மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!கடந்த மாதம் வந்த சுதந்திர தின வாழ்த் துக்களால் நிறைந்து கிடந்த எனது கைப்பேசி 2011 ஆகஸ்ட் 15 அன்று 11 மணியளவில் அலறி யது. அழைத்தவர் திருச்செங்கோடு வழக்கறிஞர் சேகரன்: தோழர் தயவு செய்து பொதிகை தொலைக்காட்சி பாருங்க. என்ன பிரச்சனை ஏன் இவ்வுளவு பதட்டம்?
பதட்டம் இல்லை தோழர் நிகழ்ச்சியை பாருங்க, என்றார்.

பொதுவாக முக்கிய தினங்களில் தொலை காட்சி பார்க்கும் மன உறுதி எனக்கு வாய்ப்பதில்லை. சுதந்திரம் குறித்து அபத்தமான கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் நமது தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் காட்டுவதைப் பார்க்க சகிக்காது. தோழர் சொன்னதால் அதுவும் பொதிகை என்பதால் பார்த்தேன்.

நிகழ்ச்சியில் பொதிகைத் தொலைக்காட்சி சார்பில் தொகுப்பாளர்கள் கையில் சத்திய சோதனை புத்தகத்துடன் (யாருக்கு சோதனை என்பது இறுதியில்தான் தெரிந்தது) கல்லூரி முன்பு, வேலைவாய்ப்பு அலுவலம், சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் இளைஞர் களிடம் சுதந்திர தினம் குறித்து பேட்டி எடுத்த னர். நான் பொதிகை அலைவரிசையை வைத்த போது தொகுப்பாளர் முகம் வெளிறிப் போயிருந்தது...

இந்தியா எப்போது சுதந்திரம் அடைந்தது?

1945.'

காந்தியின் முழுப் பெயர் என்ன?

மகாத்மா காந்தி

பகத்சிங்குடன் தூக்கிலேறிய இருவரின் பெயர் என்ன?

...........

இந்தியாவின் தேசிய கீதம் எது?

நீராரும் கடலுடுத்த...

காந்தியின் சுயசரிதையின் பெயர் என்ன?

................

இந்தியாவின் தேசிய கவிஞர் யார்?

முத்துராமலிங்கத் தேவர்!

நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அமைத்த ராணுவத்தின் பெயர் என்ன?

போர்ப் படை .....  விமானப் படை... தெரி யலை சார்..

இந்த கொடுமைகள் இத்தோடு முடிந்து விடவில்லை. இவை போக இன்னும் சில சோதனைகள் காத்திருந்தன அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு. 

பாரதியாரின் முழுப்பெயர் என்ன?

 .............

இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

...............

நம் நாட்டின் முதல் பிரதமர் யார்?

.............

இப்படியான பதில்களால் வெறுத்துப் போன நிகழ்ச்சித் தொகுப்பாளர் வெறுத்துப் போனவராக அந்தக் கல்லூரி மாணவர்களி டம் சற்றே கடுப்பான குரலில்,  என்னப்பா இப்படி பதில் சொல்றீங்க, என எரிந்து விழுந்தார்.

சார் நாங்க புவியியல் ஸ்டூடன்ட்ஸ்... எங்களிடம் ஏன் வரலாறு கேள்வி கேட்கி றீங்க, என மிகவும் அடக்கமாக பதில் கூறி னார். 
நேயர்களே இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் கொண்டு வந்த காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை புத்தகத்தை யாருக்கும் கொடுக்க முடியாமல் மிகவும் வருத்தத்துடன் திரும்பவும் எடுத்துச் செல்கிறோம். இந்த நிலைக்கு யார் பொறுப்பு என அனைவரும் யோசிப்போம், என்று நிகழ்ச்சியை முடித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பல நண்பர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பாத்தீங்களா பொதிகை தொலைக்காட்சி? இதுதான் உண்மை... ...இன்றைய இளைஞர்கள் இப்படித்தான்... என்ற ரீதியில் பல உரையாடல்கள். ஏதோ இந்த நிலைக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்பது போல குற்ற்சாட்டுகள்.

உண்மையில் நமது இளைஞர்கள் இவ்வளவு மோசமான வரலாற்று அறிவுடையவர்களா என்ற குழப்பம் என்னுள் வந்தது. இல்லை. உலக வராலாற்றில் பல வருடங்களுக்கு முன்பு பூமியில் புதைக்கப்பட்ட சில எலும்பு களுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் வரவேற்புக்கொடுத்தது இரண்டு முறைதான் நடந்தது. ஒன்று கியூபாவின் இளைஞர்களாலும் மற்றொன்று இந்திய இளைஞர்களாலும் நிகழ்த்திக்காட்டப்பட்டது. 

உண்மையா?

ஆம்! ஒன்று 1967 அக் 9 ல் பொலிவியா நாட்டின் ஒரு காட்டுக்குள் அமெரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்ட சே குவேரா எலும்புகள். அவை எங்களுக்கு வேண்டும் எனக் கேட்டு தொடர்ந்து போராடிய ஃபிடல் காஸ்ட்ரோ குரலுக்கு செவிசாய்த்து, 1997 அக் டோபர் 18ம் தேதி கியூபா தலைநகர் ஹவானாவுக்கு சே குவேரா எலும்புகள் கொண்டு வரப் பட்டபோது லட்சக்கணக்காண இளைஞர்கள் உணர்ச்சிமயமாக சே..... நீ எங்களுடன் மீண்டும் வாழ வருகிறாய், எனக்கூறி அந்த மாவீரனின் எலும்புகளை வரவேற்றனர். 

அதற்கு முன்... 1919 ஆம் ஆண்டு அடிமைப்பட்ட இந்தியாவின் விடுதலை முழக்கத்தோடு ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் குழுமியிருந்தனர் மக்கள். நிராயுத பாணியான அவர்களை கொடூரமாய் சுட்டுக் கொன்றான் ஜெனரல்டயர். அவனைக் கொலை செய்ய 20 ஆண்டுகள் நெஞ்சில் கோபத்தை அடைகாத்து அதை செய்து முடித்தான் உத்தம் சிங். அவனுக்கு 1940 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி உத்தம் சிங் தூக்கிலிடப்பட்டார், பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. விடுதலை பெற்றதுமே அவரது எலும்புகளைக் கேட்டது இந்தியா. ஆனால் 1975ஆம் ஆண்டுதான் இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, அவரது எலும்புக் கூட்டின் மிச்ச மீதிகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது. உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜமரியாதையோடும் லட்சம் இளைஞர்களது ஆர்ப்பரிப் போடும் இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

இத்தகைய வராலாற்று உணர்வு கொண்ட இந்திய இளைஞன் திசைமாறிட காரணம் அவன் மட்டும்தானா? மேல் படிப்புக்கு வரலாறு பாடத்தை எடுத்தால் அது மிகவும் அருவருப்பான செயலாய் பார்க்கப்படுவது ஒரு முக்கியக் காரணம் இல்லையா? உலகமய போட்டியில் பண அறுவடைக்கான கல்வியே முன் நிற்க்கும் போது வரலாறு, புவியியல், சமூகவியல், போன்றவைகள் புறந்தள்ளப் படுவது தெரியாமல் நடப்பதல்ல. திட்டமிட்ட வேலை என்பதை மறந்துவிடக் கூடாது.

பலநூறு ஆண்டுகள் லட்சக்கணக்கான மக்கள் உயிரை விலையாகக் கொடுத்து பெற்ற விடுதலை வரலாற்றை, அந்த வடுக்களை, வலிகளை, தியாகங்களை எந்த சமூகம் உண ராமல் இருக்கிறதோ அந்த சமூகம் மீண்டும் அடிமையாகும்

1 Responses to இந்தியாவின் தேசியக்கவி முத்துராமலிங்கத் தேவர்!?

  1. சொல்லித் தரவில்லை ரமேஷ் சொல்லித் தரவில்லை.

    கீழத் தஞ்சையில் கீழ வெண்மணியை சொல்லிக் கொடுத்துவிட்டோமா என்ன?

    செய்தால் மட்டும் போதாது. அடுத்த தலை முறைக்கு அதை எடுத்துச் செல்லவும் வேண்டும்.

    மலிவான விளம்பரம் என நினைத்து அதை செய்யத் தவறுகிறோம் தோழர்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark