புதன், 7 ஜனவரி, 2026

அமெரிக்க ஆதிக்கம்: தவிர்க்க முடியாத சிதைவு

 


 

 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், வெனிசுலாவின் மக்கள் தொகை சுமார் 2.85 கோடியாகும். இது சுமார் 8.1 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது குறைவானது. ஆனால் நிலப்பரப்பில், வெனிசுலா சுமார் 9,16,445 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாடு; இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பை விட ஏறத்தாழ ஏழு மடங்கு பெரியது.

வளங்களின் அடிப்படையில் வெனிசுலா உலகின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாக எண்ணெய் வளத்தில், உலகின் முதன்மை நாடாக வெனிசுலா திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஈரான், கனடா, ஈராக் போன்ற நாடுகள் வரிசையில் உள்ளன.

வரலாற்றுப் பின்னணி

வெனிசுலா தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு, இங்கு கரீப், அரவாக் போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். வாஸ்கோடகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையில் காலடி வைத்த அதே ஆண்டான 1498-ல், கிறிஸ்டோபர் கொலம்பஸ் வெனிசுலா கடற்கரையை அடைந்தார்.

பின்னர் ஸ்பெயின் வெனிசுலாவை கைப்பற்றி, சுமார் 300 ஆண்டுகள் காலனிய ஆட்சியை நடத்தியது. இந்த காலகட்டத்தில் அங்கிருந்த உள்ளூர் மக்கள் அடக்குமுறைகளுக்கும், வளச் சுரண்டலுக்கும் உள்ளானார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்கள் தீவிரமடைந்தன. சைமன் போலிவார் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக, 1811-ல் வெனிசுலா சுதந்திரம் அறிவித்தது; 1821ல் ஸ்பெயின் ஆட்சி முற்றாக முடிவடைந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு நாடு நீண்ட காலம் ராணுவ ஆட்சிகளையும் அரசியல் நிலையற்ற தன்மையையும் அனுபவித்தது. 20-ஆம் நூற்றாண்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு வெனிசுலாவின் பொருளாதாரத்தை மாற்றியது. எண்ணெய் வருவாய் நாட்டை வளமாக்கினாலும், அதில் ஏற்பட்டமிகையான சார்பு பின்னர் பல சிக்கல்களை உருவாக்கியது.

1999-ல் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்து, சோசலிச் சீர்திருத்தங்களையும் மக்கள் நலத் திட்டங்களையும் முன்னெடுத்தார். அவருக்குப் பிறகு நிக்கோலஸ் மதுரோ ஆட்சி காலத்தில், எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு தடைகள் காரணமாக நாடு பெரும் பொருளாதார–அரசியல் நெருக்கடியில் சிக்கியது.

வெனிசுலாவை வேட்டையாட அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரம் பார்த்துக் காத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், தனியார்மய–தாராளமயக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடிய முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்திலேயே, அந்த நாட்டை குறிவைத்தது அமெரிக்கா.

சோசலிச் திருப்பமும் வெளிநாட்டு அழுத்தங்களும்

1999-ல் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், சோசலிச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம், வளங்களின் மீதான அரசின் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டது. இந்த நிலைப்பாடு, அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சாவேஸ் மறைவுக்குப் பிறகு, நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக் காலத்தில் எண்ணெய் விலை வீழ்ச்சி, வெளிநாட்டு பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, வெனிசுலா கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்த நெருக்கடிகள் வெறும் உள்நாட்டு நிர்வாகத் தவறுகளின் விளைவாக மட்டும் அல்ல; வெளிப்புற அரசியல்–பொருளாதார தலையீடுகளின் தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

போதைப் பொருள் அரசியல்:

நிக்கோலஸ் மதுரோவை போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக அமெரிக்கா தொடர்ந்து சித்தரித்து வந்தது. அவர்மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டிலிருந்து அதிபர் மதுரோ மீது அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

அவரைப் பிடிக்க 5 கோடி டாலர் பரிசுத்தொகையும் அமெரிக்கா அறிவித்திருந்தது. ஈராகில் அணு ஆயுதங்கள் உள்ளன என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து, அதிபர் சாதாம் உசேனை அவர்களது நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்கிலிட்ட நிகழ்வை மீண்டும் அமல்படுத்த அமெரிக்க ஓநாய் துடிக்கிறது.

உண்மையில் போதைப் பொருள்களின் மையம் எது?  

தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, 1970–90களில் உலகின் முக்கிய கோகைன் உற்பத்தி மற்றும் கடத்தல் மையமாக இருந்தது. கோகா செடி வளர ஏற்ற புவியியல் அமைப்பும் காலநிலையும் அங்கு உள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் நிலவும் வறுமை, வேலை இல்லாமை, அரசின் பலவீனம், உள்நாட்டு ஆயுதக் குழுக்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகள் ஆகியவை போதைப் பொருள் வர்த்தகத்துக்கு காரணங்களாக உள்ளன. மெடெலின் கார்டெல் (பாப்லோ எஸ்கோபார்), காலி கார்டெல் போன்ற போதைப் பொருள் குழுக்களின் அட்டகாசங்களை இபோதும் இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

இந்தக் குழுக்கள் கோகைன் உற்பத்தி, சர்வதேச கடத்தல், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின்மீது தாக்கம், கொலை, குண்டுவெடிப்பு, பயங்கரம், FARC, ELN போன்ற ஆயுதக் குழுக்கள், போதைப் பொருள் பணத்தில் ஆயுதங்கள் வாங்கி அரசுக்கு எதிரான போராட்டங்கள் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போருக்குக் காரணமாக உள்ளன.

இதற்கு முழுக்க முழுக்க அமெரிக்க ஆதரவு உள்ளது. ஆனால் குற்றவாளியாக வெனிசுலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை அமெரிக்கா சித்தரிக்கிறது.

எண்ணெய் அரசியல்:

தென் அமெரிக்க நாடான வெனிசுலா உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு. உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 18% வெனிசுலாவில் உள்ளது. அமெரிக்காவிடம் சுமார் 4% மட்டுமே உள்ளது.

வெனிசுலாவில் 303 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது; அமெரிக்காவில் 55 பில்லியன் பீப்பாய் மட்டுமே உள்ளது. ஆனால் ஏற்றுமதியில் அமெரிக்கா ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது; வெனிசுலா வெறும் 4 பில்லியன் டாலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.

2007-ல் அதிபர் சாவேஸ், எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பெரும் பங்கை வழங்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதை ஏற்க மறுத்த அமெரிக்க நிறுவனங்கள் பல, வெனிசுலாவை விட்டு வெளியேறின. அதன்பின்னர் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு, வெனிசுலாவின் வளர்ச்சி முடக்கப்பட்டது.

எண்ணெய் வளம் இருந்தும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருப்பதற்கு அந்த நாட்டின் மக்கள் அல்லது ஆட்சியாளர்கள் காரணம் அல்ல; முழுக்க முழுக்க அமெரிக்காதான் காரணம். அதன் உச்சகட்டமாக இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு வெனிசுலா இரையாகியுள்ளது.

அமெரிக்க ஆதிக்கமும் உலக அரசியலும்

20-ஆம் நூற்றாண்டிலிருந்து, அமெரிக்கா பல நாடுகளில் ராணுவ தலையீடுகள், அரசு மாற்ற முயற்சிகள் மற்றும் மறைமுக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது. பாதுகாப்பு, ஜனநாயகம், தீவிரவாத எதிர்ப்பு போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், எண்ணெய், வணிக ஆதிக்கம் மற்றும் புவியியல் அரசியலே அடிப்படை நோக்கங்களாக விமர்சிக்கப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் (1899–1902), கொரியா போர் (1950–1953), வியட்நாம் போர் (1955–1975), கியூபா – பே ஆஃப் பிக்ஸ் (1961), ஈராக் (1991 & 2003), ஆப்கானிஸ்தான் (2001–2021), லிபியா (2011) என அமெரிக்க தலையீடுகள் உலகை நாசப்படுத்தின.

சிலியின் அதிபர் அலெண்டே படுகொலை, பொலிவியக் காடுகளில் சே குவேரா படுகொலை, வெனிசுலா, நிகராகுவா போன்ற நாடுகளில் CIA மூலம் நடந்த அரசு மாற்ற முயற்சிகள் என ஏகாதிபத்திய அமெரிக்கா உலகை நரகமாக்கி வருகிறது. இவை உலகளவில் மனித உயிரிழப்புகள், அகதிகள் பெருக்கம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.

உலக அரசியல் இன்று ஒரு முக்கிய திருப்புமுனையில் நிற்கிறது. ஒரே சக்தியின் ஆதிக்கம் நீடிக்க முடியாத நிலையில், பல்துருவ உலகம் உருவாகி வருகிறது. இந்தச் சூழலில், மனிதநேயம், சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சக்திகள் ஒன்றிணைவதே காலத்தின் அவசியமாகிறது. உலகம் முழுவதும் எழும் எதிர்ப்புகள் மட்டுமே அமெரிக்காவை நிறுத்து. இதோ எல்லைகள் கடந்து மனிதகுலத்தை நேசிக்கும் கம்யூனிஸ்டுகளும், சோசலிஸ்டுகளும், மனித நேயம் கொண்ட ஜனநாயக வாதிகளும் எழுந்து நிற்கின்றனர். வலதுசாரிகள் ஒன்று ஆதரிக்கின்றனர், அல்லது மோடியை போல கள்ள மவுனம் காக்கின்றனர்.

உலகம் விடியும். அதுவரை போரிடுவது மனித குலத்தின் கடமை.

 

 - எஸ். ஜி . ரமேஷ்பாபு 

இன்று தீக்கதிரில் வந்துள்ள எனது கட்டுரையின் முழு வடிவம் 

வியாழன், 18 டிசம்பர், 2025

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி

நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 17.12.2025 புதன் கிழமை அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட  10 பிரதிநிதிகளை என்எல்சி அதிகாரிகள் இருக்கையில் அமரச் சொல்லாமல் அவமதித்தனர். இதனால்  கொதிப்படைந்த தலைவர்கள் முற்றுகையைப் தொடரப் போவதாக அறிவிக்கவே, பணிந்த அதி காரிகள் மீண்டும் அழைத்து மரியாதையுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்.எல்.. வலியுறுத்தினார். அதற்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச் சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.  

மாவட்டச் செயலாளர்கள் ஆர்.கே. சரவணன் (விவசாயிகள் சங்கம்), எஸ். பிர காஷ் (விதொச) மற்றும்நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், பி.கர்ப்பினைசெல்வம், டி.கிருஷ்ணன், பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாதிக்கப்பட்ட கிராமங்களின் சார்பில் த. சண்முகம், ஆர். ரவிச்சந்திரன், . சன்னியாசி, சூ.  ராமச்சந்திரன், செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது.



சரி கோரிக்கைகள்தான் என்ன

எதறக்கு இந்த போராட்டம் ?

1956-ஆம் ஆண்டில் ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் ‘நவரத்தின’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL), இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் மிக முக்கியத் தூணாக  விளங்குகிறது. இந்த மகத்தான நிறுவனத்தையும் மோடி அரசு தனியாரிடம் விற்பனை செய்ய துடிப்பது கொடுமை. தொழிலாளி வர்க்கத்தின் தொடர்சியான போராட்டத்தின் விளைவாக இந்த நிறுவனம் பாதுகாக்கப்படுகிறது.

2024-2025 நிதியாண்டிற்கான மொத்த லாபம் ₹10,861.41 கோடி ; மற்றும் நிகர லாபம் ₹2,713.61 கோடி ஆகும். இந்த நிதி வலிமையின் காரணமாக, நிறுவனம் தனது முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில் 2% என்ற சட்டப்பூர்வக் கடமையின் அடிப் படையில், ₹48.63 கோடியை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டிற்கான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கை களுக்காக ஒதுக்கி செலவிடுகிறது.

ஆனால் இந்த மாவட்டத்திற்கும், பாதுக்கப்பட்ட கிராமங்களுக்கு இந்த தொகை எவ்வுளவு உதவுகிறது என்பது மிகப் பெரிய கேள்வி.

பல பத்தாண்டுகளாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர் தங்களது வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். எளிமையக தீர்க்கப்பட வேண்டிய பல கோரிக்கைகள் இன்னும் தீரக்கபடாமல் உள்ளது.

1956 முதல் சுமார் 37,256 ஏக்கர் நிலத்தை 25,000 குடும்பங்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலம் வழங்கிய கிராம  மக்கள் நியாயமான இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலை மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் (Rehabilitation and Resettlement – R & R) கொள்கையை முழுமையாக அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கீழ்க்காணும் 12 அம்ச கோரிக்கைகள் தற்போது முன்னுக்கு உள்ளது :

1. 2000 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குனர் மற்றும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் நீர் வெளியேறும் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணைத்தொகை கொடுத்து விடுங்கள் என்று கூறியும் ஒரு சில கிராமங்களுக்கு கொடுத்துவிட்டு மற்ற கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2. 2013 நில எடுப்பு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வேலை வழங்கக்கவில்லை.

1999-2006 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2007-2013 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2014 முதல் நிலம் எடுத்தவர்களுக்கு 50% வேலைவாய்ப்பு என்று பிரிக்கின்றார்கள் ஆனால் 90% நிலங்கள் 2013க்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அவர்களுக்கு 25% என்பது நியாயமல்ல. ஆகவே நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைபிடித்து வேலை வழங்க வேண்டும்.

3. என்.எல்.சியால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தமிழக விவசாயத்துறை அமைச்சர் மற்றும் சுரங்க இயக்குனர் இழப்பீடு கொடுத்து விடுங்கள் என்று கூறியதின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு போட்டும் என்எல்சி நிர்வாகம் வழங்க மறுக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த அனைத்து ஆழ்துளை கிணற்றுக்கும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் மின் இணைப்பை அவர்கள் கேட்ட இடத்திற்கு உடனடியாக மாற்றி தர வேண்டும்.

4. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ல் வாழ்வாதார தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று சொன்ன பிறகும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2017 முதல் வெறும் ரூபாய் 1,09,500/- மட்டுமே வாழ்வாதார தொகையாக கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆகவே இன்றைய மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 40,00,000/- லட்சததை வாழ்வாதார நிதியாக அனைவருக்கும் வழங்க வேண்டும்.

5. என்எல்சியால் நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள குத்தகை பயிர் செய்தவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் R&R சட்டம் 30/2013-ல் sec- 3 (1) வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

6. .ஆதனூர், கத்தாழை, மேல் வளையமாதேவி கிராமங்களில் அரசால் கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்றுமனை உடனடியாக வழங்க வேண்டும் பிள்ளையார் குளத் தெருவில் வீடு கட்டி இருக்கும் அனைவருக்கும் மாற்றுமனை கொடுக்கப்பட வேண்டும்.

7. .ஆதனூரில் ஊராட்சி நிதியால் கட்டப்பட்ட 5 வீடுகளை என்எல்சி நிறுவனம் இடித்து விட்டது. அந்த வீடுகளுக்கான இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.

8. மும்முடிச் சோழகன் கிராமத்தில் 170 குடும்பங்கள் 2003 மற்றும் 2007 இல் எடுக்கப்பட்டு ஒரு தவணைத் தொகை வெறும் ரூபாய் 2000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை கொடுக்காத காரணத்தால் தற்பொழுது புதிய சட்டத்தின் படி அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.

9. கீழ் வளையமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீடு, மனை மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களில் 30 குடும்பங்களுக்கு மாற்றுமனை வழங்கப்படவில்லை, கருணைத்தொகை, வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. முத்துக்கிருஷ்ணாபுரத்தில் ஏழு குடும்பங்களுக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய வீட்டுமனை, வாழ்வாதாரம், வீடு கட்டும் பணம் கொடுத்துள்ளார்கள் அதேபோல் முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீட்டு மனை 2022-ல் தான் எடுத்துள்ளார்கள். ஆகவே முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்த அனைத்து மக்களுக்கும் வீடு கட்டுவதற்கான தொகை கொடுக்கப்பட வேண்டும் மனைக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்பட வேண்டும்.

10. என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட கம்மாபுரம், விருதாசலம் புவனகிரி, குறிஞ்சிபாடி பகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும். இப்பகுதிகளை இணைக்கும் மையத்தில் அரசு கல்லூரி மற்று ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும்.

11. தீர்ப்பு (Award) கொடுப்பதில் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் வழிகாட்டு மதிப்பு (Guideline Value) மட்டுமே நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது. வழக்கு முடிந்தவுடன் வட்டியுடன் வைப்பீடு செய்த தொகை மட்டுமே கிடைக்கிறது. இழப்பீட்டுத் தொகையில் வழிகாட்டு மதிப்பு போக பாக்கியுள்ள ஆனால் சந்தை மதிப்பீடு தொகையான அதிக இழப்பீடுத் தொகையை என்எல்சி நிர்வாகமே வைத்துக் கொள்கிறது வழக்கு முடிந்தவுடன் அத்தகைக்கு வட்டி ஏதும் கொடுப்பதில்லை. ஆகவே இழப்பீட்டின் மொத்த தொகையும் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட வேண்டும். இதுவரை என்எல்சி நிர்வாகம் வைத்துள்ள தொகைக்கு தீர்ப்பு (Award) தேதியிலிருந்து வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும்.

12. நிலம் தொழிற்துறை நோக்கங்களுக்கான சட்டத்தில் கையகப்படுத்தப்படுகிறது. கனிமவள சட்டத்தில் கையகப்படுத்தப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ராயல்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடந்த போராட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது.

சனி, 29 நவம்பர், 2025

SIR குறித்து கேள்வி கேட்போரை எதிர்த்து...

SIR குறித்து கேள்வி கேட்போரை எதிர்த்து சங்கிகள் கதறி அல்லது குதறி வருகின்றனர்.

இந்த தேர்தல் சீர்திருத்தம் அடிப்படை மக்கள் குடியுரிமையை கேள்வி கேட்கிறது என்றுதான் பலமுறை சொல்லி இருக்கிறோம். அதை யாரும் நம்ப தயாரில்லை.   

ஏனெனில் உங்களது 

1.  தேர்தல் ஆணையம் கொடுத்த  வாக்காளர் அடையாள அட்டை 

2. தமிழக அரசு கொடுத்த  ரேஷன் கார்டு அட்டை 

3. மத்திய மாநில அரசுகள் கொடுத்த பான் கார்டு 

4.  தமிழக அரசு கொடுத்த ஓட்டுனர் உரிமை அட்டை 

5. எல்லாவறிற்கும் மாற்று என்று சொன்ன ஆதார்  அடையாள அட்டை    

 இவை எதையும்  நம்பாமல் நவ பாசிச பாஜக புதிய ஆவனங்ககளை கேட்கிறது   

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வரும் இரண்டு தலைமுறைக்கு குடியுரிமை பறிப்பும் அதற்காக சங்கீ தலைமை செய்யும் தொடர் பிரச்சாரமும் தெரியாது.

மோடியின் ஆலகால விஷக் கூட்டம் ஆயிரம் பொய்களை 20 ஆண்டுகளாக இணையதளத்தில் பதிவேற்றிய வருகின்றன..

இவர்கள் அனைத்தும் பொய்யின்றே தெரியாமல் இரண்டு பத்தாண்டு தலைமுறை அதை நம்பிய வளர்ந்து வருகிறது.. வாட்ஸ் ஆப் தமைமுறை அறிய வேண்டிய உண்மைகள் நிறைய உள்ளது

தொடர்ந்து சொல்கிறேன் ..... 

அவர்களுக்கான ஒரு சிறு உதாரணத்தை கீழே பதிவிட்டு இருக்கிறேன்.   

இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் பதினோரு கோடி ரோஹிங்க்யா முஸ்லிம்களும், எட்டு கோடி வங்காளதேச முஸ்லிம்களும்

தலைப்பு  இதுதான் ..  

இந்தியாவில் அகதிகள் குறித்த தவறான தகவல்களும் சமூக ஊடகங்களின் வதந்திகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. அகதிகளின் எண்ணிக்கையை ஊதிப்பெரியதாகக் காட்டி மக்களிடையே அச்சத்தை உருவாக்கிவிடுகின்றன அத்தகைய வதந்திகள்.

மியான்மரில் ரோஹிங்க்யா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியினால் அகதிகளாக வெளியேறுவதை, இந்தியாவை ஆக்கிரமிக்கவே அவர்கள் வருவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வதைப் பார்க்கமுடிகிறது

அதுமட்டுமில்லாமல், 'வங்காளதேச அகதிகள்'' என்கிற வார்த்தைப் பிரயோகமே இந்திய அரசியலில் எப்போதும் ஒரு பிரபலமான விவாதக் கருப்பொருள்தான்.

அதனைப் பயன்படுத்தி, ஒவ்வொருமுறையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அகதிகளின் எண்ணிக்கையை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்திக்காட்டுவதை, வெறுப்பரசியலை விதைப்போரும் வதந்திகளைப் பரப்புவோரும் வழக்கமாகவே செய்து வருகின்றனர

பரப்பப்பட்ட செய்தி:

இந்தியாவில் ரோஹிங்க்யா முஸ்லிம்களின் மக்கள்தொகை பதினோரு கோடியாக அதிகரித்துவிட்டது: அதேபோல எட்டு கோடி வங்காளதேச முஸ்லிம்களும் சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

உதாரணமாக:

"
டீசல் மற்றும் பெட்ரோலின் விலை 5 ரூபாய் உயர்ந்தாலே பாரத் பந்த் அறிவித்துப் போராடுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஆதரிக்கும் எட்டு கோடி வங்காளதேசத்து முஸ்லிம்களும் ரோஹிங்க்யா முஸ்லிம்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களா என்ன? இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சி."

உண்மை என்ன?

அந்த எண்ணிக்கை முற்றிலும் தவறானது. பதினோரு கோடியென்பது, மியான்மர் தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விடவும் இரண்டு மடங்கு ஆகும்.

இந்தியாவில் வாழும் ரோஹிங்க்யா மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 40000 தான் என்று மத்திய உள்துறை விவகார இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தார். அந்த 40000 த்திலும், 16000 பேர் ஐநா சபையால் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வமான அகதிகள் ஆவர்.

2017 ஆம் ஆண்டு ஐநா சபை வெளியிட்ட சர்வதேச புலம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையில், இந்தியாவில் வாழும் வங்காளதேச அகதிகளின் எண்ணிக்கை 31 இலட்சம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------ 

 மேலும் சங்ககிகளின் பொய்களை அறிய ...

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது.

கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன.

இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன. “


இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.