ஞாயிறு, 20 ஜனவரி, 2013

என்னதான் நடக்கிறது இணைய உலகில்?


இணைய சமூகம் சந்திக்கும் சவால்கள்!



பம்பாய் நகரத்தில் மராட்டியர்களை தவிர மற்றவர்களை உதைத்து தள்ளிய தேச பக்தர் பால்தாக்ரே இறந்த மறுநாள் தி ஹிந்து பத்திரிகையில் புகழ்பெற்ற நீதிபதியும் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதியின் முப்பது கோடி முகமுடையாள் என்ற பாடலில் துவங்கி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் தலைப்பு நான் ஏன் பால்தாக்ரேவுக்கு அஞ்சலி செலுத்த மாட்டேன்? அன்றைய அப்பத்திரிகையின் தலையங்கங்களும் பால்தாக்ரேவை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருந்தது. அதே நாள் மும்பையில் ஷஹீன் ததா என்ற மாணவி தன்னுடைய முகநூலில் (facebook) பால்தாக்ரே மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை. பகத்சிங், சுகதேவ் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிடப்பட்டபோது நாம் என்ன செய்தோம் என்பதை நினைவுகூர வேண்டும் என்ற பதிவிட்டார். ரேணு என்ற மாணவி அந்த பதிவுக்கு விருப்பம் தெரிவித்தார். இந்த இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி குறித்து கார்ட்டூன்களை வரைந்து மின்னஞ்சலில் அனுப்பியதற்காக அம்பிகேஷ் மகாபத்ரா என்ற ஜாதவ்புர் பல்கலை வேதியியல் துறைப்பேராசிரியர் கைது செய்யப்பட்டார். முகநூல், டிவிட்டர், பிளாக், போன்ற இணைய பொது வெளியில் அல்ல மின்னஞ்சல் என்கிற இணைய தனிவலையில் அனுப்பியவர்.

தமிழக பாடகி சின்மயி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக ஆறு நபர்கள் மீது புகார் கொடுக்க மெத்த படித்த மேதாவிகளான ராஜன் மற்றும் சரவணபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். (இத்தகைய வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் தமிழர்கள் என்பது பின் குறிப்பு) ப.சிதம்பரத்தின் அருந்தவ புதல்வன் கார்த்திக் சிதம்பரம் குறித்து தனது டிவிட்டரில் கருத்தை பதிந்த பாண்டிச்சேரியை சார்ந்த  ரவி சீனுவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இத்தகைய தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கிறன. இத்தகைய சம்பவங்கள் இணைய உலகில் பரப்பரப்பாக விவாதிக்கும் பொருளாய் மாறியுள்ளது. எனவே படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்துகிற தொழில்நுட்பம் இன்று சமூகத்தில் பல விளைவுகளை உருவாக்குகிறபோது அது குறித்து விவாதிக்காமல் இருக்க முடியாது. இணையம் என்றால் என்ன? என்னதான் நடக்கிறது அங்கு? யார் அங்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? அங்கு கருத்துச்சுதந்திரம் இல்லையா? அங்கு கட்டுபாடு அவசி யமா? காட்டுப்பாடே கூடாதா? 

இணையம் என்பது..

மனிதகுலத்திற்கு அறிமுகமான, இதுவரை இல்லாத மிகப்பெரிய சமுக இணைப்பு. ஒவ்வொரு நாளும் உலகின் மூலை முடுக்கில் உள்ள மனிதர்களை தேடித் தேடி தன்னுள் இணைத்துக்கொண்டே இருக்கிறது. இங்கு தகவல் தொடர்பு வாயிலாக உரையாடல், விவாதம், பங்கேற்பு ஆகியவை நடக்கிறது. விவாதம், பங்கேற்பு மட்டு மல்ல போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் புதிய போராட்டங்களை துவக்கவும் பயன்படுகிறது. மற்றொரு பக்கம் இங்கு அரசியலற்ற தன்மையை, கீழ்த்தரமான விமர்சனங்களை, வன்மங்களை, பாலியல் அசிங்கங்களை, வசைமாறி பொழிவதையும் தீவிரமாய் செய்து வருகிறது. உலகில் 240 கோடி மக்கள் இணைய வசதியை பெற்றுள்ளனர். இந்தியாவில் 14 கோடி பேர், தமிழகத்தில் 40 லட்சம் பேர் இணைய வசதியை பெற்றுள்ள னர்.
இணையதளம் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. எல்லோராலும் எழுத முடிகிற இடமாய் உருவம் கொண்டுள்ளது. பதிப்பகம் தேவையில்லை, புத்கமாக்க தேவையில்லை, சந்தை தேவையில்லை, எழுதுவது கவிதையா அல்லது கட்டுரையா என்ற விமர்சனங்கள் தேவையில்லை. தனக்கு விருப்பமானதை எழுத முடியும். முகம் காட்டும் அவசியமில்லை. ஆகவே அது ஒரு சுய உலகமாய் ஆனால் பொதுவெளியில் இயங்கும் உலகமாகவும் இருக்கிற காரணத்தால் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் கண்டடைய முடியும் என்ற இடம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 

கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது யாவரும் அறிந்ததுதான். டிஜிட்டல் நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவது முன்போல கடினமானதல்ல. இந்தத் தொழில் நுட்பம் மலிவானது, ஜனநாயகப் பூர்வமானது, எல்லோருக்கும் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு வசப்படுத்துவதன் மூலம், எங்கெல்ஸ் கூறுவதுபோல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை ஒரு நிகழ்வின் பல கோணங்களை வர்க்க நிலையில் இருந்து வெளிப்படுத்த இந்த ஊடகங்களையும் அதற்கான தளத்தில் பயன்படுத்த முடியும். அந்த வகையில் நடப்பது வர்க்கம் சார்ந்த பழைய போர், பழைய கோபம், பழைய எதிர்ப்பரசியல், பழைய தாக்குதல், பழைய கலவரங்கள் தான். ஆனால் இந்த தாக்குதல்கள் இன்று புதிய வடிவிலான ஆயுதங்களை பயன்படுத்துகின்றன.

என்னதான் நடக்கிறது அங்கு?

முகநூல், டிவிட்டர், ஆர்குட், யூ டியூப் , வலைப்பூ (blogspot), வலைதளம் மற்றும் google+ போன்றவைகள் (இன்னும் நிறைய இருக்கிறது) சமூக வலைத்தளங்களாகும். (தனியாக லட்சக்கணக்கில் வளைதளங்களும், வலைப்பூக்களும் உள்ளன.) யாரும் இங்கு எதையும் சொல்ல முடியும், மறுக்க முடியும். ஆகவே அது ஒரு வசீகர உலகமாகவும் இருக்கிறது அதே நேரத்தில் மன உலைச்சலை உண்டாக்கும் தீவாகவும் தெரிகிறது. மாற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையையும் விதைக்கிறது. சே! இங்கும் இதுதானா என்ற அவநம்பிக்கையையும் உருவாக்குகிறது. இருப்பினும் உலக அனுபவம் காட்டுவது என்ன? அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆன் மிர்ச் என்னும் பெண் பாங்க் ஆப் ஆமெரிக்கா வங்கி தன்னுடைய கிரிடிட் கார்டு தவணை தொகைக்கான வட்டித்தொகையை அநியாயமாக உயர்த்திய போது கொதித்துப்போய் யூடியூப்பில் வங்கியை அம்பலப் படுத்தினார். அந்த கோப்பை முதல் சில நாட்களில் 2.5 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட வங்கி இறங்கி வந்து ஆனின் வட்டி விகிதத்தை குறைத்ததோடு நடைமுறையை மாற்றி உள்ளது.

துனிசியாவில் கனன்று கொண்டிருந்த போராட்ட நெருப்பை 20 வயது இஸ்லாமிய மாணவி பெருந்தீயாய் மாற்றியது யூடியூப்பில் வெளியிட்ட ஒரு சாலையோர இளைஞனின் தற்கொலையில் என்பதையும் நினைவில் கொள்வது நலம். அரபு நாடுகளின் மல்லிகை புரட்சி எழுச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தது இந்த சம்பவம். இலங்கையில் நடந்த படுகொலைகளை அந்த அவலங்களை உலகிற்கு வெளிக்கொண்டுவந்ததில் இணையதளங்கள்தான் முக்கிய பங்குவகித்தன.

விக்கிலீக்ஸ் மேற்கத்திய ஊடகங்களுடன் உலகின் பல்வேறு ரகசியங்களை வெளிக்கொணர்ந்தது. கென்யாவின் ஊழல், ஐவரிகோஸ்டின் இரசாயன கழிவுகளை கடலில் கொட்டியது, குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகள், ஈராக், ஆப்கான் போர்ரகசியங்கள் என பல்வேறு ரகசிய செய்திகளை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியது. பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு முன்னால் திறந்து வைத்தது. சரி எது? தவறு எது? என்பதை அடையாளம் காணவும் தெளிவான நிலைப்பாடுகளை மேற்கொள்ளவும் அது உலக மக்களுக்கு உதவியது.

இன்னொரு பக்கம் Free Software Moment   என்ற இயக்கம் மேலெழுந்துவருகிறது. பணம் கொழிக்கும் மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனிக்கு எதிராக மிக கடுமையான போராட்டங்களுடன் துவங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று பிருமாண்டமாய் வளர்ந்துள்ளது. இது எங்குவரை சென்றுள்ளதெனில் முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் வெள்ளை மாளிகை இணையம் ஓபன் சோர்ஸ் முறைக்கு தள்ளப்பட்டிருப்பது இந்த இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

உலக நிலை இப்படி இருக்க, உள்ளூர் இணையத்தில் இவைகளையெல்லாம் எதிர்பார்த்து கால்பதிக்க முடியாது. முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் தாக்குதல்களை எதிர்த்து மக்கள் ஒன்றுபட எப்படி சாதி, மத, நிலபிரபுத்துவ அமைப்பு தடையாக இருக்கிறதோ அதன் பிரதிபிம்பத்தை இங்கும் காணமுடியும். இவைகளில் மிகத்தீவிரமாக அரசியல் பேசுவது. அரசியலை ஒதுக்கித் தள்ளுவது. இந்துத்துவ அரசியல், தமிழ்தேசிய அரசியல், இடது அதிதீவிர அரசியல். அரசியல் வேண்டாம் என்ற அரசியல், ஆதிக்க சாதி அரசியல், தலித்தியம், மார்க்சிய அரசியல், பெண்ணியம், மாற்று பாலினம், சினிமா, ஆபாசங்கள், சுய முன்னேற்றம், ஆண்மீகம் போன்றவை பிரதான இடம் வகிக்கிறது.

யார் அங்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? 

அனானிகள்: உலக அளவில் அனானிகள்தான் கடுமையான ஆதிக்க எதிர்ப்புப் போரை நடத்துகின்றனர். பல கோடி மதிப்புள்ள மென்பொருள்களை இலவசமாய் உலகிற்கு கொடுப்பது இவர்கள்தான். ஆனால் தமிழக அனானிகள் அப்படியல்ல. இணைய உலகில் இருப்பதிலேயே மிகவும் வீரமான கீபோர்டு புரட்சியாளர்கள் இவர்கள்தான். எப்போதும் முகம் காட்டமாட்டார்கள், புனைபெயர், ஏதாவது படங்களை அடையாளமாக வைத்துக்கொள்வார்கள். எல்லோரையும் சகட்டுக்கு திட்டுவது இவர்களது பொழுதுபோக்கு. கொச்சையான வார்த்தைகள்தான் இவர்களது மொழிநடை. நரகல் நடையில் எல்லா பதிவிற்கும் பின்னூட்டம் இடுவது இவர்கள் வேலை. வீரம் கொப்பளிக்க வசனங்களை எழுதுவது இவர்களுக்கு கைவந்தகலை. தன்னுடைய பெயரில் எழுதினால் தனது அரசியலற்றதன்மை அல்லது கேவலமன குணம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் முகம் மறைத்து அலையும் சூரர்கள் இவர்கள். 

குறிப்பாக இணையத்தில் முற்போக்கு அரசியல் பேசுபவர்களுக்கு எதிராக இவர்களின் தாக்குதல் பலமாய் இருக்கும். ஆனால் இவர்கள் அடிக்கடி முற்போக்கான கருத்துக்களை போல சிலவற்றையும் வெளியிட்டு தங்கள் மேதாவிலாசத்தை பறைசாற்றுவார்கள். பெண்களை கொச்சையாக கிண்டல் செய்வதும், ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதும் இவர்கள் தொடர் பணி. ஏதாவது ஒரு அரசியல் அல்லது சமூகம் கூறித்த விவாதம் நடக்கும் போது இடையில் புகுந்து விவதத்தின் தன்மையை திருப்புவது அல்லது மொத்தமாய் அந்த விவாதத்தை நாசப்படுத்துவது இவர்களின் அரசியல் பின்னணியாகும்.

தமிழ் கலாச்சார காவலர்கள்: தமிழ்தேச உணர்வாளர்கள் என தங்களை கட்டமைத்துக் கொண்டவர்கள் அல்லது அப்படி நம்பப்படுபவர்கள் ஆதிக்கம் அதிகம்தான். இவர்கள் மற்றவர்கள் மீது கடுமையாக விமர்சனங்களை வெளியிடுவார்கள். தமிழர்கள் என்றால் இப்படிதான் எழுத வேண்டும், இதைத்தான் பேசவேண்டும் என இவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சொல்லிமாளாது. விடுதலைப்புலிகளின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலாளர்கள் இவர்கள். இலங்கை பிரச்சனையின்போது விடுதலைப்புலிகளை யாராவது விமர்சனம் செய்தால் அல்லது பிரபாகரன் குறித்து ஏதாவது எழுதினால், தனிஈழம் சாத்தியமா என வினா எழுப்பினால் உடனடியாக, கேள்வி எழுப்புபவர்கள் தமிழர்கள் இல்லை என அறிவிக்க படுவார்கள். அவர்களது பிறப்பு குறித்த சந்தேகம் எழுப்பப்படும். தனிநபர் வசைபாடும் படலம் துவங்கும். 

எந்த இடத்திலும் அரசியல் ரீதியாக கருத்துக்களை எதிர்கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு இருக்காது, கருத்தை முன்வைப்பவர்கள் நக்கல் நடையில் அல்லது நரகல் நடையில் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். இவர்கள் கருத்துப்படி தமிழர்கள் என்றால் கண்மூடித்தனமாக இலங்கை பிரச்சனையை அணுகவேண்டும். அதாவது பிரபாகரனை தேசிய தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதே அணுகுமுறைதான் மாநிலம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனையிலும். அறிவியல் பூர்வமான அனுகுமுறையை மேற்கொள்ளச் சொல்லி இவர்களுக்குள் யாராவது சொன்னால் உடனடியாக அவர்கள் சாதி பின்னணி ஆராயப்பட்டு தாக்குதல் அவ்வழியில் துவங்கும்.

இன்டர்நெட் புரட்சியாளர்கள் (அ) தமிழக மம்தாயிஸ்டுகள்: மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற உலக புரட்சியாளர்களின் வார்த்தைகளை பொறுக்கி எடுத்து புரட்சி பேசும் கூட்டம் இது. ஓட்டு பொறுக்கி கட்சிகளை நம்பாதீர்கள் என பல வார்த்தைகளை பொறுக்கி எழுதுவார்கள். இவர்களது இலக்கு, முழுநேரபணி, வர்க்க எதிரி எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சிதான். கவர்ச்சிகரமான எழுத்து நடையும் தடாலடி தலைப்பும் இவர்களிடமிருந்துதான் ஒரு தினபத்திரிகை பெற்றதோ என ஐயுறும் வகையில் தலைப்பிடுவார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் தகவல்களை எழுதுவதில் தேர்ந்தவர்கள் இவர்கள். உகாண்டாவில் இருக்கும் பட்டினியைப் பற்றி எழுதினால்கூட இவர்கள் சி.பி.எம் ஐ திட்டாமல் எழுத முடியாது என்ற அளவு பாதிக்கப்பட்டவர்கள்.

மேற்குவங்கத்தில் மாவோவின் பெயரால் அப்பாவி உழைப்பாளிகளும் மார்க்சிஸ்ட் ஊழியர்களும் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது அதை பற்றி கொஞ்சமும் கவலைப் பாடாமல் மாவோயிஸ்டுகளை இங்கே கொண்டாடினார்கள். மம்தாவை மேற்குவங்க தேவதையாய் சித்தரித்தனர். மாவோயிஸ்டுகளை மம்தா வேட்டையாட துவங்கியதும் மேற்குவங்கம் அவர்களுக்கு தூரதேசமாய் ஆகிவிட்டது. இவர்களது தொழில் நுட்பம் புதுமையானது. அதாவது ஒரே நபர் பத்து பெயரில் இணைய கணக்கை துவக்கிக்கொள்வார்கள். அவர்களது பதிவை பாராட்டியும் பதிவை எதிர்த்து எழுதுபவர்களை திட்டியும் பின்னூட்டம் இடுவதில் சமத்தர்கள். களப்போராட்டத்தில் நிற்பதைவிட கம்யூட்டர் வலைதளத்தையே அதிகம் நம்பி இயக்கத் தை நடத்துபவர்கள்.

ஆபாசம்: இணையதளத்தின் உள்ளே வரும் இளைய சமூகம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இடம் இதுதான். லட்சக்கணக்கான ஆபாச படங்கள் கொட்டிக்கிடக்கும் சந்தையாக இருக்கிறது. இலவசமாய் பல மணிநேரம் பார்க்கும் காட்சிகள் எளிதில் அகப்படுவதால் செல்லும் பாதையைவிட்டு இந்த பாதையில் அதிகம் செல்ல வாய்ப்பிருக்கிறது.

சும்மா ஜாலிக்கூட்டம்: எந்த மாற்றங்கள், கொடுமைகள், அநீதிகள் நடந்தாலும் அதைபற்றியெல்லாம் கவலைப்படாத பெரும்பான்மை கூட்டம் இது. எப்போதும் சினிமா, கிசுகிசு, நகைச்சுவை தோரணங்கள் என இருப்பது இவர்கள் சிறப்பு. திரைப்படம் எனில் நல்ல திரைப்படங்கள் குறித்து வாய்திறக்க மறுப்பார்கள். கலாய்ப்பது ஒன்றே தங்களது லட்சியமாக கொண்டவர்கள். புதிதாக இணையத்திற்குள் வரும் இளைஞர்களை இவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பது இவர்களுக்கு மிக எளிதானதால் உண்மையில் தேடலுடன் வரும் இளைய சமூகம் எளிதில் ஆழப்படிப்பதை விடுத்து குறுஞ்செய்திகளில் நாட்டம் கொள்கிறது.

மதம்: ஆன்மீகம், கடவுள், மூடநம்பிக்கைகளை விதைப்பது, மதப்பண்டிகைகளை உயர்த்திப்பிடிப்பது, அதன் வரலாற்றை பெருமிதம் பொங்க எழுதுவது போன்றவை இவர்களின் பிரதான செயல்பாடு. இஸ்லாம், கிருத்துவம், இந்து அடிப்படை வாதிகள் கைகளில்தான் அதிகமான வலை இடங்கள் இருக்கிறது. மதம் சார்ந்த கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பது இவர்கள் முழுநேர வேலை. ராசிபலன்களை தினம் தினம் சொல்லாமல் தூங்க மாட்டார்கள். மற்ற தத்துவத்தைவிட பகவத் கீதை தான் உயர்ந்தது என ஆராய்ச்சி கட்டுரை எழுதும் விற்பன்னர்களும் இவைகளில் அடக்கம்.

மாற்றங்களைத் தேடுபவர்கள்: சிறுபான்மையாக இவர்கள் இருப்பதுதான் மேற் கண்ட பெரும்பான்மையினர் கோலோச்ச காரணமாய் இருக்கிறது. இடது சார்புடைய எழுத்தாளர்கள், மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள், உழைப்பாளிகளின் துன்பங்களை பேசுபவர்கள், அரசின் மக்கள் விரோத கொள்கையை விவாதிப்பவர்கள், வறுமைக்கான காரணத்தை வர்க்க பார்வையுடன் சொல்பவர்கள், சாதி அரசியல் சாராமல் தலித் உரிமைகளை முழக்கமிடுபவர்கள், தீண்டாமைக்கு எதிராக களம் காண்பவர்கள் கடுமையாக இயங்குகின்றனர். இருப்பினும் மேற்கண்ட பெரும்பான்மையால் ஒதுக்கப்படுவதும், தாக்குதலுக்குள்ளாவதும் நடக்கிறது.

தமிழகத்தில், இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் நடக்கிற கொடுமைகளை மிகதீவிரமாக எதிர்க்கும் பணியை இவர்கள் செய்து வருகிறார்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலை உயர்த்துவது, உலக போராட்டங்களை உள்ளூர் வலை சமூகத்திடம் சேர்ப்பது, மணிப்பூர் ஷர்மிளா உண்ணா விரதத்தை தினம் தினம் உயிரோடு உயர்த்திப்பிடிப்பது. தமிழ்மொழி குறித்தும் தமிழ் வளர்ச்சி குறித்தும் ஆக்கபூர்வமாக கருத்துரைப்பது, பெண் உரிமை குறித்தும் திருநங்கைகளின் உரிமை குறித்தும் அக்கறையுடன் பேசுவது, அணு துவங்கி புவி வரை மாற்றுக்கருத்துகளை உறுதியுடன் பகிர்வது, அந்நிய மூலதனம் சில்லறை வணிகத்தில் வருவதை எதிர்த்து கருத்துப் போராட்டம் நடத்துவது. மின் வெட்டால் இருண்ட தமிழகம் குறித்து விழிப்படைய செய்வது என செயல்பாடு தொடர்கிறது.

மேற்கண்ட பின்னணியுடன் இந்தியாவில், தமிழகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்க்கலாம்.

அங்கு கட்டுபாடு அவசியமா? 

இணைய குற்ற கைதுகளின் பின்னணியில் ஒரு அரசியல் பொதிந்துள்ளது. மம்தா, தாக்ரே, போன்ற அதிகாரவர்க்கத்தை கேள்வியெழுப்பியவர்களும், சின்மயி, கார்த்திக் சிதம்பரம் போன்ற நாடறிந்தவர்களுக்கு பிரச்சனை என்றவுடன் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை கவிஞர் மீனா கந்தசாமி உட்பட பத்தொன்பது பெண்கள், தங்களை சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியாக இழிவு செய்யப்படுவதாக கொடுத்த புகார்கள் அலட்சிய படுத்தியது ஏன் என்ற கேள்வியை புறம்தள்ள முடியாது. தற்போது வலைதளங்களில் நடக்கும் பாடகி சின்மயி குறித்த ஒரு குறிபிட்ட பிரச்சனையை பார்க்கலாம். 

இவர் மீனவர்கள் குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் எதிர்மறையாக பேசினார் என்பது குற்றச்சாட்டு. இதை கருத்து ரீதியாக எதிர் கொள்ளாமல் குறிப்பிட்ட சிலர் அவரை பாலியல் ரீதியாக தாக்கினர். பிறகுதான் அவர் காவல் நிலையம் சென்றார். சின்மயி முதலில் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் மன்னிப்புக் கேட்கட்டும் அப்போது நான் சின்மயிக்காகப் போராடுவேன் என்று எழுத்தாளர், பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் கூறுகிறார். ஆனால் சின்மயியைவிடப் பன் மடங்கு அபத்தமான, ஆட்சேபணைக்குரிய கருத்துகளை இடஒதுக்கீடு குறித்தும் ஈழப்பிரச்சினை குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் சொன்ன எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்டோர் புத்தகத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எந்த அரசியலின் தார்மீகம் என தெரியவில்லை. என்ற ஷோபாசக்தியின் எதிர் கேள்வி சரியானதுதான்.

புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கு சவால் விடுக்கப்படுகிறது என்பது உண்மையெனினும் ஒரு பெண்ணை கேவலமாக தாக்கி அவளை சமூக வலைத்தளத்திலிருந்து ஒழிப்பது அதைவிட கொடூரமான கருத்துச் சுதந்திரப் பறிப் பாகும். கவிஞர் தமிழச்சி தொடர்ந்து பெரியார், அம்பேத்கர் கருத்துகள் சார்ந்து எழுதியபோது அவரின் புகைப்படத்தையே மார்பிங் செய்து ஆபாசமாக சமூகவலைத் தளத்தில் உலவவிட்டனர். இதை எப்படி அனுமதிக்க முடியும்?

சோனியா, மாயாவதி, ஜெயலலிதா, மம்தா, சுஷ்மா சுவராஜ், கனிமொழி போன்ற அதிகாரம் சார்ந்தவர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவது அவசியம். ஆனால் அவர்களது பாலினத்தை முன்வைத்து அருவருக்கதகுந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்தால் எதிப்பதுதான் நேர்மையான அரசியலாய் இருக்க முடியும்.

 ஆனால், ஆட்சியாளர்களை, அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றி சரியான விமர்சனங்களுடன் கேலிச்சித்திரம் வரைபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் அரசியல் உள்நோக்கத்துடன் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இணையத்தின் சுதந்திரச் செயல்பாட்டிற்கு வந்துள்ள ஆபத்து இது. இணைய ஜனநாயகத்திற்காக போராடுவது அவசியம். அதன் சுதந்திரத்தை பாதுகாப்பது அவசியத்தேவை. இதற்கு ஆதரவாக மக்களின் கருத்துக்களை திரட்ட வேண்டி இருக்கிறது.

ஒழுக்கம் எனப்படுவது எதுவெனில் மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ அதேபோல நாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்வதே ஒழுக்கமாகும் எனறார் தந்தை பெரியார். இதை மனதில் வைத்து இணையதளத்தில் இயங்குபவர்கள் செயல்பட்டால் நிச்சயம் சின்மயி விவகாரங்களை தடுக்க முடியும். மாறுவேடம் பூண்டு அலைய வாய்ப்பளிக்கும் அனானிகளை தடைசெய்தால் இணையத்தில் பாதி பிரச்சனை குறைய வாய்ப்பிருக்கிறது. தவறான சிலரின் செய்கையால் ஆளும் வர்க்கம் இணையத்தை உளவு பார்க்க அழைப்புவிடுப்பது சரியா என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது.

இணைய ஊடகம் என்ற ஆயுதம் இருபக்கம் கூராக வடிவம் தருகிறது. மிகவும் நேர்த்தியுடன் செயல்படவில்லையெனில் வீசுபவரை அது பதம் பார்க்கத் தவறாது. ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தேசத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து விவாதிக்கவேண்டிய இடம் உள்ள தளத்தை ஆளுவோர்  எப்போதும் முடக்க காத்திருப்பார்கள். கிடைக்கும் காலத்தில் அதை முழுமையாக உழைப்பாளிகளின் பிரச்சனைகளைப் பேச படித்த நடுத்தர வர்க்கம் முயற்சி செய்ய வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

---2012 நவம்பர் செம்மலர் இதழில் வெளியான கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக