மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ்குமார் என்பவர் நடந்துக்கொண்ட விதம் தமிழக காவல்துறைக்கு மேலும் ஒரு கலங்கத்தை சேர்க்கும் என்பதில் எந்த சந்த்கமும் இல்லை. மிகவும் கேவலாம வார்த்தைகளையும் மனிதத்தன்மையற்ற தாகுதலையும் தொடுத்துள்ள ஒரு "சைக்கோ நோயாளி போல சந்தோஷ் குமார்" நடந்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அப்படி என்னதான் டி.ஒய்.எப்.ஐ தோழர்கள் தவறு செய்தார்கள்.

சேலத்தில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடியதைக் கண்டித்தும், உடனடியாக அந்த மருத்துவமனையை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இப்படிபட்ட நியாயமான கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் நடத்திய வாலிபர்களைதான் சேலம் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதியிலிருந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை கடந்த ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மத்திய அரசின் நிதி ரூ.100 கோடியும், மாநில அரசின் நிதி ரூ. 39 கோடியே 31 லட்சம் உள்ளடக்கி இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. அவசர கோலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதியால் இம்மருத்துவமணை திறந்து வைக்கப்பட்டது.

444 படுக்கைகளும், 17 சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் செயல்படும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டது. திறப்புவிழா நடத்தி திறக்கப் பட்டிருந்தாலும் முழுமையான கட்டுமான பணிகள் முடியாத நிலையில் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்தது. மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கப்பட்டு துறைமுகத்தில் இருப்பதாகவும், அதைப் பெற்று மருத்துவமனையில் பொருத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் சுகாதாரத்துறை இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இம்மருத்துவமனை அனைத்து வசதிகளும் பெற்று மக்கள் பயன் பெறுவர் என்று நினைத்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வேறு மருத் துவமனைக்கு மாற்றிவிட்டு, இம்மருத்துவமனையை மூடிவிட்டது புதிய அரசு.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை முடிவுகட்ட முயன்று நீதிமன்றத்தால் சூடு போடப்பட்டு மீண்டும் அமலாக்கிய கதையை, புதிய சட்டமன்றம் துவங்கி சிறப்பு மருத்துவமனை வரை விரிவாக்கியதன் விளைவு இம்மருத்துவமனையும் மூடப்பட்டது.

இந்த மருத்துவமனையை அனைத்து வசதிகளேடு மீண்டும் உடனே திறக்க 
வேண்டுமென வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கனவே ஜூலை 1ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் சேலம் மாநகரத்தின் 7 முனைகளிலிருந்து மருத்துவமனையை நோக்கி நடை பயணத்திற்கு திட்டமிட்டிருந்தனர். காவல்துறையினரிடம் அனுமதியும் கேட்டிருந்தனர். இப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எந்த தகவலும் சொல்லாமல், போராட்ட தினத்தன்று திடீரென போராட்டம் நடந்த இடத் திற்கு வந்த ஆய்வாளர் சந்தோஷ்குமார், அனுமதி மறுக் கப்படுவதாக கூறிவிட்டு, அனைவரையும் கைது செய்வதாக கூறியுள்ளார். 

ஏன் அனுமதி மறுக்கப்பட்டதை முன்பே கூறவில்லை என்று கேட்டவுடன், தகாத வார்த்தைகளால் சங்கத்தின் மாநகரச் செயலாளர் பிரவீண் குமாரை திட்டி சட்டையைப் பிடித்து இழுத்தும், எந்தவித அறிவிப்புமின்றி கூடியிருந்தவர்கள் மீதும் பிரவீண் குமார் மீதும் தடியடி நடத்தி கைதுசெய்துள்ளார்கள்.

அத்தோடு நிற்கவில்லை காவல்துறையின் வெறித்தனம் ஆய்வாளர் சந்தோஷ்குமாரே மூன்றுரோடு மையத்தில் நடைபயணம் துவங்கும் இடத்திற்கு சென்று, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் சேகர் என அனைவர் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் மாநகர துணைச் செயலாளர் காளிதாஸ், மாநகரப் பொருளாளர் கதிர்வேல், புருஷேத்தமன், சதீஷ் ஆகியோர் மயக்கமடையும் அளவிற்கு தாக்கப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் கடுமையான தடியடிக்கு ஆளாகியுள்ளனர். வாலிபர் இயக்கத்தின் மாநிலத் தலைவரின் கைப்பேசி உட்பட அனைவரது கைப்பேசியையும் கைபற்றி கிரிமினல் கைதிகளைப் போல் நடத்தியுள்ளனர்.

தான் சசிகலாவின் சொந்தக்காரன் எனவும், ஜெயலலிதாவே வந்தாலும் என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சொல்லியபடி கடுமையாக அந்த சந்தோஷ்குமார் என்கிற அதிகாரி தாக்கியுள்ளார். பாவம் அவருக்கு வாலிபர் இயக்கத்தின் வரலாறும் தெரியாது, தமிழக மக்களின் கோபமும் தெரியாது என நமக்கு புரிகிறது. தமிழ்நாட்டில் எந்த மருத்தவமனையிலாவது நோயாளிகளுக்கு இரத்தம் வேண்டுமென்றால் மருத்துமனை அதிகாரிகள் உடன் அனுகுவது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைதான். மிகச்சிறந்த இரத்ததான அமைப்பு என இரண்டுமுறை தமிழக அரசின் விருதினை பெற்ற அமைப்பு இது. 

சேலத்தின் காவல்துறை மிகவும் கீழ்தரமாக, கேவலாமக நடத்துக்கொண்ட கடுமையான தாக்குதலை தொடுத்த வாலிபர்கள் பலமுறை இரத்த தானம் செய்து பாராட்டுதல்களை பெற்றவர்கள். மாவட்டச்செயலாளர் சேகர், மாநகர செயலாளர் பிரவீன்குமார், மாநகர துணைச் செயலாளர் காளிதாஸ், மாநகரப் பொருளாளர் கதிர்வேல், புருஷேத்தமன், சதீஷ் ஆகியோர் எந்த நேரத்தில் யார் தொலைபேசியில் அழைத்து இரத்த தானம் வேண்டும் என்றாலும் ஏற்பாடு செய்வார்கள்.

குறிப்பாக இவ்வமைப்பின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன் திருப்பூரை சேர்ந்தவர். மாணவ பருவம் முதல் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடி வருபவர். திருப்பூர் அரசு பொது மருத்துவமனை பல பத்தாண்டுகளாக தூய்மையில்லாமல் இருந்த நிலையை மாற்ற 2005 ஆம் ஆண்டு 1000 இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு தலைமையேற்று  20 லட்சம் வசூல் செய்து மிகச்சிறப்பாக உழைப்புதானம் செய்து அந்த மருத்துவமனையை புண்ரமைத்த வாலிபர் இயக்கத்தின் தலைவர். இதற்காக திருப்பூரை சேர்ந்த பல அமைப்புகள் பாராட்டியுள்ளனர்.

உழைப்புதானம், இரத்த தானம், கண்தானம், இரவு பாடசாலைகள், உடற்பயிற்ச்சி கூடங்கள், தெரு விளக்கு பிரச்சனை முதல் தேசப்பிரச்சனை வரை கையில் எடுத்து போராடும் ஒரு இளைஞர் அமைப்பு பல ஆயிரம் மக்கள் பயன்படுத்து ஒரு மருத்துவமனை மூடிக்கிடப்பதை பார்த்து சும்மா இருப்பது இயலாத காரியம். உலகமய கொள்கையின் விளைவாக ஒட்டுமொத்த சுகாதாரத்தையும் தனியாரிடம் விடுவதற்கு ஆட்சியாளர்கள் துடிக்கும் போது, கிடைத்த அரசின் மருத்துவமனையை பாதுகாப்பது மக்களை நேசிக்கும் ஒரு அமைப்பின் கடமை. அதைதான் சேலத்தில் அந்த இளைஞர்கள் செய்தார்கள். அதற்குதான் இப்படி கொடுமையாக தக்கப்பட்டார்கள். 

அடித்த ஆய்வாளருக்கு தெரியவில்லை. தங்கள்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறை என. ஆட்சிகள் மாறும் போது ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக வாலாட்டுவதுதான் நேர்மை என நினைக்கிறார் போலும். ஆடிய வால்கள் பலமுறை ஒட்ட நறுக்கிய பழக்கம் மக்கள் இயக்கத்திற்கு இருக்கிறது. தான் சசிகலாவின் சொந்தகாரன் என்று அவர் கூறியது காற்றில் சுற்றித்திரிந்துக்கொண்டே இருக்கும். 

பிறர் நிலங்களை அபகரித்த போது கைகட்டி ஏவல் செய்து, ஆட்சி மாறியதும் ஏவல் செய்த எஜமானர்களை கைது செய்யும் காவல்துறை, செய்த தவறுக்காக விரைவில் தன்னையும் கைது செய்யும். அப்போது இந்த ஆய்வாளர் வருத்தப்பட்டு ஆவது ஒன்றுமில்லை என்பதை மட்டும் சொல்லி வைப்போம்.2 comments

  1. யார் யாருக்கு வேண்டுமானாலும் உறவுக்காரராக இருக்கட்டும். ஏற்கனவே இருந்த ஆட்சியில் ராசாவின் சொந்தக்காரராகட்டும் கே என் நேருவின் தம்பியாகட்டும் அழகிரியின் உடன்பிறவா சகோதரர்களாகட்டும் (அட்டாக் வகையறா)ஏன் முன்னாள் முதல்வரின் புதல்வி கூட சட்டத்தின் கைகளில் சிக்கியிருக்கும் போது சந்தோஷ் குமார் என்ற இந்த அதிகாரியின் எல்லை வரம்பு எந்த மட்டுக்கும்....?

     
  2. MadhuRaj Says:
  3. நம் இயக்கத் தோழர்கள் சிந்தும் ரத்தத்துக்கு மீண்டும் ரத்தம் ஊட்ட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் காவல் துறையில் இருக்கும் இது போன்ற சைக்கோக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அடக்குமுறை கருவிதான் இந்தக் காவல் துறை என்றாலும், அடக்கி ஒடுக்குவதற்கான தேவையோ, சூழலோ இல்லாமல் இத்தகைய அட்டூழியம் செய்யும் கிரிமினல் சைக்கோக்களை கூண்டில் அடைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark