புதன், 9 மே, 2012

மனிதர்களை உற்றுப்பார்ப்போம்...



பரபரப்பான வாகனப் போக்குவரத்தும்எந்திரத்தனமான மனித நடமாட்டமும் இல்லாத இரவில் ஏதோ ஒரு மாநகரத்தினுள் நீங்கள் தனிமையில் நடந்ததுண்டாஅப்படி நடக்கும்போது உங்கள் சுயம் குறித்த நினைவுகளிலிருந்து விடுபட்டுசாலை ஓரங்களில் உறங்கும் அல்லது புகைமூட்டி கொசுவிரட்டும் மனிதர்களைப் பார்த்ததுண்டா? "இறைவா குளிப்பதற்கு ஒரு மறைவான இடம் கொடு" என்று பரம பிதாவிடம் மனுப்போட்ட பிரபஞ்சனின் நாவலில் வரும் பெண்ணை சந்தித்ததுண்டாவாகனங்கள் செல்லும் உணர்வேயற்று நடைபாதையில் விளையாடும் குழந்தைகள் உங்களை பதற வைத்துள்ளார்களாஅல்லது குறைந்தபட்சம் உங்கள் கவனத்தையாவது அசைத்திருக்கிறார்களா?

காதலும் காமமும் நிகழ்கின்ற இடமாய்குழந்தை சூல் கொண்ட சூழலும், நடைபழகிய இடமும் சாலையோரம் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதாநடைபாதையிலேயே குளித்துஉடை மாற்றிதுவைத்து,துவைத்த துணியை உலர வைத்துபறக்கும் புழுதிக்கு இடையில் சமையல் செய்து உணவருந்திஎங்கோ சென்று மாலையில் மீண்டும் அதே இடத்திற்கு வருகிறவர்களை சந்தித்ததுண்டாநகரம் விழிப்பதற்கு முன் விழித்து காலைக்கடனை முடிக்க, இடம் தேடி அலையும் நரக வாழ்க்கை உங்களில் யாருக்கேனும் வாய்த்திருந்தால் என்ன செய்வீர்கள்?

சென்னை என்று மட்டுமல்ல இந்த நாட்டின் பெருநகரங்களின் பொதுவான கதை இதுதான். நகரங்கள் நிராகரித்த வாழ்வு இவர்களுடையது. ஆயிரமாயிரமாய் வாழ்கின்றனர். கடுமையான மழை பொழிந்தால் மூடியிருக்கும் கடைகளின் ஓரங்களில் கைகளில் கிடைக்கும் சினிமா போஸ்டர்களால் சாரலைத் தாங்கி,மழைநிற்க வேண்டிக்கொண்டிருப்பார்கள். சட்டியில் வேப்பிலை கொளுத்தி கொசுக்களுடன் போராடி தோல்வி அடைந்து தினம் தினம் அவைகளுக்கு இரத்த தானம் செய்து கொண்டிருப்பார்கள். 

இப்படியான மக்களுடன் உரையாடுவதும்அவர்களை திரட்டி அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவதும் பொது சமூக தளத்தின் கடமையாக மாற்றிட வேண்டிருக்கிறது. 
நான் சென்னையில் வாலிபர் சங்க ஊழியராக இருந்த காலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் பாலத்தை கடக்கும் போதெல்லாம் சாலையோரம் அமர்ந்திருக்கும் ஒரு முதியவர் என்னை சலனப்படுத்திக்கொண்டே இருந்தார். இரவு நேரங்களில் பெரியமேடு வாலிபர் சங்க அலுவலத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு சென்றுகொண்டிருக்கும் போதெல்லாம் அவர் அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருப்பார். ஒரு வருடமாக கவனித்துவந்தேன். 

அவரிடம் பேச வேண்டும் என்ற உந்துதல் என்னிடம் தொடர்ந்து கொண்டே இருந்த காரணத்தினால் ஒரு நாள் அவரை சந்தித்து பேச முடிவெடுத்தேன். என்றோ குளித்து எப்போதோ உடைமாற்றிய அறிகுறியாய் அழுக்கேறிய ஆடைகளுடன் கசங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் சின்ன துணிமூட்டை ஒன்று. அவரிடம் சென்று அமர்ந்து பெரியவரே உங்களிடம் பேசலாமா என்றேன். அவருக்கு என் மீது சந்தேகம் வந்தது அவரது பார்வையில் அப்பட்டமாக தெரிந்தது. சாலையில் கடப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் என அவர் நம்ப வேண்டிய கட்டாயம் இல்லைதானே. சாராய நெடி குப்பென வீசியது அதைவிட அந்த சாலையின் மணம் அதிகமாக இருந்தது. உலகின் கொடூரமான கொசுக்கடி அங்குதான் இருக்கிறதோ என்ற அளவு சகிக்க முடியாத அளவு இருந்தது. ஆனால் அங்குதான் உழைப்பாளி மக்கள் வாழ்கின்றனர்.

அவரிடம் பேசத்துவங்கினேன். மெல்ல மெல்ல அவர் சகஜ நிலைக்கு வந்தார். அவரது வாழ்க்கை குறித்துப் பேசத்தொடங்கினார். அவர் அந்த நடைபாதையில் குடியிருக்கத் துவங்கி 35 ஆன்டுகள் ஆகிறது. 

இப்போது எனக்கு வயது 75. "விருத்தாசலத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் எனது சொந்த ஊர். எனக்கு மனைவி மக்கள் இருந்தனர். ஒரு ஏக்கர் நிலம் இருந்துச்சி. விற்பனை செய்யனும்னு பொண்டாட்டியும் பசங்களும் சொன்னாங்கமுடியாதுன்னு சொன்னேன் அடிச்சாங்க. நான் இங்க வந்துட்டேன். காசும் பணமும் எப்படி மக்களை மாத்துது பாத்தீங்களா தம்பிஆனா அவங்க மீது தப்புன்னு சொல்ல முடியாது தம்பி. வேலை எதுவுமே இல்லாம அவங்களும் என்ன செய்வாங்க?"

சூன்யத்தில் நிலைக்கும் அவர் கண்களில் கொஞ்சம் கண்ணீர்.. 

"அப்புறம் இங்க வந்தேன். பேப்பர் பொறுக்குவேன். அத கொண்டு போட்டா அறுபது அல்லது எழுபதுரூபா கிடைக்கும். கஞ்சா பொட்டலம்சாராயம் வாங்க 45 ரூபா போயிடும். பாக்கி காசுல சாப்பாடு. இப்படியே போகுது தம்பி. இதோ இங்க இருக்கிற மக்கள் எல்லோரும் என் சொந்தம்தான். ஒரு பொம்பள என்னோட பத்துவருடம் சேர்ந்து இருந்தா.. அப்புறமா என்ன விட்டுட்டு போயிட்டா.. ஏன்னு தெரியல தம்பி. இப்ப நான் ஒண்டிகட்ட.. அப்படியே வாழ்க்கை ஓடுது.."

எந்தவித சலனமும் இல்லாமல் அவர் பேசிக்கொண்டெ சென்றார். நாகரீக உலகின் பேருந்து பயணங்களின் இடைவெளியில் தூங்காமல்செய்தித்தாள்களுக்குள் முகம் புதைக்காமல்கூட்டநெரிசல் இல்லாமல்,ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் போது சாலை ஓரத்தில் குடியிருப்பவர்களை பார்த்து அசூசை கொள்ளும் மானிடர்களே! எங்களுக்கும் ஒரு வரலாறு இருகிறது என சொல்லாமல் சொன்னார் அவர்.

கிட்டதட்ட இரண்டுமணி நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். சில நாய்களும்வாகனங்களும்,மனிதர்களும் எங்களை கடந்துசென்றனர். பேச்சு முடிந்து நான் விடைப்பெறத்துவங்கிய போது சைக்களில் தேநீர் விற்கும் இளைஞன் அங்கு வந்தான். சிரித்த முகத்துடன் "தம்பி டீ சாப்பிட்டுட்டு போங்க என்றார்." இரவு வெளிச்சத்தில் அவரது வெற்றிலைக் கரையேறிய பற்கள் தெரிந்தது. எனக்கும் அவசியம்  தேனீர் தேவைப்பட்டதால் என்னுடைய பர்சை எடுக்க முயன்றேன். அவர் பதறி "தம்பி... ஏன் நான் வாங்கிக்கொடுத்தா சாப்பிட மாட்டீங்களாபிச்சைக்காரன் கொடுப்பது என்றா நினைக்கிறீர்கள் என்றார்."

