புதன், 30 ஜூலை, 2025

தோழர் ஆர்.முத்துசுந்தரம்: ஒரு நினைவு குறிப்பு


நேற்று தோழர் ஆர்.முத்துசுந்தரம் நினைவு தினம் என முகநூலில் தோழர்கள் இட்ட பதிவுகளை பார்த்தேன். அந்த மகத்தான ஆளுமை குறித்த நினைவுகள் சுழல துவங்கியது. அதில் ஒரு நினைவுக் குறிப்பு இது.

1991 ஆம் ஆண்டு நான் இந்திய மாணவர் சங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம், அது. அப்போது கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு நிகழ்வில் தோழர் ஆர்.எம்.எஸ் பேச வந்திருந்தார். தலைப்பு ”வெள்ளிப் பணி மலை மீது உலாவுவோம். அவர் நன்றாகப் பேசுவார் என்று தோழர்கள் சொன்னார்கள். கடலூர் சென்றேன். கூட்டம் துவங்கும் முன்பு ஒரு பெட்டிக்கடை வாசலில் ஒரு மெல்லிய உருவம் சிகிரெட் பிடித்தபடி நின்றது. அவருடன் சில அரசு ஊழியர் சங்க தோழர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆர்.எம்.எஸ் எனத் தோழர்கள் அடிக்கடி பேசியதை கேட்டு பெரிய தலைவர் என்ற பிம்பம் எழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த தோழர்களிடம் எப்போது நிகழ்ச்சி துவங்கும் உங்கள் தலைவர் வந்துவிட்டாரா என்று கேட்டேன். அங்கு சிகெரெட் பிடித்துக்கொண்டிருந்த மெல்லிய உருவம் சிரித்துக்கொண்டே சொன்னது “வந்துகொண்டே இருக்காரு தோழர் சீக்கிரம் ஆரம்பிக்கலாம்”

எங்களுக்கு தலைவர்கள் என்றால் கே.பாலகிருஷ்ணன், சி.கோவிந்தராஜன், எஸ்.துரைராஜ், ஜி.கலியபெருமாள், டி.ராஜாராமன், மூசா போன்றோர்கள்தான். எல்லோரும் ஆஜானுபாகுவான உருவங்கள். அந்த கற்பனையில் ஆர்.எம்.எஸ் அவர்களை எதிர்ப்பாத்துக்கொண்டிருந்தேன். கூட்டம் துவங்கியது தோழர் டி.புருஷோத்தமன் கணீர் குரலில் பேசி ஆர்.எம்.எஸ் அவர்களை மேடைக்கு அழைத்தார். எனக்கு ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை. சிகிரெட் பிடித்த அந்த மெல்லிய உருவம் மேடை ஏறியது. மைக் ஸ்டேண்டைவிட கொஞ்சம் சதை பிடிப்போடு இருந்த அந்த உருவமா ஆர்.எம்.எஸ்? இவர் பேசுவாரா?

மனிதர் பேச பேசக் காதே இல்லாத பாம்பு மகுடிக்கு தலை ஆடும் சூட்சுமம் போல அந்த அந்த மனிதர் அந்த அரங்கத்தைக் கட்டிப் போட்டார். எனக்கு உடல் சிலிர்த்தது. அப்படி ஒரு குரலும் அதிலிருந்து தெளித்த சொற்களும், சொல்ல வந்ததை மிக எளிதாகக் கோபம் கொப்பளிக்க சொல்லும் வல்லமை அந்த மனிதனுக்கு இயல்பாய் வாய்த்ததா அல்லது இயக்கம் அளித்த கொடையா என தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தின் மீது இருந்த கோபத்தை அவர் பேசுவதைக் கேட்போர் மீது மிக எளிதாக அவரால் மடை மாற்றம் செய்ய முடிந்தது. பிறகு அவரது நிகழ்வுகளை நான் தவற விட்டதே இல்லை.

1993 – 94 கல்வியாண்டில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்தலில் பொருளியல் துறையின் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்திற்கும் பா..க மாணவர் அணிக்கும் நடந்த சுவராசியமான சம்பவங்களை தனியாக எழுதலாம். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போது இரு அமைப்புகளுக்கும் தகராறு நடப்பது அங்கு இயல்பாக இருந்தது. இந்த சூழலில் ஒவ்வொரு துறை பேரவை நிறைவு விழாக்களும் வெட்டி நிகழ்வுகளாக நடைபெறும். மாணவர்களிடம் வசூல் செய்து கும்மாளம் அடிக்கும் நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.

பொருளியல் பேரவை நிறைவு விழாவை மிகவும் பயன் உள்ள நிகழ்வாக நடத்த அங்கிருந்த மாணவர் சங்க தோழர்களும் எனது நண்பர்களும் திட்டமிட்டோம். ஒரு நல்ல பேச்சாளரை அழைத்து நிகழ்வை நடந்த திட்டமிட்டோம். எங்கள் துறை தலைவர் பேரா.ஜெயராமன் மிகவும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். எனக்கு யோசனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் மனதில் தோன்றிய பெயர் தோழர் ஆர்.எம்.எஸ். அரசு ஊழியர்கள் சங்க தோழர்கள் மூலம் அவரது தேதியை வாங்கி அழைப்பிதழ் போட்டாகிவிட்டது.

நிகழ்ச்சி அன்று தோழர் ஆர்.எம்.எஸ் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டார். கல்லூரியின் எதிரில் உள்ள ”பெருசு” தேநீர்க்கடையில் அமர்ந்து ஒரு சிகிரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பேரவை எற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த எனது நண்பர்கள் அஸ்லாமும், சங்கரும் வேகமாக வந்து ”மச்சான், எப்படா உங்க தோழர் வருவாரு” என்றனர். நான் சிரித்துக்கொண்டே கொஞ்சம் நேரத்தில் வந்துவிடுவார். நீங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாருங்கள் என்றேன். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், சிறந்த பேச்சாளர் என நாங்கள் செய்த பில்ட் அப்பை பார்த்து அவர்கள் ”பெரிய்ய்ய்ய்ய்ய தலைவரை” எதிர்பார்த்திருந்தனர். ஆனால் என்னை விட குள்ளமாக என்னைப் போல ஒல்லியாக சிகெரெட் பிடிக்கும் ஒரு உருவத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.

முதலில் எங்கள் கல்லூரி முதல்வர் அனந்தபத்மநாபன் அவர்கள் அறைக்குச் சென்று அறிமுகம் செய்தேன். அவர் இவர் உருவத்தை ரசித்ததாக தெரியவில்லை. பிறகு நிகழ்வு நடைபெறும் அரங்காம் சென்றோம். நான் வரவேற்புரை ஆற்றிவிட்டு தோழர் ஆர்.எம்.எஸ் அவர்களைப் பேச அழைத்தேன். அளவுதான் கூச்சல் துவங்கியது. கூட்டத்தை கலைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டிருந்தது தெரிந்தது. நானும் எனது சகாக்களும் ஆத்திரத்துடன் எழுந்தோம். ஆர்.எம்.எஸ் சிரித்துக்கொண்டே என் கையை பிடித்து அமரச் சொன்னார்.

மைக் அருகில் சென்றார். ”ஏய்” என ஒரு ஓசை எழுப்பினார். கூச்சல் இட்ட அனைவரும் திரும்பினர். ”தோ பார், இஷ்டம் இருந்தால் உள்ளே இரு. இல்லை என்றால் வெளியே போ. நான்கு பேர் இருந்தாலும் நான் பேசுவேன்.” என ஆக்ரோஷமாக முழங்கினார். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென ஒரு மயான அமைதி. அந்த இடத்தை பிடித்து ஏறத்துவங்கினார் அப்படி ஒரு உரை வீச்சு அது. ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடம். உரைந்து நின்றது அரங்கம். அவர் நன்றி என்று முடித்த போது எழுந்த கரவொலி அடங்க நேரமானது. எனது கல்லூரி முதல்வர் அங்கு நடந்த ரசவாதம் புரியாத திகைப்பில் இருந்தார். அவரை அறிமுகம் செய்த போது அவர்கள் கண்களில் இருந்த அலட்சியம் இப்போது மரியாதை மிகுந்து காணப்பட்டது. எங்கள் துறைத் தலைவர் மிகவும் பெருமிதம் மிக்க நன்றியை ஆர்.எம்.எஸ் அவர்களுக்குச் சொன்னார். எனது சகாக்கள் ”மாப்ள .. உண்மையில் அவரு பெரிய்ய்ய்ய்ய்ய தலைவர் தாண்டா” என்றனர்

ஒரு நட்சத்திரம் மேகங்களுடன் கடந்து செல்வது போல நானும் எனது சகாக்களும் அவரை கல்லூரியிலிருந்த வெளியே அழைத்து வந்தோம்.

தன்னுடைய பேச்சாற்றலால், எழுத்தாற்றலால், சங்க செயல்பாட்டினால் மாநில செயலாளர், மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தலைவராக உயர்ந்த ஆர்.எம்.எஸ் என்ற ஆளுமையிடம் அதற்குப் பிறகு மிக நெருக்கமாகப் பழக வாய்ப்புகளை மாணவர் மற்றும் வாலிபர் சங்கம் எனக்கு வழங்கியது.

உங்கள் நினைவுகள் உரமேற்றும் நினைவுகள் தோழர் ஆர்.எம்.எஸ்.

 

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு


ஞாயிறு, 27 ஜூலை, 2025

ஷாஜாதி கோவிந்தராஜன் நூற்றாண்டு விழா: போராட்ட களங்களில் வளர்ந்த வீர மங்கை!

 


தோழர் சி.கோவிந்தராஜன் இறந்த 7ஆம் நாள் ஷாஜாதி இறந்தார். கணவன் இறந்தது மனைவிக்கு தெரியாது. காரணம் அவர் உடல் நிலை சரியில்லாமல் கோமாவில் இருந்தார். தேசம் விடுதலை வேள்வியில் இருந்தபோது உழைப்பாளி மக்களுக்காக போராட்டக் களங்களில் நேசம் கொண்டு, மத வேலிகளை தாண்டி, போராட்டமே வாழ்க்கை என தெரிந்தும், எப்போது சிறைச்சாலை போகலாம் என புரிந்தும் திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதி 56 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்தனர்.  மரணம் மட்டுமே அவர்களை பிரித்தது. தன் கணவன் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடியபோது முதலாளிகள் வர்க்கம் அவரை கொலை செய்யும் நோக்கோடு கத்தியால் குத்தியது. அவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நீங்கள் நெல்லிகுப்பத்தில் இருக்க வேண்டாம் என்று கட்சி சொன்ன போது "எதையும் நான் சமாளிப்பேன் தோழர்களே! கவலை வேண்டாம்" என கம்பீரமாக முழங்கிய அந்த வீரத்தாய் தோழர் ஷாஜாதி. அவரது கணவன் தோழர் சி.கோவிந்தராஜன் என சொல்லவும் வேண்டுமோ?

மலரும் நினைவுகள்

நடந்ததை அவரே நினைவு கூர்கிறார், "இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் என்ற தீ உணர்ச்சிப் பிழம்பாக நாடெங்கிலும் எரிந்து கொண்டிருந்த காலகட்டம். பெண்களும் அந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றனர். இந்திய மாதர் சம்மேளனம் நாடு முழுவதும் ஏராளமான கிளைகளை உருவாக்கி மாதர்களை பங்கேற்கச் செய்தது. இதில் நானும் ஒரு உறுப்பி னராகி செயல்பட ஆரம்பித்தேன்."  

"1944-ம் ஆண்டு இந்த மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடை பெற்றது. அப்போது எங்கள் குடும்பம் விருத்தாசலத்தில் இருந்தது விருத்தாசலம் ஜங்ஷனிலுள்ள சில பெண்களுடன் நானும் அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு அந்த சங்கத்தின் தலைவர்களான ஹஜ்ராபேகம், விமலாரணதிவே, சரளா சர்மா போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இதனால் என் அரசியல் ஆர்வம் பெருமளவிற்கு அதிகரித்தது."

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்

"கடலூரைச் சேர்ந்த தோழர் தையநாயகி அம்மாள் மாதர் சங்கப் பணிக்காக பொன்மலை சென்றார். விருத்தாசலம் மாதர் சங்கக் கிளைக்கு நான் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றினேன்" "பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு கொண்டு 1946-ல் கட்சியின் உறுப்பினரானேன். அக்காலத்தில் நான் செய்த கட்சி பணிகளும் மாதர் சங்க பணிகளும் என் மனதில் இன்றும் பதிந்து கிடக்கின்றன.

1948-க்கு பிறகு கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டது. இச்சமயத்தில் தான் 1949-ல் விருத்தாசலத்திலிருந்து என்னை கல்கத்தாவில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தனர்." தலைமறைவு வாழ்க்கை  "அந்த மாநாட்டில் தோழர் ஜோதிபாசு மற்றும் முன்னணி தலைவர்களின் வீரமிக்க சொற்பொழிவுகளைக் கேட்டு மேலும் பரவசமடைந்தேன். அவைகளை எல்லாம் இன்றும் என்னால் மறக்க இயலாது.

கல்கத்தாவிலிருந்து திரும்பியதும் நானும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. "என ஷாஜாதி அம்மாள் தனது மலரும் நினைவுகளை 2001 ஆண்டு மகளிர் சிந்தனை மாத இதழில் மேற்கண்டவாறு பகிர்ந்து கொண்டார்.  

நூற்றாண்டு விழா  

ஒன்றுபட்ட தென்னார்காடு மாவட்ட செங்கொடி இயக்க வரலாற்றில் எப்போதும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் பெயர்கள்தான் ஷாஜாதியும் சி.கோவுந்தராஜனும். தோழர் சி.கோவிந்தராஜனுக்கு நூற்றாண்டு விழாவை செங்கொடி இயக்கம் நடத்தியது. இப்போது ஷாஜாதி அம்மாளுக்கு நூற்றாண்டுவிழா!

76 ஆண்டுகளுக்கு முன்பு

பொதுவாக சிறைச்சாலை என்றால் எல்லோரும் அஞ்சுவார்கள். 76 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் நிலைமை மோசம் அதிலும் பெண்கள் சிறைச்சாலை போவது கற்பனைக்கும் எட்டாத தீரச்செயல். ஆனால் சிறைச் சாலையை நடுங்க வைத்த வீர மங்கையாக ஷாஜாதி திகழ்ந்தார். கட்சியில் இணைந்து பலமாத கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் 1949ஆம் ஆண்டில் மீண்டும் வளவனூரில் ஷாஜாதி மற்றும் 4 தோழர்களுடன் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த தோழர் வி.சுப்பையா தப்பிச்சென்று விட்டார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜனும் ஷாஜாதியும் மற்றவர்களும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர்.  

கட்சி மீதான பற்று

ஒருவார கால விசாரணைக்குப் பிறகும் அவர்களிடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியாததால் காவல்துறையினர் அவர்களை கடலூர் கிளைச் சிறைச்சாலைக்கு மாற்றினர். இதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமினில் விட்டனர். முஸ்லிம் பெண்கள் சிறைச்சாலைக்கு செல்லக்கூடாது என்ற வாதத்தை தகர்த்து என் கட்சியின் தத்துவமே என்னை வழிநடத்தும் என்றார்.

சிறைச்சாலையில் போராட்டம்

கடலூர் கிளை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு குளிக்க தனி இடம் கிடையாது. சிறைக் கைதிகள், போலீஸ் காவலர்கள், சிறை வார்டர்கள் எதிரில்தான் குளிக்க வேண்டும். தடுப்புச்சுவர் எதுவும் கிடையாது. பற்பொடி உபயோகிக்கக் கூடாது. இந்தக் கொடுமைகளை எதிர்த்தும். பெண் கைதிகளை முறையாக நடத்தக் கோரியும் கோவிந்தராஜனும், ஷாஜாதியும் கிளைச் சிறைக் சாலையில் உண்ணாவிரதம் தொடங்கினர். உண்ணாநிலையின் 16வது நாளில் ஷாஜாதியின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கிளைச் சிறைச்சாலையில் பெண் கைதிகள் குளிக்க தனி குளியல் அறை கட்டித் தருமாறு நீதிபதி உத்தரவிட்டார் அதன்பின் ஷாஜாதியின் போராட்டம்  நிறுத்தப்பட்டது.

நேசம் துளிர்த்த கணங்கள்..

ஷாஜாதியை அறிந்த காலம் முதலே அவரைக் குறித்தும், கம்யூனிச லட்சியத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு, எந்தச் சோதனையையும் துணிவாக சந்திக்கும் ஆற்றல், உறுதி போன்றவை கோவிந்தராஜனின் உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தன. தலைமறைவு வாழ்வின்போது அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளவும் முடிந்தது. திருமணம் செய்வதாக இருந்தால் ஷாஜாதியை மணந்து கொள்வது என்ற முடிவில் கோவிந்தராஜன் இருந்தார். 'ஷாஜாதியும் கோவிந்தராஜனைக் குறித்து அத்தகையதொரு எண்ணத்தைக் கொண்டிருந்தார். போராட்டக் களத்தில் துளிர்த்த நேசம் திருமணத்தை நோக்கி சென்றது.  

எதிர்ப்புகளை மீறி  நடந்த திருமணம்  

1952 ஆம் ஆண்டின் இறுதியில் கோவிந்தராஜன் - ஷாஜாதி திரு மணம் நடைபெற்றது ஆனால் அதற்கு முன்னர் அவர்கள் பலத்த எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி யிருந்தது. முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை கோவிந்தராஜன் திருமணம் செய்வது பற்றி அவரது தாயார் வருத்தப்படவில்லை அவருடைய மற்ற குடும்பத்தினர்களும் ஆட்சேபிக்கவில்லை ஏனென்றால் திருமணம் செய்து கொள்ளாமலே காலம் முழுவதும் கட்சிக்காக பணியாற்ற பிரம்மசாரியாக இருந்து விடுவாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தாயாருக்கு அவரது திருமண முடிவு நிம்மதி அளித்தது. ஆனால் ஷாஜாதியின் குடும்பத்தில் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதையெல்லாம் கடந்து அவர்களது திருமணம் நடந்தது. ஷாஜாதியின் பெற்றோர் கோவிந்தராஜன் ஷாஜாதியை திருமணம் செய்ய வேண்டுமென்றால் மதம் மாறவேண்டும் என்றனர் இரு வரும் அதை ஏற்கவில்லை. 56 ஆண்டுகாலம் அப்படியே வாழ்ந்தனர்.

தென்னார்காடு மாவட்டம், கடலூர் மாவட்டம் என பிரிந்த பின்பு தங்களது இறுதி காலம் வரை அவர்கள் உயர்திய செங்கொடியை நேசித்த மக்களை விட்டுகொடுக்கவே இல்லை. சாதிய பகைமையால் இம்மாவட்டம் தகித்த போது செங்கொடி நின்ற களங்களில் அவர்கள் நின்றார்கள். தமிழக மாதர் அமைப்பின் ஸ்தாபக தலைவராக, தென்னார்காடு மாவட்ட செங்கொடி இயங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக, வாழ்ந்து நிறைந்த தோழர் ஷாஜாதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் கடலூர் மாவட்ட செங்கொடி இயக்கம் உற்சாகம் கொள்கிறது.  

(தகவல்கள் : தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய சி.கோவிந்தராஜன்: சுதந்திர போராட்டத்திலிருந்து சமுதாய புரட்சிக்கு என்ற நூலிலிருந்து)

- எஸ்.ஜிரமேஷ்பாபு

மாநிலக்குழு உறுப்பினர்  

26.07.2025 தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை

செவ்வாய், 22 ஜூலை, 2025

அந்த மகத்தான தலைவனை சந்தித்தேன்..

2018 ஆம் ஆண்டு அகில இந்திய மாநாட்டில்..


 2018 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை கட்சி எனக்கு வழங்கியது....

 மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிகள் கடந்து, கொடியேற்றி முடித்த பின்பு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருந்தோம்... 

 எனக்குப் பின்னால் ஒரு சிறு சலசலப்பு

ஒரு கேரள தோழர் என்னை கொஞ்சம் நகர்ந்து நிற்கும்படி சொன்னார். பின்னால் திரும்பிப் பார்த்தேன்...

 அந்த மகத்தான தலைவர் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார்.

 விடுதலை வேள்வியில் இந்த நாட்டுக்காக தியாகம் செய்த..


 உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவன்...

 கேரளாவின் முன்னாள் முதலமைச்சர்..

 எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்து கொண்டிருந்தார்..

 அவருக்கு முன்னால் வந்த தோழர்கள் என்னை ஒதுங்க சொன்னது பார்த்து 

தோழர் போகட்டும் என்றார்.

நான் அவரோடு நிற்கும் நொடிகளை இழப்பேனா...

Pls come comrade என்றேன்..

 என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே  முன் நகர்ந்தார் 

தியாகிகள் நினைவு சின்னத்தின் முன் நின்று கைகளை உயர்த்தி வீர வணக்கம் செலுத்தினார்.

 அந்த இமயம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதுதான் கம்யூனிஸ்டுகளில் மகத்தான பண்பு.

வீர வணக்கம் தோழர் அச்சுதானந்தம்

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 


தலைமுறைகளின் தலைவர்!

தோழர் ‘வி.எஸ்.’ இந்த இரண்டெழுத்து கேரளாவின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத -மறைக்க முடியாத பெயராக மாறிவிட்டது. நிலப்பிரபுத்துவத்தையும் முடியாட்சியையும் ஆங்கிலேய ஆட்சியையும் எதிர்த்துப் போராடிய ஒரு மகத்தான தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன். ‘வாழ்க்கை ஒரு போராட்டம்’ என்ற தனது சுய சரிதையின் தலைப்புக்கு ஏற்றவாறு வாழ்ந்து மறைந்தவர் அவர்.  

போராட்டத்தின் நிழலில்

தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து உயர்ந்து கேரளாவின் முதலமைச்சரானவர். 100 வயதை நெருங்கிய நாட்களிலும் அவர் மிகவும் கவர்ச்சிகரமான மக்களை ஈர்க்கும் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். அச்சுதானந்தன் 1923  அக்டோபர் 20 அன்று ஆலப்புழா மாவட்டத்தில் புன்னப்புரா அருகே பரவூரில் அக்கம்மா மற்றும் வேலிக்கக்காத்து சங்கரன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவர் தனது தந்தையின் போராட்ட மனப்பான்மையை ஏற்றுக்கொண்டவர். நிலப்பிரபுத்துவமும் தீண்டாமையும் எளிய மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிய அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிக மோசமான கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தின் நிழலில் வளர்ந்தவர்.  

அச்சுதானந்தன் எதையும் கடந்து செல்லவிடாதவர். அவர் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும் போது  உயர் சாதி ஆதிக்க  மக்கள் வசிக்கும் ஒரு பகுதியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு நாள், உள்ளூர் சிறுவர்கள் சிலர் அவரை சாதிப் பெயரைப் பயன்படுத்தி அவமானப்படுத்தினர். இதனால் கோபமடைந்த  விஎஸ் தன்னை கேலிசெய்தவர்களை  கடுமையாகத்  திட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். உயர்சாதி சிறுவர்களை திட்டி விட்டேனே, தந்தை கண்டிப்பார் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது தந்தை  எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் காலை, அவரது தந்தை ஒரு தடிமனான உலோக இடுப்புப் பட்டையை பரிசாக அளித்தார். அது எப்போதாவது ஒரு ஆயுதமாகப் பயன்படும். உயர் சாதி சிறுவர்கள் அச்சுதானந்தனை பழிவாங்குவ தற்காகக் காத்திருந்தனர். அப்போது அச்சுதானந்தன் தனது தந்தையின் பரிசை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்தப் போராட்ட மனப்பான்மை அவருக்கு அரசியல் வாழ்க்கையில் வழிகாட்டியது.  அச்சுதானந்தனுக்கு நான்கு வயது இருக்கும் போது அவரது தாயாரை இழக்கவேண்டியிருந்தது. பெரியம்மை நோயால் அவரது தாயார் மரணமடைந்தார். 11 வயதில், அவரது தந்தை காலமானார். மூத்த சகோதரர் கங்காதரன் குடும்பத் தலைவராக இருந்து கவனித்துக்கொண்டார். அச்சுதானந்தன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியை விட்டு வெளியேறினார். புத்தகங்கள் வாங்க அவரிடம் பணம் இல்லை. அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற  தையல் கடையில் தனது சகோதரருடன் சேர்ந்தார். தையல் கடை, சகோதரர்களுக்கான அரசியல் கல்விப் பள்ளியாக செயல்பட்டது.

இளம் புரட்சியாளர்

நாட்டின் விடுதலைப்போராட்டம், நிலப்பிரபுத்துவம் மற்றும் உடனடிப் போராட்டம் குறித்த மக்களின் சந்திப்பு மையமாக அந்தக் கடை மாறியது. அங்கு வந்து செல்லும் தலைவர்களின் உரையாடலால் இளம் அச்சு தானந்தன் உள்பட அனைவரும் உற்சாகமடைந்தனர். தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 17 வயதில் சேர்ந்தார். அவர் ஆஸ்பின்வால் கயிறு தொழிற்சாலை யில் தொழிலாளியாக சேர்ந்தபோது நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற்சங்கவாதியாக மாறினார். அன்றாடம் வேலை முடிந்த பிறகு, பி.கிருஷ்ண பிள்ளை, ஆர்.சுகதன் மற்றும் சி.உன்னிராஜா போன்ற மாபெரும் தலைவர்களின் கட்சி வகுப்புகளில் பங்கேற்று தன்னை தத்துவார்த்த ரீதியாக வலுப் படுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  கோழிக்கோட்டில் நடந்த கட்சியின் முதல் மாநிலக் குழுக் கூட்டத்திற்கு ஆலப்புழாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக அச்சுதானந்தன் கலந்து கொண்டார்.

அவர் பல மூத்த தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். மாநாட்டிற்குப் பிறகு, பி.கிருஷ்ண பிள்ளை அச்சுதானந்தனை அழைத்துப்பேசி, இளம் புரட்சியாளர் இன்னும் எத்தனை நாள்தான் கயிறு தொழிற்சாலையில் வேலைசெய்வது, அந்த பணியை விட்டுவிட்டு, விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்ட கட்சியின் முழுநேர ஊழியராக மாற வேண்டும் என்றார். இந்த அழைப்பை வி.எஸ். நிராகரிக்கவில்லை. உடனே பணியை உதறிவிட்டு கட்சி யின் முழுநேர ஊழியரானார்.

குட்டநாட்டின் நெல் வயல்களில்

அச்சுதானந்தனின் முதல் போராட்டக் களம் குட்டநாட்டின் நெல் வயல்கள். விவசாயத் தொழிலாளர்கள் ஒரு கைப்பிடி அரிசிக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. நில உரிமையாளர்கள் அரிசியை சிறிய கோப்பைகளில் அளந்து அவற்றை மேலும் குறைத்து வழங்கி வந்தனர். வேலை முடிந்த  பிறகு முறைகேட்டை எதிர்த்துப் போராட தொழிலாளர்களை அச்சுதானந்தன் திரட்டினார். அரிசியை ஏற்க  மறுத்து  விவசாயத் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, நில உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். தொழிலாளர்களும் அவர்களது தலைவர்களும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்ததை அடுத்து, அவர்கள்  உண்மையான கூலியை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போராட்டம் படிப்படியாக புன்னப்புரா, பரவூர் மற்றும் கலர்கோடு வரை பரவியது. பள்ளத் துருத்தியில் நில உரிமையாளர்கள் தொழிலாளர்களை தாக்கியதை அடுத்து இயக்கம் வன்முறையாக மாறியது. போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல  எட்டு உறுப்பினர்களைக் கொண்ட விவசாயத் தொழிலாளர் குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பின்னர் திருவிதாங்கூர் கர்ஷக தொழிலாளர் தொழிற் சங்கம் மற்றும் கேரள மாநில கர்ஷக தொழிலாளர் சங்கம் (KSKTU) (கேரள விவசாய தொழிலாளர் சங்கம்) என மலர்ந்தது.

திவான் அடக்குமுறைக்கு எதிராக...

திருவிதாங்கூரை “அமெரிக்கா மாதிரி” மாற்றப் போகிறேன் என்று திவான் சி.பி. ராமசாமி ஐயர் சொல்லிக்கொண்டிருந்த காலகட்டம். அவரது அடக்கு முறைக்கு எதிராக போராட ஒரு சரியான தலைவரை அந்த பகுதி மக்கள் தேடிக்கொண்டிருந்தனர். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் திவான் செய்த கொடுமைகளுக்கு எதிராக பேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் காவல் துறையினரால் குறிவைக்கப்பட்டனர். ஆலப்புழாவில் நடந்த பொதுக் கூட்டத்திற்குப் பிறகு போராட்டத்திற்கு தலைமை வகித்த ஆர். சுகதன், கே.வி. பத்ரோஸ்,  ஸ்ரீகண்டன் நாயர், சைமன் அசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அச்சுதானந்தன், பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார்; ஆனால் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் காவல்துறையின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தலைமறைவானார். கட்சியின் உத்தரவுப்படி அச்சுதானந்தன் கோட்டயத்திற்குச் சென்றார். அவர் பூஞ்சார் மலைப்பகுதி பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டார். இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் ஆலப்புழாவுக்குத் திரும்பினார்; அங்கு காவல்துறை பயங்கர வாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அம்பலப்புழா, சேர்த்தலா, புன்னப்புரா மற்றும் கலர்கோடு (ஆழப் புழாவில் உள்ள சிறிய கிராமம்/ காசர்கோடு அல்ல)  ஆகிய இடங்களில் அடக்குமுறையை எதிர்க்க முன்னாள் படைவீரர்கள் உட்பட போராளிகளை கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிணைத்தது. தொண்டர்கள் கொரில்லாப் போரில் பயிற்சி பெற்றனர். அவர்கள் மர ஈட்டிகளால் மட்டுமே ஆயுதம் ஏந்தியிருந்தனர்.

அச்சுதானந்தனும் பிற இளம் தலைவர்களும் தன்னார்வலர்களுக்கு அரசி யல் கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டனர். புன்னப்புரா மற்றும் கலர்கோட்டில் தலா 400 தன்னார்வலர்கள் கொண்ட மூன்று முகாம்களுக்கு அச்சுதானந்தன் பொறுப்பேற்றார். காவல்துறையினர் அடக்குமுறை ஆட்சியை முடுக்கிவிட்டு, தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று திவானையும் அவரது சீர்திருத்தங்களையும் வாழ்த்தும்படி கட்டாயப் படுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

மன்னருக்கு எதிராக  எழுச்சிப் போராட்டங்கள்

1946 அக்டோபர் 23, திருவிதாங்கூர் மன்னர் தனது பண்டிகையை பல காவல் நிலையங்கள் மற்றும் முகாம்கள் திறப்பு விழாவாக கொண்டாடினார். ‘அமெரிக்க மாதிரி ஆட்சியை அரபிக்கடலில் தூக்கி எறியுங்கள்’ என்று மக்களுக்கு, கம்யூனிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். நூற்றுக்கணக்கான மக்கள், கூடுதலாக காவல்துறை முகாம்களைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அச்சுதானந்தன் புன்னப்புரா தன்னார்வலர்களின் முகாமுக்குச் சென்றபோது, அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், கட்சியினர் அவரை தலைமறைவாகச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அவர் கரிம்பாவு வளவிலில் உள்ள ஒரு கட்சி உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றார். தொழிலாளர்களின் போராட்டம் காவல் முகாமை அடைந்ததும், ஆய்வாளர்  வேலாயுதன், போராட்டக்காரர்கள் மீது சுட உத்தரவிட்டார். தொழிலாளர்கள் ஆயுதமேந்திய காவலர்களை நோக்கி தங்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் குறைந்தது 10 போலீசார் இறந்தனர். தொழிலாளர்களில் ஒருவர் ஆய்வாளரின் தலையை துண்டிக்கும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருந்தது.

செத்துப் பிழைத்தார்’

அக்டோபர் 28 அன்று பூஞ்சாரில் அச்சுதானந்தன் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் அவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளானார். ஒரு காவலர் அச்சுதானந்தனின் கால்களை துப்பாக்கி முனையால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். போலீசார் அச்சுதானந்தன் இறந்து விட்டதாகக் கூறி விட்டுச் சென்றனர். அவர்கள் அவரது உடலை அருகிலுள்ள காட்டில் வீச முடிவு செய்தனர்.  சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த ஒரு திருடனிடம் அவரது  உடலை கொடுத்து போலீஸ் ஜீப்பில் எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் கூறினர். ஜீப்பிற்குள், அச்சுதானந்தன் உயிருடன் இருப்பதை உணர்ந்த திருடன் கைதியை பாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசாரை வற்புறுத்தினான். இதனால் அச்சுதானந்தன் உயிர்பிழைத்தார். அதன் பின்னர் தன்னை மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய தனது மீட்பரை சந்திக்க முடியாமல் போனது குறித்து அச்சுதானந்தன் வருத்தப்பட்டார். அச்சுதானந்தன் பிப்ரவரி 1948 இல் விடுதலை செய்யப்பட்டார். துப்பாக்கி தாக்குதலால் சுமந்த வடுவை அவர் தனது வாழ்க்கையில் சுமக்க வேண்டியிருந்தது. அதே  கால்களுடன் அவர்  கேரளாவின் அனைத்து பகுதிக ளுக்கும் சென்று மக்கள் பணியாற்றினார். சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அரசியலுடன் இணைத்தார். முதல்வராக பதவியேற்கும் முன்பு அவர் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். அவரது கட்சி வாழ்க்கை பல தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது.

செவ்வணக்கம் தோழர் வி.எஸ்!

---------------------------------------------------------------------------------

தோழர் .விஜயகுமார் இன்று தீக்கதிரில் எழுதிய கட்டுரை இது

சனி, 19 ஜூலை, 2025

தொழிற்சாலை முக்கியம் தான் ; ஆனால் விவசாயத்தை அழித்து அல்ல!

 

 
நேற்று நடந்த போராட்டம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கொடுக்கன் பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் அமைக்கப்படும் எனவும், அதில் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் தமிழக முதவர் அறிவித்துள்ளார்.

 நூற்றாண்டு அனுபவ உரிமை!  

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் வெள்ளக்கரை மதுரா கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம், கட்ராசாவடி உள்ளிட்ட கிராமங்களில் சர்வே எண் 207/2 இல் உள்ள 164 ஏக்கர் நிலங்களில் 155க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 5 தலைமுறைகளாக மலைகளை திருத்தி முந்திரி, வாழை, மா, பலா, பூச்செடிகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முந்திரி மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.  

விவசாயிகளின் வேளாண் பயிர்களை அழிப்பதைத் தடுத்திடக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கிட  வேண்டும் என்றும், சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்றும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீட்டு  மனு மீது பரிகாரம் தேடிக்கொள்ள  வழிகாட்டல் உத்தரவு கொடுத்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு விரோதமான முடிவை மேற்கொண்டால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று விவசாயிகளுக்கு வழிகாட்டியது.  

அப்பகுதி விவசாயிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நில உரிமைக்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்தும், ஆட்சியரின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது; அவர்களுக்கு எதிராக இருந்தது. அந்த மக்களின் அனுபவ நிலங்கள் எப்போதும் பறிபோகலாம் என்ற நிலையில் முதல்வர் அப்பகுதியில் அறிவித்துள்ள தொழிற்சாலை இந்த மக்களை வெளியேற்றும்  அபாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலையடிகுப்பம் கிராமத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மக்கள் துவங்கியுள்ளனர்.  

சுற்றுச்சூழல் மிகுந்த பகுதி  

கேப்பர் மலை என்பது உண்மையில் ஒரு மலையே அல்ல. கடலூர் மாநகரம் முழுவதும் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ளதால், அருகில் உள்ள செம்மண் மேட்டுப்பகுதி மலையாக அழைக்கப்படுகிறது. இது செம்மண் கலந்த செங்கல் மலையாகும். கேப்பர் மலையில் கற்களே கிடையாது. மேலே சிவந்த நிறத்தில் செம்மண் குன்றுகள், அதன் கீழே  மணற்பாறைகள் காணப்படுகின்றன. இது கடலூர் துறைமுகத்திற்கு மேற்கேயும், திருவந்திபுரத்திற்கு தெற்கேயும் அமைந்துள்ளது. திருவந்திபுரம் மலைக்குன்றுகளும் இதன் தொடர்ச்சியாகும். கடலூர் துறைமுகம் அடுத்த கேப்பர் குவாரி அருகே அகழ்ந்தெடுக்கப்பட்டு சாலைகள் போட பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1796 ஆம் ஆண்டு வண்டிப்பாளையத்திற்கு அருகே,  இந்த மலையின் மீது ஆங்கிலேய படைத்தளபதி பிரான்சிஸ் கேப்பர் என்பவர் மாளிகை ஒன்றைக் கட்டி வாழ்ந்து வந்தார். அதன் பின்  அவரது பெயரால் இந்த மலையை கேப்பர் மலை என்று அழைக்கத் துவங்கினர். கி.பி. 1815  ஆம் ஆண்டு இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது. மாளிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

 அழிவின் விளிம்பில் கொண்டங்கி ஏரி

 கேப்பர் மலை மத்திய சிறைச்சாலை எதிரே உள்ளது கொண்டங்கி ஏரி. 18.72 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கப்படும் கொண்டங்கி ஏரியின் பரப்பளவு 188 ஏக்கர் ஆகும். கொண்டங்கி ஏரியின் நீரை கடலூர் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய 1870 மற்றும் 1880இல் கடலூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலராக இருந்த மருத்துவர் ஜி. ராபர்ட்சன் திட்டமிட்டு செயல்படுத்தினார். கொண்டங்கி ஏரியின் முப்புறங்களிலும் செம்மண் மலைகள் சூழ்ந்துள்ளன. மழைக்காலங்களில் மலைகளிலிருந்து வழிந்தோடி வரும் நீரால் நிரம்பும் கொண்டங்கி ஏரிக்கு, கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட திருவந்திபுரம் அணைக்கட்டில் இருந்து பிரியும் ஒரு கிளைக்கால்வாய் வழியாகவும் நீர் கிடைக்கிறது. மேலும் இந்த ஏரிக்குள்ளே இயற்கையான பல நீரூற்றுகளும் அமைந்துள்ளன. இதன் சுற்றுப்புறக் கிராமங்களின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக உள்ள கொண்டங்கி ஏரி, கடலூர் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக கடலூர் புதுநகர் மற்றும் முதுநகர் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள்  

இப்படி இயற்கை கொடுத்த கொடை போன்ற பகுதியை நான்கு வழிச் சாலை கொஞ்சம் அழித்தது; சட்ட விரோதமாக மண் எடுத்து கயவர்கள் அழித்தனர்; குவாரி என்ற பெயரில் அரசு அழித்தது; புதிய பேருந்து நிலையம் எனக் கொஞ்சம் அழிந்தது. இதோ  இறுதியாக அந்த பகுதி முழுமையாக அழிக்கும் ரசாயன அபாயம் ஏற்பட்டுள்ளது.  

தோல் இல்லாமல் எப்படியெல்லாம் காலணிகளை தயாரிக்கலாம்?

சமையல் தழை (Canvas), நைலான் (Nylon), பிளாஸ்டிக், பிவிசி (PVC), ரப்பர் (Rubber), செயற்கை தோல்  (Synthetic leather / Faux leather), பியூ (PU – Polyurethane), காப்பு உருக்கப்பட்ட நூல்  (Knitted fabrics) என பல வகைகள் இருந்தாலும் அதிகம் காலணிகள் தயாரிக்கப்படுவது ரப்பர், நைலான், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களில்தான். ஆனால் இவை அனைத்தும் சுற்றுச்சூழலை மொத்தமாக நாசப்படுத்தும் தன்மை கொண்டவை.  

ரப்பர்: ரப்பர் தயாரிக்கும் போது பயன் படுத்தப்படும் ரசாயனங்கள் (Vulcanizing agents, dyes, adhesives) நீரில் கலந்து மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும். உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் காற்றில் உள்ள வேதியியல் வாயுக்கள் சுவாசத்திற்கு ஆபத்தாகும். உற்பத்தியில் ஏற்படும் பிழைகள், கழிவுகளாகும் காலணிகள், மீள்சுழற்சி செய்யமுடியாத வகை ரப்பர்கள்தான். பெரும்பாலான செயற்கை ரப்பர்கள் இயற்கையாக கரையாதவையாக இருப்பதால் நீண்டகாலம் நிலைத்திருந்து நிலத்தை பாழாக்கும். ரசாயனங்கள் மண்ணில் ஊறி நிலத்தடி நீரை மாசுபடுத்தும். இது விவசாயம் மற்றும் குடிநீருக்கு தீங்கானது. இயற்கை ரப்பரைப் பெற மரங்கள் வளர்க்கப்பட வேண்டி, பெரும்பாலான நேரங்களில் பழைய வனங்கள் அழிக்கப்பட்டு ரப்பர் பண்ணைகள் உருவாக்கப்படுகின்றன. ரப்பர் காலணிகளின் உற்பத்தியின் போது வெளியாகும் பொருட் களை எரிப்பது,  கரியமில வாயுக்களை நேரடி யாக அதிகரிக்கும். பல வகைப் பொருட்கள் சேர்ந்து தயாரிக்கப்படுவதால், பூரணமாக மீளச்சுழற்சி செய்ய இயலாது.  

நைலான்: நைலான் உற்பத்தி என்பது ஒரு ரசாயனச் செய்முறை ஆகும். இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடிபிக் அமிலம் மற்றும்  நிறமற்ற திரவ வேதிப்பொருளான ஹெக்ஸா மெத்திலின் டயமின் ஆகியவை ஆகும்.  இதன் உற்பத்தி நடவடிக்கையில் நைட்ரஸ் ஆக்சைடு என்ற கடுமை மிகுந்த  கரியமில வாயு வெளியேறுகிறது. இது கார்பன் டைஆக்சைடைவிட 300 மடங்கு தீவிரமான காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்டது. நைலானைப் பூசும், கலரிங் செய்யும் பயன் பாட்டுப் பொருள்கள் நீரில் கலந்து விவசாயம் மற்றும் குடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நைலான் காலணிகள் நீண்ட காலம் கரையாதவை. குப்பையில் போடப்பட்ட பின் பூமியில் பல ஆண்டுகள் கரையாமல் மிச்சமாக இருக்கும். சிக்கலான அமைப்பு கொண்டதால் மீள்சுழற்சி கடினம். நைலான் காலணிகள் அழுகும் போது சிறிய நைலான் துகள்கள் மண்ணிலும் நீரிலும் கலந்து மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுகிறது. இது மீன்கள் மற்றும் நீர் உயிர்களுக்கு ஆபத்தாகும், உணவுச் சங்கிலியிலும் புகுந்துவிடும். காலணிகள் தயாரிக்கும் மற்றும் வெட்டும், பாலிஷ் செய்யும் நேரங்களில் வெளியேறும் நைலான் தூசிகள் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். தொழிலாளர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

பிவிசி பிளாஸ்டிக்:  பிவிசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருள் வினைல் குளோரைடு மோனோமர் (VCM) என்பது புற்று நோயை உண்டாக்கும் வாயு ஆகும். காலணி உற்பத்தி மற்றும் எரிப்பு நேரத்தில் வெளியேறும் டயாக்சின்கள் சுற்றுச்சூழலுக்கு மற்றும் மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஹைட்ரோ குளோரைடு வாயு காற்றில் கலந்தால் அமில மழையை ஏற்படுத்தும். உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல பிளாஸ்டி சைசர்கள், பசைகள், கலரிங்  ரசாயனங்கள் நீரில் கலந்து குடிநீர் மற்றும் கடல்நீரை  மாசுபடுத்தும். சில வேதிப்பொருட்கள் நீர்ச்சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பிவிசி செருப்புகள் இயற்கையில் கரையாதவை. குப்பையில் போடப்பட்ட பின் பூமியில் நூற்றாண்டுகளுக்கும் அழியாமல் இருக்கும். மீள்சுழற்சி செய்யப்படுவதற்கு மிகவும் சிக்கலான பொருள். காரணம்: பல வேதிப்பொருட்கள் சேர்ந்திருப்பதால் அவற்றைப் பிரிக்க முடியாது. பழைய பிவிசி செருப்புகள் உடைந்து நுண்ணிய துகள்களாக மாறும். இவை நிலத்திலும், நீரிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகளாகப் பரவி உணவுச் சங்கிலியில் புகுந்துவிடும். மனிதர்கள், விலங்குகள் இவை மூலம் நோய்களுக்கு ஆளாகிவிடலாம். உற்பத்தியில் வரும் வேதியியல் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டால், நிலம், நீர், சுற்றுச்சூழல் அனைத்தும் பாதிக்கப்படும். தொழிலாளர்கள் அலர்ஜி, சுவாசக் கோளாறு, வயிற்றுப் புற்றுநோய் போன்ற ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.  

தொழிற்சாலையே வேண்டாமா?

 இத்தகைய மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைத்தான் முப்பயிர் விளையும் மகத்தான விவசாயப் பிரதேசத்தில் துவங்க அரசு முயற்சி செய்கிறது. அப்படியெனில் தொழிற்சாலைகளே வேண்டாமா? வேலைவாய்ப்பு வேண்டாமா என்ற கேள்வி முக்கியமானதுதான். தொழிற்சாலைகளை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அது துவங்கப்படும் இடமும் மக்கள் வாழ்வாதாரமும் முக்கியமல்லவா? இதே கடலூரில் ஏற்கனவே மூன்று சிப்காட் பகுதிகளுக்கு 2500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்யாத நிறுவனங்கள் தங்கள் இடங்களை நிலங்களாக வைத்துள்ளனர். தொழிற்சாலை நில எடுப்பு சட்டப்படி ஒரு நிறுவனம் 20 ஆண்டுகளாக உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றால் அந்த நிலங்களை அர சிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும். நாகார்ஜுனா உள்ளிட்ட பல நிறுவனங்கள் 20 ஆண்டுகளைக் கடந்து எந்த விதமான உற்பத்தியும் துவக்காமல் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சிப்காட் பகுதியில் வைத்துள்ளனர்.

அரசு அத்தகைய சிப்காட் பகுதி யில் இத்தகைய  நிறுவனங்களைத் துவங்குவது தான் சரியான நிலைபாடாக இருக்க முடியும்.  மேலும், பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.   1200 ஏக்கரில் பரங்கிப்பேட்டை அருகில் அனல்மின் நிலையம்  உருவான போது பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என வார்த்தை ஜாலம் காட்டியது அன்றைய அதிமுக அரசு. ஆனால் வெறும் 300 பேர்தான் அங்கு வேலை செய்கின்றனர். அதில் நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது பெரும் வேதனை.

 எனவே மலை வளத்தை, விவசாய நிலத்தை, மக்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதுதான் மக்களின் அடிப்படைக் கோரிக்கை.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

19.07.2025 தீக்கதிர் கட்டுரை

 --------------------------------------------------------------------------------------------------------

  • போராட்டம் குறித்த தீக்கதிர் செய்தி
  •  
  •  

மலையடிக்குப்பத்தில் முந்திரி மரங்களை அழிக்க முயற்சி  சிபிஎம், விவசாயிகள் சங்கம் தடுத்து நிறுத்தி மறியல்

கடலூர், ஜூலை 18 - கடலூர் அருகே மலையடிக்குப்பம் கிராமத்தில் மீண்டும் ஜேசிபி எந்திரத்தின் மூலம் முந்திரி மரங்களை அழிக்கும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. கடலூர் அருகே மலையடிக்குப்பம் கிராமத்தில் 164 ஏக்கர் அரசு நிலத்தில் ஐந்து தலை முறையாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் மனு அளித்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தொழிற்சாலைக்காக ஏராளமான போலீசாரை வைத்துக் கொண்டு, விவசாயம் செய்து வந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முந்திரி மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, முந்திரி மரங்களை அகற்ற இடைக் கால தடை விதித்து, விசாரணையில்உள்ளது.  இந்நிலையில், ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சிதம்பரத்தில் நடந்த  நிகழ்ச்சியில் மலையடிக்குப்பம் கிராமத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

 காத்திருப்புப் போராட்டம்

காலணி தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்; உடனடியாக கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், கிராமமக்களும் இணைந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். ஏற்கனவே, 100 ஏக்கர் பரப்பளவில் முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் அழித்த  நிலையில், மீதமுள்ள 50 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களுடன் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த் துறையினர் வியாழக் கிழமை காலை வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்தியும், ஜேசிபி எந்திரங்களை உள்ளே விடாமலும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் மகேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்த பிறகு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம் என்று  மக்கள் பலமுறை வலியுறுத்திக் கூறினர். ஆனால், போராடும் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல், “எங்களைத் தடுக்காதீர்கள், நாங்கள் முந்திரி மரங்களை அகற்ற வேண்டும்” என்று பிடிவாதமாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

 


நீதிமன்றத்தை அவமதிக்கும் அதிகாரி

நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தாலும் பரவாயில்லை என்றும், அதை நாங்கள் சந்திக்க தயார் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாலும் கவலையில்லை என்றும் ஆக்ரோஷமாக கோட்டாட்சியர் அபிநயா தெரிவித்தார். இதனால் இரண்டு மணி  நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “எங்கள் மீது பொக்லைன் இயந்திரங் களை ஏற்றிவிட்டு முந்திரி மரங்களை அப்புறப்படுத்தச் செல்லுங்கள்’ என்று கூறிய நிலையில், வியாழக்கிழமை மதியம் 2:30 மணி வரை நீதிமன்ற உத்தரவுக்கு கால அவகாசம் கொடுத்தனர்.

இதனையடுத்து அமைதியான முறையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டப் பந்தலிலேயே சமைத்தும் சாப்பிட்டனர். இந்தப் போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு  உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.ராஜேஷ்கண்ணன், எஸ்.தட்சிணாமூர்த்தி, லோகநாதன், செல்வகுமார், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாநிலக்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆர்.அமர்நாத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பஞ்சாட்சரம், ராஜா, ஸ்டீபன் ராஜ், ஜெயபாண்டியன், முத்துக்குமரன், கே.பி.சௌமியா மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கெடுத்தனர்.  கோரிக்கைகள் வெல்லும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளை அப்புறப்படுத்த  நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுரேந்தர் அமர்வு, அவசர வழக்காக மதியம் விசாரிப்பதாக அறிவித்தனர். அதன்படி, இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “அரசின் பொது திட்டத்திற்கு இந்த நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் வசதி உள்ள விவசாயிகள்தான்” என்றும் அவர் தெரிவித்தார்.  இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, “இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரிடம் மறு ஆய்வு கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தடை விதிக்குமாறு கேட்டுள்ளோம்” என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் முடிவெடுக்கும் வரை விவசாயிகளை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றக் கூடாது” என இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், விவசாயிகளுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு மேல்முறையீடு செய்வதற்கு பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முடிவுக்கு வந்த காத்திருப்பு போராட்டம்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மலையடிக்  குப்பத்தில் நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவு பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். நீதிமன்றம் உத்தரவு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்ததை அடுத்து, போராட்டக் களத்தில் குவிக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள், 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரை திரும்பப் பெற்றது.