இப்படியும் இருக்கலாம் சிலம்பு
( 1000 கொலைகள் குறித்த மறு விசாரணை)
அவர்கள்
( மகத்துவம் மிக்க மானுடத்தை வர்ணங்களாய் பிரித்த கூட்டத்தின் ஆலோசனை மண்டபம். சிவந்த மேனியும் கோபமிக்க முகமும் வன்மம் நிறைந்த வார்த்தைகளுமாய் அவர்(வாள்)கள் திட்டமிட்டனர் )
இளகிய பசுநெய்யும், தேனும் தினைமாவும், பாலும் பருப்பும்,திகட்டாத முக்கனியும் புசித்தபடியே பூநூலோடு அதாவதுபூவில் விரித்த நூலோடு அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வரலாற்றிலே வேந்தர் பலர், துவளும் இடைகொண்டசேடிகளிடமோ அல்லது துடிக்கும் தடந்தோள் கொண்டசேனாதிபதிகளிடமோ, அதரம் அமுது சிந்த சிரித்த முகத்திடமோ அல்லது அலறும் உதிரம் சிந்தும் கூரியவாளிடமோ, இகத்திலுள்ள ஆசையாலோ அல்லது அகத்திலுள்ளபயத்தாலோ அடங்கி ஒடுங்கிவிட்டதற்கு ஆதாரமிருக்கிறது. ஆனால் இவைகள் இல்லாமல் நாவன்மையால் நம்மால்தானேநாடாளும் மன்னனை மண்டியிட வைக்கமுடியும்...?
அற்புதம் அஸ்வதா, நன்று சொன்னாய்.. என்று காய்ச்சியபாலைப் பருகி, கற்கண்டுப் பொடி குறைவு, அரைத்த முறை அவ்வுளவு சரியில்லை என்று குறை கூறிக்கொண்டே, குழைத்து வைத்த சந்தனத்தை உடலெங்கும் அப்பிக் கொண்டு துறவுக் கோலத்தோடு, ஆனல் குறைவற்ற இன்பத்தை கேட்டுப்பெற்று ராஜியத்தை ஆளும் சிரமமில்லாமல் இராஜியாதிபதிகள்சேவை செய்யும் பாக்கியம் பெற்ற வாழ்வு நமது.
ஆமாம் ஆமாம்... வீராதிவீரனானாலும் விப்பிரருக்கு அடங்கியேத் தீரவேண்டும் என்ற வேத நீதியை, வேதியர் புகுத்திய நீதியை, வர்ணாஸ்ரம முறையை, சனாதனச் சட்டத்தை, வாள்ஏந்திய வீரனை தன் தாள் பணியச்செய்த மநுதர்மத்தை அழிக்க பௌத்தம், சமணம், ஆசிவகம் போன்ற மதங்கள் குறுமிளகாய் வளர அனுமதிப்போமா..?
ஆமாம் சபேசா சரியாய் சொன்னாய். மாற்று மதங்கள் வந்தால்நாம் வாழ்வதெப்படி?
அதுவும் இந்த பொல்லாப்பயல் சமண சமய மகாவீரன், இறைவன் உண்டு என்பதை நம்பக்கூடாது. இந்த உலகை இறைவன் படைத்தான் என்பது பொய். மந்திரங்கள் ஓதுவதும், வேள்விகள் நிகழ்த்துவதும், உயிர்களை பலியிடுவதும் பயனற்றவை என்று சொல்லுகிறான். தெரியுமா?
ஆமாம் ஆமாம். இது அக்கிரமம். பட்டரே! இது அநியாயம்! கடவுளே இல்லையெனில் நாம் இல்லை. சரியாய் சொல்லவேண்டுமெனில் நமது பிழைப்பு இல்லை.
அதை விடு, இந்த மகாவீரனாவது கொஞ்சம் பரவாயில்லை, அவனுக்கு முன்பு வாழ்ந்த பார்சவநாதன் பொல்லாப் பயல். நமதுஅடிமடியில் அம்மியாட்டுகிறான் தெரியுமா?
எப்படி அஸ்வதா?
அவன் சொல்கிறான், எவ்வுயிருக்கும் இன்னல் செய்யாமை, உண்மை பேசுதல், திருடாமை, சொத்து வைத்துக்கொள்ளாமை போன்றவையே வீடுபேறு அதாவது மோட்சத்தைக் கொடுக்கும் என்கிறான். அடடே, இவைகள் இல்லாமல் நம்மால் வாழமுடியாதே அம்பி...
ஆமாம் பட்டரே நன்று சொன்னீர்கள்.. ஹி... ஹி... ஹி...
இது தெரியுமா? மற்றொரு மதமான பௌத்தத்தின் நிறுவனன் புத்தன். மன்னாய் இருந்து துறவறம் பூண்டபிழைக்கத் தெரியாதவன்.
அடேய் அம்பி! ஆமாம்! ஆமாம்! சரியாய்ச் சொன்னாய்
இந்த புத்தன் சொல்கிறான், மனித வாழ்க்கையே துன்பம் நிறைந்தது, ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை நீக்கினால் துன்பத்திலிருந்து நீங்கலாம், நல்ல நம்பிக்கை, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல மனம், நல்ல தியானம் போன்ற எட்டு நன்னெறிகளை கடைபிடிக்கச் சொல்கிறான்.
அது மட்டுமா? வட நாட்டின் வரலாறு தெரியுமா உனக்கு, அங்கநாடு, மகத நாடு, காசி, கோசலம், வஜ்ஜி நாடு, மல்ல நாடு, சேதிநாடு, வத்ச நாடு, குரு நாடு, பாஞ்சால நாடு, மச்ச நாடு, சூரசேனநாடு, அஸ்மகா நாடு, அவந்தி நாடு, காந்தாரம், காம்போஜம்போன்ற நாடுகளை ஆட்சி செய்த மதமாய் பௌத்தம் கோலோச்சுகிறது.
சந்திரகுப்த மவுரியர், பிந்துசாரர், அசோகன், குணளா, பந்துபாலிதா, இந்திர பாலிதா, தசோனா, தசரதா, சம்பிரதி, சாலிசுகா, தேவவர்மன், சததன்வன், பிருகத்ரதா போன்ற மன்னர்கள் பௌத்த மதத்தை போற்றி வளர்த்தது நமது அந்தணர்களின் செல்வாக்கு அந்தரத்தில் செல்ல காரணமானது.
ஒன்று தெரியுமா? இறுதியாய் ஆண்ட மவுரிய மன்னன் பிருகத்ரதாவை கொலை செய்து நமது செல்வாக்கை நிலைநாட்டியவன் புஷ்யமித்திர சுங்கன் என்ற அந்தணன். அவன் நமது போற்றுதலுக்குரியவனல்லவா?
சரியாய் சொன்னாய்.. ஆனால் நாம் பாண்டிய நாட்டில்அந்தளவு போக வேண்டாம். ஆனால் மாற்றத்தை உருவாக்கவேண்டும். நாம் கொடுக்கும் மரண அடி பல நூறாண்டுகள் மண்ணில் நிலைத்திருக்க வேண்டும்.
மாற்று சமயங்களின் வரவால் அருமை யான இளங்கன்றின் கறிச்சுவை இழந் தோம், சோமபான, சுராபான தவம் இழந்தோம், நமது இருப்பையும் இழப்போமா?
புலால் உண்ணாதே? உயிர்வதை கூடாது!? - என்ன அநியாயம் இது. இந்தக் கொள்கையை போதிக்கும் சமணர்களும் பௌத்தர்களும் ஓங்கி வளர்வது எப்படி? இவர்களைத் தடுப்பதுஎவ்வாறு...?
எத்துணை அளவு செய்த நாம் இதனை செய்யாமல் இருப்போமா.. கூடல்மாநகர் செய்தியை வைத்து நமது சித்து விளையாட்டை துவக்குவோம்.
அயர்மீன் புறப்படுவீர் இப்போதே... வாளெடுத்துப் போர்புரிய தகுதியற்ற நாம் நா சுழற்றி நம் வாழ்வைச் சாதிப்போம். வேந்தன் வெற்றிவேற் செழியனை சந்திப்போம் என புறப்பட்டனர்.
அவள்
பாண்டிய நாட்டின் தலைநகர். நான்மாடக் கூடல் எனும்மதுரையில் கொலைக் களத்தில் தன் கணவன் படுகொலைசெய்யப்பட்டான், அதுவும் செய்யாத குற்றத்திற்காக என்றுஇடியாய் இறங்கிய செய்தி கேட்டு கொடுந்தழலாய் சினம்கொண்ட கண்ணகி, தன்னுடைய மற்றொரு சிலம்பை கையில்ஏந்தி பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தாள்.
அவள் நினைவலைகளில் எண்ணங்கள் சுழன்றுகொண்டே இருந்தன. அவள் அரண்மனையை நோக்கி எடுத்துவைத்த ஒவ்வொரு அடி அசைவிலும் அவள் வாழ்வின் கடந்தகால நினைவுகள் வந்து மறைந்தன.
கலம் ஏறிப் பொருள் தேடப் பிரிந்த கணவன் வரும்வரைஒருத்தி கடற்கரையில் கல்லாய்ச் சமைந்த கதை, கணவனுக்காக காத்திருக்கும் நேரத்தில் மற்றவர்கள் பார்வையில் அழகிய தனது திருவதனத்தை குரங்கு முகமாகமாற்றிக் கொண்ட கதை என்பன போன்ற கதைகள் கொண்டசோழ மன்னனின் காவிரிப்பூம்பட்டினத்தில், மாநாய்கன் மகளாகபிறந்ததும் தனக்கு பன்னிரண்டு வயதில் மாசாத்துவன் மகனானபதினாறு வயதுடைய கோவலனுக்கு திருமணம்செய்விக்கப்பட்டதும் நினைவுக்கு வந்தது.
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! என்று கோவலன் கொஞ்சியதும் கண்ணீராய் திரண்டது. நல்லறமாய் சென்ற இல்லறம் மாதவி மீது கோவலன் கொண்ட காதலால் சிதைந்தது.
அலைகள் பரந்த நீர்த்துறை என்பேனோ? அழகிய மணல் பரந்த கடற்கரை என்பேனோ? மணம் வீசும் மாலை என்பேனோ? மரங்கள் நெருங்கிய சோலையின் இடம் என்பேனோ? மணம்பரந்த சுருண்ட கூந்தல் என்பேனோ? முழுமதி போலும் அழகியமுகம் என்பேனோ? சங்குகள் வளர்கின்ற துறை என்பேனோ? எழுதற்கரிய மின்போலும் இடை என்பேனோ? வளைந்த புருவமாகிய இரண்டு வில் என்பேனோ? கயல் போலும் இரண்டுகண் என்பேனோ? என்று மாதவியை கொஞ்சிக் கூடி மகிழ்ந்ததன் கணவன் கோவலன் அவளிடமும்கூட உண்மையாய் இல்லாமல் தனது செல்வங்களை இழந்து தன்னிடம் தலைகுனிந்து நின்றது அவள் நினைவில் வந்தாடியது.
தன் செல்வங்களை தொலைத்த கோவலன் மீண்டும் தன்னைக்காண வந்த போது காலில் உள்ள காலணியை கழற்றாமல், சிலம்பு உள கொள்க! என்று தான் உரைத்ததும், ''இச்சிலம்பையே வணிக முதலாகக் கொண்டு திக்கெல்லாம் பரந்த புகழையுடையமாட மதுரைக்குச் சென்று, வாணிகம் செய்து, முன்னர் இழந்தக்கலன்களையும் பொருள்களையும் தேடிப் பெருக்கத் துணிந்தேன்; இதழ் விரிந்த மாலை அணிந்தவளே! நீயும்என்னுடன் புறப்படுவாயாக" என்று அவன் சொன்னதும் நிழலாய்ஆடியது.
மதுரை வந்து சிலம்பை விற்பனை செய்யச் சென்றனன். அப்போது ஒரு பொற்கொல்லனின் திருட்டுத்தனத்தால்கொலை செய்யப்பட்டனன். இது அவள் நெஞ்சை தீயாய்சுட்டது. மேலும் உக்கிரமாய் பூமி அதிர நடைபோட்டுஅரண்மனை நோக்கிச் சென்றாள்..
அவன்
அவனது அண்ணன் இறந்த நிகழ்வு அவனை வாட்டும் துயர்கொஞ்சம் கொஞ்சமாய் அவனை விட்டு விலகிய நேரம் அது.அந்த இலக்கிய ஓலைச்சுவடியை அவன் படித்து முடித்த நேரம் அது. இளங்கோவடிகளின் மாசற்றத் தமிழில் சற்று ஆறுதல் பெற்றான். தனது அண்ணன் நீதி தவறியதை உணர்ந்தான். சிலப்பதிகாரம் அவனது நெஞ்சை ஆறத் தழுவியது. அப்போது வாயில் காப்போன் வந்து வணங்கினான். மன்னவா தங்களைக் காண ஆதிக்குடிகள் வந்துள்ளனர் என்றான். அவர்களைஅழைத்து வருக என்றான்.
யானைத்தந்தங்கள், அகிற்கட்டைக் குவியல், மான்மயிர்க்கவரி, தேன்குடங்கள், சந்தனக்கட்டை, சிந்தூரக்கட்டி, அஞ்சினத்திரள், கஸ்தூரி, ஏலக்கொடி, மிளகுக்கொடி, கூவைக் கிழங்கின்பொடி, கவலைக் கொடிக் கிழங்குகள், தென்னையின் நெற்றுகள், இனிமையான மாம்பழங்கள், பச்சிலை மாலை, பலாப்பழங்கள், வெள்ளுள்ளி, கரும்பு, கமுகின் குலைத்தாருகள், வாழைப்பழக் குலைகள், ஆளிக்குட்டிகள், சிங்கக் குட்டிகள்,யானைக்குட்டிகள், குரங்குக் குட்டிகள், வளைந்தக் கால்களையுடைய கடடிக் குட்டிகள், வரையில் விளையாடும் ஆடுகள், வருடை மான்கள், மான் குட்டிகள், கஸ்தூரி மானின்குட்டிகள், கீரிப் பிள்ளைகள், ஆண் மயில்கள், புனுகுப்பூனையின் குட்டிகள், காட்டுக்கோழி, தேன் போலும் இனியமொழி பேசும் கிளி ஆகியவற்றை வேந்தனுக்கு பரிசாய்கொடுத்து ஆதிக்குடிகள் வணங்கி நின்றனர்.
அவர்களது பரிசுகளை பெற்றுக்கொண்ட மன்னன். அதாவது சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்ற மன்னன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயர் கொண்ட, கோவலனுக்கு தவறான தண்டனை வழங்கிய பாண்டியனின் தம்பி வெற்றிவேற் செழியன் "ஆதிக்குடிகளே என்னை வந்துசந்திக்க காரணம் என்ன" என்று வினவினான்.
மன்னவா, இயற்கை அன்னை ஆட்சி புரியும் எங்கள் இருப்பிடமான காடுகளில் திடீரென மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு மரத்தின் மீதும் கோடாரியின் வெட்டு விழும் நேரம் எங்கள் உடல் மீது வெட்டு விழுவதாய் துடித்துப் போகிறோம். மன்னர் மன்னா, மகோன்னத அரசே, மாட்சிமை தாங்கியவனே கேள்! நாங்கள் நேசிக்கும் மரங்களும் அது கொடுக்கும் பூவும் காயும் கனியும் அதன் விதைகளும் அவை வளர்க்கும் செடிகளும் அதில் விளையும் மரங்களும் அழகு படைத்தவை. இந்த இயற்கை வளங்கள் வாழ்வைக் கொடுப்பவை. அவைகளைப் பயன்படுத்த மனிதர்களுக்கு உரிமை உண்டே தவிர அழிக்க அனுமதி இல்லை. அவைகள் வாழும் போதுதான் நாமும் வாழ்வோம். எங்களுக்கு பசித்தாலும்அவைகளை இதுவரை வேட்டையாடியது இல்லை. வேட்டையாடுபவர்களைத் தடுத்தால் தடியடி கிடைக்கிறது. மண்ணின் மாணிக்கங்களான மரங்களையும் மிருகங்களையும் கொல்லாதீர்கள் என்று எதிர்த்தால் எலும்புகள் உடைக்கப்படுகிறது. "யார் நீங்கள்? உங்களுக்கு இந்த உரிமையை கொடுத்தது யார்" என்றால் அந்தக் கொடியவர்கள் உங்கள் பெயரால் இவை நடக்கிறது என்கின்றனர். இது உண்மையா மன்னா? நியாயமா மாதவா?
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் புருவம் விடைத்தது. என் பெயரால் மரங்கள் வெட்டப்படுகிறதா? காடு அழிக்கப்படுகிறதா? துள்ளியாடும் மானினம் அழிக்கப்படுகிறதா? இவைகள் என்செவிக்கு எட்டாமல் எப்படி இவை நடக்கிறது?
தெரியவில்லை வேந்தே, ஆனால் ஒன்றை சொல்லவே இங்குநாங்கள் வந்தோம். காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் குறைந்தால் புவி வெப்பமடையாதா? புவி வெப்பமடைந்தால் நாட்டில்மழை குறையாதா? அதனால் நாட்டில் மழைவறங் குறைந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் தொடராதா? காட்டுவளம் குறைவதுவே வறுமைக்கும் நோய்க்கும் காரணம் என கொற்றவை குறி சொல்கிறாள். எங்கள் தாய்மடி தழைத்தோங்க தாங்கள் ரட்சித்தருள வேண்டும் என்றனர். ஆகட்டும் என்றான் வேந்தன்.
அவர்கள்
நாடெங்கும் வேறு பல மதங்கள் பரவியதால் ஏற்பட்ட பதட்டம் அது. பரம்பரை வைதீகர்கள் பதட்டப்பட்டனர். இந்த மதங்களின் பரவல் தங்களது ஆதிக்கத்திற்கு உலை வைக்கிறது என்பதை அறிந்தனர். தங்களது முப்பிரிக்கு இனி இப்புரியிலே மரியாதை குறையும் எனப் பயந்தனர்.
களிப்பூட்டும் கடமையாற்ற சுந்தர மதுவும், சுவையுள்ள கனியோடு சரசத்தின் சாரமான காதல் ரசம் தரும் காரிகையின் இல்லம் நீங்கி, சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டாலான அங்கி அணிந்து கூட்டமாய் வந்தனர், கூடி நின்றனர். தனித்தனியே யோசித்தனர். தங்களுக்குள் விவாதம் புரிந்தனர். யார் சொல்வது. பூணூலை நீவியபடி யோசித்தனர்.
வெற்றிவேற் செழியன் வீரன். மக்களை நேசிப்பவன். அனைத்து மதங்களையும் ஆதரிப்பவன். அதுவும் ஒடுக்கப்பட மக்கள் மீது நம்பிக்கை கொண்டவன். இயற்கையை நேசிக்கும் குணசீலன். போர்க் களத்தில் கற்புநெறி காப்பவன். நீதி தவறிய தனது தீர்ப்புக்காக தனக்கே தண்டனை கொடுத்த பாண்டிய பரம்பரையின் பண்பறிந்த சேவகன். ஆனாலும் அவனிடம் சொல்லியே ஆகவேண்டும். சொல்லாமல் விடுத்தால் தங்களது வேத மரபும், வேதியர் நீதியும் என்னவாகும்? தங்கத்தால் ஆனதொட்டிலும் தந்தங்கள் இழைத்தக் கட்டிலும் கிடாமல் போகலாம்? எனவே கடவுள் நம்பிக்கைகள், வேதங்கள், புராணங்கள் துணைகொண்டு வெற்றிவேற்செழிய பாண்டியனை வீழ்த்துவது என முடிவு செய்தனர். ஆனாலும் இன்னும் சரியான குறிப்பு கிடைக்காமல் தவித்தனர். இருப்பினும், அரண்மணையை நோக்கிச் சென்றனர்.ஆற்றல்மிகு அம்பிகள் ஆலோசனையுடன் ஆர்வமாய் மன்னனைக் காணசென்ற சமயம்.
" மழைவறங் குறைந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் தொடராதா?"
ஆகவே காட்டுவளம் குறைவதுவே வறுமைக்கும் நோய்க்கும் காரணம் என கொற்றவை குறிசொல்கிறாள். எங்கள் தாய் மடி தழைத்தோங்க, தாங்கள் ரட்சித்தருள வேண்டும் என்றனர் ஆதிவாசிகள். ஆகட்டும் என்றான் வேந்தன்.
உள்ளிருந்து வார்த்தைகள் வெளியே தெறித்தன. தெறித்த வார்த்தைகள் அவாக்களுக்கு புதிய சிந்தை விதைத்தது. சபாஷ்.. ஆஹா.. அடேய் அம்பி கேட்டாயா...
கேட்டேன் அஸ்வதா... நன்று மிகவும் நன்று... மன்னனை மயக்க நாட்டு நலன் என்ற ஒற்றை வார்த்தை போதும்!
அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் ஓலைச் சுவடி எடுத்தனர். இடைச் செருகலை இயற்றத் துவங்கினர்.
அவள்
என் கணவனை கூரியவாளால் வெட்டியதனால் அறம் தவறிய பாண்டியனின் மதுரை மாநகரில் தெய்வமும் உள்ளதோ? சான்றோரும் உள்ளாரோ? மகளிரும் உள்ளாரோ? என்று கொற்கை மாநகர் வீதிகளில் புலம்பிச் சென்ற கண்ணகி, பாண்டியனின் வளம்மிக்க அரண்மனை வாயிலில் சென்று நின்றுவாயில் காப்பவனிடம் சொன்னாள்: ''அறிவு முழுவதும் அற்றுப்போன அறநினைவு அற்ற நெஞ்சத்துடன் அரச நீதி தவறியவனின் வாயில் காப்பவனே! பரலினையுடைய இரண்டு சிலம்புகளில் ஒன்றினைக் கையில் ஏந்திய கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் உள்ளாள் என்று உன் வேந்தனிடம் அறிவிப்பாய்" என்றாள். அவனும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய பாண்டிய மன்னனிடம் இவள் வருகையை அறிவித் தான். அவளை 'வருக' என அழைத்து வருக! என்றான் மன்னன். கண்ணகி மன்னனை அணுகிச் சென்ற போது "நீர் பெருகும் கண்களை உடைய வளே! என்முன் வந்து நிற்பவளே! இளங்கொடி போன்றவளே! நீ யார்?" என்றான்.
"ஆராய்ச்சியில்லாத மன்னனே கேள்! புறா ஒன்றின் துயரைப் போக்கிய சிபியும், பசுவின் கண்ணீர் தன் உள்ளத்தை தாக்க தனது புதல்வனை தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதி சோழனும் ஆண்ட புகார் நகரத்தில் பிறந்தவள் நான், அவ்வூரில் பெருவணிகனான மாசாத்துவன் மகனாக பிறந்து தன் தவறான செய்கையால் செல்வங்களை இழந்து, வியாபாரம் செய்து பிழைக்கலாம் என்று மதுரை வந்து உன்னால் படுகொலை செய்யப்பட்ட கோவலன் என்பவனின் மனைவி. என் பெயர் கண்ணகி" என்றாள்.
கள்வனைக் கொல்வது கொலையாகாது தண்டனை என்றும் அதுவே ராஜநீதி என்றும் மன்னன் கூறினான். தொடர்ந்து நடந்த வாதப் பிரதி வாதங்களின் அனல் அதிகரித்தது, அப்போது முத்துப் பரல்களை கொண்ட சிலம்பு என நிணைத்து கோவலனிடம் பெற்ற சிலம்பை மன்னன் கண்ணகி யிடம் கொடுக்க அவள் அதை ஓங்கித் தரையில் அடித்து உடைத்தாள், அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் சிதறின.. அதில் ஒன்று பாண்டியன் முகத்தில் தெறித்தது.
தரையில் அடித்த சிலம்பு முத்தாய் தெறிக்கும், அது அவளை வதைக்கும் என நினைத்தான் மன்னவன். ஆனால் நடந்தது வேறு. அலைக்கழிந்தது மேரு.
தெறித்த மாணிக்கப்பரல் கண்டு திடுக்கிட்ட பார்வேந்தன். கொலைகளத்தில் நியாயம் தழைக்க சமயம் கேட்ட கோவலன் முகம் நிழலாடியது மன்னவன் முகத்தில். ஏன் இழந்தேன் நிதானம் என்ற கேள்வி பிறந்தது. சமயம் கடந்து. குடை தாழ்ந்து, செங்கோல் தளர்ந்து, உடல் நடுங்கி, சிந்தை கலங்கி, மொத்தம் இழந்து அலறினான்.
"பொன் செய் கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய யானோ அரசன்? அரசன் அல்லன்! கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்!" என்று கூறி உள்ளம் துடித்தான்.
"கெடுக என் ஆயுள்" என்று கூறி உயிர் துறந்தான். அவனதுஉடல் சிம்மாசனப் படியில் உருண்டது. நடப்பது அறியாமல் சம்பவங்களை பதைத்துப் பார்த்த தேவியின் உள்ளம் மருண்டது. மூர்ச்சையடைந் தாள். அவனுடன் கோப்பெருந் தேவியும் இறந்தாள்.
அவன்
மழைவறங் குறைந்து வறுமையெய்தி வெப்பு நோயும் குருவும் தொடராதா? ஆகவே காட்டுவளம் குறைவது வேவறுமைக்கும் நோய்க்கும் காரணம் என கொற்றவை குறிசொல்கிறாள். எங்கள் தாய் மடி தழைத்தோங்க தாங்கள் ரட்சித்தருள வேண்டும் என்றனர் ஆதிவாசிகள். ஆகட் டும் என்றான் வேந்தன். அப்போது எப்போதுமில்லாத ஜவ்வாது வாசனையுடன் அமைச்சன் வந்தான். கடவுளுக்கு அடுத்து நாம் பூஜிக்கும் அந்தணர்கள் வந்திருப்பதாகச் சொன்னான். அதுமட்டுமல்ல அமைச்சன் காதில் சொன்ன செய்தியை கேட்டுமன்னன் முகத்தின் வண்ணம் மாறியது.
என்னது? எனது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தனது தமையன். குலம் செழிக்க முன்னால் பிறந்த தனது அண்ணன் மறைவுக்கு காரணம் கண்ணகி இல்லையா? மதுராம்பதியின் நாயகன் மாண்டதன் கதையில் மாற்றம் உள்ளதா? வியக்கவா? வியர்க்கவா? அரண்மனை ஆலோசனை மண்டபத்திற்கு மந்திரிகளை வரச்சொன்னான்.
மனிதர்களின் மறு உலகை ஆட்சி செய்யும் இருள் தன் இயல்பினை துவக்கிய நேரத்தில், நெடு நிலம் முழுவதையும் ஒரு தனி ஆளும் அரண்மனை ஆலோசனை மண்டபத்தில், கொற்கை நாட்டின் வேந்தன் வெற்றிவேற் செழியன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான். நிழல் தொடர் போல அரசவை பிரதானிகள் பின் தொடர்ந்தனர். இடையில் தொங்கும் கூரிய வாளும், மார்பில் அசைந்தாடும் வஞ்சிப் பூமாலையும் அவன் நடைக்கேற்ப அசைந்தன. அவன் உடலில் சாதரூபம், கிளிச் சிறை, ஆடகம், சாம்பூநதம் என்ற நான்கு வகையான பொன்கள் தவழ்ந்தாலும் மதியிழந்த முகம் வானமாய் இருண்டிருந்தது.
அவன் முகத்தில் குழப்ப ரேகைகள், போர்க்களத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற போது இல்லாத தடுமாற்றம். கொம்பின்கண் மலரும்வேப்ப மலர் மாலையை அணிந்த கூடல் மாநகர மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் மனதில் வந்து மறைந்தான்.யானோ அரசன்? யானே கள்வன்! கெடுக என் ஆயுள்! என்றுஅவன் இறுதியாய் புலம்பியது காதில் ஒலித்துக்கொண்டிருந்தது".
இதற்கும் "அவர்கள்" வருவதற்கும், அவர்கள் மூலம் அமைச்சன் சொன்ன செய்திக்கும் ஏற்பட்ட தொடர்பு குழப்பத்தை யல்லவா விதைக்கிறது. வரட்டும் தெரியத்தானே போகிறது இருப்பினும் எனக்குள் ஏனிந்த பதட்டம் என நடை தொடர்ந்தான்...
அவர்கள்
அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் ஓலைச்சுவடி எடுத்தனர். இடைச்செருகலை இயற்றத் துவங்கினர்.
அம்பி.. எத்துணை இலக்கியங்களை நாம் இடைச்செருகலால் மாற்றி இருக்கிறோம்?
ஆமாம் ஓய் இந்த சுண்டைக்காய் இளங்கோவடிகளை விடுவோமா என்ன?
அவர்கள் உற்சாகத்துடன் மன்னனை நோக்கிச் சென்றனர். உலுத்தர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது உத்தமன் மறைவு. அதனை முன்வைத்து நாட்டில் பொற்கொல்லர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் தழுவிய சமண, பௌத்த, ஆசீவக மதங்களை அழிக்க அற்புதக் காரணம் கிடைத்தது. விடக்கூடாது இவ்வளவு காலமும் ஆண்டு, உண்டு கொழுத்து வந்த மநுதர்மம், ஆசிவகவாதிகளால், சமணர்களின் சங்கங்களால் உடைபட அனுமதிக்கக்கூடாது அல்லது முடியாது. சமண மதம் அல்லது மாற்று மதங்கள் கோலோச்சத் துவங்கினால் இத்தனைக் காலமாய் அனு பவித்த உரிமைகள், சுகபோகங்கள், மன் னனையே ஆட்டிப்படைத்த அதிகாரங்கள், தமது எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாய் மாறும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதனால் மாற்று மதங்களுக்கு படம் புகட்டநினைத்தனர்.
அவர்களும் அவனும்
மன்னவா வணக்கம். கொல்லுங்கண், வேட்கைநகை, குறுகியநெற்றி, இருண்ட குழல், திரண்டதனம், மருட்டும்விழி, மதுர இதழ் இவைகளைத் துதிக்காத கூட்டம் வந்தோம் என்றனர். அவனைத் தொழுதனர். தொகை தொகையாய் துதிபாடினர். வந்தோம் உண்மை கூற என்றனர். சொல் லும்போதே அவர்களில் சிலர் சிறு நகை பூத்தனர். மன்னன் நலத்திற்கு மந்திராலோசனை செய்யும் கூட்டம் வந்தோம் என்றனர்.
மன்னவன் பதிலுக்கு வணங்கி அவர்கள் வந்த காரணம் வினவினான்.
பராக்கிரம வீரம் நிறைந்த, யானை, குதிரை காலாட் படைநிரம்பிய, போர்க்களம் பல கண்ட பாண்டியன் மரணமடைய காரணம் கண்ணகி என்றா நினைக்கிறாய் மன்னவ! இல்லயில்லை அதற்குக் காரணம் ஒரு பொற்கொல்லன். அவன் தவறு செய்யவில்லையெனில் மரணம் இல்லை. அவன் ஏன் தவறிழைத்தான்? அவன் தழுவிய மதத்தை மன்னன் ஆதரிக்கவில்லை என்பதனால். இது தகுமா? முறையா? நீதியா? தனது மதத்தை ஆதரிக்காத மன்னனை நீதி தவறவைத்தல் அறமா? கிடைத்த சிலம்பை தனது குற்றம் மறைக்ககாட்டிக் கொடுத்தவன், வேந்தனின் உயிரையும் கவர்ந்தான். இவை அனைத்தும் திட்டமிடப்பட்டவை. காரணம் மதம்.அவர்கள் தழுவிய மதங்கள் இந்த மண்ணில் இருக்கலாமா?அதை நீங்கள் அனுமதிக்கலாமா? என்றனர். கொலையுண்ட கோவலன் ஆசீவக மதத்தை சார்ந்தவன்தானே என்றான்.
ஆம் மன்னா, நாங்களும் அறிவோம். தன் மதத்தினனை பலி கொடுத்து பிற மதத்தினை கருவறுத்தக் கதை இது என்றனர்.
எது நடப்பினும் நடக்கட்டும். நமது மக்கள் பாரம்பரியம் என்ன? இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதானே. மக்களுக்கு எதுபிடிக்குமோ அதுவே நமது விருப்பம் அல்லவா? என்றான்.
மன்னவ, கேள். இராமபிரான் கடவுள் என்றாலும் அந்தணர் சொல்கேட்டு மநு தர்மத்தைக் காக்க வேதம் உச்சரித்த சம்புகனை சிரம் அறுத்துக் கொன்றது, அரசர்களின் சொத்தாக கருதப்பட்ட போர்த் தொழிலை கற்றதற்காக வித்தைகளின் அதிபதி என்று கொண்டாடப்படும் மநுவின் மறுபிறப்பு துரோணாச்சாரி, பரம்பரை வித்தைக்காரனான ஏகலைவனின் கட்டை விரல் வெட்டி எடுத்ததும் வாழ்வியல் நெறிப் படிசரியான (மநு) தர்மமாகும் என்றனர்.
எனவே இந்து தர்மத்தை பாதுகாக்க ஆசிவக, சமண மதத்தை முன்னிறுத்தும் வியாபாரிகளின் கொட்டம் அழிக்கப்பட வேண்டும் என்றனர், அதிலும் நமது நாட்டில் பொற்கொல்லர்களே ஆசிவக, சமண மதத்தின் மிகுந்த ஆதரவாளர்கள். எனவே அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றனர்.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற எட்டுத் தொகை நூல்களாகட்டும், திருமுறுகாற்றுப் படை,பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெருபாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைகாஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற பத்துப் பாட்டாகட்டும் இவைகளில் எல்லாம் உன்னைப் போன்ற மன்னர்களும் அவர்களது வீரமும் காமமும் ஊடலும் அடுத்து சத்திரிய போர்க்களம் நோக்கிச் சென்ற நாயகர்களின் பிரிவும் நங்கையர்களின் பசலை நோயும் தானே பெரிதாகப் பாடுபொருளாய் இருந்துள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் யார் பாடு பொருளின் தலைவன்? ஒருசாதாரண வணிகன். அவன் எப்படி பாடு பொருளாய் வந்தான்? அவனது மதம் சாதாரண மக்களைப் பாடும் மதமாய் இருப்பதனால். இதை அனுமதிக்கலாமா? அனுமதித்தால் என்னவாகும்? நாளை ஒரு புலையன் காவியத் தலைவனாக வருவான்! அனுமதிக்கலமா?
அது சரி பார்ப்பனர்களே, மதங்கள் தம் இருப்பை தங்களது தத்துவங்களால் நிரூபிக்கின்றன. எந்த மதத் தத்துவங்கள் மக்களின் மனங்களை ஆட்கொள்கின்றனவோ அவைகளே வரலாற்றில் நிலைத்திருக்கும். நிலையற்றவை மக்களின் மனங்களில் நிலைத்திருக்காது என்றான்.
மன்னவா அதிகாரம் கொண்ட மதங்களே அதாவது ஆட்சிகள் ஆதரிக்கும் மதங்களே வாழ்ந்திருக்கின்றன. ஆட்சியும் அதிகாரமும் பொருளாதார பலமும் இல்லாத மதங்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆக அழி... பழி துடை. நாங்கள் இருக்கிறோம் வரலாற்றைப் புரட்ட என்றனர். இன்னும் பலவற்றை மன்னனுக்கு சொல்லிய வண்ணம் இருந்தனர். மன்னன் வாயிலிருந்து வரும் உத்தரவுக்காக ஆர்வத்துடனும், வன்மத்துடனும் காத்து நின்றனர். அவர்களுக்கும் மனது கொதித்துக் கொண்டிருந்தது. இருப்பினும்... என அவன் முணங்கினான். எனவே அவர்கள் இறுதி அஸ்திரத்தை தொடுத்தனர். அவனை மிரட்டினர்.
ஆள் நடமாட ஒரு உலகு, ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஒரு உலகம், நாகன் தங்க ஒரு உலகம், மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகம். அதல, விதல, சுதல,தாரதல, இரசாதல, மகாதல, பாதாலம் என கீழ் உலகம் ஏழும்.பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக, சத்தியலோக எனும் மேல் உலகம் என ஏழும் கடவுள் யாருக்காக படைத்தான்? முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர், இந்திரன், சந்திரன், பிரமன், வீரபத்திரன், முருகன், விநாயகன், சிவன், விஷ்ணு, என உனக்கு அருள் படைக்கும் கடவுள்கள் எங்கள் துணை இல்லாமல் உன்னுடன் பேச முடியுமா அல்லது நாங்கள் இல்லாமல் உனக்கு அருள் புரிவார்களா?
மன்னன் மிரண்டனன். மறுபிறப்பு அவனது கண்களில்தெரிந்தது. அதுவே நிழலாடியது. நடத்துங்கள் என்றான்.அனுமதி கொடுத்தனன். ஆனால் பழி என்மீது படரக்கூடாது என்றான். அவர்கள் சிரித்தனர். மன்னா உன் மீது பழிவருமா? கவலைக் கொள்ளாதே. பழி கண்ணகியை சென்றடையும். மதுரையை எரித்த கண்ணகியின் கோபத்தை தணிக்க நாம்அவர்களை பலி கொடுத்து அவளை சாந்திப்படுத்துகிறோம்என்றனர். ஆயிரம் பொற்கொல்லர்கள் நடுவீதியில் கொடூரமாக கொல்லப்பட்டனர். மக்கள் காரணம் கேட்பர். மக்கள் மட்டுமல்ல எதிர்காலம் கேட்கும். எனவே எழுதினர். சிலப்பதிகாரத்தின் இடையில் செருகினர்: மழைவறம் குறைய, வறுமை நெடுக,வெப்பு நோய் தொடர கண்ணகியின் கோபமே காரணம். அவளை அமைதி படுத்த ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிடவேண்டும்.
ஆயிரம் வாள்கள் வீரர்களின் தடந்தோள் களில் எழுந்தன. பலிபீடம் இரத்தத்தால் நிறைந்தது. அதன் மீது எழுதப்பட்டு சிலப்பதிகாரத்தில் இடைச்செருகல் நடந்தது.
''அன்று தொட்டுப் பாண்டியனாடு
மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி
வெப்புநோயும் குருவும் தொடரக்
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று களவேள்வியால்
விழவொடு சாந்தி செய்ய,
நாடு மலிய மழைபெய்து
நோயும் துன்பமும் நீங்கியது.''
உதவிய நூல்கள் : சிலப்பதிகாரம், அறிஞர் அண்ணாவின்தொகுப்பு நூல்கள், மார்க்சிய அறிஞர் கே.முத்தையாவின்இலக்கிய ஆய்வுகள்.
(புதுவிசை 30 மார்ச் 2011 இதழில் வெளிவந்த எனது படைப்பு)
எங்க கொஞ்ச நாள் இலக்கியத்தை காணோம் என்று நினைத்தேன். பரவாயில்லை வந்திட்டிக..
பதிலளிநீக்குஇயற்கையை பாதுகாக்க இன்னொரு இளங்கோ வந்திட்டா சரி..
இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்...