ஜோடிகளுக்கு தாலி கட்டவைக்கும் நோக்கத்துடன் இந்து மதவாத சக்திகள் திடீர் கலாச்சார புரோக்கர்களாய் மாறி உள்ளனர். மங்களூர் "பப்"பில் நடந்த தாக்குதல்களின் பின்னணியில் மாற்று மதத்தினருடன் காதல் செய்வதுதான் அடிப்படை பிரச்சினையாய் நின்றது. அவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பதன் நோக்கம் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க வந்த பாதுகாவலர்கள் என்பதை விளம்பரப்படுத்ததான்.
உலகமயம், காதலர் தினம் போல அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என்பதை தனது பொருட்களை விற்கும் வியாபார நோக்கத்துடன் உற்சாகப் படுத்தி வளர்த்து வருகிறது. எப்போதும் நேசிக்க வேண்டிய பிரியமானவளை, எப்போதும் வணங்க வேண்டிய தாயை, எப்போதும் நட்பு பாராட்ட வேண்டிய தந்தையை, இமைப் பொழுதும் உண்மையை பேச வேண்டிய நண்பனை வருடத்தின் ஒருநாள் அடையாள தினத்தில் அடைப்பதில் நமக்கு உடன்பாடில்லை ஆனால் இவைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை விடுத்து கைகளில் சூலாயுதம் தூக்குவதை அனுமதிக்க முடியாது.
சிதம்பரம் நடராஜர் ஆலையம் துவங்கி நாட்டில் உள்ள அனைத்து கோபுரங்களிலும் காமரசம் சொட்டச் சொட்ட ஆடைகளின்றி நமது கடவுளர்கள் புரியும் காதல் நடன சிற்பங்களை இந்த கலாச்சார காவலர்கள் பார்த்ததில்லையா? காளையார் கோயில் கோபுரத்தில் சிலைகள் இல்லை அதனால் இக்காட்சிகள் இல்லை. சரி, 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்த ராமச்சந்திர மூர்த்தியின் தந்தை தசரத மாகாராஜாதான் இந்திய கலாச்சாரத்தின் சின்னமா? ( தினம் ஒரு மனைவியை பார்க்கச்சென்றால் கூட அனைவரையும் பார்த்து முடிக்க 165 வருஷம் வேணுமப்பா!) கோபியர் கொஞ்சும் ரமணன் கோபாலகிருஷ்னன் செய்தது தான் இந்திய கலாச்சாரம? மதவாதிகள் காதல் நமது கலாச்சாரத்தில் இல்லை என்று சொல்ல வருகிறார்களா? தனது காதலுக்காக அண்ணனை தூதுவிட்ட தம்பி முருகப்பெருமானை முன் ஜாமீன் எடுக்கச் சொல்லலாமா?
சீரழிந்த நச்சுக் கலாச்சாரத்தை எதிர்த்து சுண்டு விரலைக்கூட நீட்ட தயாரில்லாத, அந்த கலாச்சாரத்தை கொண்டு வந்து வீடுவீடாய் இறைக்கும் உலகமயத்தை வரவேற்கும் இந்த மதவெறியர்கள் அந்த கலாச்சாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்பது அறிவீனம் இல்லையா? மனிதர்களை மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் உன்னதங்களில் ஒன்று காதல். மனிதர்களை கற்காலத்திற்கு அழைக்கும் மதவாதிகளின் நோக்கம் மிகத் தெளிவானது.. அது என்னவெனில் காதல் என்ற பெயரில் சாதி கலப்பு நடப்பதை தடுப்பது.
பல்லாயிரம் ஆண்டுகளாய் சாதி படிநிலையை கட்டிக்காத்து அதன் மூலம் சுகங்களை அனுபவிக்கும் கூட்டத்திற்கு அந்த சாதிய அமைப்பு அப்படியே தொடர வேண்டும் என்ற தனியாத தாகம். காதல் ஒன்றுக்குத்தான் சாதியை உடைக்கும் சக்தி உண்டு என்பதை அறிந்தவர்கள் இவர்கள் என்பதனால் காதலையும் காதலர்களையும் எதிர்க்கின்றனர்.
இனத் தூய்மையை போற்றி, அதன் பெயரால் மனிதர்களை படுகொலை செய்த ஹிட்லரின் இந்திய வாரிசுகளால் மாற்று மத்தினர் தனது மதத்தை சார்ந்தவர்களை காதல் செய்வதும், காதலால் சாதி, மதக் கலப்பு ஏற்படுவதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த சகிப்பின்மையின் வெளிப்பாடே இந்த மிரட்டல் படலம்.
உணர்வுகளை முன்வைத்து காதலை உலகமயம் காட்சிப்படுத்துகிறது. நமது திரைப்படங்களும், ஊடகங்களும் வியாபார நோக்கத்துடன் உணர்ச்சிகளை தூண்ட காதலை பயன்படுத்துகிறது. ஆனால் காதல் அறிவை முன்னிறுத்துவது. பொருளாதார நெருக்கடி மிகுந்த வாழ்வியல் சூழலில் காதலிக்கும் போதும் காதல் நிறைவேறிய பின்னர் வாழ்க்கைப் பயணத்தை துவக்கும் போதும் உணர்ச்சிகளின் கதகதப்பில் மட்டும் வாழ்க்கையை நடத்த முடியாது. வாழ்க்கையை நடத்த பொருளாதாரமும், அது கிடைக்க வேலை வாய்ப்பும் முக்கியம் எனவேதான் திட்டமிடலுடன் காதலிக்க வேண்டும் அல்லது காதலிக்கின்றனர். இது தொடரும்.. அற்பர்களின் அர்த்தமற்ற எதிர்ப்பைப் கண்டு துவளுகின்ற சங்கதியல்ல காதல்.
காதல் என்பது வாழ்வியலின் அடிப்படை, வாழ்க்கையின் வசந்தங்களின் தொகுப்பு, தன்னம்பிக்கையின் மூல ஊற்று. வரலாற்றில் சாமானியர்கள் மூலம் மகோன்னதங்களை உற்பத்தி செய்வது.
காதலினால் சாதிகலப்பை வளர்ப்போம்!
காதலினால் மதவாதிகளை எதிர்ப்போம்!
காதலினால் காதல் எதிர்ப்பை தடுப்போம்!
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!
Arumai..comrade. Kaadhalai patri thelivana kannotathudan ezhudhi ullirgal.
பதிலளிநீக்கு