"நான் பதறி தவித்து அப்படியெல்லாம் இல்லை பெரியவரே என்றேன்" தேனீரை பருகினேன். வெறுமையாய்,அமைதியாய் சில நிமிடங்கள் எங்களை கடந்தது. குடித்த பேப்பர் குவளையை தூர எறிந்துவிட்டு அவரிடம் விடைப்பெற்று திரும்பி நடக்கத்துவங்கினேன். அவரது நடுங்கிய சிலீரிட்ட கரம் எனது கரத்தைப்  பற்றியது. திரும்பி அவரைப் பார்த்தேன். அவர் மெல்லிய நடுக்கத்துடன் அழுதுகொண்டிருந்தார். என்ன செய்வதென அறியாமல்அவரது கரத்திலிருந்து எனது கரத்தை விடுவிக்காமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 

"தம்பி நான் இந்த ரோட்டோரத்தில் 35 வருடமா கிடக்கேன்.. இதுவரை யாரும் என்கிட்ட.. எனக்காக இப்படி ஒக்காந்து இவ்ளோ நேரம் பேசியதில்லை.. நல்லாயிருப்ப தம்பி.." அவரது குரல் உடைந்து நொருங்கியிருந்தது. 

சகமனிதன் தன்னிடம் பேசுவதற்காக ஒரு மனிதன் கண்ணீர் சிந்தி அழுவது உலகின் மிகப்பெரிய கொடூரம்,நாகரீக உலகம் வெட்கப்பட்டு தலைகவிழ வேண்டிய அவலம். பல நாள் எனது உறக்கத்தைப் பறித்த அழுகையாய் அது மாறிப்போனது. அணுக்களைஅண்ட சராசரங்களை ஆராயும் உலகில் சகமனிதனின் இதயத்தை புரிந்துகொள்ள நேரமின்றிப்போனதும்தனக்கும் தனது பிழைப்புக்கும் சம்பந்தமில்லை எனில் எவர் குறித்தும் கவலைகொள்ளாத போக்கும் எங்கே அழைத்துச் செல்லும் இந்த சமுதாயத்தை?

முதலாளித்துவம் என்கிற இந்த சமூக அமைப்பு போட்டியை விதைக்கிறது. உலகமயம் என்னும் போட்டியில் வெற்றிபெற எதையும் செய் என போதிக்கிறது. வெற்றி பெறுபவனே வாழ முடியும் ஆகவே போட்டியிடு என்கிறது. இந்த போட்டியில் அன்புகாதல்நேசம்மனிதம் இவைகளை பார்ப்பது முட்டாள்தனம் என்கிறது. மூலதனத்தை குவிக்க மனிதத்தை தின்று எச்சமாய் துப்பிய சாலையோர மனிதர்களுக்காக நேரம் ஒதுக்குவதும்நகரங்களின் அழுக்குகளை சுத்தப்படுத்தி அழுக்குகளின் மீளா இருளில் தவிப்பவர்களுக்குக்காக குரல் கொடுப்பதும்சாலையோர மனிதர்களுக்காக நானும் போராடுகிறேன் என்று பெருமிதம் கொள்ளாமல் அவர்களின் தோளோடு நின்று கோரிக்கைக்காக கரம் உயர்த்துவதும் நமது கடமையென்பதையறிவோம். 
-------- ஏப்ரல் 12 , வீதி மாத இதழில் வெளியானது---------------------

9 கருத்துகள்:

  1. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழரே!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா17 மே, 2012 அன்று 7:05 PM

    கோடிகளில் புரளும் மனிதர்களையும் தெருக்கோடியில் வாழும் மனிதர்களையும் ஒருங்கே கொண்ட சமுதாயமிது..தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் மனமும்,மனிதாபிமானமும் இருந்தால் இந்நிலை மாறலாம்.சமுதாய மாற்றம் என்பது முதலில் தன்னில் தன் குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா17 மே, 2012 அன்று 7:06 PM

    கோடிகளில் புரளும் மனிதர்களையும் தெருக்கோடியில் வாழும் மனிதர்களையும் ஒருங்கே கொண்ட சமுதாயமிது..தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் மனமும்,மனிதாபிமானமும் இருந்தால் இந்நிலை மாறலாம்.சமுதாய மாற்றம் என்பது முதலில் தன்னில் தன் குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வெகு நாள் கழித்து "தமிழை"ப் படித்து முகர்ந்து, தொட்டு, உணர்ந்த மகிழ்ச்சி எனக்குள்.. பல இடங்களில் சுளீர் சுளீர் சவுக்கடிகள். பல இடங்களில் புதுப் புது சிந்தனைகளை எனக்குள் விதைத்து இருக்கிறீர்கள். உயிரூட்டமுள்ள எழுத்து நடை. படிக்கக் கிடைத்தமைக்கு நன்றிகள் பல. தொடருங்கள் தோழரே..

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவு ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. சக மனிதர்கள் மீது காதல் கொள்ள செய்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இந்த பதிவு ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. சக மனிதர்கள் மீது காதல் கொள்ள செய்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இந்த பதிவு ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. சக மனிதர்கள் மீது காதல் கொள்ள செய்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு